இலங்கை தி.மு.க. வரலாறு” என்னும் இந்நூலின் மூலம் வரலாற்றுக்குப் பெருமை சேர்த்த தோழர். பெ.முத்துலிங்கம் இலங்கை திராவிட இயக்க வரலாற்றோடு முன்னாள் இ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஏ.இளஞ்செழியனின் வரலாற்றையும் இணைத்து எழுதியுள்ளார். இலங்கை திராவிட இயக்கத்தின் தானைத் தலைவனாகத் திகழ்ந்த தோழர் ஏ.இளஞ்செழியனின் வரலாறு இல்லாத திராவிட இயக்க வரலாறு இல்லை; அதுபோல் திராவிட இயக்க வரலாறு இல்லாத இளஞ்செழி யனின் வரலாறும் இல்லை. "எழுதாத வரலாறு" வெளிவந்த போது தோழர் இளஞ்செழியன் எம்மத்தியில் வாழ்ந்து வந்தார்; இவ்வேளை அவர் எம்மத்தியில் இல்லை; அமரத்துவம் அடைந்து விட்டார். இந்த அணிந்துரையை எழுதும் முன் முதலில் தோழர் இளஞ்செழியன் அவர்களுக்கு புரட்சிகர அஞ்சலியையும், செங் கொடியைத் தாழ்த்தி வீரவணக்கத்தையும் சமர்ப்பிக்கின்றேன்.
காலனித்துவ ஆட்சிக்கெதிரான போராட்டங்கள், மக்களின், தேசங்களின் விடுதலைக்கான போராட்டங்கள், சோசலிசப் புரட்சிக்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட காலக் கட்டத்தில் பிரபுத்துவ, சாதிய முதலாளித்துவ ஒடுக்குமுறை களையும், சுரண்டல்களையும் எதிர்த்து சமூகநீதி கோரிய, சுயமரியாதை இயக்கம் முதல் திராவிட கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் வரை மாபெரும் போராட்டங்கள் நடத்தியதன் தாக்கம் தமிழர்கள் குடியேறிய பல்வேறு நாடுகளிலும் பிரதிபலித்தன. இலங்கையிலும் இது ஏற்பட்டதன் விளைவே திராவிட கழகம், இலங்கை திராவிட முன்னேற்றக் கழகம், பகுத்தறிவு இயக்கம் முதலியவை தோன்றின. இந்த இயக்கங்கள் இலங்கைவாழ் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள், இலங்கை தமிழ் மக்கள் மத்தியில் சமூகநீதி கோரிய சாதிய ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடின. பல வெற்றிகளையும் ஈட்டின. இலங்கை திராவிட இயக்கத்தின் சமூக அநீதிக் கெதிரான போராட்ட வரலாற்றில் தோழர் ஏ.இளஞ்செழியன் ஆற்றிய அடுக்கு மொழிப்பேச்சு மற்றும் நாவன்மை அவரை 'நாவலர் இளஞ்செழியன்' என தோழர்களால் பாசத்துடன் அழைக்கப்பட வைத்தது.
இந்திய வம்சாவளி மக்கள் மீது மகாத்மா காந்தி, ஜவஹர்கால் நேரு போன்ற தலைவர்கள் செல்வாக்கு செலுத்தியது போல் இளந்தலைமுறையினர் மத்தியில் ஈவேரா. பெரியார், அறிஞர் - அண்ணா போன்ற திராவிட இயக்கத் தலைவர்களின் செல்வாக்கு வளர்ந்தது. இத்தலைவர்களின் பகுத்தறிவு, சுயமரியாதை சிந்தனைகள் இந்திய மக்கள் வாழும் மலையக மெங்கும் பரவின. இன்னொரு பக்கம் மார்க்ஸிச லெனினிஸ சித்தாந்தம் பரவியது. சமூக அநீதிக்கெதிராக, மூடநம்பிக்கைக் கெதிராக அதே சமயம் அரசியல் உரிமை கோரி நடாத்திய போரட்டங்கள் வளர்ச்சி பெற்ற காலக்கட்டத்தில் தோழர் இளஞ்செழியன் ஆற்றிய சேவை மகத்தானது. இக்காலக் கட்டத்தில் இலங்கையில் திராவிட இயக்கத் தோழர்களுக்கும் கம்யூனிஸ்ட்களுக்குமிடையே ஒற்றுமை ஓங்கியது.
சிங்கள பேரினவாத சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சிபீட மேறியதும் தனிச் சிங்கள சட்டம் வந்ததும் அதை எதிர்த்த இடதுசாரிக் கட்சிகள் பின் சிங்கள பேரினவாதத்திற்கு சரணாகதியடைந்ததும், கம்யூனிஸ்ட்டுகளுக்கும் இ.தி.மு.க. விற்கும் இடையே வளர்ந்த உறவுகளில் விரிசல் ஏற்பட்டது. இ.தி.மு.க. வடபகுதியில் வளர்ந்து வந்த தமிழ்த் தேசிய கட்சிகளோடு தனது உறவை வளர்த்தது. அவைகளின் போராட்டத்தில் பங்கு பற்றியது. சமூக அநீதிகளுக்கு எதிரான போராட்டங்களோடு சிங்கள பேரினவாதத்திற்கு எதிரான போராட்டமும் சங்கமமாகின.
1963 இல் இலங்கை திராவிட முன்னேற்றக் கழகம் தடை செய்யப்பட்டபோது ஆட்சி பீடத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கோலோச்சியது. லங்கா சமசமாஜ கட்சியும், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் இனவாத அரசுக்கு ஆதரவளித்தன. இலங்கை திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணத்தில் தடையேற்பட்டது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியிலும் லங்கா சமசமாஜ கட்சியிலும் பிளவுகள் ஏற்பட்டன. தோழர் ஏ.இளஞ்செழியனின் பயணம் பல்வேறு பாதைகளில் சென்றது.
இலங்கையின் போராட்ட நிலைமைகளும், சர்வதேச நிலைமைகளும் சோவியத் - செஞ்சீன மோதலும் களநிலையை மாற்றியமைத்தன. சோசலிச முகாம் பிளவுப்பட்டது; இடதுசாரிய இயக்கம் பிளவுபட்டது. கம்யூனிஸ்ட் கட்சிகள் பிளவுபட்டன. இலங்கையின் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் மொஸ்கோ சார்பு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியொன்றும் பீஜிங் சார்பு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியென்றும் ஊடகங்களால் அடையாளப் படுத்தப்பட்டன. செங்கொடிச் சங்கம் சீனச் சார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் பக்கம் சேர்ந்தது.
இ.தி.மு.க. தோழர்கள் செங்கொடி சங்கத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். பெருமளவு இ.தி.மு.க. அங்கத்தினர்கள் முழு நேர ஊழியர்களாக செங்கொடி சங்கத்தில் சேர்ந்தனர். செங்கொடி சங்கத்திற்கும் இ.தி.மு.கழகத்திற்கும் இடையே தோழமை உறவு வளர்ந்தது. தலவாக்கலை, அப்புத்தளை பகுதிகளில் செல்வாக்குப் பெற்றிருந்த இ.தி.மு.க. தலைவர்கள் செங்கொடிச் சங்கத்தின் வளர்ச்சிக்கு தம்மை அர்ப்பணித்தனர். மொஸ்கோ சார்பு கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இ.தி.மு.கழகத்திற்கும் இடையே நட்புறவு சிதைந்த போதிலும் செங்கொடி சங்கத்தோடு இருந்த உறவுகள் தொடர்ந்ததுடன் எனக்கும் தோழர் இளஞ்செழியனுக்கும் இடையிலான உறவுகளும் தொடர்ந்தன.
எழுபதுகளில் இலங்கையின் இனப்பிரச்சினை கூர்மை யடைந்தது. இனக் கலவரங்கள் வளர்ந்தன. ஆயுதப் போராட்டங் களும் வளர்ந்தன. தனி ஈழநாடு கோரிக்கையும் வளர்ந்தது. வடக்கில் தமிழரசு கட்சியோடும் தெற்கில் இடதுசாரிய இயக்கங்களோடு தொடர்பு கொண்ட ஏ.இளஞ்செழியனுக்கு தமிழரசு கட்சியின் தனிநாட்டுக் கோரிக்கை தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.
இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தினை ஆதரித்தபோதும், தென்புல இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் தமிழீழக் கோரிக்கையை ஆதரிக்க முடியாதெனும் நிலைப் பாட்டை தோழர் இளஞ்செழியன் எடுத்தார். தமிழரசுக் கட்சி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிய இயக்கங்களோடு தொடர்ந்து இணைய முடியாத ஒரு நிலைமை ஏற்பட்டது.
மறுபுறம் பிளவுபட்டிருந்த செயலற்றிருந்த திராவிட இயக்கத் தோழர்களை இணைக்க வழிதேடினார். இப்பின்புலத்திலேயே இந்திய வம்சாவளி மக்கள் கூட்டணி தோற்றுவிக்கப்பட்டது. இந்திய வம்சாவளி மக்கள் கூட்டணி 1970களின் இறுதி பகுதியில் தீவிரமாக சேவையாற்ற தொடங்கியது. கொழும்பு தப்ரபேன் ஹோட்டலில் விமர்சையாக மாநாடு நடைபெற்றது. இந்திய வம்சாவளி தமிழர் மற்றும் இலங்கை மலையாளிகள், தெலுங்கு தோழர்கள், இஸ்லாமிய தோழர்கள் மற்றும் முற்போக்கு சக்திகள் இணைந்து தமது பொது கோரிக்கைகளை முன்வைத்து அரசியல் இயக்கத்தை முன்னெடுத்தனர். இந்திய வம்சாவளி மக்கள் கூட்டணியின் தலைவராக ஓ.ஏ. இராமையாவும், பொதுச் செயலாளராக தோழர் இளஞ்செழியனும், பொருளாளராக தோழர் சுதாகரும் தெரிவு செய்யப்பட்டனர். இணைத் தலைமையின் கீழ் சகல அமைப்புகளின் தலைமைகளும் ஒன்றிணைந்து செயற்பட்டனர். தோழர் பெ.முத்துலிங்கம் கண்டியில் இந்திய வம்சாவளி மக்கள் கூட்டணியை ஸ்தாபித்து தலைமைப் பொறுப்பேற்றார்.
1983ஆம் ஆண்டு இனக்கலவரத்தில் இந்திய வம்சாவளி மக்கள் கூட்டணியின் சில அங்கத்தினர் இறந்தனர். இன்னும் சிலர் இந்தியா சென்று விட்டனர். ஏனையவர்களில் சிலர் சிதறிவிட்டனர். தமிழ் இயக்கங்கள் தடை செய்யப்பட்டன. இந்திய வம்சாவளி மக்கள் கூட்டணியும் இனவெறிக்கு இலக்காகியது. இதன்பின் ஏ.இளஞ்செழியன் இன்னொரு பாதையில் சென்றார். இடதுசாரி இயக்கங்களோடு இணைந் தார். ஆனாலும், அவர் இ.தி.மு.க. இந்திய வம்சாவளி மக்கள் கூட்டணியில் ஆற்றிய மகத்தான சேவை அவரது போராட்ட வரலாற்றின் பிரகாசமான பக்கங்களாகும்.
இலங்கைத் தமிழினப் பிரச்சினை கூர்மையடைந்து ஆயுதப் போராட்டம் நடந்ததினால் சீர்திருத்த இயக்கங்கள் பின்தள்ளப்பட்டன. உலகமயமாக்கலின் தாக்கம் சாதியத்திற்கும், மூடநம்பிக்கைகளுக்கும், குல கோத்திரங்களுக்கும் புது உருவங்களையும், பொருளாதார இணைப்புகளையும் தோற்று வித்தது. சோசலிசத்துக்கான போராட்டங்களோடு இன சமவுரிமைக்கான மற்றும் சுயமரியாதை பகுத்தறிவு கொள்கைக் கான போராட்டங்கள் மீண்டும் பரவும் வரலாற்றுத் தேவையுள்ளது.
உலகமயமாக்கத்திற்கு ஆதரவான ஆய்வாளர்களும், வரலாற்று ஆய்வாளர்களும் சோசலிச தொழிலாளர் வர்க்க சமூக எழுச்சி போராட்ட வரலாறுகளை திரிபுபடுத்தும் இக்காலக் கட்டத்தில் இந்நூல் வெளியாகியுள்ளது.
இந்த அணிந்துரையை எழுதும் நான் இலங்கை கம்யூனிஸ்ட் இயக்கத்தோடும் செங்கொடி சங்கத்தோடும் இணைந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றி வருபவன். வெவ்வேறு கட்சிகளில் இருந்தபோதும் தோழர் இளஞ்செழியனோடு தொடர்ந்த தோழமை 50 ஆண்டுகளுக்கு மேல் செழித்து வளர்ந்தமை சிறப்புக்குரியது. பல தசாப்தங்களாக பழகி வந்த தோழர் இளஞ்செழியன் இப்போது இல்லை என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அவர் இன்றும் எமது நெஞ்சங்களிலே, ஆயிரக்கணக்கான இதயங்களிலே வாழ்கிறார். அவரின் சேவை இன்றும் தாக்கங்களைத் தருகிறது.
இலங்கை திராவிட இயக்கத்தின் வரலாற்றையும், தோழர் இளஞ்செழியனின் வரலாற்றையும் இணைத்து இந்நூலை படைத்த தோழர். பெ.முத்துலிங்கத்திற்கும், அவரோடு பணியாற்றிய தோழர், தோழியர்களுக்கும் இறுதிக்காலத்தில் தோழர் இளஞ்செழியனை பராமரித்து இவருக்கு சேவையாற்றி யோரையும் இங்கு நினைவு கூற வேண்டியுள்ளது
தோழர் இளஞ்செழியன் விட்டுச் சென்ற இடத்தை நிரப்ப எவரும் இல்லையே என்ற ஏக்கம் எத்தனையோ பேருக்கு இருக்கத்தான் செய்கிறது. தோழர் ஏ.இளஞ்செழியனின் நினைவும் தோழர் பெ.முத்துலிங்கத்தின் படைப்பான இந்நூலும் என்றும் நிலைத்திருக்கும்.
ஓ.ஏ.இராமையா
பொதுச்செயலாளர், செங்கொடி சங்கம்.
செயலாளர் நாயகம், பெருந்தோட்டத்துறை தொழிற்சங்கக் கூட்டமைப்பு.
தலைவர், பெருந்தோட்டத்துறை சமூக மாமன்றம்