திராவிட இயக்க வரலாறு - முரசொலி மாறன் - என்னுரை
1976 ஆம் ஆண்டு சென்னை சிறைச்சாலையிலே 'மிசா' கைதியாக நான் இருந்தபோது இந்நூலின் பெரும்பகுதியை எழுதி முடித்தேன்.
சிறை எழுதுவதற்கு ஏற்ற இடம்தான். ஆனால், நாம் பிறப்பதற்கு முன் உள்ள காலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கான ஆதாரங்களைத் தேடி எடுப்பதற்கு சிறை ஏற்ற இடமல்ல.
எனவே, விடுதலையானதும் விடுபட்டவைகளைச் சேர்த்து 15.7.1979-ல் 'முரசொலி' ஏட்டில் தொடர்ந்து சில பகுதிகளை வெளியிட்டேன். அதன்பிறகு ஏற்பட்ட சோர்வினால் இப்பணியைத் தொடர்ந்திட முடியவில்லை.
எனக்கு அகரம் கற்றுக் கொடுத்து என்னை ஆளாக்கிவிட்ட என் ஆசான் கலைஞர் அவர்கள் தூண்டுதல் காரணமாக எப்படியும் இந்நூலை முடித்து இந்த ஆண்டு முப்பெரும் விழாவில் வெளியிட்டே ஆக வேண்டும் - என்கிற உறுதி மேற்கொண்டு, விட்ட பணியைத் தொடர்ந்தேன்.
இடையிலே பதினைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன! இதனால் கோர்வை கெடுவதும், 'கூறுவது கூறல்' வருவதும் தடுக்க முடியாதனவாகிவிட்டன. நூலின் இடையே வரும் அதிகமான ஆங்கில மேற்கோள்கள் வேகத்தைக் குறைக்கத்தான் செய்யும். தவிர்த்திருக்கலாம்! ஆனால், 'நான் சொல்கிறேன்' என்பதைவிட, 'அவர் சொன்னார்' 'இவர் சொன்னார்' 'அந்த மேலைநாட்டு அறிஞர் பெருமகன் சொன்னார்' - என்கிறபோதுதான் நம்மவர் மனதிலே அது ஆணிவேர் விட்டுப் பதியும். அதன் காரணமாக அவைகளைக் கடமை உணர்வோடு குறித்திருக்கிறேன்.
நிகழ்ச்சித் தொகுப்பைப் பொறுத்தவரை இது ஒரு வரலாற்று நூல். அதே நேரம்; இந்த இயக்கத்தைப் பற்றிப் பரப்பப்பட்டு வருகிற விமர்சனங்கள் எப்படித் தவறானவை - உள்நோக்கு கொண்டவை என்பதை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதற்காக விளக்கங்களையும் ஆங்காங்கே தந்திருக்கிறேன்.
எனவே இந்நூல் திராவிட இயக்க வரலாறாக மட்டுமன்றி - அந்தக் காலகட்டத்தில் உள்ள இந்திய - தமிழக - அரசியல், சமுதாய அமைப்பின் வரலாறாகவும் ஒருவிதத்தில் காட்சி தருகிறது.
இந்த முதல் தொகுதி முடிகிற போது தந்தை பெரியார் இன்னும் காங்கிரசிலேயேதான் இருந்து தொண்டாற்றி வருகிறார். அதைத் தகர்ப்பதற்காக இன்னும் வெளியேறவில்லை . அவரது சுயமரியாதைச் சூறாவளி இன்னும் ஆரம்பமாகவில்லை. ஒரு தனி சகாப்தத்தைத் துவக்கிய அறிஞர் அண்ணாவோ மாணவப் பருவத்தில் இருக்கிறார்.
வாய்ப்பு கிடைத்தால் அடுத்த தொகுதிகளில் அந்த இனிய வரலாற்றைக் காண்போம்.
இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்து எனது தேடல் பணியிலும், பிழைதிருத்தல் பணியிலும் தங்களை முழுதும் ஈடுபடுத்திக்கொண்டு அயராது பணியாற்றிய திரு. 'சின்னக்குத்தூசி' தியாகராசனுக்கும், 'குங்குமம்' பாவை சந்திரனுக்கும் என் இதய நன்றியை உரித்தாக்குகிறேன்.
அது போல வே பிழை திருத்திய படி களை மேற்பார்வையிட்டுத் தந்த டாக்டர். மா. நன்னன் அவர்களுக்கும், திரு.சாமி. பழனியப்பன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வது என் கடமை.
சென்னை
அன்பன்
முரசொலி மாறன்
15, செப்டம்பர் 1991