சேரன்மாதேவி - வைக்கம் - தேவதாசி ஒழிப்பு போராட்டக் களங்கள் - அணிந்துரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/cheranmaadevi-vaikkam-devadasi-ozhippu-poratta-kalanga 
அணிந்துரை

ஆளுமை அடையாளப்படுத்தம்

'மதமான பேய் பிடியாது இருக்க வேண்டும்' என்று சொல்லப்பெற்ற மண்ணில் 'சன்மார்க்கம்' எனும் கருத்தாடல் கால்கொண்ட மண்ணில், ஆண்பெண் வேறுபாடும் வெள்ளையர் கருப்பர் வேறுபாடும் அரசர் அந்தணர் வணிகர் வேளாளர் என எவ்வித வேறுபாடுகளும் இன்றி மனித உடலில் ஓடும் குருதி ஒருசில வகைப்பாடுகளுக்கே உரியது எனும் கருத்து அறிவியல் வழி வழக்குப் பெற்ற காலச் சூழலில், சேரன்மாதேவி குருகுலம்' குருட்சேத்திரக் களமாகின்றது. குரு குலத்தைத்' தனிமைப்படுத்துகிறது. இது அறியாமையால் விளைந்த சூழல் அன்று. அறிந்தே விளைந்தது.

அயல் நாட்டுப் படிப்பு, அயல் நாட்டில் 'மனிதப் போராட்டம், தேச விடுதலைக்கான போராட்டம், சிறைவாசம் என இன்னும் பல பலவற்றுக்குரிய 'எல்லாமும்' அறிந்தவர்கள் பெற்றவர்கள் 'விதி' வழிப்படுகின்றனர் ஓர் அணியில்.

பள்ளிக் கல்வியை நிறைவு செய்யாமல், கடல் தாண்டாக் காலத்திலேயே மனங்களை அளந்து மனிதத்திற்காகப் போராடுகின்றது ஒற்றைக் குரலொன்று மற்றோர் அணியாக

இரண்டுக்கும் நடுவே ‘தென்றலாய்' வீசுகின்றது மற்றொரு குரல்.

இந்த மும்முனைப் போராட்டத்தையும் முப்பெரும் போராட்டங்கள் (குருகுலம், வைக்கம், தேவதாசி) வழித் தெளிவு படுத்துகின்றது இந்த நூல்.

இந்நூலில் இடம் பெற்றுள்ள 'வர்ணாசிரமம் வேறு; தீண்டாமை வேறு' என்ற வியாக்கியானத்தை வாசிக்கையில் கசக்கத்தான் செய்கின்றது காந்தியம். தாய்மொழி வழிக் கல்விக்கான அருமையானச் செயல்திட்டம் உடன் உண்ணலை மறுத்ததால் பாழ்பட்டுப் போன வரலாற்று நிகழ்வைப் பதிவு செய்துள்ளது இந்நூல். உயர்ந்த கல்வித்திட்டம், உயர்ந்த கல்வி கற்றவரால் உருவாக்கப் பெற்ற திட்டம் மனிதத்தை மறுதலித்ததால் மறைந்துவிட்டதே என்ற மனக்கவலையை உருவாக்குகின்றது இந்நூல். இத்தகு நூல்' வலிமையை நவசக்தி இதழ்களைக் களமாகக் கொண்டு விளக்குகின்றது இந்த நூல்.

இந்த நூலாக்கத்திறகாக நண்பர் அ. புவியரசு நவசக்தி இதழ்களை நேரில் கண்டு, வாசித்துப் படியெடுத்துள்ளார் பத்தாண்டுகளுக்கு முன்னர். அவர் தரவு சேகரித்த அதே நூலகங்களுக்கு இன்றைய ஆய்வாளர்கள் அதே இதழ்களைத் தேடிச் சென்றால் கிடைப்பது குதிரைக் கொம்புதான். அத்தகு ஆய்வாளர்களுக்குத் தெரியும் இந்த நூல் இணைப்புகளின் அருமை.

மெல்லப் பேசுவதால், மெல்ல நடப்பதால், ஒருவரின் உள்ள உறுதிப்பாடு குறைந்துவிடுவது இல்லை என்பதனை நண்பர் அ. புவியரசு வழி நான் அறிந்தது உண்டு. இதனை வகுப்பறைகளிலும் ஆய்வரங்குகளிலும் புவியரசின் நிலைப்பாட்டினை கண்டவர்களும், கேட்டவர்களும் நன்கு அறிவர்.

குடும்பத்தில் முதல் தலைமுறை இளைஞர்கள் பேனா பிடித்து எழுதத் தொடங்கினால் சந்திக்கும் எல்லா வகையான பிரச்சனைகளையும் கடந்து வந்தவர்தான் நண்பர் புவியரசு என்பதனை இந்த நூலின் முன்னுரை வழி அறியலாம். எனவே இந்த நூல் ஆவணப்படுத்தம் எனும் முயற்சிக்கு அப்பால், வ.வே.சு. - பெரியார்-காந்தி-திரு.வி.க. எனும் ஆளுமைகளை அடையாளப்படுத்துகின்றது எனும் முயற்சிக்கு அப்பால், எழுத விளையும் இளையோர்க்கு ஊக்கமும் அளிக்கிறது எனலாம்.

இந்த நூலாக்கத்தில் நண்பர் புவியரசை விட 'விழி அமைப்பினர் பெற்றுள்ள மகிழ்ச்சிதான் அளவு கடந்தது. இந்த மகிழ்ச்சியை எங்களிடம் தொடர்ந்து நிலைபெறச் செய்வார் புவியரசு என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

அன்புடன்

இரா. அறவேந்தன்.

Back to blog