திராவிடநாட்டுக் கல்வி வரலாறு - நன்றி

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/dravida-naattu-kalvi-varalaaru
நன்றி

திராவிட இயக்க வெளியிடுகளுக்கு நூறாண்டு வரலாறு உண்டு. அண்மையில் திராவிட இயக்க ஆவணங்களை வெளிக்கொணரும் முயற்சிகள் சில நடந்தேறியுள்ளன. இவற்றில் வே. ஆனைமுத்து தொகுத்து வெளியிட்ட பெரியாரின் அயல்நாட்டுப் பயணக்குறிப்புகள், திராவிடநாடு கோரிக்கையைக் கைவிட்டது தொடர்பாக தலைவர் டாக்டர் கலைஞரால் வெளியிடப்பட்ட அண்ணாவின் 'எண்ணித்துணிக கருமம்' என்ற கையெழுத்து ஆவணம் ஆகியவை மிக முக்கிய வெளியீடுகளாகும். அண்மையில் பெரியார் ஆவணக்காப்பகம் வெளியிட்ட காஞ்சிபுரம் மாநாடு (1925) செங்கல்பட்டு தமிழ் மாகாண சுயமரியாதை மாநாடு திராவிடன் மலர் (1929) ஆகியன குறிப்பிடத்தக்கவை.

என்.வி. நடராஜன் நடத்திய திராவிடன் இதழில் 'திராவிடப்பித்தன்' என்ற புனைபெயரில் பார்ப்பன ரல்லாதார் பார்வையில் தமிழகக் கல்வி வரலாறு பற்றிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். இத்தொகுப்பை வெளியிட வேண்டும் என்ற என் அவாவை வெளிப்படுத்தியபோது அதனை உடனே வெளியிட முயற்சி மேற்கொண்டார் அண்ணன் வீ.எம்.எஸ். சுபகுணராஜன். அவருடைய முயற்சி இல்லாவிட்டால் இக்கட்டுரைகள் அச்சேறி இருக்குமா என்பது சந்தேகமே. கயல்கவின் நிறுவனத்தின் மதிப்புரு ஆலோசகர் மருத்துவர் சுதந்திராதேவி அவர்களுக்கும் நிர்வாக இயக்குநர் கே.எஸ். இராஜமகேந்திரன் அவர்களுக்கும் என் நன்றியை புலப்படுத்தி கொள்கிறேன்.

இக்கட்டுரைத் தொகுப்பின் மீள்பதிப்புக்கு அணிந்துரை எழுதிய பேராசிரியர் தொ. பரமசிவம் அவர்களுக்கு என் முதல் நன்றி. இந்த மீள்பதிப்பு முயற்சி வெற்றிபெற வேண்டும் என என்னைத் தொடர்ந்து உற்சாகப்படுத்தியதோடு மட்டுமல்லாது பதிப்புரையைப் படித்து ஆலோசனைகளை வழங்கிய திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் மானமிகு கு.வெ.கி. ஆசான், சக்குபாய் நெடுஞ்செழியன் இணையர், புலவர் செந்தலை ந.கவுதமன் ஆகியோருக்கு என் நன்றி. இந் நூலாக்க முயற்சிக்குப் பல்வேறு நிலைகளில் உதவிய முனைவர் கரு.அழ. குணசேகரன், முனைவர் க. முருகேசன், முனைவர் தே. ஞானசேகரன், முனைவர் ரா. செயராமன், தோழர் செல்லத்துரை, கவிஞர் முத்தமிழ்விரும்பி திராவிட இயக்கப் பெரியவர் 'நீடாமங்கலம் சாக்ரடீஸ்' ஆகியோருக்கும் என் நன்றி என்றும் உரியது.

இந்நூலாக்கப் பணியில் திராவிடன் இதழ் மூலக் கட்டுரை களோடு தட்டச்சுப் படிவங்களை ஒப்பு நோக்கும் பணிகளில் ஈடுபாட்டோடு உதவி புரிந்த செ. இளையராஜா, அ. சுஜிதா, ப. ஜெயபால், தஞ்சை பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு என் நன்றி. இந்நூலைத் தட்டச்சு செய்த காஞ்சனா, பக்க வடிவமைப்பு செய்த கீழ்வேளூர் பா. ராமநாதன், திருமதி. நாகம் மற்றும் சுவடி நிறுவனத்தார். அட்டை வடிவமைப்பு செய்த ஓவியர் பாபு, அச்சிட்ட சிவகாசி எஸ்ஸார் ஆப்செட் பிரிண்டர்ஸ் ஆகியோருக்கும் என் நன்றி உரித்தாகுக.

 திராவிட இயக்க முன்னோடிகளில் என்.வி.என். என்று அழைக்கப்படும் என். விஜயரங்கம் நடராஜனால் 1949ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட வாரஇதழ் திராவிடன். இந்த இதழில் 'திராவிடப்பித்தன்' என்பவர் ஆரம்பக்கல்விச் சீர்திருத்தம் என்ற தலைப்பில் எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். இராஜாஜி 1953ஆம் ஆண்டு தன் அமைச்சரவையைக்கூடக் கலந்து ஆலோசிக்காமல் குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார். இச்சூழலில் 'திராவிடன்' இதழில் பார்ப்பனரல்லாதார் பார்வையில் தமிழகக் கல்வி வரலாற்றை விரிவாக எழுதினார் திராவிடப்பித்தன். சமண, பௌத்த சமயங்களின் கல்விப்பணிகள், தமிழ் இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள கல்வியியல் சிந்தனைகள், கிறித்துவச் சமயப்பணியாளர்களின் கல்விப்பணிகள், காலனிய அரசின் கல்விப்பணிகள் ஆகியவற்றை வரலாற்றுநோக்கில் புள்ளி விவரங்களுடன் விரிவாக ஆவணப்படுத்தியுள்ளார். திராவிடப்பித்தன் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து விரிவான ஆய்வு முன்னுரை எழுதிப் பதிப்பித்துள்ள இரா. பாவேந்தன் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.

- இரா. பாவேந்தன்

Back to blog