திராவிடநாட்டுக் கல்வி வரலாறு - பித்தனின் முகம் தேடி

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/dravida-naattu-kalvi-varalaaru
பித்தனின் முகம் தேடி

நூல் பதிப்புத் துறையில் செயல்பட வேண்டுமென்ற எண்ணம் தோன்றி வெகுகாலம் கடந்த பின், அநேகமாக கைகழுவி விட்டுவிட்ட நேரத்தில், அன்புத் தம்பிகள் முனைவர் இரா. பாவேந்தனும், இரா. விஜயவேலனும் சில திட்டங்களுடன் என்னை அணுகியபோது, விலகி விலகி ஓடிய கணம் பிடிக்குள் சிக்கியது. குறிப்பாக 1955 ஆம் ஆண்டு 'திராவிடன்' இதழில் வெளிவந்த திராவிடப்பித்தன் அவர்களின் 'திராவிடநாட்டுக் கல்வி வரலாறு' என்னும் தொடர்தான் புதிய உத்வேகத்துடன், வெறுமனே கழிந்து போன காலங்களைப் பின் தள்ளி, செயல்பட வைத்தது என்பது முற்றிலும் உண்மை.

உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு மசோதா பாராளுமன்றத்தில் 2008ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டபோது வடஇந்தியாவில் புதுடில்லியில் குறிப்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தைக் (IIMS) களமாகக் கொண்டு நிகழ்ந்தவைகளை, பரபரப்பு செய்தியாக்கிய ஆங்கில செய்தி தொலைக்காட்சிகளின் (CNN IBN, TIMES NOW, NDTV 24 x 7) செயல்பாடுகள் சமுதாயநீதியின் அடிப்படையையே ஆட்டிப்பார்த் தன. இந்தத் தொலைக்காட்சி விவாத அரங்குகளில் "தகுதி” அடிப்படையில் சேர்க்கை என்று குரலெ ழுப்பிய இந்திய மேல்தட்டு பிராமண, சனாதனக் கூட்டம் இளைஞர்களாக இருந்தமை அதிர்ச்சிக் குரியது. நுனிநாக்கு ஆங்கிலம் மட்டும்தான் அறிவுத் திரட்சியின் அளவுகோல் என இறுமாப்பு கொண்டு கொக்கரித்த இவ்விளைஞர்கள், இந்திய சமுதாயவெளி குறித்த அடிப்படை அறிவு அற்றவர்களாய் ஆனது மாபெரும் சோகம். உலகத்தரத்தி லான கல்வி வாய்ப்புகள் நேற்று வரைத் தீண்டத்தகாதவர்களாய் இருந்தவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டு வாய்ப்பு மறுக்கப்பட்டவர் களுக்கும் கிடைத்தல் கூடாது என்பதில், ஆங்கிலம் பேசும் கூட்டம் காட்டிய ஆவேசம், சமுதாயநீதி குறித்த கருத்தாக்கம் இன்றும் வீச்சுடன் வெகுஜன வெளியில் புழங்கிட வேண்டிய தேவையைக் காட்டியது.

அதிலும் குறிப்பாக IIMS மாணவர்கள் உயர்கல்வி நிலையங் களில் இடஒதுக்கீடு' வந்துவிட்டால் தாங்கள் தெரு கூட்டப்போக வேண்டியதுதான் என்பதைத் தெரிவிக்கத் துடைப்பத்துடன் தெரு கூட்டியதும், அதனை முதன்மைச் செய்தியாக்கிய ஆங்கில செய்தி தொலைக்காட்சிகளின் செயல்பாடுகளையும் எவ்வாறு புரிந்து கொள்வது? 'துடைப்பம்' கை மாறிவிடும்; அது அங்கேயே இருக்க வேண்டுமானால் இடஒதுக்கீடு' தடுக்கப்படவேண்டும்! இதுதானே அந்த இளம் மாணவர்களின் மனவோட்டத்தின் உள்ளீடு. இதில் வேடிக்கை என்னவென்றால் இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் அனைவரும் சாதிய எதிர்ப்பாளர்களாகவோ அல்லது சாதியத்தைக் கடந்தவர்களாகவோ தங்களை உருவகித்துக் கொள்கின்றார்கள் என்பதுதான். தங்கள் சாதிவெறியை, ஆதிக்க எண்ணங்களை நாகரிகப் போர்வையில் மூடிக்கொள்கின்றது இந்த இளம் சமுதாயம். மகாத்மா ஜோதிராவ் பூலே, அயோத்தி தாசர், அம்பேத்கர், தந்தை பெரியார் முதலியோரின் தேவை இன்னும் முடிந்துவிடவில்லை என்பதை மேற்கண்ட இளம் சமுதாயத்தின் அறிவு வன்முறை உணர்த்துகிறது.

ஆங்கில செய்தித் தொலைக்காட்சிகள் சமுதாய நீதிக்கு எதிரான செயல் திட்டங்களின் கேந்திரங்களாக இயங்கின. இந்த ஆங்கில அறிவுஜீவிகளுக்கு அரசியல் தளத்தில் மக்கள் செல்வாக்குப் பெற்ற முலாயம்சிங், மாயாவதி, லல்லுபிரசாத், ராம்விலாஸ் பஸ்வான் முதலிய ஆங்கிலப் புலமையற்றவர்கள் என்றால் இளப்பம்தான். இந்த ஆங்கில விற்பனர்களின் அசைவுகளும், முகபாவங்களும் அருவருப்பும் மிகுந்த கோபம் ஊட்டக் கூடியவை. இரவுநேர விவாத அரங்குகளில் இவர்கள் முன்வைக்கும் ‘தேச அபிவிருத்தி' அடிப்படையிலான சிந்தனைக் கருவூலங்கள், சமுதாய நீதி உணர்வுள்ளவர்களுக்குத் தூக்கமற்ற இரவுகளைக் கொடுக்கவல்லவை. அரசியல் நிகழ்வுகளை மனச்சார்பின்றி, செய்திகளாகப் பதிவு செய்ய வேண்டிய இவ்விளம் பெண்கள் (ஒரு சில வேளைகளில் மட்டுமே ஆண்கள்) அரசியல் விற்பனர்களாக, அதிமேதாவிகளாக, நிகழ்வின் நாடி பிடித்துக் குறி சொல்லும் அரசியல் நோக்கர்களாக மாறி உதிர்க்கும் சனாதன சாதீய, பார்ப்பனீய வாதங்கள் நம்மை உலுக்கத் தவறுவதில்லை. இச்செய்தியாளர்களின் 'தேசீய உணர்வு' தவறாமல் சிறுபான்மையினரையும், தலித்துகளையும், இன்னபிற விளிம்பு நிலை மனிதர்களையும் தேசவிரோத சக்திகளாகச் சித்தரிக்கத் தவறுவதே இல்லை. திறன் (Merit) அடிப்படையில் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஐ.ஐ.எம்.எஸ், கல்வி பெற்றோரில் 'இந்திய வம்சாவளி இந்தியர்' ஆகிவிட்டவர்களின் கணக்கெடுப்பு நடத்தத் தயாரா? 'இந்திய சேவையில்' இவர்களின் பங்களிப்பு என்ன என்பதை விளக்க முடியுமா இவர்களால். 'நாசா'வில் அடைக்கலம் புகுவதற்குத் தானே இத்தனை அவதியும். பிராணாய்ராய், பக்கா, ராஜ்விகளின் அக்கறை என்ன?

இந்த வர்ணாசிரமவாதிகளின் தகுதி, திறன் குறித்த வாதங்களின் போலித்தனங்கள் இன்னும் கட்டுடைக்கப்பட்டுப் பொதுவெளியில் விவாதிக்கப்பட வேண்டும். ஏனெனில் இந்த மேல்சாதி மேதாவிகளின், வாதக்குப்பைகளின் வழிபட்டே பாராளுமன்றத்தில் தாக்கலான மசோதா சில விலக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. அதாவது ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.எம்.எஸ் உள்ளிட்ட 47 ஆய்வுநிலைக் கல்வி நிறுவனங்களுக்கு இடஒதுக் கீட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. மக்கள் மன்றங்களில் விவாதப்பொருளான போது, இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவு நிலைப்பாடு கொண்டவர்களாகத் தங்களைக் காட்டிக்கொண்ட மார்க்சியர்கள் உள்ளிட்ட தேசீயக் கட்சிகள் தங்கள் வேலையைப் பாராளுமன்ற நிலைக்குழுவில் வைத்துக் காட்டி, தங்கள் மேல்சாதி அபிமானத்தை நிருபித்துக் கொண்டனர். திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற பிராந்திய கட்சிகளின் குரல் சபையேறவில்லை. எனினும் மஹராஸ்டிராவிலும், தமிழ்நாட்டிலும் கருவான வகுப்புவாரி பிரநிதித்துவம் தேசிய அளவில் விவாதப் பொருளாகின. இந்தி பேசும் மாநிலங்களில் தலித்துக்கள் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோரின் எழுச்சிக்கு வித்திட்டு, தேசிய இயக்கங்களை ஓரங்கட்டி மத்திய அரசில் தங்களுக்கான பங்கைக் கோரிப் பெறும் நிலை இன்று. இந்தியாவிலேயே முதன் முதலாக தேசீயத்திற்கு மாறாக பிராந்தியத்தை முன்வைத்து அதற்கான மாநில சுயாட்சி கருத்தியலையும் உருவாக்கி, பிற மாநிலங்களுக்கு வழிகாட்டிய பெருமை பார்ப்பனரல்லாதோர் இயக்கமாகத் தோன்றி, நீதிக்கட்சி ஊடாகத் திராவிடர் கழகமாகி இன்று திராவிட முன்னேற்றக் கழகமாகி இருக்கும் வெகுமக்கள் இயக்கத்தையே சேரும். அதன் காத்திரமான செயல்திட்டமாக, ராஜாஜியின் குலக்கல்விக்கு எதிரான தன் நிலைப்பாட்டைக் கருத்தியலாக்கிய ஆவணம்தான் திராவிடப்பித்தனின் 'திராவிட நாட்டுக்கல்வி வரலாறு'. இன்னும் மறுக்கப்படும் கல்விவாய்ப்பு காலங்களின் ஊடாக பார்ப்பனியத்திற்கு எதிரான போராட்ட வரலாறாகவே பதிவாகியுள்ளது என்பதுதான் இதன் உள்ளடக்கம்.

திராவிடப்பித்தன் என்பது புனைபெயர் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்தப் புனைபெயரில் கடினமான உழைப்பின் வழியாகக் கல்வி வரலாறு எழுதிய பித்தனின் முகம்தேடி அலைந்தோம். திராவிடன் இதழ் தொடர்பான பலரிடமும் கேட்டும் பயனில்லை. மத்திய அரசு அலுவலர், மாயவரத்துக்காரர் என்பதை போன்ற தகவல்களைத் தாண்டி ஏதும் கிட்டவில்லை. தமிழ்மரபின் ஒளவை, வள்ளுவர் ஆகி யோரைப் போன்று அரூபநிலையில் பித்தன் செயல்பட்டிருப்பது வியக்கத்தக்கது; நூல் வெளியாகி புதிர் விலகினால் மகிழ்ச்சி. 

- வீ.எம்.எஸ். சுபகுணராஜன்

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

Back to blog