கீதையின் மறுபக்கம் - முன்னுரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://periyarbooks.com/products/geethaiyin-marupakkam
 
முன்னுரை

புராண, இதிகாசங்களை நாட்டில் வெகுவாகப் பரப்பியதன் மூலமே, மக்களின் மூளைக்கு விலங்கிட்டனர் - பண்பாட்டுப் படையெடுப்பாளர்களான ஆரியர்கள்.

பாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்கள்தான் சனாதனத்தின் மூலதனம் ஆகும். வர்ணாசிரம தர்ம சமூகத்தின் குலதர்மத்தினைப் பிரச்சாரம் செய்ய கற்பனைகளைக்கூட, 'கடவுள் அருளியது', 'பகவான் பகர்ந்தது' என்று படித்த - படிக்காத இருசாரரான பாமர மக்களிடையே பரப்பி வருகின்றனர்.

அந்த வரிசையில் வேறு எந்த நூலையும் விட அதிகமான பிரச்சார வசதி பெற்று, மிகப்பெரிய அளவில் மக்களிடையே உலகம் முழுவதும் விளம்பரப்படுத்தப்பட்ட நூல் 'பகவத்கீதை'யாகும்.

அது கற்பனைதான் என்று ஏற்றுக்கொள்ளும் மிகப்பெரிய தலைவர்கள், சிந்தனையாளர்கள்கூட, அதற்காக வேறு முறையில் வாதாடி, மக்கள் மனதில் நிலைக்க வைக்கும் தவறினை நீடித்துச் செய்து வருவது அறிவு விடுதலை அடைவதற்கும், சமத்துவ சமுதாயம் அமைவதற்கும் மிகப்பெரும் முட்டுக்கட்டையாகும்.

இந்நாட்டின் அறிஞர்கள் என்பவர்கள் கீதையில் இரண்டு சுலோகம் தெரிந்ததுபோல் காட்டிக்கொண்டால் தங்களுக்கு 'அறிவு ஜீவி' முத்திரை கிடைத்து, பக்திப் பரவச வேடத்தினால் பல்வேறு பயன் அடைய முடியும் என்று கருதி, அதனைக் கட்டுப்பாடாய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர் தொன்று தொட்டு இன்றுவரை!

ஆந்திரத்து மானிட நேயப் பற்றாளரும், சுதந்திரச் சிந்தனையாளருமான 'நார்லா' என்று அழைக்கப்பட்ட நார்லா வெங்கடேசராவ் அவர்கள் எழுதிய ஆங்கில நூலான 'Truth about Gita' என்ற நூலைச் சில ஆண்டுகளுக்கு முன்பு நான் படிக்க நேர்ந்தது.

ஏற்கெனவே 'குடிஅரசு', 'விடுதலை', 'பகுத்தறிவு', தந்தை பெரியார் உரை ஆகியவற்றின் மூலம் கீதையின் முரண்பாடுகள் ஜாதி வர்ணப் பாதுகாப்பு, பெண்களை இழிவுபடுத்துதல், ஆத்மா மோசடி போன்றவை குறித்து படித்து அறிந்த நான் மேலும் சிந்திக்கத் தொடங்கினேன்.

கீதையைப்பற்றி ஏராளமான நூல்களைத் திரட்டி நிறையப் படித்து ஆய்வு செய்தேன்.

“பைத்தியம் பிடித்தவனுக்கு மேலும் கள்ளையும் ஊற்றிவிட்டால் எப்படி இருக்கும்?" என்ற ஓர் அழகான உவமையை, தந்தை பெரியார் அவர்கள், பல கூட்டங்களில் பேசும்போது கூறியதைக் கேட்டிருக்கிறேன்.

நானும் அப்பேச்சினைக் கேட்ட மக்களைப்போல் அவ்வப்போது (கைதட்டிச் சுவைத்ததுண்டு. அதற்கு முழுப் பொருள் அனுபவத்தோடு அறிந்த நிலை - உணர்ந்த நிலை - எப்போது ஏற்பட்டது என்றால், இந்தப் 'பகவத் கீதை'யை ஆய்வுக் கண்ணோட்டத்தோடு ஆழ்ந்து படித்தபோதுதான் ஏற்பட்டது!

கிரேக்கத்து ஏதென்சில் வாழ்ந்த சாக்ரட்டீசின் சீடர் பிளாட்டோ. மாறி வந்த யுகத்தில் வாழ்ந்த தத்துவ ஞானி பிளாட்டோ. அவர் ஒரு விசித்திரமான கருத்தினை வெளியிட்டார்.

எகிப்து நாட்டு தேவ அரசர் (மக்கள் அவரை அன்று அப்படி நம்பினர்) தேமுஸ் என்பவர் கருத்துகளை எழுத்துகள் மூலம் வெளியிடும் தோத் என்பவரைப் பார்த்து, ''எதனையும் எழுதி வெளியிடும் இந்த புதிய கண்டுபிடிப்பால் கற்றறிந்தோரின் ஞானத்திற்கு ஊறு ஏற்படும். எப்படியெனில், மூளை ஏற்கெனவே அறிந்ததை மறந்துவிடக் கூடும். எதையும் வாயால் சொல்ல, காதால் கேட்டு, மூளையில் நினைவுமூலம் பத்திரப்படுத்திக் கொள்ளும் முறைக்கு அது விடை கொடுத்தனுப்பிவிடும்" என்றார்.

எனவேதான் நேருக்கு நேர் இருவர் உரையாடல் (Dialogue) முறைக்கே முன்னுரிமை அவர்கள் (சாக்ரடீஸ், பிளாட்டோ) காலத்தில் தரப்பட்டது. எழுதி, கருத்துகளைப் பரப்பும் (Writing) முறைக்கு இரண்டாவது இடமே!

எழுத்து மூலம் வேதமோ, உபநிஷத்துகளோ மற்றும் இராமாயணம், பாரதம் போன்ற இதிகாசங்களோ முதலில் உருவாக்கப்படவில்லை என்பது அறிஞர்கள் ஆய்வு, செவி வழிச் செய்தியாக - பேச்சு வழக்கில் நிலவிய பிறகுதான் அவைகள் எழுத்து உருவத்தினைப் பிற்காலத்தில் கண்டன. இடைச்செருகல், திரிபுகளுக்கு அதனால் ஏராளமான வாய்ப்பு உண்டல்லவா?

சமஸ்கிருதத்தில் 'உபாத்தியாயர்' என்ற சொல்லுக்குப் பொருளே, அத்தியாயனம் - மனப்பாடம் செய்யும் மாணவருக்கு உடனிருந்து கூறி

உதவிய நிலையால், துணை புரிபவர் என்ற பெயர் வாய்மொழி மூலம் வந்த சொல்லாகும்; எழுத்து மூலம் கருத்துகளைப் பதிப்பித்த காலத்திற்கு முன்பே உருவானது.

கீதை பாரதத்தில் இடைச்செருகல் என்பது பல அறிஞர்களின் முடிவு என்றாலும், செவி வழியாக மக்கள் கேட்டு, பாரம்பரியமாகச் சொல்லி பரப்பி வந்த கதைகளையே பிறகு எழுதியதாகக் கூறி, எழுத்துமுறை தோன்றிய பின் வெளியிட்டனர். அப்படி வெளியிடுகையில், பழைய காலப்பேச்சு வழக்கு - உரையாடல் போலவும் அமைத்தனர்.

கீதையையும் அதே பாணியைப் பின்பற்றி அர்ச்சுனன் கேள்விக்குக் கண்ணன் பதில் கூறியதாகவே உரையாடல் முறையைப் பின்பற்றி - எழுத்து வடிவங்களைக் கொண்டு பின் பாரதத்தில் சேர்த்திருக்கக் கூடும்!

புத்தரின் பிரச்சாரத்தினால் மூச்சுத் திணறி அழியும் நிலையில் இருந்த வர்ணாசிரமவாதிகள், இப்படி ஒரு முயற்சியை அந்தக் காலகட்டத்தில் தான் பயன்படுத்தியிருக்கக்கூடும்.

கீதையில் ஒரு சுலோகத்தில் 'படிப்பவனும்' என்று வரும் சொல்லாட்சி அதை உருவாக்கியவர் ஒருவர், அவரது நோக்கம், அதை பிறர் படிக்க வேண்டும் என்பதை அவர் அறியாமலேயே தெளிவாக்கி விடுகிறது,

இதன்மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டிய செய்தி, எழுத்து முறை மூலம் கருத்துப் பரப்புதல் ஏற்பட்ட கால கட்டத்தில்தான் கீதை பிறந்திருக்க முடியும் என்பதேயாகும்.

இந்த நூலை ஒரு புதினத்தைப் படிப்பதுபோல் படித்து முடித்து விட எண்ணாதீர்கள். ஒரு புதுமையை ஆய்வது போன்று, பொறுத்து, அசை போட்டுப் படித்துச் செரிமானம் செய்ய முயற்சியுங்கள்!

இது ஒரு முக்கிய ஆய்வு நூல் என்பதால் ஆதாரங்களை மேற்கோள்காட்டி கையாளும்போது, சில இடங்களில் சற்று நீண்டும் இருக்கின்றன. வாசகர்கள் விளக்கம் பெறும் வசதிக்காக அது தவிர்க்க இயலாதது.

கடந்த 2 ஆண்டுகளுக்குமேல் அவ்வப்போது கிடைத்த ஓய்வினைப் பயன்படுத்தி - அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் எனது மூத்த மகள் திருமதி அருள் - பாலகுரு அவர்களது இல்லத்தில் கிடைத்த சீரிய ஓய்வினைப் பயன்படுத்தி - இப்படி ஒரு நூலை எழுதி, மேலும் பல புதிய அத்தியாயங்களை, தாயகம் வந்து எழுதி உருவாக்கி வெளியிட்டுள்ளேன்.

கீதை பற்றிய பல பழைய கால வெளியீடுகளையும், புதிதாக வந்த நூல்களயும் (தஞ்சை சரஸ்வதி மகால் நூலக - நூல்கள் உட்பட ஆய்ந்து பயன்படுத்தியுள்ளேன்.

இதற்கு எனக்குப் பல வகையில் உதவிய நண்பர்கள் பெரியார் பேருரையாளர் பேராசிரியர் இறையன், பேராசிரியர் நம். சீனிவாசன், பேராசிரியர் டாக்டர் பழனி அரங்கசாமி ஆகியோருக்கு எனது உளப்பூர்வமான ஆழ்ந்த நன்றி!

எனது ஆசான் தந்தை பெரியார் அவர்கள் ஒருமுறை கூறினார்: "எனது கருத்தினை மறுக்க உங்களுக்கு உரிமை உண்டு. எனவேதான் எனது கருத்தினைச் சொல்லவும் எனக்கு உரிமை உண்டு” என்று; அதையேதான் இந்நூலைப் பொறுத்தும் நான் கூற விரும்புகிறேன்.

இதில் உள்ள கருத்துகளுக்குப் போதிய ஆதாரங்களையும் கொடுத்தே 'மறுபக்கத்தைக் காட்டியுள்ளேன்.

புதிய சிந்தனைகளைத் தமிழுலகம் வரவேற்க ஆயத்தமாக வேண்டும்.

''தெய்வீகம் - சிந்திக்காமல் நம்புங்கள் - ஏற்றுக்கொள்ளுங்கள் என்பது 21-ஆவது நூற்றாண்டில் நுழைய இருக்கும் காலத்தில் கூடவா?" என்றே கேட்டுப் படியுங்கள்; சிந்தியுங்கள்; ஒவ்வாமை நோய்க்கு ஆளாகி ஒதுக்கிவிடாமல், ஆழ்ந்து சிந்தியுங்கள் - பயன் தினையளவு என்றாலும், பனையளவு மகிழ்ச்சி எனக்கு - எங்களுக்கு - சமுதாயத்திற்கு.

(கி.வீரமணி)

Back to blog