25ஆம் பதிப்புக்கான புதிய முன்னுரை
நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் பகவத்கீதை பற்றிய ஆய்வை நடத்தி, அதனுள் விரவியுள்ள ஆரிய வர்ணதர்ம பாதுகாப்புப் புரட்டினையும், பெண்களை இழிவுபடுத்தும் கொடுமைகளையும் ஆத்மா, கர்மா, பித்தலாட்டங்களையும் அம்பலப்படுத்திட புலவர் பெருமக்களுக்கும் ஆராய்ச்சி அறிஞர்களுக்கும், வேண்டுகோள் விடுத்தார். ('விடுதலை', 16.11.1973)
ஆனால், எவரும் அதனை செய்ய ஏனோ முன்வரவில்லை - 'தக்க சன்மானம் தரப்படும் ' - என்ற அறிவிப்புக்குப் பின்பும் கூட. எவரும் முன்வரவில்லை !
மற்றவர் முன் வராத நிலையில் துணிந்து நானே இறங்கி இம்முயற்சியைத் தொடங்கி, சுமார் 2 ஆண்டுகளுக்கு மேல் கீதைப் பற்றிய பற்பல நூல்களைத் திரட்டும் பணி மேற்கொண்டு, 'கீதையின் மறுபக்கம்' நூலை எழுதினேன். 1998 ஆம் ஆண்டு முதல் பதிப்பு வெளியிடப்பட்டது.
அது வாசகர்களிடம் அதிக அளவில் வரவேற்பைப் பெற்று, 20 ஆண்டுகளில் இலட்சம் பிரதிகளைத் தாண்டி தற்போது, இந்த 25 ஆம் பதிப்பு (வெள்ளி விழா பதிப்பு என்றும் கூறி மகிழலாம்) பல புதிய இணைப்புகளோடு வெளிவருகிறது.
புதைப் பொருள் ஆராய்ச்சி போல் மற்றொரு "கீழடி ஆய்வை "ப் போல் நித்தம் நித்தம் புத்தம் புதிய செய்திகள், சான்றுகள், கருத்துக்கள் கீதையின் மறுபக்கத்தினை மக்களுக்கு காட்ட கிடைத்துக்கொண்டே இருக்கின்றன!
அவற்றைத் திரட்டி வாசகர்களுக்கு அளிப்பதில் அளவில்லா மகிழ்ச்சி ஏற்படுகிறது. எனவே இதனை ஆழ்ந்து படித்து உண்மையை உலகறியச் செய்வீர்களாக!
கி.வீரமணி
09.07.2018
நூலாசிரியர்