திரு. வி. க. தமிழ்த் தென்றலாக இருக்கலாம். எனினும் புரட்சி செய்ததில் புயல் தான். சேரன்மாதேவி குருகுலப் போராட்டமாக இருக்கலாம்; வைக்கம் போராட்டமாக இருக்கலாம்; தேவதாசி ஒழிப்புப் போராட்டமாக இருக்கலாம் - அனைத்துப் போராட்டங்களிலும் திரு.வி.க.வின். 'நவசக்தி' இதழ்கள் நவ நவமான சக்திகளாக விளங்கின. ஜனநாயகம் நாடுதல் தோற்றுவித்தல், தொழிலாளர் இயக்கம் வளர்த்தல், தொழிற்கட்சி தோற்றுவித்தல், தொழிற்சாலை பெருக்குதல், பெண்நலம் பேணுதல், தமிழ்ச் செப்பம், சகோதர நேயம், தேச வளர்ச்சி, இந்திய ஒற்றுமை ஆகிய ஒன்பது நோக்கங்களுக்காக திரு. வி. க. வால் தோற்றுவிக்கப்பட்டது 'நவசக்தி' வார இதழ். 'வீடுபெற நில்', 'மாற்றானுக்கு இடங்கொடேல்', 'ஏற்பது இகழ்ச்சி', 'நாமார்க்கும் குடியல்லோம்' போன்றவை இதன் இலட்சியங்கள்.
இதன் நான்காண்டு இதழ்களில் பதிவான வரலாற்றுச் செய்திகளைப் போராட்டக்களங்கள் எனும் பார்வையில் பதிவு செய்துள்ளார் அ. புவியரசு. நண்பர் அறவேந்தன் வழியில் ஆய்வு நடைபோடும் இவர், எதார்த்த வாழ்வில் எத்துனை கஷ்டங்கள் ஏற்பட்டாலும் எல்லாவற்றிலும் எதிர்நீச்சல் போட்டு முன்னறிேக் கொண்டிருக்கிறார். இதற்கு தமிழ் ஆர்வமும் தணியாத சீர்திருத்த எண்ணங்களும் கைகொடுத்துள்ளன. ஒவ்வொரு பக்கத்திலும் இவரது உழைப்பும் உத்வேகமும் தேடலும் திரட்டலும் பளிச்சிடுகின்றன. சாதீய அடுக்கில் தீண்டாமையும் ஏற்றத்தாழ்வும், சமய அமைப்பில் ஒதுக்குதலும் ஒடுக்குதலும் கடைபிடிப்பது சமூகக் கொடுமை என்பதை திரு.வி.க., பெரியார் போன்ற தேசியத்தலைவர்கள் உணர்ந்து போராடியுள்ளனர். போராட்டக் களங்களில் அவர்களுக்கு உதவிய நவசக்தி, குடி அரசு போன்ற இதழ்களைப் போற்றிக்காத்து புதுப்பிக்க வேண்டிய காலகட்டம் இது. அரசியல் கட்சிகளின் அருவறுப்பையும் ஊடக உலகின் அசிங்கத்தையும் பொறுத்துக் கொள்ள முடியாத மனித நேயர்களுக்கு இந்நூல் ஒரு வரப்பிரசாதம். இதனை ஆக்கித்தந்த புவியரசு மேலும் பல நூல்களைப் படைத்தளிக்க வாழ்த்துகிறேன்.
அன்புடன்
காவ்யா சண்முகசுந்தரம்
தொடர்புடைய மற்ற பதிவுகள்: