திராவிட இயக்க எழுத்தாளர்களின் சிறுகதைகள் - முன்னுரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/dravida-iyakka-ezhuthaalargalin-chirugathaiga
 
முன்னுரை

தமிழ் இலக்கிய வளர்ச்சியில் திராவிட இயக்கத்தின் பங்கு மகத்தானது.

ஒரு காலகட்டத்தில் தமிழின் தொன்மையை, சிறப்பை தனித்தன்மையைச் சிதைக்க முயன்ற செருக்கை உடைத்தெறிந்த வலிமை திராவிட இயக்கத்துக்கே உரியது.

வடமொழியும், ஆங்கிலமும் விரவிக் கிடந்த தமிழை, நல்லதமிழ் ஆக்கிய பெருமை திராவிட இயக்கத்தின் தனி உரிமை.

அந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர்கள் பேரறிஞர் அண்ணாவும், கலைஞர் கருணாநிதி அவர்களும், அவர்களைப் பின்பற்றி எழுதிய எழுத்தாளர்களும்தாம்.

தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதுகிற எந்த ஒரு உண்மையான ஆசிரியராலும் மறுக்க அல்லது மறைக்கப்பட முடியாத திருப்பெயர்கள் அவர்களுடையவை.

தமிழில் கவிதை, வரலாறு, கட்டுரை, நாடகம், உருவகம், புதினம், நெடுங்கதை, சிறுகதை ஆகிய எல்லாத் துறைகளிலும் முன்பு எவரும் தொடாத சிகரங்களைத் தொட்டவர்கள் அவர்கள்.

சிறுகதை பிறந்ததாகக் கருதப்படும் மேலை நாடுகளில் கூட அதற்கு முறையான, முடிவான, முழுமையான இலக்கணம் கூறப்படவில்லை. ஏனென்றால், இலக்கியத்தின் கடைசிக் குழந்தையான சிறுகதை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருக்கிறது; புதுப்புது வடிவெடுத்துக் கொண்டிருக்கிறது.

சிறுகதை என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகச் சொல்லுவதுடன், அவ்வவ்வாறு எழுதிக் கொண்டும் உள்ளனர். எனினும் சிறுகதையின் தொடக்கம் அமைப்பு, வடிவம், முடிவு என்பவை 'எழுதப்படாத சட்ட மாகவே உள்ளதை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.

தமிழில் முதலில் சிறுகதை எழுதியவர்கள் பொழுது போக்குக்காகவே எழுதினர். பிறகு அதிலே கலைநயமும், மெருகும், தனித்துவமும் சிலரால் உருவாக்கப்பட்டன. தொடர்ந்து உத்தி, உள்ளடக்கம், நடை இவை முக்கிய இடத்தைப் பெற்றன.

சிறுகதையின் உருவம் மட்டும் சிதையாமல் இருந்தால் போதும், உள்ளடக்கம் பொருட்படுத்தப்பட வேண்டிய ஒன்று அன்று என்ற கருத்து இருந்த காலத்தில் - பொழுது போக்குக் கதைகளின் பால் உணர்வுக் கதைகளின் இருப்பிடமாகத் தமிழ்ச் சிறுகதைகள் உருவெடுத்துக் கொண்டிருந்த காலத்தில் - முற்போக்குக் கருத்துக்களை, பொதுவுடமைச் சிந்தனைகளைத் தம் கதைகளில் அழுத்தமாக வெளிப்படுத்தியவர்கள் திராவிட இயக்கத்தினரே.

குறிப்பாக, 1947 க்கும் 1957க்கும் இடைப்பட்ட காலத்தில் தமிழர்களிடம் அறிவுத் தாகத்தைத் தூண்டி, பத்திரிகை, புத்தகம் இவற்றைப் படிக்கும் ஆர்வத்தை ஊக்குவித்த பெருமையும் அவர்களுக்கே உண்டு.

அண்ணாவும், கலைஞரும், அவர்களைத் தொடர்ந்து பலரும் சிறுகதைகளின் வகைகள் என்று எவை எவை கூறப்பட்டனவோ அவை எல்லாவற்றுக்கும் எடுத்துக்காட்டான கதைகள் பலவற்றை எழுதினர்.

அந்தக் கதைகள் ஏழ்மையை எடுத்துக்காட்டுவதாக, முதலாளித்துவத்தின் சுயநலத்தைத் தோலுரித்துக் காட்டுவதாக, பண்ணைச் சீமான்களின் இரக்கமற்ற கொடுமைகளை விளக்கிக் காட்டுவதாக, சமுதாயத்தின் மேல் தட்டில் இருப்போரின் முகவிலாசத்தைப் படம் பிடித்துக் காட்டுவதாக, சமூக சீர்கேடுகளை எடுத்துக்காட்டி அவற்றைக் கடுமையாகக் கண்டனம் செய்வதாக, விதவையின் அவலம், சாதிவெறி காரணமாக ஏற்படும் சஞ்சலங்கள் இவற்றைத் திறம்பட வெளிப் படுத்துவதாக அமைந்தன.

திராவிட இயக்க எழுத்தாளர்களின் நுழைவுக்குப் பின்னரே தமிழ்ச் சிறுகதைத்துறையில் மறுமலர்ச்சியும் திருப்பமும் ஏற்பட்டன. ('அண்ணாதுரையின் இலக்கியப் பிரவேசத்துடன் மறுமலர்ச்சித் தமிழில் ஒரு புதிய வேகம் தோன்றியதோடு, நடையில் யாப்புக்குப் பொருத்தமான எதுகையும், மோனையும் சேர்ந்து மொழிக்கு ஒலியலங்காரம் கொடுத்ததும் ஒரு முக்கியமான திருப்பம் என்று சொல்ல வேண்டும்.' சிட்டி, சிவபாத சுந்தரம், - 'தமிழில் சிறுகதைகள், வரலாறும் வளர்ச்சியும்' - 1989 - பக்: 234)

ஆனால் திராவிட இயக்க எழுத்தாளர்களின் சிறுகதைப் பணி இன்றுள்ள 'இலக்கிய அறிஞர் 'களால் முறையாகப் பாராட்டப் படவில்லை. தமிழ் எழுத்துலகின் சகலமும் தாங்களே என எண்ணிக் கொண்டிருக்கும் அல்லது கூறிக் கொண்டிருக்கும் சில அறிவு ஜீவிகள்' அவர்களை எழுத்தாளர்கள் என்றுகூட ஒப்புக் கொள்வதில்லை, படிக்காமலேயே எழுதும் 'படித்த மேதைகள்' அவர்கள்.

அவர்களுக்கு மறுப்பாக இல்லாவிட்டாலும், இவர்களின் சிறுகதைகளில் சிலவற்றையாவது படித்துப் பாருங்கள்' என்ற கோரிக்கையோடு இந்தத் தொகுப்புகள் இப்போது வெளியிடப் படுகின்றன.

அத்தி பூத்தாற்போல சில வேளைகளில் சில நடு நிலையாளர்கள் அண்ணாவின், கலைஞரின், திராவிட இயக்கத்தாரின் எழுத்துப் பணியைப் பாராட்டாமலும் இல்லை.

பேராசிரியர் டாக்டர் அ. சிதம்பரநாதன் (செட்டியார்) போன்ற பெருமக்கள் அதனைச் செவ்வனே செய்துள்ளனர். (தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் - 1977)

‘உத்தி, உள்ளடக்கம், நடை ஆகிய அம்சங்கள் முழுமையாக அமைந்த பல சிறுகதைகளைப் படைத்தவர் அண்ணா ' (பக்கம்: 235) என்றும், 'மு.கருணாநிதியின் கதைகளில் பல சிறுகதை வடிவ அமைதி கொண்டுள்ளன என்பது தனிச் சிறப்பு. இவர் எழுதிய 'குப்பைத் தொட்டி' என்ற கதை எந்தச் சிறுகதைத் தொகுதியிலும் இடம்பெறும் தகுதியைப் பெற்றது.' (பக்: 236) என்றும், தமிழில் சிறுகதை; வரலாறும் வளர்ச்சியும்' என்னும் திறனாய்வு நூலில் குறிப்பிடுகிறார்கள் அதன் ஆசிரியர்கள் பெ.கோ. சுந்தரராஜன் (சிட்டி), சோ. சிவபாத சுந்தரம் ஆகியோர்.

இந்தத் தொகுப்புகளில் இணைக்கப்பட்டுள்ள கதைகள் பெரும்பாலும் ஐம்பதுகளில் எழுதப்பட்டவை. அவற்றில் வருகிற நடப்புகள் சில, அந்தக் காலத்துக்கு மட்டுமே பொருத்த மானவையாக இருக்கக் கூடும். அவற்றில் எவ்வித மாற்றமும் செய்யாமல் அப்படியே வெளியிட்டுள்ளோம்.

இவர்கள் எழுதிய சில நல்ல கதைகள் கிடைக்கவில்லை என்பது வருந்தத்தக்க ஒன்று.

இவை புதிதாக இப்போது எழுதப்பட்ட கதைகள் அல்ல இன்றைய தமிழ்ச் சிறுகதைகளின் பாணி'யில் கூட இவற்றில் சில மாறுபட்டிருக்கலாம். ஆனால் சிறுகதைக்குரிய இலக்கணத்திலிருந்து இவை மாறுபட்டவை அல்ல என்பது மட்டும் நிச்சயம்.

தமிழ்ச்சிறுகதைத் துறையில் திராவிட இயக்கத்தினரின் பங்கரிப்பு என்ன என்பதை ஓரளவுக்கு வெளிப்படுத்தும் முயற்சியே இந்தத் தொகுதிகளின் நோக்கம் என்று சொல்ல வேண்டும்.

இவை இப்போது வெளியிடப்படுவதற்கு மற்றொரு முக்கிய காரணமும் உண்டு.

இந்தக் கதைகள் எழுதப்பட்ட காலங்களில் அவற்றில் பல புத்தகமாக வெளியிடப்பட்டிருந்தும் கூட, 'அரசியல்' காரணமாக அவை அரசுசார்ந்த நூலகங்கள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் இவற்றில் இடம் பெறவில்லை; இடம் பெறும் முயற்சியையே சிலர் திட்டமிட்டு முறியடித்துள்ளனர்.

பின்னாளில் தமிழ்ச் சிறுகதைகளில் திராவிட இயக்கத்தின் பங்குபற்றி ஆய்வு செய்ய விரும்புவோருக்கு இவை கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டும் இவை இப்போது புதிதாக வெளியிடப்படுகின்றன.

இவர்கள் எழுதிய கதைகள் அனைத்தும் தொகுதிகளாக நூலாக்கப்படுவதே முறை. ஆயினும், இன்றைய நிலையில் காகிதம், அச்சுக் கூலி போன்றவற்றின் விலை உயர்வை மனத்தில் கொண்டு, சாதாரண வாசகரும் வாங்க முடிகிற விலையில் தரவேண்டும் என்பதற்காக எழுத்தாளர்களின் குறிப்பிட்ட சிலகதைகள் மட்டுமே இங்கே தரப்படுகின்றன.

திராவிட இயக்கம் அரசியல் இயக்கமாக உருமாறியதில் தமிழரின் புறவாழ்வுக்குப் பல நன்மைகள் கிடைத்திருப்பினும், தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தமட்டில் அது நட்டக் கணக்கே ஆகும்.

அவர்களின் சிறுகதைப் பணி அரசியல் பணி காரணமாக தொடரமுடியாத சூழலை ஏற்படுத்திவிட்டது என்பதை நாம் சொல்லியே ஆக வேண்டும். அவர்களில் பலர் இப்போது சிறுகதைகளை எழுதுவதே இல்லை.

ஆனால், கலைஞர் அவர்கள் மட்டும் தனது இடைவிடாத அரசியல் மற்றும் அரசுப் பணிகளுக்கும் மத்தியில் இன்னும் சிறுகதை எழுதுவதைத் தவிர்ப்பதில்லை என்பது உண்மையில் வியப்புக்கும், மகிழ்ச்சிக்கும் உரியதாகும். சென்ற ஆண்டு கூட வார இதழ் ஒன்றில் அவருடைய புதிய சிறுகதை வெளியாயிற்று.

இனி, இந்தக் கதைகளைத் தேடும் பணியில் எனக்குப் பெரிதும் உதவிய என் மனைவி பேராசிரியர் ச. சுந்தரவல்லி, பிழைதிருத்தம், அச்சக, காகித ஏற்பாடுகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் உழைத்த என் நண்பர் 'இளம்பிறை' ரஹ்மான், அனுமதி அளித்த பெருமக்கள், எல்லாவற்றுக்கும் மேலாக, தமது நெருக்கடியான அலுவல்களுக்கு மத்தியிலும் அணிந்துரையாக நல்லதொரு ஆய்வுரையே அளித்திட்ட மாண்புமிகு கல்வி அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் ஆகியோருக்கு என் நன்றி என்றும் உரியது.

சென்னை,                                                                                                                                                  அன்புடன்

டிசம்பர் 97                                                                                                                                                ப. புகழேந்தி

Back to blog