திராவிடநாட்டுக் கல்வி வரலாறு - பார்ப்பனரல்லாதார் கல்வியியல் ஆவணம்
ஐம்பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்னர் 'திராவிடன்' இதழில் 'திராவிடப்பித்தன்' என்பார் கல்வி வரலாறு பற்றி எழுதிய தொடரைத் தொகுத்து நூலாக வெளியிடுவது பயன்மிகுந்த ஒரு சமுதாயப் பணியாகும்.
இந்தக் கட்டுரைகளைப் படித்தபோது எனக்கு வியப்பும் மகிழ்ச்சியும் ஒருங்கே ஏற்பட்டன. இந்த நூல் இன்றைய தமிழ்நாட்டுக்குத் தேவையான ஒரு பண்பாட்டு ஆவணம் என்பதே எனது மகிழ்ச்சிக்கு காரணம் ஆகும். வியப்புக்கான காரணம் வேறு.
அரை நூற்றாண்டுக்கு முன்னர் இப்படிச் சில கட்டுரைகளை எழுதப் போதிய துணைக் கருவிகள் கிடையாது. கருவி நூல்கள், முன் ஆராய்ச்சி நூல்கள், நூலக வசதி, ஒளிநகல், ஒளிப்பேழைகள், ஒளிப்பதிவுக் கருவி போன்ற வசதிகள் இல்லாத காலத்தில் இக்கட்டுரைக்கான தரவு சேகரிப்பு, பன்னூல் வாசிப்பு, எழுத்து வலிமை ஆகியன இன்றைய மாணவர்களிடமும் ஆய்வாளர் களிடமும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகும். அந்த வகையில் திராவிடப்பித்தனின் கட்டுரை முயற்சிக்கு நாம் தலைவணங்கி நன்றி செலுத்த வேண்டும்.
இந்நூலுக்கு தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்ட் (Oxford of South India) எனப் புகழப்பட்ட பாளையங்கோட்டையில் இருந்து முதல் தலைமுறையினனாகக் கல்லூரியினையும், பல்கலைக்கழகத்தையும் தொட்ட நான் முன்னுரை எழுத நேர்ந்தது மகிழ்ச்சிக்குரிய ஒரு வரலாற்றுப் பொருத்தப்பாடாகும். ஏனென்றால்
"வறியவர்களுக்கெல்லாம் கல்வி நீரோடை
வரவிடவில்லை மதக் குருக்களின் மேடை"
என்ற பாரதிதாசனின் கவிதை அடிகளைப் பொய்யாக்கிய ஊர் இது. 1844ஆம் ஆண்டில் பெண்கள் பள்ளி, 1892 ஆம் ஆண்டில் மகளிர் கல்லூரி. அதே ஆண்டில் விழியிழந்தோர் பள்ளியும், செவியிழந்தோர் பள்ளியும் என கடவுளால் வஞ்சிக்கப் பட்டவர்களுக்கும் கல்விச்செல்வத்தை வாரி வழங்கிய ஊர் இது. விழியிழந்த மாணவர்களுக்கான பிரெய்லி முதல் பாட நூல் வெளிவந்ததும் இந்த ஊரில் தான். இன்று கணிப்பொறி வழி பிரெய்லி நூல் ஆக்கும் பொறியும் இங்கு நிறுவப்பட்டுள்ளது. விழியிழந்தோர் பள்ளியிலும் செவித்திறன் இழந்தோர் பள்ளியிலும் பாடமொழி தமிழாக இருப்பது கூடுதல் மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.
தமிழ்நாடு காலம் காலமாகக் கல்வியின் மீது தனி அக்கறை செலுத்தி வந்துள்ளது. சங்ககாலத்தில் முப்பத்து மூன்று பெண் பாற்புலவர்கள் இருந்தனர். அவர்களில் வெண்ணிக்குயத்தியார், குறமகள் இளவெயினி முதலிய பெயர்களையும் காண்கின்றோம். கல்வி பரவலாக எல்லோருக்கும் வாய்க்கப் பெற்றிருந்தது என்பதற்கு இந்தப் பெயர்கள் அடையாளமாக இருந்தபோதும் சங்க காலத்தைத் தொடர்ந்து பார்ப்பனியம் அரசதிகாரத்தை நெருங்கிய போது பெருவாரியான மக்கள் கல்வி எல்லைக்கு வெளியே நிறுத்தப்பட்டனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை இந்த நிலை தான் நீடித்தது. இந்தக் காலக் கட்டத்தில் உருவான தமிழர்களின் கல்விச் சிந்தனை சமணமதம் தந்ததாகும்.
அனைத்து நோய்களுக்கும் கல்வியே மருந்து (மம்மர் அறுக்கும் மருந்து) என்பது சமணர்களின் நாலடியார் தரும் கல்விச் சிந்தனையாகும். ஊருக்குப் புறம்பான மலைக்குகைகளில் ஆடையின்றி வாழ்ந்த சமணத் துறவிகளே முதலில் பிள்ளைகளை அழைத்து ஞானதானம்' செய்தனர். அவர்கள் வாழ்ந்த குகைகளில் தரைத்தளம் பள்ளி, பள்ளியாகச் (படுக்கை படுக்கையாக) செதுக்கப்பட்டிருப்பதை இன்றளவும் காணலாம். இதிலிருந்தே 'பள்ளி' என்ற சொல் உருவாயிற்று. சமணமதம் வேதநெறிக்கு எதிராகக் கிளர்தெழுந்ததாகும். வேதத்தை நம்பிய வைதீகம் பிறப்பினால் உயர்ந்தவர்களுக்கே கல்வி என்ற கொள்கையினை அரசதிகாரத்தின் துணையுடன் நடைமுறைப்படுத்தியது. அதற்கு எதிராகச் சமணம் வாழ்க்கையின் பயனாகிய நான்கு கொடைகளில் அறிவுக் கொடையையே (ஞானதானம்) முதன்மையானது என்பதை வலியுறுத்தியது.
தமிழர்களின் கல்வி வரலாற்றை ஆராய்ந்த இந்த நூல் பிராமணரை அடுத்த மேல் சாதியினராக இருந்த வேளாளர் கையிலிருந்த திருமடங்களும் அனைவருக்குமான கல்வி என்ற கோட்பாட்டிற்கு எதிராக இருந்ததனை எடுத்துக்காட்டுகின்றது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் நான்கு தென் மாநிலங்களிலும் கல்வி வளர்ந்த வரலாற்றை ஆவணச் சான்றுளோடு இந்த நூல் எடுத்துக்காட்டுகின்றது. வில்லியம் பெண்டிங், தாமஸ்மன்றோ, எல்பின்ஸ்டன் போன்ற ஆங்கிலேயர் பெயர்களெல்லாம் 'மக்கள் துரோகிகளின்' பெயர்களாகவே பள்ளிப் பாடப் புத்தகங்களில் காட்டப்படுகின்றன. இந்தப் 'பாடப்புத்தகப் புனிதங்களை இந்த நூல் மோதி நொறுக்குகின்றது. தர்ப்பைப்புல் பற்றிய ஞானத்தை விட மில்டனின் காவியம் பற்றிய ஞானம் மிகத் தேவையானது என்பதை அன்றைய ஆட்சியாளர்கள் உணர்ந்திருக்கிறார்கள். தாய்மொழி வழிக் கல்வியினை வளர்த்தெடுக்க அவர்களால் இயலாமல் போனது என்னவோ உண்மை தான். அன்று இந்தியாவில் நிலவியிருந்த சமஸ்கிருத மொழி வெறியும் வட இந்தியாவில் நிலவிய அரபி, உருது மோகமும் தான் அதற்குக் காரணம் என்பதை இந்த நூல் நமக்கு எடுத்துக்காட்டுகின்றது.
ஆங்கில வழிக் கல்வியொடு புதிய கல்வி நிறுவனங்கள் உருவாகின. சென்னை அரசாங்கம் 1834ஆம் ஆண்டு முதல் உயர் நிலைப்பள்ளியைத் தொடங்கியது இந்தப் பள்ளியில் 1855ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு அனுமதி இல்லை. 1851இல் தாழ்த்தப்பட்ட வகுப்பினரை அனுமதித்ததால் பல்கலைக்கழக மேலாண்மைக் குழுவிலிருந்து ஒரு 'இந்து' உறுப்பினர் 1851ஆம் ஆண்டு பதவி விலகினார். இந்தப் பள்ளியிருந்து 1855வரை தகுதி காண்ப ட்டயம் (Proficiency Degree) பெற்ற 36 பேரில் 20 பேர் பார்ப்பனர்களே என்றும் 1859இல் ஆங்கிலேய அரசு முதன் முறையாகத் தேர்ந்தெடுத்த துணை ஆட்சியர்கள் (Deputy Collector) 40 பேரில் இந்தப் பள்ளியில் பயின்ற பார்ப்பனர்களே பெருந்தொகையினர் என்றும் ஆர். சுந்தரலிங்கம் எடுத்துக் காட்டுகிறார் (தெய்வம் என்பதோர், பக் 92).
இதுமட்டுமல்ல, 1920ஆம் ஆண்டில் முதல் நீதிக் கட்சி அமைச்சரவை உருவாகும் வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தாழ்த்தப்பட்டவர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது கொடுமையான வரலாற்றுச் செய்தியாகும். இந்த ஆரியக் கூத்து இத்தோடு முடிந்து போய் விடவில்லை. அந்த ஆண்டு (1920வரை) மருத்துவக் கல்லூரியில் சேர குறைந்த பட்ச சமஸ்கிருத அறிவு வேண்டும் என்ற நிபந்தனையும் இருந்ததாம். 1915 ஆம் ஆண்டு வரை சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக் கென்று ஒரு பாடத்திட்டக் குழு கிடையாது. அதுமட்டுமல்ல, கல்லூரிகளில் தமிழ்ப் பாடமே தேவையில்லை என்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிப்பேரவையில் பேசப்பட்டது. தோட்டக்காடு ராமகிருஷ்ணப் பிள்ளை, மு.கி. பூரணலிங்கம் பிள்ளை ஆகியோர் அதனைக் கடுமையாக எதிர்த்ததால் அம் முயற்சி கைவிடப்பட்டது.
இன்று மொழியும் மொழிசார்ந்த ஆராய்ச்சிகளும் கணிசமாகப் பெருகியுள்ளன. புத்தகங்கள் ஆக்கிய பிறகும் மருத்துவக்கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளிலும் தாய்மொழி வழிக்கல்விக்கு ஏராளமான தடைக் கற்கள் இருக்கின்றன.
இந்த நூல் கடந்த காலத்தின் வரலாற்றுச் சோகங்களையும் நாம் அவற்றை மெல்ல மெல்ல வென்று வந்த உண்மையினையும் பேசுகின்றது. கடந்து வந்த நெடுவழியினைத் திரும்பிப் பார்ப்பது என்பது எதிர்காலப் பயணத்திற்கான வழித் துணையாகவும். அமையும். இந்த வசையில் இந்த நூல் வரலாற்றை ஆவணப் படுத்துகின்றது. திராவிடப்பித்தன், மீள் பதிப்பாசிரியர், நூலை வெளியிட்ட பதிப்பாளர் ஆகியோர் அனைவரும் நம் அன்பிற்கும் பாராட்டிற்கும் உரியவர்கள்.
- பேரா. தொ. பரமசிவம்