தலித் பார்ப்பனன் (சிறுகதைகள்) - சமரசமின்மையைக் குணமாகக் கொண்ட கதைகள்

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

 https://periyarbooks.com/products/dalit-parpanan-short-stories

 

 

சமரசமின்மையைக் குணமாகக் கொண்ட கதைகள்

சரண் குமார் லிம்பாலே எழுத்தாளர்களின் எழுத்தாளர் என்றும் சொல்லத்தகுந்தவர். நிறைய தலித் எழுத்தாளர்கள் அவரைக் குறித்தும், அவருடைய கதைகள் குறித்தும் என்னிடம் பேசிப் பேசி மாய்ந்து போனார்கள். இன்றும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஏறத்தாழ முப்பத்தைந்து ஆண்டு காலமாக எழுதிக் கொண்டிருக்கும் லிம்பாலே இது வரை 37 நூற்களை எழுதியுள்ளதாகக் கூறுகிறார். கவிதை, சிறுகதை, தன் வரலாறு, நாவல், விமர்சனம், ஆய்வு எனப் பல்வேறு தளங்களில் செயல்படுவதாக அவரது எழுத்து இருக்கிறது.

இவ்வளவு நீண்ட காலமாய் அவர் எழுதிக் கொண்டிருந்தாலும் இந்தியா முழுவதிலுமுள்ள வாசகர்களால் பெரிதும் கொண்டாடப் படுபவராய் அவர் இருந்தாலும் சமுகத்தின் மீது ஒரு தாக்கத்தைச் செலுத்த வல்லதாய் அவருடைய எழுத்து இருந்த போதிலும், இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் இவருடைய படைப்புகள் மொழி பெயர்க்கப்பட்டிருந்தாலும் மைய அரசு சார்ந்த சாகித்ய அகாடமி, ஞான பீடம் போன்ற எந்த விருதுகளும் பெறாதவர் அவர். என்னைப் பொறுத்த மட்டில் இதுவே அவருடைய சிறப்புகளில் முதன்மையானது என்பேன்.

தயாபவார், அர்ஜுன் டாங்ளே, அன்னா பாவ் சாத்தே, நாராயண் சர்வே, நாம்தியோ தாசல் என மராத்தி தலித் இலக்கிய எழுத்தாளர்களில் முக்கியமான எவருக்கும் சாகித்ய அகாடமி போன்ற மைய விருதுகள் எவையும் அளிக்கப்படவில்லை . விருது பெற்றவர்களில் தகுதி உள்ளவர்கள் எல்லாரும் மத்திய பாரதிய ஜனதா அரசின் சகிப் பின்மையையும் கொடுங்கோன்மையையும் கண்டித்துக் தங்களுடைய விருதுகளைத் திருப்பி அளித்து விட்டபடியால் தற்போது சாகித்ய அகாடமி விருது பெற்றவர்கள் என்ற அடையாளத்துடன் உலவுபவர் கள் எல்லாம் அரசின் அநியாயங்களுக்கு வெற்றுப் பார்வையாளர்கள் மட்டுமே என்கிற நிலை உருவாகியுள்ளது. இதற்கு நிரூபணசாட்சியம் வேண்டுபவர்கள் தமிழ்நாட்டைப் பார்த்துக் கொள்ளலாம்.

எழுத்தாளராய் இருப்பதற்கான தார்மீகம் என்ன? உண்மையைப் பேசிய காரணத்திற்காகத் தங்களைப் போன்ற எழுத்தாளர்களும் அறிஞர்களும், மாட்டுக்கறி உணவுப் பழக்கத்தைக் கொண்டிருந்தற்காக சிறுபான்மை அடித்தட்டு மக்களும் படுகொலை செய்யப்படுகிற ஒரு சூழலில், அந்தப் படுகொலைகளின் பின்னே ஆட்சி அதிகாரம் அரணாய் நிற்கின்ற போது உருத்துள்ள எழுத்தாளர்கள் விருதைப் திருப்பி அளித்து, அரசை எள்ளி நயைாடுகிறார்கள்.

நம்முடைய செந்தமிழ் நாட்டிலுள்ள விருது பெற்ற எழுத்தாளர் களோ அத்தகைய எழுத்தாளர்களை ஏகடியம் செய்து கொண்டிருக் கிறார்கள். எழுத்தாளருக்கு அழகு என்பது என்ன? நியாயத்திற்காக ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவதா? தமிழறிஞர் கோட்டாவில் பிள்ளைகளுக்கு மெடிக்கல் சீட் வாங்குவதா?

இந்தச் சூழ்நிலையைக் காட்சிப்படுத்துவது போன்ற கதை ஒன்று இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கிறது. ''எனக்குன்னு எல்லைகள் இருக்கு, ஒரு வெகு ஜனப் போராட்டத்துல ஒவ்வொருத்தரோட பங்கும் வரையறுக்கப் பட்டிருக்கு. இயக்கத் தொண்டங்கிறவன் வெகுஜனப் போராட்டத்துல நேரடியா பங்கெடுத்துக்கனும் எழுத் தாளங்கிறவன் பண்பாட்டுத்தளத்துல தன்னோட எழுத்துக்கள் மூலம் மாகவும், பேச்சுக்கள் மூலமாகவும் தலித்துகளோட நிலைமையை வன்மையாக முன்னெடுத்துகிட்டு போக வேண்டியிருக்கு. இந்த இலக்க நோக்கித்தான் தொடர்ந்து கிட்டிருக்கேன். அதே நேரத்துல தலித் விடுதலைக்கு எதிராக எதையும் செஞ்சுடாமே கவனமா இருக்கேன்.''

''நீ ஒரு ஒட்டுண்ணியாமாறிட்டே தலித் மக்களின் வேதனைமிக்கப் போராட்டத்தை உறிஞ்சு வாழ்ந்துட்டிருக்கே, நமது மக்கள் எல்லாம் ஜெயிலுக்குள்ளே தூக்கிப் போடப்படும் போது அவங்களுக்கு எதிரா இந்த அநியாயங்களைச் செய்றவங்க தர்ற விருந்துபசரணைகளை அனுபவிச்சுகிட்டு இருக்க உனக்கு வெக்கமாயில்லையா''

'தலித் பார்ப்பான்' என்கிற கதையில் மேற்கண்ட உரையாடல் இடம் பெறுகிறது. அவ்வுரையாடலை இத்தருணத்தில் நினைவு படுத் துவதோடு இந்தச் செய்தியை இத்துடன் விட்டு விடுகிறேன்.

இத்தொகுப்பிலுள்ள கதைகள் எழுதப்பட்டு இருப்பத்தைந்தில் இருந்து முப்பது ஆண்டுகள் வரை ஆகின்றன. லிம்பாலேக்கு இப் போது அறுபது வயதாகிறது. அவர் இருபத்தேழு இருபத்தெட்டு வயது இளைஞனாய் இருந்தபோது எழுதிய கதைகள் இவை.

ஆர். எஸ். எஸ். சிவசேனா போன்ற இந்துத்துவ வலதுசாரி அமைப் புகள் கோலோச்சுகின்ற மராத்தியச் சூழலில் எழுதப்பட்டவை இக் கதைகள். ஆகவே இக்கருத்தியலின் பயங்கரவாதத்தை எதிர்கொள்கிற நேரடித்தன்மையோடும், துணிச்சலுடனும் இக்கதைகள் உள்ளன. சிறு கதையின் நவீன உத்திகள் இல்லை, உள்ளொலி இல்லை தரிசனம் இல்லை என மேட்டிமைத் தனமான தராசுகளைக் கொண்டு இங்கு வர வேண்டாம் என முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.

மராத்திய சமூகச் சூழல் தமிழ் நாட்டுச் சூழலிலிருந்து பெருமளவுக்கு வேறுபட்ட ஒன்று. பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் பிறந்த மண் மட்டுமல்ல அஃது, சாவர்க்கர், கோட்சே கோல்வால் கரிலிருந்து இன்றைய பால்தாக்கரே, மோகன் பகவத் வரை இந்துத்து வத்தின் தளகர்த்தர்கள் பிறந்த மண்ணும் அதுவே. திருவள்ளுவர், கனியன் பூங்குன்றன், சித்தர்கள், ராமலிங்க வள்ளார் எனத் ஜனநாய கப் பொது உரிமைக்காக வரலாறு நெடுகிலும் போர்க் குரல்கள் இடை விடாது ஒலித்த மண்தமிழ் மண் ஆகும். அதன் நேற்றைய கண்ணியாய் பெரியார் தோன்றிப் பக்குவப்படுத்த முனைந்தார். ஓரளவே என்றாலும் அதில் வெற்றி பெற்றார்.

மராத்திய மண் மிகச் சமீபமாய் கூட கயர்லாஞ்சியை உலகினுக்கு அளித்து பீதியடைய வைத்தது. தமிழ் மண்ணிலும் கூட தாழ்த்தப் பட்ட தலித் மக்களுக்கு எதிரான வெறுப்பும் வன்மும் ஆங்காங்கே தலை தூக்கினாலும் பொதுப் போக்காய் அது மாற முடியாமல் தோற்று போய்விடுகிறது. ஏனென்றால் இம்மண் தனது நெடிய சாதியொ ழிப்புப் பாரம்பரியத்தின் மூலம் தாத்தப்பட்ட மக்களின் அமைப்பு கள் மட்டுமல்லாது பெரியாரிய அமைப்புகள், இடது சாரி அமைப்பு கள் ஆகிய முற்போக்கான அமைப்புகள் எல்லாமே குறிப்பிடத்தகுந்த செல்வாக்குடன் விளங்கி வருவதால் சாதியவாதப் பிற்போக்கு சக்தி களின் கைகள் மட்டுப்படுத்தப்பட்டே இருத்தி வைக்கப்படுகின்றன.

மராத்திய சூழல் இந்துவத்துவத்தின் தலைமைப் பீடமாய், மிக வலுவானதாக உள்ள நிலையில் பெரியார் போன்ற இடைநிலைச்சாதி மக்களிடம் வேலை செய்து அவர்களைப் பார்ப்பனீயத்துக்கு எதிராய் திருப்பிவிடும் வேலை நிறைவேற்றப்படவில்லை என்பதால் பார்ப் பனீயம் அதன் கொடுக்கை விஷம் நிரப்பி எங்கெங்கிலும் ஊர்ந்து வலம் வந்து கொண்டிருக்கிறது. எனவே அந்த சூழலில் பிறக்கின்ற தலித் இலக்கியம் நேரடியாகப் பார்ப்பனியத்தை உக்கிரமாக எதிர் கொள்ளும் தீவிரத்துடன் பிறக்கிறது. அத்தலித் இலக்கியத்திற்குச் சரியான எடுத்துக்காட்டாய் சரண் குமார் லிம்பாலேயின் எழுத்துக்கள் விளங்குகின்றன. ஏற்கனவே சொன்னது மாதிரி இச்சிறுகதைகள் எண்பதுகளில் எழுதப்பட்டவையாய் இருந்தாலும் அப்போதே பசு வதைக்கெதிரான இந்துத்துவத்தின் குரலில் உள்ள பம்மாத்தைத் தோலுரிக்கும் படியாய் ?பசுவதை? என்கிற ஒரு கதையை எழுதியிருக் கிறார். அதே போன்றே பிள்ளையார் சதுர்த்தியைக் குறித்து ஒரு கதை எழுதியிருக்கிறார்.

அதே போல், லிம்பாலேயின் கதைகளின் தனிச்சிறப்புகளில் ஒன்றாய் துலக்கமாய்த் தெரிவது அதன் பாசாங்கற்ற வெளிப்படைத் தன்மை ஆகும். எந்த விதத்திலும் பாசாங்கில்லாத நேரடியாக உடைத்துப் பேசி விடும் தன்மை கொண்டவை அவருடைய கதைகள். தலித்கதை களின் பொதுவான தன்மையான பாதிப்புக்குள்ளான தன்னிலையை (victimised self) முன்வைப்பது என்பதைத் தாண்டி, அவருடைய கதா பாத்திரங்கள் (அவை பெரும்பாலும் அக்கர்மஷா தன் வரலாற்று நூலில் லிம் பாலே துலக்கமாக வரைந்து காட்டிய அவருடைய சொந்த தன்னிலை யையே பெருமளவுக்கு ஒத்திருப்பவை ) தம்முடைய பாலியல் விளைவை லஜையில்லாமல் வெளிப்படுத்து வனவாக இருக்கின்றன.

சாதாரண பார்வையில் இந்தப் பாலியல் விழைவு என்பது வரம்பு மீறியது என்று கூடத் தோற்றமளிக்கும் சாத்தியம் உள்ளது ''அய்யா நான் ஒரு விபச்சாரியின் மகன் எங்கம்மாவிபச்சாரத்துல சம்பாதிச்சுத் தான் என்னைப் படிக்க வைக்கிறா. அவளுக்கு ஒரு கிராக்கி படிஞ் சிட்டா நாங்க எல்லாரும் ரொம்ப சந்தோஷப்படுவோம்' என அவருடைய கதைகளுள் ஒன்று குறிப்பிடுவது மாதிரி ஒட்டுமொத்த சமுகத்தின் பாலியல் தினவுக்கு இலக்காக்கி வேட்டையாடப்பட்ட ஒரு பின்புலத்தில் இருந்து வரும் ஒருவனின் பாலியல் தொடர்பான வெளிப்படையான பார்வைகளை நிறுத்து எடை போடும் தார்மீகம் எவரிடம் இருக்க முடியும்?

இத்தொகுப்பிலுள்ள பெரும்பான்மையான கதைகளில் மையப் பாத்திரமாக இருப்பது ஒரு தலித் ஆண் ஆகும். அந்த ஆணின் பார் வையில், அனுபவத்தில் இந்தியச் சமுகத்தில் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் சந்திக்கிற ஒடுக்குமுறையின், சுரண்டலின் வகை மாதிரிகளை அறியத்தகுவனவாக இக்கதைகள் உள்ளன. 'படிகள்' கதையில் வரும் அஜய் B.A., B.Ed., அனுபவகிக்கிற சுரண்டல் ஒரு மாதிரியானது. கிரா மத்தின் இரவுக் காவலாளியாகப் பணிபுரியும் 'நஞ்சுட்டப்பட்ட ரொட்டி ' கதையில் வரும் நாமா மங்க் சந்திக்கும் ஒடுக்கு முறை இன்னொரு எல்லையில் இருக்கக் கூடியது. பள்ளி, கல்லூரிகளில், அலுவலகங்களில் சாதியம் செயல் படும் நுட்பம், இலக்கிய வெளியில் அது நெளியும் நளினம், காதல் போன்ற இயல்பான மனித உணர்வுகளில் அது நிகழ்த்தும் அனர்த்தம் என நுட்பமான செய்திகள் அழகாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன இக்கதைகளில்.

அதே போல, நாமறிந்த மற்ற தலித் எழுத்தாளர்களில் இருந்து சரண் குமார் லிம்பாலேயைத் தனித்து காண்பிப்பது அவருடைய தன் விமர்சனமும் சுய எள்ளலும் ஆகும். தனக்கு வெளியே தொழிற்படும் சாதியத்தையும், மதவாதத்தையும் தோலுரிப்பதோடு நின்று விடுவதில்லை அவருடைய கதைகள். தலித்துகளாகிய தங்களுக்குள் ஆதிக்கத்துக்கு ஆதரவாக இணக்கமாகப் போவதற்கான கூறுகள் என்னென்ன விதங்களில் வடிவங்களில் வந்து குடியேறி இருக்கின்றன என்பதையும் தயவு தாட்சண்யமின்றி விசாரணை செய்பவை அவருடைய கதைகள்.

சமசரமின்மையைக் குணமாகக் கொண்ட இக்கதைகள் தமிழ் வா சகர்களுக்கு இன்னொரு அனுபவத்தைத் தருவனவாக இருக்கும் என நான் நம்புகிறேன். இக்கதைகளை மொழி பெயர்க்க இசைவைத் தெரி வித்ததோடு அவ்வப்போது தெளிவிற்காக வேண்டிய என் கேள்விகளுக்குப் பொறுமையாய் பதில் அளிக்கும் பண்பு கொண்டிருந்த மைக்கும் எனது அன்பும் நன்றியும் அவருக்கு. வழக்கம் போல இதை வெளியிடும் நீலகண்டனுக்கும், எனது வேலைகளில் என்னோடு ஒத்துழைக்கும் என் துணைவி ஜெயந்திக்கும் எனது நன்றியை அறித்தருவது என் கடமையாகிறது.

ம.மதிவண்ணன்
பெருந்துறை,
ஈரோடு

Back to blog