திராவிடர் கழக வரலாற்றுப் பூங்காவில் புகுமுன்....!
1944 இல் ‘நீதிக்கட்சியானது' ‘திராவிடர் கழகம்' என்று தந்தை பெரியார் தலைமையில் பெயர் மாற்றம் மட்டும் பெற்றது அல்ல. வேலைத்திட்டமும் அடிப்படை அணுகுமுறையும்கூட மாற்றப்பட்டது.
திராவிடர் கழக வரலாறு என்றாலும் தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம் (South Indian Liberal Federation) என்ற 'நீதிக்கட்சியின்' வரலாற்றிலிருந்து இந்நூல் தொடங்குகிறது.
110 ஆண்டு வரலாற்றை 800 பக்கங்களில் அடக்கிவிட முடியாது. பல தகவல்கள் விடுபட்டிருக்கும்.
இந்நூல் வரலாறும் கொள்கையும் இணைந்த ஓர் ஆவணம் போன்றது. ஆதாரமில்லாச் செய்திகள் இதில் இல்லை.
நம் அறிவு ஆசான் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் தலைமைகளுக்குப் பின் இயக்கப் பொறுப்பை ஏற்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. ஓரளவு அவர்கள் காலத்துப் பயிற்சியும், நிகழ்வுகளை நேரில் பார்த்த பசுமையும் பெரிதும் இதற்குத் துணை நின்றன!
எனக்கென்று தனி வாழ்க்கை கிடையாது. 24 மணி நேரமும் 365 நாள்களும் சிந்தனை! செயல் யாவும் இயக்கமே, இயக்க வரலாறே தன்வரலாறாக என் வாழ்வு அமைந்துவிட்டது. திராவிடர் கழக வரலாறு எழுதும்போது தலைமை என்கிற நிலையிலும் பிரச்சாரம், போராட்டம் என்கிற நிலையிலும் குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர், ஆளுநர், மத்திய, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு என்கிற நிலையிலும் இயக்கத் தலைவர் என்பதால் முன்னின்று செயல்பட்டதை நாடு நன்கறியும் என்ற போதிலும் புத்தகத்தில் மீண்டும், மீண்டும் என் பெயர் இடம்பெறுவது அல்லது “நான் - நான் என்று குறிப்பிடுவதை, நான் விரும்பாததாலும், வாசகர்களுக்கும் ஒருவித அயர்ச்சியை ஏற்படுத்தக் கூடும் என்பதாலும் என் பெயரைத் தவிர்த்து திராவிடர் கழகம் என்றே குறித்திருப்பேன். (எதிர்காலத்தில் ஆய்வாளர்களுக்குக் குழப்பம் ஏற்படாமல் இருக்க இவ்விளக்கம் தரப்படுகிறது.)
இயக்கச் செயல்பாடுகளில் நமது மாநாடுகள் முக்கியமானவை. நீதிக்கட்சி - சுயமரியாதை இயக்கம் - திராவிடர் கழகம் இதுவரை நடத்திய மாநாடுகளின் எண்ணிக்கை 650. எல்லாவற்றையும் குறிப்பிட இயலாது. விவரம் வேண்டுவோர் 'விடுதலை' இதழைப் பார்ப்பதே பொருத்தமாக இருக்கும்.
இந்நூல் குறுகிய கால அவகாசத்தில் கூட்டுத் தோழர்களின் அயராத ஒத்துழைப்பினால் விரைந்து தயாரிக்கப்பட்டது. கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பேராசிரியர் முனைவர் நம் சீனிவாசன், 'விடுதலை' ஆசிரியர் குழுமத்தவர்களான தோழர்கள் மு.ந.மதியழகன், வை.கலையரசன், மேலாளர் ப.சீதாராமன், வெளியீட்டு நிர்வாகி க.சரவணன், நூலகர் கி.கோவிந்தன் ஆகியோர் நமது நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியவர்கள். இது முக்கிய வரலாற்று ஆவணமாகப் பயன்படும்.
(கி.வீரமணி)
21.08.2019 ஆசிரியர்
தொடர்புடைய மற்ற பதிவுகள்: