தேவ-அசுர யுத்தம் ஆரிய-திராவிட யுத்தமா? - அதற்கு கம்பெனி ஜவாப்தாரி அல்ல!
இதிகாசங்களும் புராணங்களும் மீண்டும் மீண்டும் திரைப்படங்களாக எடுக்கப்பட்டன. இப்போது பார்த்தால் புராணங்கள் எல்லாம் பிரம்மாண்ட தொலைக்காட்சி தொடர்களாக வருகின்றன. அதிலும் இந்தியில் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்படுபவை தமிழில் மாற்றப்பட்டு நம்மவூர் தொலைக்காட்சிகளில் பெருமையோடு படைக்கப்படுகின்றன! பக்தி என்ற பெயரில் நமது பூர்வீகம் பற்றிய ஒரு மோசமான கருத்தியல் திட்டமிட்டு பரப்பப்படுகிறது.
இதற்கு மெய்யான வரலாற்றாளர்களின் எதிர்வினை என்ன? பெரியார்தான் அவர் நோக்கிலிருந்து இதிகாசங்களையும் புராணங்களையும் விடாது விமர்சித்தார். அவரது விமர்சன பாணியை சிலரால் ஏற்க முடியவில்லை. ஆனால் அவர்கள் சரியான பாணி விமர்சனங்களை வைத்தார்களா என்றால் இல்லை. பெரியாரை குறைசொல்லிவிட்டு ஒதுங்கிக் கொண்டார்கள்!
விதிவிலக்காய் டி. அமிர்தலிங்க ஐயர், அவர் அடியொற்றி தோழர் கே. முத்தையா ஆகியோர் வால்மீகி ராமாயணத்தை ஒரு புதிய நோக்கில் விமர்சித்தார்கள். ராவணனின் லங்கா தற்போதய ஸ்ரீலங்கா அல்ல என்பதை அகச்சான்றுகள் மூலம் நிரூபித்தார்கள். அந்த ஆய்வை அகில இந்திய அளவில் கொண்டு சென்றிருந்தால் ராமர் பாலம் எனும் கட்டுக்கதையைச் சொல்லி சேது சமுத்திர திட்டம் எனும் ஒரு வளர்ச்சி திட்டத்தை தடுத்த கொடுமையை தகர்த்திருக்கலாம்.
இதிகாசங்கள், புராணங்களை வெகுமக்களின் மனம் புண்படும்படி முரட்டுத்தனமாக விமர்சிக்க கூடாது என்பது சரி. அதை சொல்லிவிட்டு விமர்சனமே செய்யாமலிருப்பது என்ன நியாயம்? அப்படி வாளாவிருந்தால் மதவெறி சக்திகளும், புராணிகர்களும் நம் மக்களின் மனங்களை, குறிப்பாக பெண்களின் மனங்களை தம்வசம் எடுத்துக்கொள்வார்கள். அதன் விளைவாக கற்பிதங்களை எல்லாம் சரித்திரம் என்றும், மூட நம்பிக்கைகளை எல்லாம் அறிவியல் உண்மை என்றும், ஆணாதிக்க சித்தரிப்புகளை எல்லாம் இயல்பான நடைமுறைகள் என்றும் அவர்கள் எண்ணத் தலைப்படுவார்கள்.
வெகுமக்கள் மட்டுமல்ல, பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ளவர்கள் கூட இதிகாச, புராணபாத்திரங்களின் வரலாற்று பின்புலத்தை அறியாமல் தடுமாறுகிற அவலத்தை பார்க்கிறோம். "இந்தோ -ஆரியர்கள் தங்களது பிராந்தியத்தை விரிவுப்படுத்திக் கொண்டும், தங்களைத் தாங்களே ஒருங்கிணைத்துக் கொண்டும் இருந்த அந்த ஆதிகாலத்திய வெற்றிகளையும் உள்நாட்டு யுத்தங்களையும் ராமாயணமும் மகாபாரதமும் சித்தரிக்கின்றன" என்றார் ஜவஹர்லால் நேரு. (இந்திய தரிசனம்)
டாக்டர் ராதாகிருஷ்ணனோ "இந்தியாவின் அன்றைய பூர்வகுடிகளுக்கும் ஆரியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலையும், ஆரியப் பண்பாட்டின் ஊடுருவலையும் ராமாயணம் கையாளுகிறது" என்று இன்னும் பச்சையாகக் கூறினார். (இந்தியத் தத்துவத்தின் ஒரு தரவு நூல்) இதையெல்லாம் படிக்காமல் ஆரியராவது, திராவிடராவது என்கிறார்கள் சில தமிழ்த் தேசியவாதிகள்!
இதையெல்லாம் மனதில் கொண்டுதான் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. இது, இதிகாசங்கள் - புராணங்களின் பகுத்தறிவுக்கு ஒவ்வாத அதீத புனைவுகளுக்குள்ளும் புகுந்து அவற்றில் ஒளிந்திருக்கக்கூடிய வரலாற்று யதார்த்தங்களை கண்டறிய முயலுகிறது. கூடவே நடந்த சமூக அநீதிகளையும் அடையாளம் காட்டுகிறது.
இந்த மறுவாசிப்பு முறையில் நான் கூறும் சாத்தியப்பாடுகளையும், முடிவுகளையும் ஒருவர் ஏற்காமல் போகலாம். ஆனால், ஏன் இப்படி இருக்கக் கூடாது என்று நிச்சயம் அவரும் யோசிப்பார் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. காரணம் அந்த அளவுக்கு புராணங்களிலிருந்தும் வால்மீகி ராமாயணத்திலிருந்தும் மகாபாரதத்திலிருந்தும் ஆதாரங்கள் கொடுத்திருக்கிறேன்.
துர்க்காதாஸ் எஸ். கே. ஸ்வாமி மூலங்களைப் பரிசோதித்து எழுதி, அரு. ராமநாதன் பதிப்பித்த "விஷ்ணு புராணம்", "ஸ்ரீசிவமஹா பராணம்", "ஸ்ரீதேவி பாகவதம்" மற்றும் கார்த்திகேயன் எழுதிய "ஸ்ரீமத் பாகவத மஹா புராணம்" இந்த நூலுக்கான அடிப்படை தரவு. எனது "சரயூ" நாவலுக்காக சி. ஆர். ஸ்ரீநிவாஸய்யங்கார் தமிழில் பெயர்த்திருந்த வால்மீகி ராமாயணத்தை ஏற்கெனவே படித்திருந்தேன். அதை சென்னையில் இப்போது எங்கே தேடுவது என மயங்கிய நிலையில் கூகுளில் கிடைக்கிறதா பார்ப்போம் என்று தேடியதில் கிடைக்கவே செய்தது; கையடக்கமான நூலகம்!
தமிழர்கள் இதைப் படித்தால் தங்கள் பூர்விகம் என்ன, தங்களின் முன்னோர்கள் யார் என்பதைப் புரிந்து கொள்வார்கள். பாகுபாடு இன்றி மாந்தர்கள் அனைவரிடமும் புராணியக் கடவுள்கள் நியாயமாக நடந்து கொண்டனவா என அவர்களுக்கு சந்தேகம் வந்தால், அப்படி சந்தேகம் வரும்படி சித்தரிக்கப்பட்டிருப்பது ஏன் எனும் யோசனை வந்தால் அதற்கு கம்பெனி ஜவாப்தாரி அல்ல!
-அருணன்
தொடர்புடைய மற்ற பதிவுகள்: