ஈ.வெ.ரா.வாழ்வும் பணியும்

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/ee-ve-ra-vaazhvum-paniyum-bharathi-puthagalayam

 

பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களின் கருத்துக்கள், செயல்பாடுகள் போன்றவை குறித்து சமீபகாலத்தில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பெரியாரைக் குறித்து அதிகம் எழுதாத வார இதழ்கள்கூட அவருடைய வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கத்தை வெளியிட்டுள்ளன. இந்திய அரசியல் சமூக வானில் 'சமூக நீதி என்ற அம்சம் மேலோங்கியிருப்பதன் பின்னணியில் காணும் பொழுது இது இயற்கையானதே.

பெரியாரைக் குறித்த விவாதங்களில் எதிரும் புதிருமான கருத்தோட்டங்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆய்வாளர்கள் சிலர், பெரியாருடைய சிந்தனை மற்றும் செயல்பாட்டின் ஒவ்வொரு அம்சத்தையும் கேள்விக்குரியதாக்குகின்றனர். மற்றும் பலர், இதை ஏற்கவில்லை. பெரியாரின் செயல்பாடுகள் நியாயமானதே காலத்திற்கு ஏற்புடையதே என்று வலியுறுத்துகின்றனர்.

இந்தச் சூழலில் இந்நூல் வெளியாகின்றது. எவறொருவருடைய கருத்தும் அவர் வாழ்ந்த காலத்தின் பின்னணியில் காணப்படுதல் இன்றியமையாதது. அவ்வாறு செய்யும்பொழுதுதான் அவருடைய கருத்தின் பரிணாம வளர்ச்சியைக் காணமுடியும். அன்றைய சமூக அரசியல் நிலைமையின் வளர்ச்சிப் போக்கை அவரது கருத்து பிரதிபலிக்கிறதா, அதற்கு உறுதுணையாக உள்ளதா என்பதைக் கொண்டுதான் ஒருவருடைய கருத்து மதிப்பிடப்படுகின்றது.

இந்நூலின் நோக்கு நிலையும் அதுவேயாகும் இது, இந்நூலில் சரிவர வெளிப்படுகிறதா என்பதை வாசகர்தாம் முடிவு செய்ய வேண்டும்.

பெரியார் தத்துவவாதியா, அரசியல்வாதியா அல்லது சமூக சீர்திருத்தவாதியா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.

அத பெரியார் தன் வாழ்நாளில் சுமார் இரண்டாண்டுக் காலம் தவிர இதரகாலம் முழுவதும் இன்றுள்ள ஏற்றத்தாழ்வான சமூக பொருளாதார அமைப்பையே ஆதரித்தார்.

சுமார் 15 ஆண்டுகாலம் தீவிர காங்கிரஸ்காரராகச் செயல்பட்டார். இதரர் செய்யத் துணியாத அரிய பல தியாகங்களைச் செய்தார். அதன்பின் தீவிர காங்கிரஸ் எதிர்ப்பாளராக விளங்கினார். 1954 ஆம் ஆண்டில் காமராசர் முதலமைச்சர் பதவியை ஏற்றவுடன், அவரது ஆட்சியை ஆதரித்தார். திமுக அரசாங்கம் உருவானபின், தன் இறுதிநாள் வரை அதை ஆதரித்தார்.

ஆனால் சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு என்பதிலும் பகுத்தறிவுப் பிரச்சாரம் என்பதிலும் அவர் விடாப்பிடியாக இருந்தார். சமூக சீர்திருத்தம் என்பதுதான் அவரது பணியின் தொடர் பின்னலாக இருந்தது. தன்னுடைய தத்துவ, அரசியல் கண்ணோட்டங்களை, சமூக சீர்திருத்தம் என்பதற்குத்தான் உட்படுத்தினார். அதுதான், அவரது முதன்மையான லட்சியமாக இருந்தது.

தன்னைக் குறித்து அவரே கூறுவதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

"நான் சாதாரண ஆள்தான் என்றாலும் உலகம் சுற்றியவன், பூரண பகுத்தறிவுவாதி; சொத்து சம்பாதிக்க வேண்டிய அவசியமில்லாதவன்; சொந்தத்திற்கும் பணம் சேர்க்க வேண்டிய தேவை இல்லாதவன்; சாதி உணர்ச்சி சாதிப்பற்று இல்லாதவன்; என்ன செய்தாவது சாதியை ஒழிக்க வேண்டும் என்பவன்; 70 ஆண்டு உலக அனுபவம் 30 ஆண்டு வியாபார அனுபவம்.

 (தமிழரசு, 169.1992)

சாதி ஒழிப்பையே உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்நாள் எல்லாம் இயங்கிய பெரியார் பிறந்த கொங்கு மண்டல மண்ணில் இப்போது சாதிப் பெருமிதம் பேசி சாதியை வலிந்து வலுப்படுத்திட பல்வேறு அமைப்புகள் வரிந்து கட்டிக் கொண்டு செயல்படுகின்றன. அதன் மூலம் தங்களுக்கு அரசியல் வாழ்க்கைக்கு கிடைக்கும் என்பதற்காகவே சாதிய உணர்வு எனும் தீயை விசிறி விட்டுக் கொண்டிருக்கின்றனர் சிலர்.

அதன்விளைவுகளில் ஒன்று தான் எழுத்தாளர் பெருமாள் முருகன், தான் செத்துவிட்டதாக அறிவித்து மனம் நொந்து மன்னிப்புக் கேட்டது. இன்னொன்று, கரூர் மாவட்டத்தில் புலியூர் முருகேசன் எனும் எழுத்தாளர் ஊரைவிட்டே வெறியேற்றப்பட்டது. இதற்கெல்லாம் உச்சமாக தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஓமலூர் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ், தங்கள் சாதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததற்காக தலையைத் துண்டித்து கொலை செய்து ரயில் தண்டவாளத்தில் வீசிக் கொக்கரிக்கிறது சாதிவெறி.

பாவேந்தர் பாரதிதாசனின் வார்த்ததைகளில் சொல்வதென்றால், "இருட்டறையில் உள்ளதடா உலகம்; சாதி இருக்கிறது என்பானும் இருக்கின்றானே" என்றே கேட்கத் தோன்றுகிறது. இத்தகைய சூழலில் சாதி மறுப்புப் போராளியான பெரியாரின் இந்த வாழ்க்கை வரலாறை மீண்டும் வெளியிடுவது மிகவும் அவசியமாகிறது.

ராஜாராம் மோகன்ராய், ஈஸ்வர் சந்திர வித்யாசாகர், மகாத்மா ஜோதிபா புலே போன்ற தலைசிறந்த சமூக சீர்திருத்த முன்னோடிகளின் வரிசையில் வரும் பெரியார் ஈ.வெ.ரா. அவர்களைக் குறித்து விருப்பு வெறுப்பின்றி செய்யப்படும் விஞ்ஞான ஆய்வியல் முறையிலான பகுப்பாய்வுகள் தமிழகத்திற்கு மிகவும் தேவைப்படுகின்றன. மாறிவரும் சமூகச் சூழல்களில் பெரியாரின் கருத்துக்களைப் பொருத்திப் பார்க்க அவை பெரிதும் உதவும்.

என். ராமகிருஷ்ணன்

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

 

ஈ.வெ.ரா.வாழ்வும் பணியும் - நன்றியும் வணக்கமும்

ஈ.வெ.ரா.வாழ்வும் பணியும் - பொருளடக்கம்

Back to blog