ஏழு தலைமுறைகள் - அறிமுகம்

ஏழு தலைமுறைகள் - அறிமுகம்

தலைப்பு

ஏழு தலைமுறைகள்

எழுத்தாளர் அலெக்ஸ் ஹாலே
பதிப்பாளர் சிந்தன் புக்ஸ்
பக்கங்கள் 272
பதிப்பு ஆறாம் பதிப்பு - 2016
அட்டை காகித அட்டை
விலை Rs.150/-

 

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://periyarbooks.com/ezhu-thalaimuraigal.html

 

அறிமுகம்

ஆப்பிரிக்கா என்றால் இருண்ட கண்டம்! அங்குள்ள மக்கள் மிருகங்களிடையே நடமாடும் காட்டு மிராண்டிகள்! அவர்கள் நாகரிகமோ, கலாச்சாரமோ, வரலாறோ இல்லாதவர்கள்! அமெரிக்கா சுதந்திரத்தின் சொர்க்கம்! வீரசாகசமிக்கோரின் பிறப்பிடம்!

இவைதான் வெற்றி கொண்டவர்கள் எழுதி வைத்த சரித்திரப் புரட்டுகள்! உலகை அறியாமை இருளிலே மூழ்கடித்த பொய்யான எழுத்துக்கள்!

மனித இன வரலாற்றில் கல்லாலான கருவிகளை உருவாக்கிப் பயன்படுத்திய திறமை இருபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே ஆப்பிரிக்கர் களுக்குத் தெரியும் என்பதும்; ஆசியாவில் கண்டு பிடிக்கப்பட்ட நெருப்பை, ஐரோப்பியர் அறிவதற்கு ஒன்றரை லட்சம் வருடங்கள் பிடித்தன என்பதையும் நாம் அறியும் போது வியப்பு மேலிடுகிறதல்லவா!

பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஆப்பிரிக்காவின் சிற்றூர்களிலும் சிறந்த ஊராட்சி அமைப்பு நிலவியது என்ற உண்மையும், ஒவ்வொரு சிறுவனும் கட்டாயக் கல்வியும், உடற்பயிற்சியும் பெற்று வந்தான் என்ற தகவலும், வெள்ளையர்களின் வருகைக்குப் பிறகே ஆப்பிரிக்காவின் கலாச்சார வரலாற்றில் இருண்ட யுகம் ஆரம்ப மாயிற்று என்பதையும் நாம் தெரிந்து கொள்ளும் போது அதிர்ச்சியடையாமல் இருக்க முடியாது.

சாதாரணமாக வெற்றியாளர்களே வரலாற்றை எழுது கின்றனர்; எழுதினார்கள். இந்தக் கசப்பான உண்மையின் தொடர்ச்சியை உடைத்தெறி வதற்காகவே ஏழு தலைமுறைகள் என்ற நூலை அலெக்ஸ் ஹேலி என்பவர் எழுதினார். இந்நூல் அப்பணியைச் செவ்வனே செய்யுமென்பது அவரது நம்பிக்கை, ஆசையுங்கூட

ஆப்பிரிக்காவிலிருந்து கருப்பு அடிமைகளை விலைக்கு வாங்கி அமெரிக்காவுக்குக் கொண்டு வருவது கி.பி. 1619 இல் துவங்கியது. முதலில் இருபது பேரோடு மட்டுமே ஆரம்பமான இந்தக் கொடுமை கி.பி.1810 ஆம் ஆண்டில் பத்து லட்சம் எண்ணிக்கையைத் தாண்டிவிட்டது. அவர்களில் பெரும்பாலானோர் பலாத்காரமாக இழுத்து வரப்பட்டவர்களே! கருப்பு அடிமைகள் இல்லாமல் வெள்ளையர்களுக்குக் காலம் போகாத நிலை ஏற்பட்டுவிட்டது.

கருப்புத் தாய்மார்களின் தாய்ப்பால் பருகி வெள்ளைக் குழந்தைகள் வளர்ந்தனர். கருப்பர்களின் இரத்தத்தாலும், வேர்வையாலும், உழைப்பாலும் வெள்ளையர்களின் வயல்கள் செழித்துக் குலுங்கின. வெள்ளையர் கருப்பரைக் கொண்டு லாப வேட்டையாடினர். கருப்புப் பெண்களையும், ஆண்களையும் பயன்படுத்திக்கொண்டு தமது காம இச்சையை நிறைவேற்றிக் கொண்டனர். ஆனால் தமது உல்லாச வாழ்க்கைக்காக ஓடாய் உழைத்துத் தேய்ந்துபோன கருப்பு இன மக்களை வெள்ளையர் மனிதப் பிறவிகளாகக்கூடக் கருதியதில்லை. அதற்கு மாறாக தம்மையே நாகரிகமானவர்கள், பண்பாடுடையோர் என்று பச்சைப் பொய் சொல்லிக் கொண்டனர்.

இந்த பயங்கரமான அடிமை அமைப்பை ஒழித்துக்கட்டப் பல போராட்டங்கள் வெடித்தன. ஆயிரக்கணக்கான கருப்பு அடிமைகளை விடுதலையை நோக்கி அழைத்துச் சென்ற புரட்சி உணர்வு கொண்ட காப்ரியல், டென்மார்க் வெஸி, நாட் டர்னர் ஆகியவர்களை வெள்ளையர் கைது செய்து தூக்கிலிட்டார்கள். 1852இல் பீச்சர் ஸ்டோவேயின் நாவல் "அங்கிள் டாம்ஸ் கேபின்" அமெரிக்காவை ஒரு கலக்கு கலக்கியது. அதே ஆண்டு ஃபிரடெரிக் டக்ளஸ் என்ற நீக்ரோ இனத் தலைவரின் சொற்பொழிவுகள் கருப்பின மக்களை எழுச்சிபெறச் செய்தன. அவர்களை முன்னோக்கி நடத்தின.

அவர் அமெரிக்க வெள்ளையரை நோக்கிக் கூறினார் "உங்கள் ஜூலை நான்காம் தேதி அமெரிக்க அடிமைக்குச் சுதந்திர தினமல்ல. வருடத்தில் மற்ற நாட்களைவிட அன்று அவனை எப்போதுமே நிர்தாட்சண்யமாக அநீதிக்குப் பலியாக்குவதைக் குறிப்பாக உணர்த்தும் நாள்.''

"உங்கள் சுதந்திர தினவிழா அவன் பார்வையில் ஏமாற்றுக் காரர்களின் வேடிக்கை விழா. நீங்கள் பெருமையடித்துக் கொள்ளும் சுதந்திரம், ஒரு களங்கமுள்ள அடங்காப்பிடாரித்தனம். உங்கள் இனப் பெருமை என்பது ஒரு மாயை. களிப்புடன் நீங்கள் எழுப்பும் குரல்கள் காட்டுக் கத்தல்கள். உங்கள் சர்வாதிகாரத்தை மறந்துவிட்டு மற்றவர்களின் சர்வாதிகாரம் பற்றிப் பேசுவது உங்கள் அகங்காரத்திற்கு எடுத்துக்காட்டு. சுதந்திரம், சமத்துவம் என்றெல்லாம் நீங்கள் கூறுவது சிரிப்புக்குரியது. உங்கள் பிரார்த்தனைகள், வேதாகமச் சொற்பொழிவுகள், நன்றி அறிவிப்புகள், மத அனுஷ்டானங்கள் எல்லாமே ஏமாற்று வித்தைகள், நடிப்பு, மாய்மாலங்கள்! மோசமான உங்கள் குற்றங்களை மூடி மறைக்கும் போர்வைகள்!"

- என்றெல்லாம் டக்ளஸ், கர்ஜனை புரிந்தார். அமெரிக்கக் கருப்பினத்தவரின் உள்ளத்தைப் படம் பிடித்துக் காட்டினார்.

1865 ஏப்ரல் ஒன்பதாம் நாள் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவடைந்தது. ஆப்ரகாம்லிங்கன் அடிமை முறை ஒழிப்பை அறிவித்தார். கருப்பர்களின் நெஞ்சங்கள் களிப்படைந்தன. உள்நாட்டுப் போர் முடிந்த ஆறு நாட்களுக்குள் லிங்கன் ஒரு வெள்ளை இன வெறியனால் சுட்டுக் கொல்லப் பட்டார். அவரது அடிமை முறை ஒழிப்பு அறிவிப்பைச் சட்டமாக்கி அமெரிக்க அரசியல் சட்டத்தில் பதின்மூன்றாம் திருத்தம் செய்யப்பட்டது.

வெள்ளையரின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்ற கருப்பின மக்கள், அமெரிக்கத் தென் மாநிலங்களில் பயங்கரமான இன வேற்றுமையை எதிர்கொள்ள நேர்ந்தது. பஸ்களிலும், ரயில்களிலும், ஓட்டல்களிலும், நாடக அரங்குகளிலும், பொதுப் பூங்காக்களிலும் தொழிற்சாலைகளிலும், கல்வி நிறுவனங்களிலும் கருப்பர்களுக்குத் தனி இடங்கள் ஒதுக்கப்பட்டன. வெள்ளைச் சிறுவர்கள் படிக்கும் பள்ளி களில் கருப்புப் பிள்ளைகளுக்கு அனுமதி இல்லை. மனநோய் மருத்துவ நிலையங்களிலும் கூட கடுமையான நிறப்பாகுபாடு காட்டப்பட்டது. அந்தச் சமயத்திலேயே - அதாவது இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் வெள்ளை இனவெறிக்குத் தூபம் போடும் கீழ்க்காணும் நாவல்கள் வெளிவந்தன. "A Historical Romance of the Ku-Klux-Klan'', "The Negro a Beast" or "in the Image of God." இந்த நாவல்க ள் தென் மாநிலங்களில் உள்ள வெள்ளை இனவெறி கொண்டோரின் ஆதரவைப் பெற்றன.

முதல் உலகப் போர் முடிவு பெற்றதுமே அமெரிக்காவில் இனக் கலவரங்கள் மூண்டன. உசுப்பிவிடப்பட்ட நாய்களைப்போல் வெள்ளை இனவெறியர்கள் கூட்டம் கூட்டமாகக் கிளம்பி, கருப்பின மக்கள் மேல் பலவிதமான அட்டூழியங்கள் புரிந்தனர். அவர்களுடன் அரசு அதிகாரிகளும் ஒத்துழைத்தார்கள். பல்வேறு தொழில்களி லிருந்தும், அரசு வேலைகளிலிருந்தும் கருப்பர்கள் வெளியேற்றப் பட்டார்கள்.

கருப்பின மக்களின் அமைதியான ஒத்துழையாமை இயக்கங்கள் ஆரம்பமாயின. அமெரிக்காவின் இவ்விரு இனத்தவர் இடையே மனக் கசப்புகளும், முரண்பாடுகளும் அதிகரித்தன. இரண்டாம் உலகப் போருக்குப் பின் கொலம்பியாவிலும், ஃபிலடெல்பியாவிலும் சிகாகோவிலும் பயங்கரமான இனக் கலவரங்கள் நடைபெற்றன. நூற்றுக்கணக்கான நீக்ரோக்கள் சித்திரவதைகளுக்கு ஆளானார்கள். வெள்ளை நிற வெறியர்களின் தாக்குதல்களும், வெள்ளையர் அரசுகளின் சிறைகளும் தூக்கு மரங்களும் கருப்பின மக்களின் சமத்துவ உணர்வை அழிக்க முடியவில்லை.

1955 டிசம்பர் முதல் தேதி அலபாமா மாநிலத்தில் மாண்ட்கோமரி நகரில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. திருமதி ரோஸா பார்க்ஸ் என்னும் கருப்பினப் பெண்மணி பஸ்ஸில் பயணம் செய்யும்போது, ஒரு வெள்ளையனுக்குத் தான் உட்கார்ந்திருந்த இடத்தை அளிக்காத தற்காகக் கைது செய்யப்பட்டாள். அச்செய்தி நகரம் முழுவதும் காட்டுத் தீ போல் பரவியது. மறுநாள் கருப்பின மக்கள் அனைவரும் கூடி பஸ்களைப் பகிஷ்கரிப்பதென முடிவு செய்தார்கள். பதினேழாயிரம் கருப்பர்கள் கார்களிலும், கால் நடையாகவும் வேலைக்குச் சென்று வந்தார்கள், அன்று மாலை ஆயிரக்கணக் கானவர்கள் மாதா கோயில்களில் கூடினார்கள். டாக்டர் மார்டின் லூதர் கிங் என்ற மத போதகர் மேடையேறி சொற்பொழிவாற்றத் துவங்கினார்.

“துன்பங்கள் பட்டு பட்டு, அவமானங்களைப் பொறுத்துப் பொறுத்துப் பொறுமையிழக்கும் வேளை ஒன்று வரும்.”

"ஆமாம் கர்த்தரே" - கேட்டுக் கொண்டிருந்தோர் கூவினார்கள்.

''நம்மை நீண்ட காலமாக அவமதித்துக்கொண்டிருப்பவர்களிடம் நாம் பொறுமையிழந்து விட்டோம் என்பதை அறிவிக்க நாம் இங்கே கூடியிருக்கிறோம்.''

"கர்த்தரே அவருக்கு உதவிடுங்கள்'' - மக்கள் கூவினார்கள்.”இந்தக் கொடுமையான பாகுபாட்டினாலும், சகிக்க முடியாத அவமதிப்புகளாலும் நாங்கள் பொறுமையிழந்து விட்டோம்."

''ஆமென்"

"பொறுமையிழந்துவிட்டோம். பொறுமையிழந்து விட்டோம் - என்று நான் சொன்னது உங்கள் காதுகளுக்குக் கேட்டதா?"

"கேட்டது கர்த்தரே"

மாண்ட்கோமரி இயக்கம் அமெரிக்கா பூராவிலும் எழுச்சியை உண்டாக்கியது. நீக்ரோ மக்களின் பிரஜா உரிமைகள் இயக்கம் சிறகு விரித்தது. ஆறு மாதங்களுக்குப் பின்னர் ஃபெடரல் நீதிமன்ற உத்தரவின்படி பஸ்களில் தனித்தனி இடங்கள் ஒழிக்கப் பட்டுவிட்டன.

நீக்ரோ மக்கள் பெற்ற இந்த வெற்றி மிகச் சொற்பமானது. அவர்கள் பெறவேண்டியது இன்னும் எவ்வளவோ உள்ளது. அவர்கள் தம்மைத்தாம் புனரமைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தார்கள். 'நீக்ரோ' என்ற சொல்லை அவர்கள் வெறுத்தார்கள். சுரண்டல் பேர்வழிகள் வைத்த கெட்ட பெயரது! சுரண்டுபவர்கள் கருப்பின மக்களை மனத்தில் வெறுப்புடன் நினைப்பது கருப்பர் களுக்குச் சாபமும் அல்ல; வரமும் அல்ல!

இந்த விழிப்புணர்வும், எழுச்சியும் அமெரிக்க நீக்ரோ மக்களை போராட்டப் பாதையில் அடித்துச் சென்றன. அமைதியான ஒத்துழையாமை இயக்கத்திற்குப் பதில் போர்க்குணமிக்க அரசியல் கருத்தோட்டம் பிறந்தது. கருப்பு முஸ்லிம் இயக்கம்', 'கருப்பு சக்தி முன்னணி' போன்ற இயக்கங்கள் தோன்றின. இனவெறியை எதிர்த்து நிற்காமல், சம உரிமைகளுக்காகப் போராடாமல், அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கு விமோசனம் இல்லை என்பதை வரலாறு தெளிவாக்கிவிட்டது.

கருப்பினத் தலைவர் ஃபிரெட்ரிக் டக்ளஸ் 1857 ஆம் ஆண்டு ஆகஸ்டில் கூறிய இச்சொற்களை அமெரிக்கக் கருப்பர்கள் இன்றும் நினைவு கூர்கிறார்கள்.

"சுதந்திரம் விரும்புகிறோமென்று ஒரு பக்கம் கூறிக் கொண்டே மறுபக்கம் போராட்டத்தை வெறுப்பவர்கள் வயலை உழாமலேயே அறுவடை செய்ய விரும்புபவர்கள். இடியும் மின்னலும் இல்லா மலேயே மழை பொழிய வேண்டுமென்பவர்கள். கடல் ஆர்ப்பரிக்காமல் இருக்க வேண்டுமென்பவர்கள்.''

"கேட்காமல், போராடாமல் ஆட்சியாளர்கள் எதையும் தரமாட்டார்கள். இதுவரையில் அப்படி நடைபெற்றதில்லை. இனி நடக்கப் போவதுமில்லை. சுரண்டலுக்குட்படுபவர்களின் பொறு மையைக் கொண்டு சுரண்டுபவர்கள் பாதுகாப்பு அரணை அமைத்துக் கொள்கிறார்கள்.''

"வெள்ளையர்கள் கொடுப்பவர்களாகவும் கருப்பர்கள் பெற்றுக் கொள்பவர்களாகவும் இருக்கும் நிலைமை ஒழிந்து, இருவரும் சமப் பங்காளிகளாக இருக்கும் அமைப்புக்காக அமெரிக்கக் கருப்பினம் போராடிக் கொண்டிருக்கிறது.''

இப்போராட்ட எதிரொலிகள் அலெக்ஸ் ஹேலியின் 'ஏழு தலைமுறைகள்' எனும் இந்நாவலின் அடிமைச் சேரிகளில் பலமுறை கேட்கின்றன.

1852 ஆம் ஆண்டில் வெளிவந்த 'அங்கிள் டாம்ஸ் கேபின்' நாவலுக்குப் பிறகு கடந்த நூற்றிருபது வருட நீண்ட காலத்தில் உலகத்தையே குலுக்கிய இது போன்ற புத்தகம் வேறெதுவுமே வந்ததில்லை. இது இரண்டு கண்டங்களின், இரு இனத்தவரின், இரண்டு நூற்றாண்டுகளின் எதார்த்தமான, வேதனை நிறைந்த வரலாற்றுக் கதை!

அமெரிக்காவில் படிக்கத் தெரிந்த ஒவ்வொரு கருப்பு மனிதனும் இந்த நூலை பணம் கொடுத்து வாங்கிக் கொண்டான். படிப்பறி வில்லாத ஒவ்வொரு கருப்பனும் இதை வாங்கி, பைபிளைப்போல் தன் வீட்டில் பத்திரப் படுத்திக் கொண்டான்; அவனது முன்னோர்கள் புரிந்த கொடுமைகளுக்குத் தலைகுனிந்த ஒவ்வொரு வெள்ளையனின் கண்களும் இந்நூலின் பக்கங்களில் சிக்கிக் கொண்டன.

ஆங்கில மூலத்தில் சுமார் எழுநூறு பக்கங்கள் கொண்ட இந்நூலைத் தமிழ் வாசகர்களின் வசதிக்காகச் சுருக்கித் தந்துள்ளோம் என்றாலும் மூலத்தின் சாரம் குன்றாமல் கொண்டுவர முயன்றுள்ளோம்.

வெள்ளையர்கள் கொடுப்பவர்களாகவும் கருப்பர்கள் பெற்றுக் கொள்பவர்களாகவும் இருக்கும் நிலைமை ஒழிந்து இருவரும் சமப் பங்காளிகளாக இருக்கும் அமைப்புக்காக அமெரிக்கக் கருப்பினம் போராடிக்கொண்டிருக்கிறது

கருப்பினத் தலைவர் ஃபிரெடரிக் டக்ளஸ் 1857-ஆம் ஆண்டு ஆகஸ்டில் கூறிய இச்சொற்களை அமெரிக்கக் கருப்பர்கள் இன்றும் நினைவு கூர்கிறார்கள். இப் போராட்ட எதிரொலிகள் அலெக்ஸ் ஹேலியின் 'ஏழு தலைமுறைகள்' எனும் இந்நாவலில் அடிமைச் சேரிகளில் பலமுறை கேட்கின்றன. 1852-ஆம் ஆண்டில் வெளிவந்த அங்கிள் டாம்ஸ் கேபின் நாவலுக்குப் பிறகு கடந்த நூற்றிருபது வருட நீண்ட காலத்தில் உலகத்தையே குலுக்கிய இது போன்ற புத்தகம் வேறெதுவுமே வந்ததில்லை. இது இரண்டு கண்டங்களின் இரு இனத்தவரின் இரண்டு நூற்றாண்டுகளின் எதார்த்தமான வேதனை நிறைந்த வரலாற்றுக் கதை!

 

- பதிப்பகத்தார்.

Back to blog