கீதையின் மறுபக்கம் - 22ஆம் பதிப்புக்கான பதிப்புரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://periyarbooks.com/products/geethaiyin-marupakkam
 
22ஆம் பதிப்புக்கான பதிப்புரை

 

கடந்த 2014 மே திங்களில் இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு - நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் அமைப்பு, திருவாளர் நரேந்திர மோடியை ஏற்கெனவே அவர் முதலமைச்சராகிய குஜராத்தில் நிகழ்த்திய சாதனைகள் எனக் காட்டி, பிரதமர் வேட்பாளராக பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டு, பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றி அக்கட்சி வெற்றி பெற்று தனித்த பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்தது!

 

வளர்ச்சி - புதுப் பொருளாதார மாற்றம், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என்பதைப் பெரிதும் வலியுறுத்தினாலும், ஆட்சியில் அமர்ந்த பிறகு இந்துத்துவா கருத்துக்களையே மறைமுகமாகவும், நேரடியாகவும் வலியுறுத்தி, ஆட்சி ஆதிகார இயந்திரத்தை அதற்கேற்ப பயன்படுத்தி வரும் போக்கு மலிந்துள்ளது!

 

இதுநாட்டின் பல கட்சியினராலும், பொது நோக்குடையவர்களாலும் ஒப்புக்கொள்ளப்படாமல், கண்டனத்திற்கே ஆளாகி வரும் நிலை தொடர்கிறது.

 

பிரதமர் மோடி அவர்கள், தான் சென்ற வெளிநாடுகளான சீனா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற பெரிய நாட்டின் ஆட்சிப் பொறுப்பாளர்களுக்கு பகவத் கீதை நூலையே பரிசாகக் கொடுப்பதை வாடிக்கையாக்கினார். இதை வெளியுறவுத் துறை அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜ் அவர்கள், 07.12.2014 அன்று ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் அமைப்பில் ஒன்றான விசுவ இந்து பரிஷத் நடத்திய ஒரு கீதை விழாவில்,

 

பகவத் கீதை இந்தியாவின் புனித தேசிய நூலாக விரைவில் அறிவிக்கப்படவிருக்கிறது; அதன் முன்னோட்டம்தான் நமது பிரதமர் மோடி அவர்கள் பன்னாட்டுத் தலைவர்களுக்கும் பகவத் கீதை நூலையே பரிசாகக் கொடுத்த நிகழ்வு: எல்லாம் ஏற்பாடுகளும் முடிந்து, அறிவிப்பு வரவேண்டியதுதான் பாக்கி என்று அறிவித்தார்.

 

இந்த அறிவிப்பு, நாடெங்கும் புயல் போன்று பெரும் எதிர்ப்பினைத் தோற்றுவித்தது.

 

மதச் சார்பற்ற அரசியல் அமைப்பு (செக்குலர்) உள்ள இந்தியாவில் இப்படி ஒரு ஹிந்து மத நூல் - அம்மதத்தில் கூட வைணவப் பிரிவினர் மட்டுமே ஏற்கும் ஒரு நூலான பகவத் கீதை எப்படி இந்தியாவின் தேசியப் புனித நூல் தகுதி பெறும் என்று திசையெல்லாம் எதிர்ப்பு எதிரொலித்தது!

 

இப்போது அடிபட்ட பாம்பு, புற்றுக்குள் ஓடி ஒளிந்து கொண்டதுபோல், உள்ளே நுழைந்து கொண்டு விட்டது.

 

இதற்கு முன்; நாம் ஆய்வு செய்து தக்க சான்றுகளுடனும் தரவுகளோடும் வெளியிட்ட 'கீதையின் மறுபக்கம்' என்றைந்த ஆராய்ச்சி நூல் மக்களாலும், அறிஞர்களாலும், நடுநிலையாளர்களாலும் பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளது.

 

இந்தப் பதிப்பு புதிய இணைப்புகள் சேர்க்கப்பட்டு, மேலும் கூடுதலான பல பக்கங்களோடு 22ஆவது பதிப்பாக வெளிவருகிறது.

 

தமிழ்கூறும் நல்லுலகம் இதற்கு தரும் பேராதரவு காரணமாக இப்படி மேலும் மேலும் பெரியாரின் வாழ்நாள் மாணவனாகிய யான் படித்து புதிய வெளிச்சங்களையும் பெற்று, வாசகப் பெருமக்களுக்கு அதனைப் பொதுவுடைமையாகவும், பொது உரிமையாகவும் அளிப்பதில் எல்லையற்ற மகிழ்ச்சியையும், மன நிறைவையும் அடைகிறேன். படியுங்கள், ஆழ்ந்து படியுங்கள்! புரிந்துகொள்ளுங்கள்!

 

- கி.வீரமணி
ஆசிரியர்
சென்னை

27.01.2015

 

Back to blog