திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் - அணிந்துரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/dravida-iyakkam-valartha-tamiz 
அணிந்துரை

பேராசிரியர் முனைவர் மானமிகு மு.பி.பாலசுப்பிரமணியன் அவர்கள் அடக்கமாக, அதே நேரத்தில் ஆழமாக பணியினை மேற்கொண்டு வரக்கூடியவர் ஆவார். அவர்தம் படைப்புகள் தமிழ் மக்களுக்குக் குறிப்பாக திராவிட இயக்கத்திற்கு அரண் சேர்ப்பதாகும்.

வரலாற்றின் பாதையில் மகத்தான தோற்றமான திராவிட இயக்கத்தின் மீது சேற்றை வாரி இறைக்கும் துரோக வேலைகளில் சிலர் இறங்கி இருப்பதும், இத்தகையவர்களை நமது இன எதிரிகள் தங்கள் வசம் உள்ள ஊடகங்களின் தோள் மீது ஏற்றிக் காட்டுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் 'திராவிட இயக்கம் வளர்த்த தமிழ்' எனும் அரிய கருவூலத்தைக் கொண்டு வந்துள்ளது பெரிதும் வரவேற்கத்தக்கதும் - பாராட்டத்தக்கதுமாகும்.

"தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?” என்ற நூலை திராவிடர் கழக (இயக்க) வெளியீடாகக் கொண்டு வந்திருக்கும் இதே காலகட்டத்தில் இப்படியொரு நூல் என்பது என்னே பொருத்தம்!

தமிழ் என்றால் புராணங்களின் குவியல் என்பது தமிழுக்குப் பெருமை சேர்ப்பதல்ல. "சமயமென்னும் சூளையில் தமிழ் நட்டால் முளையாது” என்றார் புரட்சிக்கவிஞர்.

இந்த வரிசையில் தமிழில் சீர்திருத்த எண்ணங்களையும், பகுத்தறிவுக் கருவூலங்களையும் அள்ளித் தரும் ஏடுகளையும், இதழ்களையும் நடத்தியது திராவிட இயக்கமே! முக்கியமான இதழ்களின் பட்டியலும் இந்நூலில் வெளியிடப்பட்டுள்ளது.

'குடிஅரசு', 'பகுத்தறிவு', 'புரட்சி', 'விடுதலை', 'உண்மை ' என்று ஏடுகளுக்கு நல்ல தமிழ்ப் பெயர்களைச் சூட்டியதும் தந்தை பெரியாரே!

திருக்குறள் மாநாட்டை முதன்முதலில் 1948இல் நடத்தியதும் தந்தை பெரியார்தான்.

இலட்சியத்தோடு கூடிய தமிழ்ப் பெயர்களை பிள்ளைகளுக்குச் சூட்டியதில் திராவிட இயக்கத்திற்குப் பெரும் பங்கு உண்டு.

ஒரு மொழி என்றால் எந்ததெந்த வகைகளில் வளம் பெற்றிருக்க வேண்டும் என்பது முக்கியம்!

கவிதை, மேடை உரைநடை, இதழியல், புதினம், சிறுகதை, நாடகம், திரை, அறிவியல், ஆட்சித்தமிழ் இவற்றில் முத்திரை பதித்து இருந்தால் தான் ஒரு மொழி வளமான மொழி - செறிவு மிளிரும் மொழி என்று பொருள்.

இந்தப் பன்னிரெண்டு தலைப்புகளில் திராவிட இயக்கம் எந்தெந்த வகைகளில் எல்லாம் தன் பங்களிப்பைத் தந்திருக்கிறது என்பதை தக்க ஆதாரங்களுடன் நிறுவியுள்ளார். திராவிட இயக்கச் சிந்தனையாளரான நமது மு.பி.பா. அவர்கள்.

திராவிட இயக்கத்தை எதிர்த்த தமிழகத் தலைவர்கள் சிலர், பிற்காலத்தில் உண்மையை உணர்ந்து திராவிட இயக்கத்தைப் பற்றிக் கொண்டும், திராவிட இயக்கத்தால் பலன் பெற்றதும் இந்நூலில் (பக்கம் 25, 26) சிறப்பாகவே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழ் மொழிக்காகவும் உரிமை மீட்பதற்காகவும் திராவிட இயக்கம் நடத்திய போராட்டங்கள், நடவடிக்கைகள் எல்லாம் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.

திராவிட இயக்கக் கலைஞர்கள், புலவர் பெருமக்கள் படைத்த சிறப்பான மணம் வீசும் கவிதைப்பகுதிகளை எடுத்துக்காட்டுகளுடன் தேர்ந்தெடுத்துக் கொடுக்கப்பட்டுள்ள நேர்த்தி மிகவும் சிறப்பு.

திராவிட இயக்க எழுத்தாளர்களின் சிறப்பான படைப்புகளில் நெஞ்சையள்ளும் சில பகுதிகள் இந்நூலுக்கு அணி சேர்க்கிறது.

அரசு அலுவலகங்களில் பணியாளர்கள் அனைவரும் தமிழிலேயே அனைத்திலும் ஒப்பமிட வேண்டும் என்பது கலைஞர் அரசு வெளியிட்ட ஆணை. கிறித்துவ ஆண்டுடன், தமிழ் ஆண்டு, திங்கள், நாள் மற்றும் திருவள்ளுவர் ஆண்டுகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற ஆணையெல்லாம் சுட்டிக்காட்டப்பட்டு இருப்பது புதிய தலைமுறையினருக்குத் தேவையானவையே.

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம், செம்மொழி அறிவிப்பு இவையெல்லாம் திராவிட இயக்க ஆட்சிக் கழனியில் மலர்ந்தவையே என்பதை மகிழ்ச்சியோடு சுட்டிக்காட்டுகிறார் நூலாசிரியர். இவற்றின் மீது காழ்ப்பு கொண்டு மொழி நக்சலைட்டுகள் என்று எழுதிய இன எதிரிகளும் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர்.

'தமிழ் அறிவியல் மொழியாக வளர வேண்டும்' என்பதே தந்தை பெரியாரின் பேரவா; அந்த வகையில் அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு தி.மு.க. ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கரீதியான செயல்கள் இந்நூலில் அணி வகுக்கின்றன.

இந்நூலில் இலக்கியத் தரவுகள் மட்டுமல்ல; திராவிடம் என்பது என்ன? அதன் வரலாற்றுப் பின்னணி என்ன? என்ற திராவிடக் கருத்தியல் பற்றிய வரலாற்றுப் பேராசிரியர்களின் முடிவுகளையும் நூலில் தோரணவாயிலிலேயே கொடுத்திருப்பது மிகவும் பயனுள்ளதாகும்.

தமிழுக்கு என்ன செய்தது திராவிட இயக்கம் என்ற கேள்விக்கு அணி அணியாக அரிய பதில்கள் அணிவகுத்து நிற்கும் இந்நூலை தமிழர்கள் பயன்படுத்திக் கொள்வார்களாக! அரிய நூலை யாத்த பேராசிரியர் முனைவர் மானமிகு மு.பி.பா. அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும்!

அன்புடன்,

கி.வீரமணி தலைவர்,

திராவிடர் கழகம் 

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

Back to blog