திராவிடத்தால் எழுந்தோம்

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/dravidathaal-ezhunthom
முன்னுரை

திசையெங்கும் திராவிட இயக்க நூறாம் ஆண்டு விழாக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், இந்நூல் வெளிவருகின்றது.

திராவிட இயக்கத்தை நிறுவிய மூலவர்கள் மூவருள் ஒருவரான நடேசனாரின் நினைவு நாளாம் பிப்ரவரி 17 முதல், ஓராண்டு காலத்திற்கு நூறாம் ஆண்டு விழாவைத் தமிழகமெங்கும் கொண்டாடுங்கள் என்று தலைவர் கலைஞர் விடுத்த அறிக்கையைத் தொடர்ந்து, விழாக்கள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன.

இது வெறும் விழாவன்று, வீழ்ந்து கிடந்த தமிழினம் விழித்துக் கொண்ட வரலாறு. ஆண்டாண்டு காலமாக ஆரிய மாயைக்கு உட்பட்டுக் கிடந்த தமிழனை, வீரியம் கொண்டு எழச் செய்த ஒரு பேரியக்கத்தின் ஒப்பிலாப் போர்ப்பாட்டு.

19 ஆம் நூற்றாண்டின் நடுவில் இருந்து தொடங்கும் விழிப்புணர்ச்சி, 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூர்மை பெறுகின்றது. எல்லோர்க்கும் எல்லாம் என்று இருப்பதான இடம் நோக்கி நடக்க வேண்டும் இவ்வையம் என்னும் எண்ணம் வலிமை பெறுகிறது. நூற்றுக்கு மூன்று பேராக இருப்பவர்கள் நாட்டை ஆள, 97 விழுக்காட்டினர் அடிமைத்தளத்தில் ஆழ்வதோ என்னும் குமுறல், 1909இல் தொடங்கி, 1912இல் ஒரு வடிவத்திற்கு வருகிறது. அவ்வடிவமே, நடேசனாரால் தொடக்கப்பட்ட திராவிடர் சங்கம். கால ஓட்டத்தில் அச்சங்கம் பல்வேறு பரிணாம வளர்ச்சிகளைக் காண்கிறது.

திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் என்று தமிழ் இன, மொழி உணர்வு, சமூக நீதி, பகுத்தறிவு ஆகியனவற்றைக் குறிப்பிடலாம். இவை மூன்றுமே பார்ப்பனியத்திற்கு நேர் எதிராக அமைந்தன. எனவே திராவிட இயக்கத்தை வீழ்த்தாமல், மீண்டும் இம்மண்ணில் பார்ப்பனியம் தலைவிரித்து ஆட முடியாது என்பதில் பார்ப்பனர்கள் உறுதியாக உள்ளனர். அதனால் சலிக்காமல் திராவிட இயக்க எதிர்ப்புப் போரை அவர்கள் தொடர்ந்து நடத்திக் கொண்டுள்ளனர்.

அவர்களின் இந்த அநீதிப் போருக்கு இங்கே திராவிடர்கள் பலரே பலியாகி இருப்பதுதான் தாள முடியாத வேதனை. எப்போதும் அவர்கள் எதிர் நின்று எதிர்ப்பதில்லை. நம் விரல்களைக் கொண்டே நம் கண்களைக் குத்தும் சதி வேலைகளில்தான் காலகாலமாக அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

1950களில், சிலம்புச் செல்வர் ம.பொ.சி., திராவிட இயக்க எதிர்ப்பைத் தொடக்கி வைத்தார். 1990களின் நடுவில், திராவிடத்தால் வீழ்ந்தோம் என்னும் பொய் முழக்கம் ஒன்று புறப்பட்டது. மீண்டும் இப்போது திராவிட மாயை என்று, திராவிடர்கள் பலரே பேசத் தொடங்கியுள்ளனர்.

திராவிட இயக்க வளர்ச்சி வரலாற்றைக் கண்ணுறும் அதே வேளை யில், திராவிட இயக்க எதிர்ப்பு வரலாற்றையும் நாம் தெளிவாக அறிந்திடல் வேண்டும். எந்தெந்தக் கருவிகளைப் பயன்படுத்தி இயக்கத்தை வீழ்த்த முயன்றனர் என்பதை அறிவது வரலாற்றுத் தேவையாக உள்ளது.

சிலம்புச் செல்வர் திராவிட இயக்கத்தை வீழ்த்த, தமிழைக் கையில் எடுத்தார். ஆரிய திராவிட மோதலை, தமிழர் திராவிடர் மோதலாக ஆக்கிட அவர் முயன்றார். மார்வாரி கடைகளின் முன் தந்தை பெரியார் மறியல் நடத்தியபோது, அதனைக் கண்டித்து திராவிடர் கடைகளின் முன் மறியல் செய்வேன் என்றார். அன்று இந்தி எழுத்துகளைத் தார்கொண்டு திராவிடர் கழகம் அழித்தபோது, மண்ணெண்ணை கொண்டு துலக்கி மறுபடியும் அந்த எழுத்துகளை ஒளிரச் செய்தார். குலக்கல்வித் திட்டத்திற்கு எதிராய் பெரியாரும், அண்ணாவும் போர்க்கொடி தூக்கியபோது, அத்திட்டத்திற்கு ஆதரவாகத் தமிழ் நாடெங்கும் வலம் வந்தார் சிலம்புச் செல்வர்.

மார்வாரிகளுக்கு ஆதரவாய், சமற்கிருதத்திற்கு ஆதரவாய், இந்தித் திணிப்புக்கு ஆதரவாய், குலக்கல்வித் திட்டத்திற்கு ஆதரவாய் ம.பொ.சி. நடத்திய இயக்கம் எல்லாம், தமிழ்த்தேசிய ஆதரவு இயக்கமாய் மக்களிடம் சொல்லப்பட்டது.

ம.பொ.சி.யைத் தொடர்ந்து, தமிழ்த்தேசிய அரங்கிற்கு வந்த ஆதித்தனாரும், ஈ.வெ.கி. சம்பத்தும் ஏறத்தாழ அதே பணிகளில்தான் ஈடுபட்டனர். திராவிட இயக்க எதிர்ப்பே தமிழ்த் தேசிய ஆதரவு என்னும் மாயையை அவர்களும் உருவாக்க முயன்றனர். எனினும் நல்ல வாய்ப்பாய் அவர்களின் எந்த ஒரு முயற்சியும் இறுதிவரை வெற்றி பெறவில்லை. எந்த திராவிட இயக்கத்தை எதிர்த்தார்களோ, அதே திராவிட இயக்கத்திற்குள் பின்னாளில் ம.பொ.சி.யும், ஆதித்தனாரும் வந்து சேர்ந்தனர். சம்பத்தோ, காங்கிரசில் சேர்ந்து, கால ஓட்டத்தில் கரைந்து போனார்.

ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு அதே முயற்சி பெங்களூரில் இருந்து புறப்பட்டது. இம்முறை தலித்துகளுக்கு எதிரானது திராவிட இயக்கம் என்னும் புரட்டு அரங்கேறியது. ஆறேழு ஆண்டுகள் அதே குரல்கள் மீண்டும் மீண்டும் கேட்டன. அவர்கள் அண்ணாவையும் கலைஞரையும் கூடத் தெலுங்கர்கள் என்று முத்திரை குத்த முயற்சித்தனர். எந்த முயற்சியும் வெற்றி பெறாமல், இறுதியில் அக்குரல்கள் அடங்கிப் போயின.

ஈழப்போராட்டம் மிகக் கூர்மை அடைந்த 2008, 09 ஆம் ஆண்டுகளில், அதனைக் காரணம் காட்டித் திராவிட இயக்க எதிர்ப்பை மீண்டும் தமிழகம் முழுவதும் சிலர் கொண்டு சென்றனர். தமிழீழ உணர்வு மிக்க உண்மையான இளைஞர்கள் பலர் அந்தப் பரப்புரைக்குப் பலியாயினர். கால ஓட்டத்தில், திராவிட இயக்க எதிர்ப்பு, 'இலை மலர்ந்தால் ஈழம் மலரும்' என்னும் முழக்கத்திற்குள்ளும், சிவசேனை ஆதரவுக்குள்ளும் முடங்கிப் போனது.

தமிழ் வளர்ச்சி, தலித் மக்கள் போராட்டம், ஈழ விடுதலை ஆகியன என்றும் நம் நெஞ்சுக்கு நெருக்கமானவை. இவற்றுக்கான போராட்டம், நம் போராட்டமும் கூட. ஆனால் இவற்றின் பெயரால் திராவிட இயக்க எதிர்ப்பை முன் னெடுப்பதற்கு என்றும் நாம் எதிரானவர்கள்.

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்பதும், திராவிட மாயை என்பதும் வரலாற்றில் முழுப் பொய்கள். திராவிட இயக்க எதிர்ப்பு, காலம் தோறும் பார்ப்பனிய ஆதரவாகவே மாறியுள்ளது. ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம் என்பதே நாம் முன்னெடுக்க வேண்டிய முழக்கங்கள். அதையே இந்நூல் தன் இலட்சியமாகக் கொண்டு வெளிவருகிறது.

கருஞ்சட்டைத் தமிழர் இதழில், சுபவீ பக்கம் என்னும் தலைப்பில் வெளியான கட்டுரைகளில், திராவிட இயக்கம் தொடர்பான 31 கட்டுரைகள் இந்நூலுள் இடம் பெற்றுள்ளன.

திராவிட இயக்க உணர்வுள்ள தோழர்களே, இந்நூலைப் படியுங்கள், பரப்புங்கள்.

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

திராவிடத்தால் எழுந்தோம் - உள்ளடக்கம்

Back to blog