திராவிட இயக்க வரலாறு - முரசொலி மாறன் - 'முரசொலி'யில் வந்த முன்னுரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://periyarbooks.com/products/dravida-iyakka-varalaaru-murasoli-maran

 

 

  

 

'முரசொலி'யில் வந்த முன்னுரை

 

15-07-1979 முதல் இவ்வரலாறு 'முரசொலி' ஏட்டில் வெளிவந்தபோது எழுதப்பட்ட முன்னுரை:

 

திராவிட முன்னேற்றக் கழகம் உதயமான பிறகு - அதன் வரலாறு நமக்கு நன்கு தெரியும். ஆனால் திராவிட இயக்கத் தோற்றத்திலிருந்து தி.மு.க. பிறப்பு வரை அதன் வரலாற்றை வரைய வேண்டும் என்பது என் நெடுநாள் ஆசை .

 

சுமார் ஓராண்டுக் காலம் மிசா கைதியாகச் சென்னைச் சிறையில் இருந்தபோது அந்த முயற்சியை நான் மேற்கொண்டேன். அந்த ஓராண்டுக் காலமும் வழக்கமாக அரசியல் கைதிகளுக்குக் கிடைக்கும் ஓய்வு காலமாக இல்லை - என்பது நீதிபதி திரு. இஸ்மாயில் கமிஷன் அறிக்கையைப் படித்தவர்களுக்குத் தெரியும். ஆரம்ப காலத்தில் ஒரு கொட்டடிக்கு ஏழு பேர் - ஒன்பது பேர் - என்று விறகுக் கட்டைகளைப் போல அடுக்கி வைக்கப்பட்டிருந்தோம். 24 மணி நேரமும் கொட்டடி பூட்டப்பட்டிருக்கும். இடையில் நான் உடல்நலமின்றி சுமார் ஒரு மாத காலம் மருத்துவமனையில் தனிமைக் கைதியாகச் 'சிறை' வைக்கப்பட்டிருந்தேன். பின்னர் அறைக்கு மூவராக அடைக்கப்பட்டோம். அதற்குப் பிறகுதான் கொட்டடிக்கு உள்ளே மின்விளக்கும், படிப்பதற்குப் புத்தகங்களும் கொஞ் சம் கொஞ்சமாக அனுமதிக்கப்பட்டன. புத்தகங்களை அனுமதிப்பதிலும் சென்சார்' உண்டு. கடைசி ஆறு மாத காலம் நான் நோயாளியானேன். சிறைக்குள்ளே ஒரு சிறையாக என் கொட்டடி ஆனது. படுக்கையிலேயே காலங் கழித்தேன்.

 

அந்த இடைப்பட்ட நாட்களில்தான் இதை எழுத முற்பட்டேன். ஒரு வரலாற்று நூலை எழுதுவதற்கு மேற்கோள் நூல்கள் வேண்டாமா? என்று கேட்கலாம். தேவைதான். ஆனால் அவற்றில் பலவற்றை அதிகாரிகள் 'சென்சார்' செய்து, உள்ளே தர மறுத்தனர். ஆனால், தியாக மறவன்' சிட்டிபாபு எம்.பி., எப்படியாவது அந்தப் புத்தகங்களை அவருக்கே உரிய சாமர்த்தியத்துடன் உள்ளே கொண்டு வந்து சேர்த்து விடுவார். கண்ணீர் மல்க அவருக்கு என் இதய நன்றியை உரித்தாக்குகிறேன்.

 

அருமைச் சகோதரர் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீரமணி அவர்கள் பழைய 'குடியரசு' தொகுப்புகளையும், இயக்க வரலாறு பற்றிய அரிய நூல்களையும் எனக்குக் கிடைக்கும்படிச் செய்து, நான் எழுதியதைப் படித்துப் பார்த்து அவ்வப்போது உரிய யோசனைகளையும் வழங்கினார். அவருக்கும் நான் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். (இருந்தும் இதில் விடுபட்டவை அல்லது பிழைகள் இருந்தால் அதற்கு நானே பொறுப்பு.)

 

அன்று சபாநாயகராக இருந்த திரு. புலவர் கோவிந்தன் அவர்கள் பழைய சட்டசபை நடவடிக்கைப் புத்தகங்களை வழங்கினார். அவருக்கும் என் நன்றி!

 

புத்தகங்களைத் திருப்பிக் கொடுப்பதற்கு முன்பு அவசர அவசரமாகக் குறிப்புகளைப் பிரதி எடுத்து உதவிய 'மிசா' பாலு என் நன்றிக்குரியவர்.

 

இரவெல்லாம் மின்விளக்கு எரிந்துகொண்டிருக்க, நான் எழுதும்போதெல்லாம் அதைப் பொருட்படுத்தாமல் இருந்த எனது 'செல்-மேட்'டுகள் 'மிசா' கணேசனுக்கும், விருத்தாசலம் 'மிசா' மணிக்கும் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

 

இதையெல்லாம் குறிப்பிடுவதற்குக் காரணம், அத்தகைய நெருக்கடி மிகுந்த - வசதியற்ற காலத்தில் இதை எழுதிய காரணத்தால் இந்த வரலாற்றில் இணைக்கப்பட வேண்டியவை விடுபட்டிருக்கக்கூடும்; வாய்ப்பு இருக்கலாம்; இருக்கிறது.

 

இயக்க வரலாற்றை நேரில் காணும் வாய்ப்பு பெற்று, அதில் பங்குபெறும் பேற்றையும் பெற்ற பெரியவர்கள் பலர் இருக்கிறார்கள். இதைப் படிக்கிற கழகத் தோழர்கள் அவர்களது கருத்துக்களை அறிந்து எனக்குத் தெரியப்படுத்தினால் அடுத்து நூல் வடிவில் இந்த வரலாறு வெளியாகும்போது அந்தத் தகவல்களை இணைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.

 

தோழர்கள் தயவுசெய்து இயன்றவரை உதவி செய்ய வேண்டுகிறேன்.

 

சென்னை
முரசொலி மாறன்
15-07-1979

Back to blog