திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - பதிப்பாளர் முன்னுரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/dravidar-iyakka-paarvayil-bharathiyar 

 

பாரதியார் என்றவுடன் முறுக்கு மீசையும், ‘அச்சமில்லை அச்சமில்லை...’ என்ற பாடல் வரிகளும் பலருக்கும் நினைவில் வருவதில் ஆச்சரியமேதுமில்லை! ‘பாரதி’ என்கிற பட்டத்தை, சுப்பிரமணியருக்கு மட்டுமே உரித்தானதாக மாற்றியதில் இருக்கும் ‘பிம்பக் கட்டமைப்பு’ பார்ப்பனர்களுக்கே உரித்தானது. இதில் பார்ப்பனர்கள் அல்லாது, பொதுவுடைமைத் தோழர்களுக்கும் இருக்கும் பங்கு கவனிக்கப்படவேண்டியது, விவாதத்திற்கு உரியது.

பாரதியின் பாடல் வரிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் முற்போக்குச் சிந்தனைகளை, தமிழ்ப் புகழ்ச்சிகளை அதன் பின்னணியைக் கொண்டு ஆராயாமல், அவரின் கட்டுரைகளிலும், கதை மற்றும் வாழ்க்கை நிகழ்வுகளிலும் இருக்கும் பிற்போக்குத் தனங்களை முற்றிலும் புறந்தள்ளிவிட்டதன் விளைவு, புலமை நிறைந்த அவரது சில பாடல்களுக்கு மட்டுமே தரப்பட்டிருக்க வேண்டிய முக்கியத்துவம் ‘பாரதி’ என்கிற மாயப்பிம்பத்துக்கு தரப்பட்டு, நம்மீது அளவுக்கு அதிகமாகத் திணிக்கப்பட்டுவிட்டது.

‘பாரதி’ என்கிற திணிக்கப்பட்ட இந்த, பிம்பக் கட்டமைப்பை உடைப்பதை, பல்வேறு தளங்களில் இருந்து, மிக நேர்த்தியான ஆய்வு முறையில், யாராலும் மறுப்பு எழுதவே துணிய முடியாத விதத்தில் தோழர் வாலாசா வல்லவன் செய்து முடித்திருக்கிறார்.

இந்நூலின் ஒவ்வொரு தலைப்பும், பாரதியின் ஆரம்பகால பொதுவாழ்க்கையிலிருந்து அவரது இறுதிவரையிலான நிலைப்பாடுகளை, சிறிது சிறிதாக அவற்றில் ஏற்பட்ட மாற்றங்களைப் படம் பிடித்துக் காட்டுகின்றது; அதன்மூலம் பாரதி என்கிற மனிதனின் முழுமையான இயல்பை நமக்கு விளங்க வைத்துவிடுகின்றன.

இதற்கு வாலாசா வல்லவன் அவர்கள் கொடுத்திருக்கும் உழைப்பு மிகவும் வியப்புக்குரியது. பாரதி தொடர்பான நூற்றுக்கணக்கான நூல்களைப் படித்து, தேர்ந்தெடுத்த தலைப்புகளில் பாரதியின் கருத்துக்களை, ஆதாரத்துடன் தொகுப்பது என்பது எவராலும் செய்துவிடக்கூடிய ஒன்றாக நாங்கள் கருதவில்லை!

1996-97 ஆண்டுகளில் ‘சிந்தனையாளன்’ இதழில், தனி கட்டுரைகளாக வெளிவந்தவற்றைத் தொகுத்து, ‘தமிழ்க் குடியரசுப் பதிப்பக’த்தால் 2005ஆம் ஆண்டு முதற் பதிப்பு வெளியானது. இந்நூலின் முக்கியத்துவம் கருதி இதனை மறுபதிப்பு செய்யும் வாய்ப்பினைக் கோரியபோது, மகிழ்வுடன் அதற்குச் சம்மதித்து நம்மை ஊக்கப்படுத்திய நூலாசிரியர் தோழர் வாலாசா வல்லவன் அவர்களுக்கு எம் நன்றிகள். இந்தப் புதிய பதிப்பில், 1944ஆம் ஆண்டு மணியம்மையார் எழுதிய கட்டுரை, 1947ஆம் ஆண்டு ‘ஈட்டி’ என்ற புனைபெயரில் குடியரசு இதழில் பெரியார் எழுதிய கட்டுரை, காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கத்தை பாராட்டி பாரதி எழுதிய கவிதை, இவை மூன்றையும் புதிய பிற்சேர்க்கைகளாக இணைத்துள்ளோம்.

திராவிட இயக்கத்தின் ஆய்வுப் பணிகளில் மிக முக்கியமான ஒன்றாக விளங்கும் இந்நூலை வாசகர்களுக்கு ‘மறுபதிப்பு’ செய்து தருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்! இது போன்ற சிறிய, ‘சுவாரசியமான’ ஆய்வு நூல்கள் மேலும் பல தலைப்புகளில் தமிழில் வெளிவரவேண்டும்.

 

சென்னை,                                                                                                         ஜெ.ஜோன்சன் & அ.பிரபாகரன்
20-12-2019                                                                                                                          நிகர்மொழி பதிப்பகம்

Back to blog