கீதையின் மறுபக்கம் - இரண்டாம் பதிப்புரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/geethaiyin-marupakkam
இரண்டாம் பதிப்புரை

‘கீதையின் மறுபக்கம்' நூல் வெளிவந்தவுடன், அதைப் படிக்காமலேயே - ஏன் பார்க்காமலேயும்கூட - அதை அரசு தடை செய்யவேண்டும் என்று கோரி தமிழ்நாடு அரசிற்கு வேண்டுகோள் விண்ணப்பம் தயாரித்து, ஒரு தூதுக்குழு, தமிழ்நாடு முதல்வரைச் சந்தித்தார்கள் - இந்துமத, பார்ப்பன ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணியினரும், ஒரு பார்ப்பனப் பத்திரிகையாளரும்.

''அப்படி இந்நூலுக்குத் தடையை அரசு போட்டால், அதை நாம் வரவேற்போம்; காரணம், பொதுமக்களுக்கு மட்டுமல்லாமல், நீதிமன்றத்திற்கும் - நீதிபதிகளுக்கும்கூட இந்நூல் சென்றடைவதன் மூலம் அங்கே நாம் வைக்கும் வாதங்கள் மூலம் - 'கீதை' என்பது எப்படி ஜாதியைப் பாதுகாக்கும் வர்ணாசிரம், பார்ப்பனிய பண்பாட்டுப் படைக்கலன் எனும் செய்தி உலகுக்கு எளிதில் விளம்பரத்தோடு கிடைக்கும் என்று பதில் கூறினோம்.

இந்நூலின் வெளியீட்டு விழா தலைநகர் சென்னையில் கடந்த 1998 பிப்ரவரியில் நடைபெற்ற போதிலும், தமிழ்நாட்டின் பெரும்பாலான நகரங் களிலும், உலகின் பல்வேறு நாடுகளின் முக்கிய நகரங்களிலும் இந்நூலின் அறிமுக விழாக்களும், வெளியீட்டு நிகழ்ச்சிகளும், விளம்பரப்படுத்தப்பட்ட விளக்கவுரைக் கூட்டங்களும் ஏராளமாக நடைபெற்றன.

தமிழ்கூறும் நல்லுலகின் வரவேற்பினை இந்நூல் பெற்றுள்ளது.

கட்சி, ஜாதிக் கண்ணோட்டமின்றி, இந்நூல் பல்துறை அறிஞர் பெருமக்களால் வரவேற்கப்பட்டு, ஊக்குவிக்கப்பட்டது.

அமெரிக்காவின் முக்கிய நகரங்களிலும், இங்கிலாந்தின் லண்டனிலும், ஜெர்மனியிலும், மலேசியாவின் பல நகரங்களிலும், சிங்கப்பூரிலும் இந்நூல் நல்லதோர் பரபரப்பை ஏற்படுத்தி, வாசக நேயர்களால் வாங்கப்பட்டது. அதனால்தான் முதற்பதிப்பு (5000 படிகள்) எட்டே மாதங்களில் தீர்ந்துவிட்டது.

'இண்டர்நெட்' என்ற இணையம் மூலம் பன்னாடுகளிலிருந்து வாங்கப்பட்ட வாய்ப்பும் இந்நூலுக்குக் கிடைத்தது.

இதன் ஆய்வுக் கண்ணோட்டத்தை 'தினமணி', 'தீக்கதிர்' ஆகிய நாளேடுகள் பாராட்டி மதிப்புரை எழுதின.

சிலர் 'அமைதிச்சதி' தத்துவத்தைப் (Conspiracy of Silence) பின்பற்றி இந்நூலினை மதிப்புரைக்காகப் பெற்றும்கூட இதுவரை மூச்சே விடவில்லை ! ஆனால், இதுவே அவர்கள் 'தர்மம்'!

அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் தாம் மறைவதற்கு 38 நாட்களுக்கு முன்பு16.11.1973 அன்று சென்னை மருத்துவமனையிலிருந்து 'விடுதலை' மூலம் விடுத்த வேண்டுகோளை, எத்தனையோ அறிஞர்கள், ஆய்வாளர்கள் தமிழ்கூறும் உலகில் வாழ்ந்தும்கூட, ஏற்றுப் பணி செய்ய முன்வரவில்லையே என்ற வருத்தம் இன்றும், என்றும் நமக்கு உண்டு.

என் செய்வது? “தமிழ்ஜாதி” என்பது இதுதானே! எனவேதான் எளியவன் நான் இப்பெரும் பணியேற்றேன் - 'பழி ஏற்கவும்' தயங்காமல்!

ஆதிக்கச் சக்திகளின் அறிவுக் கருவறைக்குள் இதுபோன்ற ஆய்வுகளை, தீண்டாமைக்கு ஆட்படவேண்டியவைகளாகவே ஆக்கி வந்தனர்.

அந்த அறிவுக் கொத்தடிமைத்தனம் இந்நூல் மூலம் சுக்கு நூறாக்கப் பட்டுள்ளது என்பதே இதை ஆக்கியோனின் மன நிறைவு! இந்த இரண்டாம் பதிப்பில் சில திருத்தங்களும், புதிதாக நான்கு அத்தியாயங்களும் எழுதிச் சேர்க்கப்பட்டுள்ளன!

பகவத் கீதையின் பல பழைய பதிப்புகளையும், நூல்களையும் எண்ணற்ற நண்பர்கள் மனமுவந்து அளித்து இந்த ஆய்விற்கு மேலும் உதவினர். அவர்களுக்கு நன்றி. பேராசிரியர் டாக்டர் பழனி. அரங்கசாமி அவர்கள் இப்பதிப்பிற்குப் பெரிதும் உதவியவர்.

பற்பல ஊர்களிலும் அறிமுக விழாக்களை ஏற்பாடு செய்து, நூலை நூலகத்தோடு நிறுத்தாமல், மக்கள் சந்தையின் மலிவுப் பொருள்போல் பரப்பிட உதவிய கருஞ்சட்டை கடமை வீரர்கள், பகுத்தறிவாளர்கள், தமிழ் இன உணர்வாளர்கள் ஆகிய அனைவருக்கும் எம் நன்றி!

மறுப்புகளை இனியும் வரவேற்கிறோம். நூல் பற்றிய மதிப்பீடு களையும் - புதிய அறிவுரைகளையும் வரவேற்கிறோம். தினையளவே இது என்றாலும் சமூகப் புரட்சிக்கு பனையளவு உதவிட முன்வந்த அனைவருக்கும் நன்றி - எதிர்த்ததன் மூலம் எளிதில் விளம்பரம் கிடைக்க உதவியவர்கள் உட்பட.

- கி.வீரமணி

Back to blog