1996 சூலை மாதம் முதல் 1997 மே மாதம் வரையில் சிந்தனையாளன் ஏட்டில் நான் எழுதிய பாரதியின் உயிர் மூச்சு தமிழா? ஆரியமா? என்ற தலைப்பிலான கட்டுரைகளின் தொகுப்பே திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் என்ற தலைப்பில் நூல் வடிவம் பெற்றுள்ளது.
பாரதியாரைப் பற்றி ஏறக்குறைய ஐந்நுாறுக்கும் மேற்பட்ட நூல்களைப் படித்து, குறிப்பெடுத்து, பாரதியின் உண்மையான கொள்கை என்ன என்பதை இந்நூலில் ஆய்ந்து கூறியுள்ளேன். பலரும் பாரதியின் ஒருசில பாடல்களை மட்டுமே திரும்பத் திரும்பக் கூறி அவரை மிகவும் முற்போக்காளராகக் காட்டுகின்றனர். குறிப்பாக, மறைந்த தோழர் ப. ஜீவானந்தம் அவர்களும் இந்தியப் (மார்க்சிய) பொதுவுடைமைக் கட்சியினரும் பாரதியாரை அளவுக்கு அதிகமாகப் புகழ்ந்து பாராட்டி எழுதி வருகின்றனர். உண்மையில் அவர் பொதுவுடைமைவாதியல்ல என்பதை, தக்க சான்றுகளுடன் இந்நூலில் நிறுவியுள்ளேன்.
ஆர். எஸ். எஸ். இயக்கம் இன்றைக்குச் சொல்லி வருகின்ற,
- சமஸ்கிருதம் இந்தியாவிற்கு பொதுமொழியாகவேண்டும்.
- பசுவதை கூடாது
- இந்துக்கள் மக்கள் தொகையில் குறைந்து வருகின்றனர்.
- இசுலாமியர்களும், கிறித்துவர்களும் இந்துக்களுக்கு விரோதிகள்
- அகன்ற பாரதம் அமைப்போம்
- ஆரியர் - திராவிடர் என்பது பொய்
- (சதி) உடன்கட்டை ஏறும் பழக்கம் தேவையான ஒன்று
- ஆதி திராவிடர்கள் ஒதுக்கி வைக்கப்படவேண்டியவர்கள்
- நால்வருணம் மீண்டும் உருவாக வேண்டும்
- வேதங்களைப் போற்றி பாதுகாக்க வேண்டும்
- வகுப்புரிமை ஒழிக்கப்படவேண்டும்
போன்ற கருத்துகள் அனைத்தையும் ஆர். எஸ். எஸ். உருவாவதற்கு முன்பே கூறியவர் பாரதியார். பாரதியாரைப் பற்றி இப்படிப்பட்ட பல உண்மைகளை இந்நூலில் மறுக்க முடியாத சான்றுகளுடன் நிறுவியுள்ளேன்.
இந்நூலுக்கு அணிசேர்க்கும் வகையில் பாரதி விழாவை சுயமரியாதை இயக்கத்தினர் புறக்கணிக்க வேண்டும் என்று பகுத்தறிவு ஏட்டில் 1-11-1937இல் எழுதப்பட்ட கட்டுரையை, பிற்சேர்க்கையாக இணைத்துள்ளேன்.
குத்தூசி குருசாமி அவர்கள் 13-9- 1947இல் விடுதலை ஏட்டில் பாரதியாரைப் பற்றி கிண்டலடித்து அவருக்கே உரித்தான பாணியில் எழுதியுள்ள கட்டுரையையும் இந்நூலில் பிற்சேர்க்கையாக இணைத்துள்ளேன்.
சென்னைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் பொற்கோ அவர்கள் இந்நூலுக்கு மிகச்சிறந்த சிறப்புரை வழங்கியுள்ளார். அவருக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தக் கட்டுரைகளை நான் சிந்தனையாளன் ஏட்டில் எழுதிய போது அதை ஆர்வமாக படித்துப் பார்த்து, தொடராக வெளியிட்டு உதவிய சிந்தனையாளன் ஏட்டின் ஆசிரியரும் ‘மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி’யின் அமைப்புக் குழுச் செயலாளருமான தோழர் வே. ஆனைமுத்து அய்யா அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கணினியில் தட்டச்சு செய்து கொடுத்த முகமது, பிழைத் திருத்தம் செய்து உதவிய தோழர்கள் ப. வெங்கடேசன், பாவலர் தமிழேந்தி, முனைவர் மு. முருகேசன் அவர்களுக்கும், முகப்பு அட்டையை வடிவமைத்துக் கொடுத்த ஆ. முத்தமிழ்ச் செல்வன், சூரியன் நகலகம் சரவணன் அவர்களுக்கும், என்னுடைய பொதுவாழ்வுப் பணியில் எனக்கு உற்ற துணையாக இருந்துவரும் என்னுடைய துணைவி க.குயில்மொழி அவர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை வாலாசா வல்லவன்
15-12-05