திமுக வரலாறு - நல்ல முயற்சி
திமுக வரலாறு - நல்ல முயற்சி
தலைப்பு |
திமுக வரலாறு |
---|---|
எழுத்தாளர் | டி.எம்.பார்த்தசாரதி |
பதிப்பாளர் |
பாரதி பதிப்பகம் |
பக்கங்கள் | 168 |
பதிப்பு | ஒன்பதாம் பதிப்பு - 2012 |
அட்டை | காகித அட்டை |
விலை | Rs.170/- |
புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/thi-mu-ka-varalaaru.html
நல்ல முயற்சி
வரலாறு - நடைபெற்ற சம்பவங்களின் தொகுப்பு என்று கொள்வார் உளர் - இனி நாம் நடத்த வேண்டியவைகளை நமக்குக் கற்றுத் தரும் பாடப் புத்தகம் என்று சொல்வோரும் உண்டு.
நிகழ்ச்சிகள் - அவைகளிலே ஈடுபாடு கொண்டோர் - அவர் தம் இயல்புகள் பெற்ற வெற்றிகள் ஏற்பட்ட இழப்புகள் ஆகியவைகளின் பட்டியலாக வரலாறு உளது என்று கருதுவோர் உளர்.
எழுச்சிகள் - உருவான வகை - காரணம் - அவைகளின் வளர்ச்சி - பலன் என்பவைகளை எடுத்துக் காட்டிச் சுவையூட்டும் காதை - வரலாறு என்று எண்ணுவோர் உளர்.
வரலாறு - வெறும் குறிப்பேடு அல்ல. எல்லாருக்கும் எல்லாக் காலத்துக்கும் ஏற்ற வழிகளைக் காட்டவல்ல பாட ஏடும் ஆகிவிடாது.
சம்பவங்கள் - வரலாற்றுக்கு வித்து - விளக்கங்கள் - இலை, பூ, காய், பயன் - அதன் கனி என்றும் கூறலாம்.
தி.மு.கழக வரலாறு - ஒரு நாட்டுக்கு ஏற்பட்ட அடிமைத் தனத்தை அகற்ற எடுத்துக் கொள்ளப்பட்ட அரிய முயற்சிகளை உள்ளடக்கியது மட்டுமல்ல. இரு இனமக்கள் தமது இனம் பற்றிய உணர்வு பெற்றதிலிருந்து தொடங்கி, படிப்படியாக வேறு பல துறைகளைக் கண்டும் கொண்டும் வளர்ந்து கொண்டு வருகிறது. முற்றுப் பெறவில்லை. இன்றுள்ள கட்டம் வழி தெரிகிறது என்று கூறத்தக்கது.
பாதை காண்படலம் - தீட்டவே பல்லோருடைய இரத்தமும் வியர்வையும் கண்ணீரும் தேவைப்பட்டது.
வெற்றியூர் - போய்ச் சேர - தரவேண்டிய விலை ஏராளம்.
இதற்கிடையில், அரிமா நோக்கு போல் திராவிட சமுதாயத்திலே அவ்வப்போது காணப்பட்ட கட்டங்களைத் தொகுத்தும் விளக்கியும் முறைப்படுத்தியும் - ஏன் நண்பர் டி.எம். பார்த்தசாரதி அவர்கள் இந்த அரிய நூலை வெளியிடுகிறார். நல்ல முயற்சி - நாட்டுக்குத் தேவையான பணி.
நண்பர் பார்த்தசாரதி என்னுடனிருந்து பணியாற்றி' வருவதாலும் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழகத்திலே ஏற்பட்ட நிகழ்ச்சிகள், எழுச்சிகள் ஆகியவைகளை அறிந்திருப்பதாலும், இத்தகைய நூல் திட்ட முடிகிறது - பாராட்டுகிறேன்.
நம்மையும் அறியாமல் நாம் ஒரு புது வரலாற்றுச் சிறப்பினை உருவாக்கிக் கொண்டு வருகிறோம் என்ற உணர்வு எனக்குச் சிற்சில வேளைகளில் ஏற்படுவதுண்டு. எப்போதும் ஒரு பெரிய இயக்கம் ஈர்த்துக் கொண்டதால் அதன் வயப்பட்டு விட்டதாகவும் எண்ணுகிறேன்.
அத்தகைய உணர்வு - இந்த வரலாற்று ஏடு படிப்போர் பெற இயலும் என்பது உண்மை.
நண்பர் டி. எம். பார்த்தசாரதி, இன்னல்களுக்கு இடையிலேயே எப்போதும் இருந்திருந்து பழகிப் போனவர் - தழும் பேறிப் போன நிலை.
இடுக்கண் வளர்ந்து நெருக்கும் போது எவருக்கும் தாம் இருக்கும் இடம் - செய்யும் பணி - ஈடுபட்டுள்ள இயக்கம் - தொடர்பு கொண்டுள்ள தோழர்கள் - எனும் இவை பற்றியெல்லாம் ஐயப்பாடு, கோபம், அருவருப்பு, அச்சம், சலிப்பு, - இவை மூளும். எப்படி என் நண்பர் பார்த்தசாரதி பல தொல்லைகளைத் தாங்கித் தத்தளித்த நிலையிலேயும், ஆர அமர உட்கார்ந்து அரும்பாடுபட்டு சேதிகளைச் சேகரித்து - முறையாகத் தொகுத்து ஏடு ஆக்கினார் என்பதை எண்ணும்போது, உண்மையிலேயே எனக்கு வியப்பாகத்தான் இருக்கிறது.
வியப்பு, நண்பர் எடுத்துக் கொண்ட முயற்சிக்குப் பரிசுமாகாது - பயனுமளிக்காது பலன், இந்த ஏடு உங்கள் கரங்களில் வந்து சேர்வதைப் பொறுத்துத்தான் இருக்கிறது.
தியாகராயர் நாள் தொட்டு - திராவிடர் மேற்கொண்ட சீரிய பல செயல்களையும் ஒருங்கே கண்டால் தான், இன்று நாம் மேற்கொண்டுள்ள பல கருத்துக்களுக்கு முழுப் பொருள் தெரியும். நுனிப்புல் மேய்வதில் பயனில்லை.
நம்முயை இன்றைய நினைப்புகளுக்கு வரலாறு இருக்கிறது. நம்முடைய இன்றைய முறைகள் - ஏற்பாடுகள் இவைகளுக் கெல்லாம் கூட வரலாறு இருக்கிறது. வீரன் பெற்ற வெற்றிகள் - ஈடுபட்ட போர் - இவை பற்றி மட்டுமல்ல; அவன் கரம் மிளிரும் வாள் - அவனைக் களம் அழைத்துச் செல்லும் பரி இவைகட்கும் வரலாறு உண்டு.
ஒரு நாட்டிலே, உள்ள தட்பவெட்ப நிலைக்கேற்ப வாழ்க்கை முறை அமைவது போல, ஓர் இயக்கத்தில், ஏற்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் உருவாக்கி வைக்கும் வாழ்க்கை முறை ஒன்றுண்டு.
அதன் தொடக்கம் வளர்ச்சி இன்றைய கட்டம் - இவ்வளவும் இந்நூலில் காணக் கிடக்கிறது என்பதில் ஐயமில்லை.
'தி.மு.க. வரலாறு' இன்றைய தேவையை ஈடேற்றி வைக்கும் ஒரு நல்ல முயற்சி. இம்முயற்சியில் வெற்றி கண்ட நண்பர் பார்த்தசாரதியைப் பாராட்டுகிறேன். இல்லந்தோறும் இந்த ஏடு இருந்திட வேண்டுமென விழைகிறேன்.
அன்பன்
- அண்ணாதுரை.