சேரன்மாதேவி - வைக்கம் - தேவதாசி ஒழிப்பு போராட்டக் களங்கள் - கடந்து வந்த பாதை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/cheranmaadevi-vaikkam-devadasi-ozhippu-poratta-kalanga 
கடந்து வந்த பாதை

‘பெரியார் ஈ.வெ.ரா.வின் சாதியொழிப்புக் களங்கள்' எனும் தலைப்பில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் முனைவர் க. நெடுஞ்செழியன் அய்யா அவர்களின் நெறிப்படுத்தலில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருந்த காலம். பாரதிதாசன் பல்கலைக்கழகப் பெரியார் உயராய்வு மையம் 2000 ஆவது ஆண்டு மேத் திங்களில் வைக்கம் அறப்போர்ப் பவழவிழாக் கருத்தரங்கை நிகழ்த்தத் திட்டமிட்டு இயங்கிக் கொண்டிருந்த சூழல். பெரியாரிய ஆய்வாளன் என்ற அடிப்படையில் எமது நெறியாளரின் பரிந்துரை நிமித்தம் பெரியார் உயராய்வு மையத்தின் தலைவராக இருந்த பேராசிரியர் முனைவர் இரா. சக்குபாய் அம்மா அவர்கள் சேரன்மாதேவி குருகுலப் போராட்டம் குறித்துத் தரமான ஆய்வுக்கட்டுரை ஒன்றை அளியுங்கள் என்று பணித்தார். பல்கலைக்கழகம் ஒன்று தேர்ந்தெடுத்த அறிஞர்களின் ஆய்வுக் கட்டுரைகளை மையமாகக் கொண்டு நிகழ்த்தும் கருத்தரங்கில் கட்டுரையளிக்கும் வாய்ப்புக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.

நமது ஆய்வில் புதிய முடிவுகளைச் சொல்ல வேண்டும் என்ற முனைப்போடு நூல்களையும் தரவுகளையும் சேகரித்துக் கட்டுரைத் தலைப்பை வரையறை செய்ய முனைந்த போதுதான் எனது கட்டுரை கூறியது கூறலாகவே அமையும் என்பது புரிந்தது. மேலும் சேரன்மாதேவி குருகுலப் போராட்டம் குறித்த வரலாற்றுக் குறிப்புகள் முழுமையாகத் தொகுக்கப்படவில்லை என்பதையும் உணர முடிந்தது. எனவே இயன்றவரை இப்போராட்டம் குறித்த புதிய தரவுகளைச் சேகரிப்பது என்றும் அவற்றின் அடிப்படையில் இக்கருத்தரங்கக் கட்டுரையை எழுதுவது என்றும் உறுதி பூண்டு தரவுகளைத் தேடத் தொடங்கினேன். கடின உழைப்பு 'சேரன்மாதேவி குருகுலப் போரில் திரு. வி.க.வின் நிலை' என்ற தலைப்பில் புதிய தரவுகளுடன் கூடிய செம்மையான கட்டுரையாக மலர்ந்தது. கருத்தரங்க அமர்வில் கட்டுரையைக் கேட்டும் மலரின் வழி கட்டுரையைப் படித்தும் அறிஞர் பெருமக்கள் பாராட்டியபோது பட்ட துயரங்கள் மறைந்து போயின. தரவுகளைத் திரட்டும் பணி முன்னிலும் பன்மடங்காய் வேகமெடுக்கத் தொடங்கியது.

இத்தகைய சூழலில்தான் 'அல்சீமர்' எனப்படும் நினைவு இழப்பு நோய்க்கு ஆட்பட்டிருந்த எனது தந்தையாரை, அந்நோய் பிறந்த குழந்தையின் நிலையை நோக்கி வேகமாகத் தள்ளத் தொடங்கியது. எனவே தந்தையின் மருத்துவத்தையும் தங்கையின் கல்லூரிக் கல்விச் செலவையும், எங்களை வாழவைத்த இரண்டு காணி நில வேளாண்மையையும் இணைத்து இழுத்துச் செல்ல முயன்று போராடினேன். விளைவு முனைவர் பட்ட ஆய்வில் தொய்வு ஏற்பட்டுத் தொடர மனமில்லாத நிலை. முழு நேர ஆய்வை விடுத்து ஏதேனும் ஒரு பணிக்குச் சென்றால்தான் பாரத்தைச் சுமக்க முடியும் என்ற சூழல்.

நான் முதுகலைத் தமிழும் (1989 - 1991) ஆய்வியல் நிறைஞர் தமிழும் (1992 - 1993) பயின்ற திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியிலேயே 2000 - 2001 ஆம் கல்வியாண்டின் தொடக்கத்தில் தமிழ் விரிவுரையாளராகப் பேராசிரியர் முனைவர் பெ. சுபாசு சந்திரபோசு அவர்களின் விடுப்புக் காலப் பணியிடத்தில் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. இரண்டாண்டு விடுப்புக் காலம் முடிந்த பிறகு சுயநிதிப் பிரிவில் விரிவுரையாளர் பணி தொடர்ந்தது. நான் பொருளாதாரச் சுழலில் காணாமல் போகாமல் காப்பாற்றப்பட்ட காலம் அது. பிஷப் ஹீபர் கல்லூரியின் அன்றைய இயக்குநர் பேராசிரியர் திரு. தே. சுவாமிராஜ் அவர்களின் உதவிகள் என்றென்றும் நெஞ்சில் நிற்பவை.

பிஷப் ஹீபர் கல்லூரிப் பணிக்காலத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியராகவும் மூத்த தோழராகவும் உறவாடி, எனது நூலாக்க முயற்சிகளுக்கு உந்து விசையாகத் திகழ்ந்த கைம்மாறு கருதா உள்ளம் பேராசிரியர் முனைவர் இரா. அறவேந்தன் (தாமோதரன்) அவர்களின் நட்பு மீண்டும் ஆய்வில் நாட்டங் கொள்ள வைத்தது. தரவுகளைத் தேடும் பணி தொடங்கிச்சீராக நடைபெற்று வந்தது. பேராசிரியர் முனைவர் இரா. அறவேந்தன் அவர்களின் முன் முயற்சியால் தொடங்கப்பெற்ற விழி' ஆய்வு மன்றம் திங்கள் தோறும் நண்பர்களின் தமிழாய்வுக் கூடலாக இன்றளவும் தொடர்கிறது. இம்மன்றமும் எமது ஆய்வுத் தேடலைத் தீவிரப்படுத்தியது.

கத்தோலிக்கத் திருச்சபையின் குடந்தை மறைமாவட்ட ஆயர் மேதகு எஃப். அந்தோணிசாமி அடிகளார் அவர்களின் உதவியால் 2009 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் குடந்தை தூய அகுசுதினார் நடுநிலைப் பள்ளியில் கிடைத்த பட்டதாரித் தமிழாசிரியர் பணிவாய்ப்பு எமது பொருளாதார நிலையைத் தன்னிறைவை நோக்கி நகர்த்தத் தொடங்கியது. இத்தகைய சூழலில் தஞ்சையில் நின்று போன முனைவர் பட்ட ஆய்வைத் திருச்சியில் முன்னெடுப்பது என்றும் நெறியாளர் பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியரும் அணுக்கத் தோழருமான முனைவர் இரா. மகிழேந்தி (மோரிஸ் ஜாய்) என்றும் முடிவு செய்து 2012 சனவரித் திங்களில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பதிவு செய்யப்பட்டது. சேரன்மாதேவி குருகுலப் போராட்டம் குறித்தும், வைக்கம் போராட்டம் குறித்தும், தேவதாசி ஒழிப்பு இயக்கம் குறித்தும் இதுவரை வெளிவராத தரவுகள் பல சேகரிக்கப் பெற்ற நிலையில் எனது முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்பை சேரன்மாதேவி குருகுலம் - சமூகப் பணியும் இலக்கியப் பணியும்' என்று வரையறை செய்து கொண்டோம்.

இந்நிலையில் 2013 ஆம் ஆண்டு மார்ச் திங்களில் நடைபெற்ற 'விழி' ஆய்வு மன்றக். கூட்டத்தில் எமது ஆய்வு குறித்த பேச்சு எழுந்த போது "தேடுதலும் சேகரித்தலும் ஆய்தலும் இன்றியமையாதன. அவற்றைப் போலவே உரிய காலத்தில் வெளியிடலும் இன்றியமையாதது'' என்று உணர்த்தி ஊக்கமளித்த பேராசிரியர் முனைவர் இரா. அறவேந்தன் (பாரதிதாசன் பல்கலைக்கழகப் பெரியார் உயராய்வு மையத்தின் இன்றைய தலைவர்) அவர்களின் நெறிப்படுத்துதலின் விளைவே இந்நூல்.

சேரன்மாதேவி குருகுலப் போராட்டம் குறித்தும் வைக்கம் போராட்டம் குறித்தும் தேவதாசி ஒழிப்பு இயக்கம் குறித்தும் புதிய தரவுகளைத் தேடும் எமது நெடிய பணியில் கை கொடுத்த இடங்களில் முதன்மையானவை இரண்டு. முதலாவது சென்னை பாரிமுனை லிங்கிச் செட்டித் தெருவில் இயங்கி வந்த மலைமலையடிகள் நூலகம். அன்றைய மறைமலையடிகள் நூலகத்தைப் பயன்படுத்தும் நுட்பங்களைத் தொலைபேசி வழி அறிமுகத்திலேயே வழங்கி ஆற்றுப் படுத்திய அறிஞர் பெரியவர் பெ.சு. மணி அவர்களும், மறைமலையடிகள் நூலகத்தில் பணியாற்றிய பெரியவர் சுந்தரமூர்த்தியும் எம் நன்றிக்குரியவர்கள். இரண்டாவது காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நூலகத்தில் தமிழறிஞர் இராய. சொக்கலிங்கம் அவர்களின் சேகரிப்பாகப் பாதுகாக்கப்படும் தமிழ்க் கருவூலம். இவ்விரு இடங்களிலும் பரண் போன்ற உயர்ந்த இடங்களில் வைக்கப் பெற்றிருந்த அரிய பழந்தமிழ் இதழ்கள் பலவும் இயற்கையோடும் கறையான்களோடும் போராடித் தோற்றுக் கொண்டிருந்தன. அவற்றினிடையேதான் சேரன்மாதேவி குருகுலப் போராட்டம் குறித்தும், வைக்கம் போராட்டம் குறித்தும், தேவதாசி ஒழிப்பு இயக்கம் குறித்தும் பல்வேறு பதிவுகளைப் பெற்றிருந்த நவசக்தி இதழ்களை எமது கையெழுத்தின் வழிப் பதிவு செய்ய வேண்டியிருந்தது.

மேலும் தமிழகத்தின் மிகச்சிறந்த நூலகங்களில் கிடைக்கப் பெறாத திரு.வி.க.வின் நவசக்தி இதழ்கள் சில சென்னை - திருவல்லிக்கேணியில் பழைய புத்தகக் கடைகளில் கிடைத்தன என்பதும் புலவர் அரசு அவர்கள் எழுதிய வ.வே.சு. ஐயர் (1966), பெரியாரிய அறிஞர் வே. ஆனைமுத்து அவர்கள் பதிப்பித்த பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் - முதல் தொகுதி (1974), ரா. அ. பத்மநாபன் அவர்கள் எழுதிய வ.வே.சு ஐயர் (1981), நாரா. நாச்சியப்பன் அவர்கள் எழுதிய குருகுலப் போராட்டம் ஆகிய நூல்கள் திருச்சி, சென்னை பழைய புத்தகக் கடைகளில் கிடைத்தன என்பதும் இங்கு பதிவு செய்யப்படவேண்டியவை.

இந்நூலில் எமது தேடலில் கிடைத்த முப்பது நவசக்தி இதழ்களின் வாயிலாக சேரன்மாதேவி குருகுலப் போராட்டம், வைக்கம் போராட்டம், தேவதாசி ஒழிப்பு இயக்கம் ஆகியன குறித்த வரலாற்றுப் பதிவுகள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. இறுதியாக மேற்கண்ட மூன்று பொருண்மைகளிலும் இடம் பெறாத ஆனால் இன்றியமையாதனவாகக் கருதப்படும் ஐந்து பதிவுகள் பிறபொருள் குறித்த வரலாற்றுப் பதிவுகள்' என்ற தலைப்பில் அளிக்கப்பட்டுள்ளன.

இந்நூலின் முன்பகுதியில் உள்ள ஆய்வுக் கட்டுரைகள் ஆறனுள் முதலாவதாக அமைந்துள்ள 'திரு. வி.க.வின் நவசக்தி - ஒரு வரலாற்றுப் பார்வை' என்ற கட்டுரையும் இறுதியாக அமைந்துள்ள 'தேவதாசி ஒழிப்பு இயக்கம்' என்ற கட்டுரையும் இந்நூலாக்கத்திற்காக ஏப்ரல் 2013-ல் எழுதப் பட்டவை. சேரன்மாதேவி குருகுலம் குறித்த மூன்று கட்டுரைகளும், வைக்கம் போராட்டம் குறித்த ஒரு கட்டுரையும் இந்நூலில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ள வரலாற்றுப் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டு அவ்வப்பொழுது ஆய்வரங்குகளில் படிக்கப்பட்டவை.

இந்நூல் வெளிவரும் நிலையில் இந்நூலாக்கத்திற்குத் துணை நின்ற பலரையும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கின்றேன். பெரியாரிய ஆய்வுகளில் நான் ஈடுபட துணைநின்ற பேராசிரியர் முனைவர் க. நெடுஞ்செழியன் அய்யா அவர்களும், பேராசிரியர் முனைவர் இரா. சக்குபாய் அம்மா அவர்களும், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் பணிவாய்ப்பு அளித்து என்னைப் பாதுகாத்த பேராசிரியர் தே. சுவாமிராஜ் அவர்களும், குடந்தை அகுசுதினார் நடுநிலைப்பள்ளியில் பணிவாய்ப்பு அளித்து ஆற்றுப்படுத்தும் கத்தோலிக்கத் திருச்சபையின் குடந்தை மறைமாவட்ட ஆயர் மேதகு எஃப். அந்தோணிசாமி அடிகளார் அவர்களும், ஆய்வு நிலையில், நட்பு நிலையில் அரவணைத்து வழிகாட்டி இந்நூலுக்கு அரியதோர் அணிந்துரையும் வழங்கிச் சிறப்பித்திருக்கும் பேராசிரியர் முனைவர் இரா. அறவேந்தன் அவர்களும், எப்பொழுதும் குறிப்பறிந்து துணைநிற்கும் தோழர் பேராசிரியர் முனைவர் இரா. மகிழேந்தி அவர்களும், இந்நூல் கணினி வழி அச்சாக்கத்திற்கு கண்ணும் கருத்துமாய் துணை நின்ற பேராசிரியர் முனைவர் நித்யா அறவேந்தன் அவர்களும், விழியின் இயக்கத்தில் இணைந்து இன்றுவரை தோளோடு தோள் சேர்க்கும் நண்பர் முனைவர் அ. செல்வராசு அவர்களும், மிகச் செம்மையாக கணினி வழி அச்சாக்கம் செய்து தந்த அருமை நண்பர் திரு. ஷபி அவர்களும், பேராசிரியர் முனைவர் இரா. அறவேந்தன் அவர்களது அறிமுகத்தின் வழி எம்மையும் அடையாளங் கண்டு இந்நூலை வெளியிட்டுள்ள காவ்யா பதிப்பக நிறுவனர் பேராசிரியர் சு. சண்முகசுந்தரம் அய்யா அவர்களும், இந்நூல் வெளிவர ஒவ்வொரு நிலையில் துணைநின்றிருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் நம் நெஞ்சை நிறைந்த நன்றிக்குரியவர்கள்.

அன்புடன் அ. புவியரசு

Back to blog