சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்

சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்

தலைப்பு சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்
எழுத்தாளர்  பழ.அதியமான்
பதிப்பாளர் காலச்சுவடு
பக்கங்கள் 334
பதிப்பு மூன்றாம் பதிப்பு - 2014
அட்டை காகித அட்டை
விலை ரூ.300/-

 

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/cheranmadevi-gurukula-porattamum-dravida-iyakkathin-ezhuchiyum.html


முன்னுரை

“எரியறத இழுத்தால் கொதிக்கிறது தானே நிக்குது" என்று என் அப்பா ஒரு சந்தர்ப்பத்தில் சொன்னார். அப்போது நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்ததாக நினைவு. இதன் முழு அர்த்தம் அப்போது எனக்குப் புரிந்ததா என்று தெரியவில்லை . ஆனால் அதை விரிவாகச் சொல்லும்படிக் கேட்டது நினைவிருக்கிறது. இரவு சாப்பிடும் நேரம் எங்கள் வீட்டில் அறவுரை நேரம். தயக்கமில்லாமல் அப்பா பேசினார். சேரன்மாதேவி என்றொரு ஊரில் குருகுலம் ஒன்று இருந்ததாம். அதில் ஏதோ பிரச்சனை வந்ததாம். அப்போது குருகுலத்திற்கான நிதி உதவியை நிறுத்தினால் பிரச்சனையின் வேகம் குறையும் என்ற பொருளில் அந்த வாசகத்தைப் பெரியார் மேடை ஒன்றில் பேசியதாக அப்பா விவரித்தார். எனக்கு வேறு ஒன்றும் புரியவில்லை .

1925 இல் பிறந்த என் அப்பா, பெரியாரின் பேச்சை 1950 அல்லது '60களில் கேட்டிருக்கலாம். எனக்குச் சொன்னது '70களின் முற்பாதியில். பிறகு '80, '90களில் பலர் சொல்ல குருகுலப் பிரச்சனையைக் கேள்விப்பட்டேன். என்னதான் நடந்தது என்று சேரன்மாதேவி குருகுலப் போராட்டம் பற்றிப் படித்து தெரிந்துகொள்ள விரும்பினேன். 2000த்தில் அதுபற்றிய நூல்களைத் தேடினேன். ஒரு சிறு நூல் தவிர வேறில்லை. தமிழர்தம் பெருமை சொல்லவும் தகுமோ. பிறகு பலவற்றை நான் தேடிப்பிடித்துப் படித்தேன். படித்ததை இப்போது ஒழுங்குபடுத்தி தர முயன்றிருக்கிறேன். அதுவே இந்நூல்.

நவீன தமிழகத்தின் உள்கட்டுமானத்தையே கலைத்துப் போட்ட முக்கியமான சமூகப் போராட்டங்களுக்குக்கூட முறையான முழுமையான பதிவுகள் இல்லை. அதனால் இத்தகைய பலவற்றைப் பற்றி நமக்கு அக்கறையும் அதனால் கூர்மையான அவதானிப்பும் இல்லாது போகின்றன. முன்னேற்றமும் வளர்ச்சியும் எந்தச் சமூகத்திலும் தானாய் நிகழ்ந்து விடுவதில்லை. அவற்றை முன்னுரைத்தவர் அனு பவித்த வலிகளும் வேதனைகளும் விவரிக்க இயலாதவை. ஆனால் நாம் பலசமயம் அவற்றை அலட்சியமாக கடந்து போய்விடுகிறோம்.

குடுமி போய் கிராப் வந்தது கேவலம் மயிர் குறைந்த நிகழ்வா? கொதிக்கும் எண்ணெயை உடல் முழுவதும் வாங்கிப் பற்றி எரிய வேண்டியிருந்ததே! சிறுநீரில் புரண்ட மணல் உருண்டைகளின் அர்ச்சனைகளுக்குப் பிறகுதானே ஒரு மனிதனுக்குப் பக்கத்தில் சக மனிதன் உட்கார்ந்து சாப்பிட முடிந்தது. நாயும் பன்றியும் சுற்றித் திரியும் தெருக்களில் ஒரு மனிதன் உரிமையுடன் கால் வைத்து நடக்க, மலம் நாறிய பூட்டிய அறைக்குள் பல மனிதர்கள் பல காலம் அடைபட்டுக் கிடக்க வேண்டியிருந்ததே. தலித் மற்றும் பிற்பட்ட வகுப்பினர் நுழைய முடியாத தெருக்களும், அமர முடியாத சாப்பாட்டுக் கூடங்களும் சென்னைப் பெருநிலத்தின் வைக்கத்திலும் கல்பாத்தியிலும் சேரன்மாதேவியிலும் விரிந்து கிடந்தனவே. இவை எல்லாம் இன்று மாறியிருக்கின்றன. ஆனால் இதன் பின்னால் உறைந்திருக்கும் வலி தாங்கிய துன்ப துயரங்களைச் சமூக வரலாற்றை வாசிப்பவன் உணர முடியாது. ஏனெனில் இவை பற்றிய குறிப்புகள்தாம் கிடைக்கும். முறையான வரலாறு தமிழில் இல்லை .

மாற்றத்திற்காக நிகழ்ந்த போராட்டங்கள் யாரோ சிலரின் தனிப்பட்ட முன்னேற்றத்துக்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் அல்ல. அவை ஒரு சமூகத்தின் அசைவுகள். யோசித்தால் அவை மனித சாதனையோ கட்சி சாதனை யோகூட அல்ல. மாறும் சமூகத்தின் அசைவுகள். இப்படி உணரப்படாததற்கு அவை பற்றி ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு இன்மையும் ஒரு காரணம். அதை உருவாக்குவது நமது கடமை.

இந்தச் சமூக வரலாற்று கடமை நிறைவேற்றத்தின் ஒரு பகுதியாகப் பெரியாரின் நண்பர்: டாக்டர் வரதராஜலு நாயுடு வரலாறு (2012) வெளிவந்தது. அதன் அடுத்த பகுதியாக இப்போது சேரன்மாதேவி குருகுலம் வெளிவருகிறது.

“[2001 ஆம் ஆண்டு] ஜூலை மாதம் விடுமுறை முடிந்து பல்கலைக்கழகத்திற்குத் திரும்பிய, விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதுவரை ஒன்றாகத் தங்கியிருந்து படித்து வந்த மாணவர்களை ஜாதீய அடிப்படையில் பிரித்து பிராமணர் களுக்குத் தனி விடுதியையும் பிராமணரல்லாதவர் களுக்குத் தனி விடுதியையும் ஏற்பாடு செய்திருந்தது காஞ்சி மடம் என்கிறார்கள் மாணவர்கள்.''

காஞ்சி காமகோடி பீடம் நடத்தும் சந்திரசேகர சரஸ்வதி நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் (தமிழ்நாடு காஞ்சிபுரம் - ஏனாத்தூர்) நிகழ்ந்ததாக விடுதி மாணவர்கள் கூறிய சாதிப் பாகுபாட்டைச் செய்திக்கட்டுரையாக மேற்கண்டவாறு எழுதியிருந்தது 'இந்தியா டுடே' (5 செப்டம்பர் 2001). அந்தச் 47ாதி வேறுபாட்டைத் திராவிடர் கழகப் பொறுப்பாளர் கண்டித்தார். அன்றைய பெரியார் திராவிடர் கழகம் (போராட்டம் நடத்தியது. எதிர்ப்புகள் அந்த அளவில் நடந்து முடிந்தன. தமிழ்ச் சிந்தனை உலகத்தை அச்செய்தி போய்ச் (சேர்ந்ததாகத் தெரியவில்லை. இந்தக் கல்வி நிலையத்தில் நிகழ்ந்த இந்தச் சாதி வேறுபாட்டை இந்தியா டுடேயில் (வெளிப்படுத்திய பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் இதே மாதிரி தமிழ்நாட்டில் முன்பு நடைபெற்ற ஒரு சம்பவத்தையும் அக் கட்டுரையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

“அது 1924ஆம் வருடம். சேரன்மாதேவியில் உள்ள ஒரு குருகுலத்தில் பிராமணர்களுக்கும் பிராமண ரல்லாதவர்களுக்கும் தனித்தனி இடங்களில் உணவு பரிமாறப்பட்டதை எதிர்த்துப் போராடி வெற்றி பெறுகிறார் பெரியார்."

ஆம். கல்வி, பொருளாதாரம், சமூக நிலை ஆகியவை வளர்ச்சி அடைந்த 2000த்தில் சிறிய விவாதத்துக்குக் கூட உள்ளாகாத ஒரு சாதி வேறுபாட்டு நிகழ்வு, வளர்ச்சி அரும்பி யிராத 1924இல் போராட்டமாக மாறி வெற்றியும் பெற்றிருக் கிறது. அதோடு நடந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு அது நினைவும் கூரப்படுகிறது, அதுவும் வெகுசனப் பத்திரிகையில். அந்த அளவுக்குச் சேரன்மாதேவி போராட்டம் சமூகத்தை ஆழமாகப் பாதித்திருக்கிறது.

**************************************************************************************************************************************

சாப்பாட்டில் சகல வகுப்புகளையும் சேர்ந்த பிராமணர் ஒரு பக்கமாகவும் சகல வகுப்புகளையும் சேர்ந்த பிராமணரல்லாதவர் ஒரு பக்கமுமாகவே இருந்து சாப்பிடவேண்டும். குருகுலத்தில் இவ்வித்தியாசம் கூடாது என்று நான் சொன்னேன். ஆனால் இந்த வேற்றுமையை ஒழிக்க முடியாதென்று (வ.வே.சு.) ஐயர் கூறினார். இதைக் கேட்டதும் நானும் ஸ்ரீமான் ஈ. வி. ராமசாமி நாயக்கர் போன்ற பிராமணரல்லாதாரும் திடுக்கிட்டுப்போனோம்.

டாக்டர் வரதராஜுலு நாயுடு (1924)

**************************************************************************************************************************************

வைக்கம் சத்தியாக்கிரகமும் குருகுலப்போராட்டமும் அந்த வீதிகளில் நடப்பதினாலும், ஒரு குழந்தை உண்பதைப் பார்ப்பதினாலும் தமிழர்களுக்கு மோட்சம் கிடைத்துவிடும் என்ற எண்ணத்தைக் கொண்டதல்ல. வீதிகளில் நடக்கக் கூடாதென்று சொல்லும் பொழுதும், கண்ணால் பார்க்கக் கூடாது என்று சொல்கிறபொழுதும் சொல்கிறவர்கள் மனதில் என்ன நினைத்துக்கொண்டு சொல்லுகின்றனர் என்பதைப் 'பற்றித்தான் யோசிக்க வேண்டும்.

பெரியார் (1925)

**************************************************************************************************************************************

இதுகாலை இருந்து வருகிற பிராமணரல்லாதார் இயக்கமானது முறுகி எழுவதற்குக் காலம் சமீபித்துவிட்டது என்பதற்கு குருகுல சம்பந்தமான நிகழ்ச்சிகள் சான்று கூறுகின்றன.

சொ. முருகப்பா (1925)

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும் - உள்ளடக்கம்

Back to blog