இலங்கை தி.மு.க. வரலாறு வெளிவருகையில் இலங்கை திராவிடர் இயக்க வரலாற்றின் நாயகன் தோழர் ஏ.இளஞ்செழியன் எம்மிடையே இல்லை. மறுபுறம் மூன்று தசாப்தங்களாக இலங்கையின் வடகிழக்கில் நடைபெற்ற ஆயுதப் போராட்டம் நிர்மூலமாக்கப்பட்டுள்ளது. "வடகிழக்கு மக்களது அடிப்படை உரிமைகள் பலாத்காரமாக மறுக்கப்படின் ஆயுதம் ஏந்தி கெரில்லாப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். போலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்களைக் கைப்பற்ற வேண்டும்" என முதன் முதலில் கூறியவர் தோழர் இளஞ்செழியன் ஆவார். தோழர் இளஞ்செழியன் 18.09.1969 அன்று யாழ் முற்றவெளி மைதானத்தில் நடைபெற்ற இலங்கை திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தில் ஆற்றிய இவ்வுரை அன்றைய ஆட்சியாளர்களின் கண்டனத்திற்கு மட்டுமல்லாது தமிழ் தலைவர்களின் கண்டனத்திற்கும் உள்ளாகியது. ஆனால், அவரது கூற்று யதார்த்தமாகியது நீங்கள் அறிந்ததே.
தம்மால் செயற்படக்கூடிய காலம் வரை வடகிழக்கு தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமைகளுக்காகக் குரலெழுப்பி வந்த தோழர் இளஞ்செழியன் தென்னிலங்கைவாழ் இந்திய வம்சாவளி மலையக மக்களின் விடுதலை, தென்னிலங்கைத் தொழிலாளர்களின் வர்க்க விடுதலையுடன் பின்னிப் பிணைந்துள்ளது எனக் கூறி வந்தார்.
எழுபதுகளின் பின்னர், இலங்கை திராவிடர் இயக்கத்தை தம் இயக்கத்தைச் சார்ந்த சீர்த்திருத்தவாதிகளின் கையில் ஒப்படைத்துவிட்டு இளம் சோசலிச முன்னணி' என்ற பெயரில் இடதுசாரி அரசியல் பயணத்தை மேற்கொண்ட இளஞ்செழியன் எண்பதுகள் முதல் புதிய ஜனநாயக முன்னணி' என்ற அமைப்பினையும் உருவாக்கி செயற்பட்டு வந்தார். நாட்டில் நிலவிய இன முரண்பாடும், இன மோதல்களும் அவரது இயக்கத்தைப் பலமாகக் கட்டியெழுப்ப வாய்ப் பளிக்கவில்லை;
இருப்பினும் தம்முடன் இருந்த சிறு பிரிவினருடன் தம் அரசியல் பயணத்தை தொடர்ந்தார்.
முப்பது வருட இழப்பின் பின்னர், வடகிழக்கு தமிழ் மக்கள் தமது பயணத்தை மீட்டுப் பார்த்து தமது பயணத்தை மீண்டும் ஆரம்பிக்க வேண்டியுள்ளது. இப்பின்புலத்திலேயே இந்நூல் வெளிவருகின்றது. தமிழ் மக்களின் போராட்டம் பின்னடைவினை சந்தித்துள்ள இவ்வேளையில் இவ்வாறான வரலாற்றுத் தகவல்களைத் தமிழகத்தில் வெளியிடச் செய்தல் எதிர்கால சந்ததியினரின் போராட்டத்திற்கு உதவியாக அமையும் எனக் கூறி, இந்நூலை மீள்பதிப்பு செய்யும் முயற்சியில் கோயம்புத்தூரை சார்ந்த தோழர். பாவேந்தன் அவர்கள் ஈடுபடலானார். இம்முயற்சியில் பின்னர் தோழர் விஜயனும் இணைந்து கொண்டார். இவ்விருவரினது அயரா முயற்சியின் விளைவாக நாளந்தா பதிப்பகத்தினர் இந்நூலினை வெளிக் கொணர்ந்துள்ளனர்.
இப்பதிப்பில் சில புகைப்படங்களும் இலங்கைதி மு.க.வினால் வெளியிடப்பட்ட சில பத்திரிகைகளின் நிழற்பிரதிகளும் இணைக்கப்பட்டுள்ளன.
தோழர் இளஞ்செழியனுடன் ஐம்பது வருடங்களாக கூட்டிணைந்து செயற்பட்ட மலையக மூத்த இடதுசாரி தொழிற்சங்கவாதியான தோழர் ஓ.ஏ. இராமையாவின் அணிந்துரையுடன், இலங்கை அரசியலில் முக்கிய பாத்திரம் வகித்துவரும் ஜே.வி.பி. என அழைக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணி எழுபதுகளில் இந்தியா பற்றி தமது உறுப்பினர் களுக்கு நடாத்தி வந்த அரசியல் வகுப்பின் தமிழாக்கம் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் பேசும் மக்கள் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்துவரும் இவ்வேளையில் இந்நூலினை வெளிக்கொணர முன்வந்த நாளந்தா பதிப்பகத்தின் உரிமையாளர் திரு. தங்கபாண்டியனுக்கு இவ்விடம் நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன். ஏனெனில், வெறுமனே இலாபத்தை மட்டுமே கருதிக் கொண்டிருந்தால் இந்நூலை வெளிக்கொணர முனைந்திருக்க மாட்டார்.
இறுதியாக, தோழர் இளஞ்செழியன் தமது இறுதி 8 வருடக் காலத்தை கண்டி, சமூக அபிவிருத்தி நிறுவகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இல்லத்தில் கழித்த வேளை தன்னை சந்திக்க வருபவர்களிடம் கடவுள் மறுப்பு மற்றும் வர்க்க விடுதலையைப் பற்றி பேசுவதற்கே முன்னுரிமையளித்தார். தமது இறுதி நாட்களில் பல இலங்கை மற்றும் இந்திய அரசியல்வாதி களுடனும், ஆய்வாளர்களுடனும் உரையாடிய இவர் தம்மை சந்தித்த தமிழகத்தைச் சார்ந்த தோழர் வே.ஆனைமுத்து அவர்களை இறுதி நாட்களில் பலமுறை நினைவுகூர்ந்தார். பெரியாரின் கொள்கைகளை வயிற்றுப் பிழைப்பிற்காக கடைப்பிடிக்கும் இக்காலத்தில் ஆனைமுத்து அவர்களின் அர்ப்பணிப்பு தம்மை உற்சாகப்படுத்துவதாகக் கூறினார்.
09.09.2007 அன்று தன் இறுதி மூச்சைவிட்ட இளஞ்செழி பனின் வரலாற்றை இன்றைய இளம் சந்ததியினர் வாசித்து அறிவது அவசியமாகும். ஏனெனில் தம் இளமைக் காலங்களில் கடவுள் மறுப்பு மற்றும் வர்க்க விடுதலை பேசிய அரசியல் வாதிகள் பலர் இன்று வர்க்க விடுதலையைப் புறந்தள்ளி கடவுள் பக்தியில் இறங்கி அரசியல் நடாத்தும் காலக்கட்டத்தில் இளஞ்செழி யனின் வரலாறு ஒரு படிப்பினையாகவும், புத்தூக்கம் அளிப்பதாகவும் அமையும்.
பத்திரிகையாளரும் ஆய்வாளருமாகிய தோழர் பெ.முத்துலிங்கம், எழுபதுகளில் இடதுசாரி அரசியல் தொழிற்சங்க பணிகளில் தம்மை இணைத்துக் கொண்டவர். அதன் தொடர்ச்சியில் தோழமை இயக்கங்களோடு கொண்ட உறவி னால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் பிடிக்குள் சிக்க வேண்டிய நிலையில் இந்தியாவில் சில காலம் தலைமறைவு வாழ்க்கையை மேற் கொண்டார். பின் இலங்கை - இந்திய ஒப்பந்தத் தின் அடிப்படையில் பொது மன்னிப்பு பெற்று இலங்கை திரும்பி, அரசு சார்பற்ற அபிவிருத்தி நிறுவனத்துறையின் ஊடாக சமூகப்பணியில் ஈடுபட்டு வருகின்றார்.
தேசிய தினசரிகள், சஞ்சிகைகள் ஊடாக அரசியல் விவகாரங்களை ஆய்வுக்கு உட்படுத்தி கட்டுரைகள் எழுதி வருகின்றார். இலங்கைவாழ் இந்திய வம்சாவளி மலையக தோட்டத் தொழி லாளர்களின் வரலாற்று பின்னணி, அவர்களது சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு விழுமி யங்களின் வரலாற்றுப் பின்புலத்தை இன்றைய தலைமுறையினர் அறியும் வகையில் தோட்டத் தொழிலாளர் அருங்காட்சியகம் ஒன்றினை உருவாக்கி உள்ளார்.
தோழமையுடன்,
- பெ.முத்துலிங்கம்
இல. 265,
சௌம்ய தாருணி இல்லம்
பெனரோமா பார்க்
முல்லேகம
அம்பத்தன்ன
கண்டி, இலங்கை.
தொடர்புடைய மற்ற பதிவுகள்: