திராவிட இயக்கம் - நோக்கம் தாக்கம் தேக்கம்
திராவிடர் இயக்கம் தோன்றாது போயிருந்தால், தமிழகம் இன்று எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.
மூட நம்பிக்கைகளின் பேராலும் வர்ணாசிரம் தர்மங்களின் பேராலும் தமிழ்ச் சமூகம் ஒடுக்கப்பட்டது. சிறு பான்மைச் சமூகமாக இருக்கும் அந்த சமூகம் பெரும்பான்மைச் சமூகமான தமிழர்களை அடக்கி ஆண்டது. தமிழர்கள் பல்வேறு சாதி அடுக்குகளில் அடுக்கப்பட்டனர். பிற்பட்டோர். மிகவும் பிற்பட்டோர் என வகை பிரிக்கப்பட்டனர். சூத்திரர் களாக முத்திரை குத்தப்பட்டு முகவரிகள் பறிக்கப்பட்டனர்.
தமிழன் தனது நாட்டிலேயே அன்னியமாக்கப்பட்டான். அகதிகளை விடவும் கீழான நிலையில் இருந்தான். அவனுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டன.
அவன் சுதந்திரமாக தமிழகத் தெருக்களில் நடமாட முடியாத நிலையை ஏற்படுத்தினர். செருப்பு போட்டுக்கொண்டு அவாள் தெருக்களில் சூத்திரரர்கள் நடக்க முடியாது. மேல் சட்டை போட்டுக்கொண்டு அவர்கள் தெரு வழியே போகமுடியாது. இதையெல்லாம் ஏற்படுத்தியது நமது நாட்டிற்கு கொஞ்சமும் சம்மந்தமே இல்லாத கைபர், போலன் கணவாய்களின் வழியே வந்த வந்தேறிகள்தான்.
மகாகவி பாரதி பாடியதைப் போல
சூத்திரனுக்கொரு நீதி - தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி
என்ற நிலையை உண்டாக்கினர்.
தமிழர்களின் தன்மானத்தை பகிரங்கமாக ஏலம் விட்டு வாய்விட்டுச் சிரித்தனர். தமிழர்களின் கல்வி உரிமையையும் வேலை வாய்ப்பு உரிமையையும் தட்டிப் பறித்தனர். வாழ்வுரிமை மறுக்கப்பட்ட அடிமைகளைப் போல் தமிழர்கள் உழலும் நிலையை உண்டாக்கினர். இத்தகையக் கொடுமை களுக்கு முடிவு கட்ட, சமூக அநீதிகளுக்கு தீர்வு காண, தமிழர்களுக்கு ஏற்றம் தர, மறுமலர்ச்சியை உண்டாக்கத் தோன்றிய இயக்கம்தான் திராவிடர் இயக்கம்.
டி. என். நாயர், பனகல் அரசர், சர்.பி.டி.தியாகராயர், நடேசனார் போன்ற மறுமலர்ச்சியாளர்கள் தமிழர்களைத் தட்டியெழுப்பினர். தந்தை பெரியார் போன்ற புரட்சியாளர் களும் சிந்தனாவாதிகளும் கீழே கிடந்த தமிழர்களை
வாஞ்சையோடு அள்ளித் தங்கள் தோள்களில் போட்டுக் கொண்டு நடைபோட்டனர். அவர்கள் போட்ட பீடுநடையைத் தொடர்ந்து திராவிடர் இயக்கம் உருவானது. அந்த திராவிடர் இயக்கம் தென்னிந்திய நல உரிமை சங்கமாக உருவெடுத்தது. நீதிக் கட்சியாக வீரியம் கொண்டது. அந்த நீதிக்கட்சி மெல்ல மெல்ல தமிழ் மக்களோடு கை கோர்த்து ஆட்சியையே பிடித்தது.
வெள்ளையர் ஆட்சிக் காலத்திலேயே தமிழகத்தில் ஒரு புரட்சி அரசாங்கத்தை நீதிக்கட்சியால் உருவாக்க முடிந்தது. இது வரலாறே கண்டிராத வரலாறாகும்.
இத்தகைய திராவிடர் இயக்கம் தோன்றியதால் ஏற்பட்ட ஆக்கத்தையும், அது சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தையும், அந்த இயக்கம் இன்று கண்டிருக்கும் தேக்கத்தையும் நக்கீரனின் முதன்மை துணை ஆசிரியர் தம்பி கோவி.லெனின் ஆராய்ச்சிப் பார்வையோடு இந்த நூலில் விரித்துரைத்திருக்கிறார்.
இந்த சின்ன வயசுல பெரிய மனுசங்களுக்கே உரிய பார்வையோடு மேற்படி நூலுக்காக அவர் அரிய பெரிய தகவல்களையெல்லாம் சேகரித்திருக்கிறார். ஒவ்வொரு கால கட்டம்தோறும் நிகழ்ந்த நிகழ்வுகளை பிறல உணராமல், செம்மையாய்ப் புரிந்து கொண்டு நூலில் பதிவு செய்திருக்கிறார். அதற்காகவே தம்பி லெனினை நக்கீரன் பாராட்டுகிறது.
இந்த நூலில் டி.எம்.நாயரின் வீரார்ந்த உரையைக் கேட்க முடிகிறது. பனகல் அரசரின் வீரியத்தை அறிய முடிகிறது. தந்தை பெரியாரின் புரட்சிகரமான இதயத் துடிப்பின் ஓசையைக் கேட்க முடிகிறது. கடந்த நூறு, நூற்றி இருபது ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தில் நம்மால் சிறகடித்துப் பறக்க முடிகிறது. இது இந்த நூலின் பலம்.
கணமான தகவல்கள் கொண்ட ஒரு பெரிய வரலாற்றை, உரையாடல் பாணியில் எளிமையாய் இந்த நூலில் தம்பி லெனின் தந்திருக்கிறார்.
இந்த நூல் ஒரு வரலாற்று ஆவணம். திராவிட சமூகத்தின் வைகறைப் பெட்டகம். தமிழினம் உணர்ந்து மதித்துப் போற்றவேண்டிய காகிதத்தாலான கருத்துக் களஞ்சியம்.
நக்கீரன் குழுமத்தின் வெளியீடுகளுக்கு அமோக ஆதரவு தரும் தமிழ்ச் சமூகம், இந்த திராவிடர் இயக்கம்! நோக்கம் - தாக்கம்- தேக்கம் தொகுப்பிற்கும் தன் ஆதரவை வழங்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.
என்றென்றும் உங்கள்,
நக்கீரன் கோபால்
தொடர்புடைய மற்ற பதிவுகள்: