திராவிடர் கழக வரலாறு தொகுதி 1 & 2 - சுயமரியாதை இயக்கம்

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/dravidar-kazhaga-varalaru-part1-2
 
சுயமரியாதை இயக்கம் என்றால் என்ன?

சுயமரியாதை இயக்கமானது அரசியல்களின் பெயரால் நமது நாட்டிலுள்ள பல கட்சிகளைப்போல் அல்லாமல் அந்நியர்களிடமிருந்து யாதொருவிதமான சிறு விஷயத்தையும் மக்களின் அறிவை விளக்கி மனப்பான்மையை மாற்றுவதன் மூலமே உண்மையான விடுதலையையும், சமத்துவத்தையும், தன்மதிப்பையும் உண்டாக்கக் கூடியதான ஓர் இயக்கம் ஆகும். இவ்வியக்கத்தில் முக்கிய கொள்கைகள் எல்லாம் கட்டுப்பட்டு அடைபட்டிருக்கும் அறிவுக்கு விடுதலையை உண்டாக்குவது ஆகும். ஆதலால் சுயமரியாதை இயக்கம் என்பதை “அறிவு விடுதலை இயக்கம்" என்றே சொல்லலாம். இதன் உண்மை விளங்க வேண்டுமானால், ஒரு நேர்மையான மனிதன் தனது அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும் உள்ள கட்டுப்பாட்டையும், நிர்ப்பந்தத்தையும் நினைத்துப் பார்ப்பானேயானால் இவ்வியக்கத்தின் பெருமை தானாக விளங்கும்.

('குடிஅரசு', 25.09.1929)

திராவிடர் கழகம் பெயர் சூட்டியதன் காரணம்

திராவிடர் கழகம் என்பது இந்த நாட்டு மக்களது கழகம். திராவிடர் என்று சொல்லுவதற்கு எவனும் ஒப்புக்கொள்ள மாட்டான். காங்கிரசுக் கட்சிக்காரனும், கம்யூனிஸ்டுக் கட்சிக்காரனும், தமிழரசுக்காரனும், பார்ப்பானும், எவனும் ஒப்புக்கொள்ள மாட்டான். இந்தத் திராவிடர் கழகம் பார்ப்பானைச் சேர்க்காது. அவனும் இதில் வந்து சேர வரக்கூடுமாதலாலும், தென் இந்தியர் என்கிற தலைப்பில் தென் இந்தியாவில் வதியும் எல்லா மக்களுமே வரக்கூடுமாதலாலும், இது தவிர்த்துத் தமிழர்கள் என்று அழைப்பதாயிருந்தாலும் அந்தத் தலைப்பிலும் தமிழ்ப் பண்பில்லாத தமிழ்க் கலாச்சாரத்துக்கு வேறுபட்ட தமிழ் பேசும் பார்ப்பனர்கள் எல்லோரும் புகுந்து கொள்ளக் கூடுமாதலாலும், மக்களை இனத்தின் பேராலேயே, கலாச்சாரத்தின் பேராலேயே ஒற்றுமைப்படுத்த முடியும் என்பதாக அனுபவத்தால் கண்டதாலும் பார்ப்பனரல்லாதார் கழகத்தை, ஜஸ்டிஸ் கட்சியைத் திராவிடர் கழகம்' என்கிற பெயரால் அழைக்க வேண்டி ஏற்பட்டது.

('விடுதலை ', 3.5.1954)

மனிதன் மனிதனாக வாழ வேண்டும்

திராவிடர் கழகத்தின் முதலாவது கொள்கை மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்பதே. அதாவது எந்த மனிதனும் எனக்குக் கீழானவனல்ல. அதுபோலவே எவனும் எனக்கு மேலானவனும் அல்ல. ஒவ்வொரு மனிதனும் சுதந்திரமாகவும் சமத்துவமாகவும் இருக்க வேண்டும் என்பதே.

('விடுதலை ' 23.10.1958)

நாம் ஏன் பார்ப்பனர்களை சேர்ப்பதில்லை?

"சுயமரியாதை சங்கத்தில் ஏன் பார்ப்பனர்களை மாத்திரம் விலக்க வேண்டும்?" என்பதாகச் சிலர் கேட்கிறார்கள். நாம் ஒருபோதும் அவர்களை விலக்கவே இல்லை. அவர்களால் நாம் விலக்கப்பட்டிருக்கிறோம். அவர்கள் தங்களை மாத்திரம் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டு தனியாகப் பிரிந்து மற்றவர்களை எல்லாம் தாழ்ந்தவர்கள் என்று சொல்லி அநேக முறைகளில் சமத்துவம் அளிக்க மறுத்து நம்மை விலக்கி வைத்துக் கொண்டு வருகிறார்கள். நித்தியப்படி வாழ்வில் இதைப் பார்த்து வருகிறோம். அவர்கள் இவ்வித வித்தியாசங்களையும், சூழ்ச்சிகளையும் ஒழித்து சமத்துவத்தை ஒப்புக்கொண்டு நல்ல எண்ணத்துடன் செய்கையில் நடந்துவரும் வரையில் அவர்களை நீக்கி வைக்க வேண்டியது அவசியமாகிறது.

(குடிஅரசு' 06.02.1927)

சுகாதார இலாகா...

நோய்க்கு டாக்டர் மருந்து சாப்பிட்டால் தற்காலச் சாந்திதான் கிடைக்கும். சுகாதார முறைப்படி நடந்தால்தான் நிரந்தரப் பலன் ஏற்படும். திராவிடர் கழகம் சுகாதார இலாகாவே ஒழிய வைத்திய இலாகா அல்ல.

('விடுதலை ', 13.10.1953)

திராவிடர் கழகத்தின் தனித்தன்மை

நமது கட்சி இன்று ஒரு அலாதியான தன்மை கொண்டதாகும். நம் கட்சியைப் போன்ற மற்றொரு கட்சி இந்தியாவிலேயே இல்லை என்று சொல்லலாம். நம்மைத் தவிர மற்ற எவரும், எந்தக் கட்சியாரும் நம்மை எதிரிகளாகக் கொள்ளத்தக்க நிலையில் இருக்கிறோம்.

உதாரணமாக, நாம் ஒரு கட்சியார் தான் இன்று தேர்தலைப் பகிஷ்கரிக்கிறோம். தேர்தலில் கலந்து கொள்ளாதே என்கிறோம். நாம் ஒரு கட்சியார்தான் சாமிகள், பூதங்கள், கோட்பாடுகள், மதப் பயித்தியங்கள், ஜாதித் தன்மைகள், சாஸ்திரங்கள், புராணங்கள், கடவுள்களின் திருவிளையாடல்கள், இராமாயணம், கீதைகள் ஆகியவைகளை கண்டித்துப் பேசுகிறோம்.

அநேகத்தை கூடவே கூடாது என்று மறுத்தும், இழித்தும் பேசிப் பிரச்சாரம் செய்து மாநாடுகள் கூட்டித் தீர்மானிக்கிறோம். இதை இந்த இந்தியாவில் வேறு யார் செய்கிறார்கள்? நல்ல ஒரு அரசியலுக்கும், நல்ல ஒரு அறிவுத் தன்மைக்கும், மக்கள் ஒற்றுமைக்கும். நல்வாழ்வுக்கும் இந்தக் கொள்கைகள் சிறிதாவது அவசியம் என்று எந்த அரசியல். பொருளாதார இயல், சமய சமுதாய இயல் கட்சியார் கருதுகிறார்கள்!

நாம் ஏன் இப்படிக் கருதுகிறோம் என்றால் நாம் பொறுப்பை உணருகிறோம். நம் மக்களை விழுந்து கிடக்கும் குழியில் இருந்து மேலேற்ற இந்தக் கொள்கைகள்தான் படிக்கட்டு, ஏணி என்று கருதுகிறோம். நாம் இந்த இழிநிலையில் அதாவது ஜாதியில் கீழாய், படிப்பில் தற்குறியாய், செல்வத்தில் தரித் திரர்களாய். தொழிலில் கூலியாய், ஆட்சியில் அடிமையாய் இருப்பதற்கு நம்மிடம் இன்றுள்ள மடமையும் மடமைக்கு ஆதாரமான மதத் தத்துவக் கொள்கை, மத தர்மம், ஜாதி, ஜாதி வகுப்புப் பேதம், கடவுள்கள், கடவுள் கதைகள், கல்வித் தன்மைகள் இவைகள் கொண்ட மக்களின் தேசியம் முதலியவைகளேயாகும்.

('குடிஅரசு', 27.10.1945)

Back to blog