சென்னை : தலைநகரின் கதை - என்னுரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/chennai-thalainagarin-kathai 
என்னுரை

15 ஆகஸ்டு 1947 அன்று இந்தியா சுதந்தரம் அடைந்து, அதிகாரம் முழுமையாக மண்ணின் மைந்தர்கள் கைகளுக்கு வந்த பிறகு, எஞ்சியிருந்த மிச்ச சொச்ச ஆங்கிலேயர்களும் இங்கிலாந்துக்குக் கப்பல் ஏறி விட்டார்கள். ஆனாலும் அவர்களின் மூன்று நூற்றாண்டு நினைவுகளை முழுமையாக மூட்டை கட்டிக் கப்பலில் ஏற்ற முடியவில்லை. அவை அலைகளின் மீதேறி, மெரினா கடலில் இன்றும் மிதந்து கொண்டே இருக்கின்றன.

மெட்ராஸ் சென்னையாக மாறி நவீன நகரங்களின் பட்டியலில் இடம்பிடித்துவிட்டாலும், அதன் வீதிகளில் இன்றும் பழமை படிந்து கிடப்பதை உணர முடிகிறது. இங்கிருக்கும் பாரம்பரிய கட்டடங்கள் தங்களின் நூற்றாண்டுக் கதைகளை காற்றின் காதுகளில் ஓயாமல் சொல்லிக் கொண்டே இருக்கின்றன.

இந்தியத் துணைக்கண்டத்தையே அடிமைப்படுத்த ஆங்கிலேயர்களுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த புனித ஜார்ஜ் கோட்டையின் தாழ்வாரங்களில் இன்று நடந்து போனாலும், ஏதோ ஒரு மூலையில் பிரான்சிஸ் டேவும், ஆண்ட்ரூ கோகனும் பேசிக்கொண்டிருப்பதைப் போலத் தோன்றுகிறது. யார் இவர்கள்? புத்தகத்தை வாசிக்கத் தொடங்குங்கள். பரஸ்பரம் அறிமுகம் செய்துகொள்வீர்கள்.

கோட்டைக்குள் இருக்கும் புனித மேரி தேவாலயத்தின் தரையில் பதிக்கப்பட்டிருக்கும் கல்லறைக் கற்கள் ஒவ்வொன்றும், ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து வந்து, வாழ்ந்து, மறைந்து போன யாரோ ஒரு முகம் தெரியாத ஆங்கிலேயனின் வரலாற்றைச் சுமந்து கொண்டிருக்கின்றன.

இந்திய வரலாற்றில் நீங்கா இடம்பிடித்துவிட்ட ராபர்ட் கிளைவ் முதல் எலிஹூ யேல் வரை ஆங்கிலேய வருகையின் ஆரம்ப நாட்களின் நினைவுகளை இந்தப் புத்தகம் முழுக்க விரவிக்கொடுத்திருக்கிறேன்.

"மவுண்ட் ரோட்டில் இருக்கும் ஒவ்வொரு பாரம்பரிய கட்டடமும் ஒரு அருங்காட்சியகம்தான். ஐ.நா. சபையின் சாயலில் கட்டப்பட்டு, இன்று எப்போது சாயும் எனத் தெரியாமல் நித்திய கண்டத்துடன் நின்று கொண்டிருக்கும் பாரத் இன்ஷூரன்ஸ் கட்டடம் தான், மெட்ராஸ் மாநகரின் முதல் உயரமான கட்டடம் எனக் கருதப்படுகிறது. தனது ஆயுளுக்கே எந்த உத்தரவாதமும் இல்லாத ஒரு ஆயுள் காப்பீட்டுக் கட்டடம் உலகிலேயே இது ஒன்றாகத்தான் இருக்கும்.

மவுண்ட் ரோடும், ஜெனரல் பேட்டர்ஸ் சாலையும் சந்திக்கும் இடத்தில் பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கும் இந்தக் கட்டடம், ஸ்மித் (W.E. Smith) என்ற மருந்து வியாபாரியால் கட்டப்பட்டது. மெட்ராஸ் மாநகருக்கு அழகு சேர்க்கும் வகையில் ஒரு அருமையான கட்டடத்தை உருவாக்க வேண்டும் என்ற ஸ்மித்தின் கனவை நனவாக்க மூன்று ஆண்டுகள் ஆனது. 1897ல் இந்தக் கட்டடம் தொடங்கி வைக்கப்பட்டபோது, அதன் பெயர் கார்டில் கட்டடம் (Kardyl Building).

வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதை அடுத்து ஸ்மித், இந்தக் கட்டடத்தை ஸ்பென்சர் நிறுவனத்திடம் விற்றுவிட்டார். பின்னர், இந்தக் கட்டடத்தை 1934ல் பாரத் இன்ஷூரன்ஸ் நிறுவனம் வாங்கியது. லாகூரைச் சேர்ந்த லாலா ஹரிகிஷன்லால் என்பவர்தான் பாரத் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்தக் கட்டடத்தை வாங்கிய இரண்டே ஆண்டுகளில் பாரத் நிறுவனம் ஹரிகிஷனிடம் இருந்து டால்மியாவின் கைக்கு மாறியது. பின்னர் 1956ல் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் அரசுடமையாக்கப்பட்டபோது, நாட்டில் இருந்த பல காப்பீட்டு நிறுவனங்கள் அரசின் எல்ஐசி வசம் ஒப்படைக்கப்பட்டது. அப்படித்தான் எல்ஐசிக்குச் சொந்தமானதாக மாறியது இந்தக் கட்டடம். இப்படி, இந்தப் புத்தகம் சுமக்கும் சென்னை சுவாரஸ்யமானது. சுவையானது. புராதனமானதும்கூட.

அன்றைய இந்தியத் துணைக் கண்டத்தின் (இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கையை உள்ளடக்கியது) முதல் வர்த்தக வளாகம் என்ற பெருமையைப் பெற்ற ஸ்பென்சர் பிளாசா தொடங்கி இந்தியாவின் முதல் மாநகராட்சியான மெட்ராஸ் மாநகராட்சியின் ரிப்பன் கட்டடம் வரை இங்கிருக்கும் ஒவ்வொரு கட்டடமும் மெட்ராசை உருவாக்கிய ஆங்கிலேயர்களின் நினைவுகளைச் சுமந்து நிற்கின்றன.

அழகியலாகச் சொல்லவேண்டும் என்றால், சென்னை என்ற அழகு ததும்பும் விருட்சம், வெறும் ஆங்கிலேயர்களால் மட்டும் வளர்க்கப்பட்டதல்ல. ஆர்மீனியர்களில் ஆரம்பித்து யூதர்கள், அரேபியர்கள், பார்சிகள், உள்நாட்டு தெலுங்கர்கள் என பல்வேறு இனங்களும் ஊற்றிய நீரில் வேர்விட்டு, விண்ணை முட்ட வளர்ந்த விருட்சம், மெட்ராஸ் என்ற மாநகரம்.

உலகின் பழமையான இனங்களில் ஒன்றாக கருதப்படும் பார்சி இன மக்களின் பங்களிப்பும் மெட்ராசின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க அளவில் இருந்திருக்கிறது. கி.மு. 1200க்கு முன்பே இந்த இனம் தோன்றியதாகக் கூறப்படுகிறது. பாரசீகத்தை (தற்போதைய ஈரான், ஈராக்) பூர்வீகமாகக் கொண்ட இவர்கள், ஜொராஷ்டிரர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு அந்தப்பகுதியில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளை அடுத்து, அவர்கள் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் புலம்பெயரத் தொடங்கினர்.

அந்த வகையில் 1795ஆம் ஆண்டில் மெட்ராஸ் மண்ணில் பார்சிகள் முதன்முதலில் காலடி எடுத்து வைத்தனர். பார்சி இன மக்கள், நெருப்பைக் கடவுளாக வழிபடுபவர்கள். ஆனால் அவர்கள் வழிபாடு நடத்துவதற்காக, அப்போது மெட்ராசில் எந்தக் கோயிலும் இல்லை. எனவே, பார்சிகளுக்கென ஒரு கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டு, நிதி வசூலிக்கும் வேலை ஆரம்பமானது. ஆனாலும் கோயில் கட்டும் பணி இழுத்துக் கொண்டே போனது.

இந்நிலையில் பிரோஜ் கிளப்வாலா என்பவரின் 13 வயது மகன் ஜல், 1906ஆம் ஆண்டு திடீரென மரணமடைந்தான். பார்சிகள் இறுதிச் சடங்கை நெருப்புக் கோயிலில் செய்வது வழக்கம். ஆனால் ஜல்லின் இறுதிச் சடங்குகளை செய்ய, முறையான பூசாரியோ, கோயிலோ அப்போது மெட்ராசில் இல்லை. அதனால் மனமுடைந்து போன பிரோஜ் கிளப்வாலா, தனக்கு ஏற்பட்ட நிலை இனி யாருக்கும் வரக் கூடாது எனக் கருதியதன் விளைவே இன்று ராயபுரத்தில் இருக்கும் பார்சிகளின் நெருப்புக் கோயில்.

இந்தக் கோயில் பிறகு பார்சி சமூகத்தவர்கள் சந்திப்பதற்கான இடமாகவும் மாறியது. தமிழகத்தில் உள்ள ஒரே நெருப்புக் கோயிலான இங்கு 100 ஆண்டுகளைக் கடந்தும் நெருப்பு அணையாமல் எரிந்து கொண்டே இருக்கிறது. சற்று கூர்ந்து கவனித்தால், மெட்ராசின் வர்த்தக வளர்ச்சியில் கணிசமான பங்களிப்பை அளித்த பார்சிகளின் நினைவும் அந்த நெருப்பில் சுடர்விடுவதை உணர முடிகிறது.

இதேபோன்று வேறு சில இன மக்களும் மெட்ராசில் சிறு சிறு குழுக்களாக வாழ்ந்திருக்கின்றனர். மெட்ராசின் பிரபலமான சைனா பஜார், பர்மா பஜார் போன்றவை எல்லாம் இன்றும் அவர்களை நினைவுபடுத்துகின்றன. இந்த பஜார் வரிசையில் அந்தக் காலத்தில் குஜிலி பஜார் என்ற ஒன்றும் இருந்தது. வீதி இலக்கியத்தை வளர்த்ததில் இந்த பஜாருக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது.

லிங்கி செட்டித் தெரு, தம்பு செட்டித் தெரு, அங்கப்ப நாயக்கன் தெரு என இங்கிருக்கும் ஒவ்வொரு தெருவும் அன்றைய புகழ்பெற்ற தெலுங்கு வணிகர்களை நினைவுபடுத்துகின்றன. ராயப்பேட்டை முஸ்லீம்கள், பெரம்பூர் ஆங்கிலோ இந்தியர்கள் என மெட்ராஸ் மண்ணின் வரலாறு இங்கிருக்கும் ஒவ்வொருவர் மீதும் படிந்து கிடக்கிறது.

மொத்தத்தில், மெட்ராஸ் என்ற மாநகரம் சாதாரண மனிதர்களால் எழுதப்பட்ட சரித்திரம்.

மெட்ராஸ் என்ற நகரம் எனக்கு எப்போதுமே அதிசயம் நிறைந்ததுதான். குறிப்பாக, அதன் மொழி, என்னைப் பள்ளிப் பருவத்திலேயே பரவசத்துக்குள்ளாகியது. நான் ஒரு அக்மார்க் மெட்ராஸ்வாசி.

’நைனா நாஷ்டா துன்னியா' என்று என்னுடைய ஸ்கூல் ஆயா கேட்கும் போது, அதில் இருக்கும் வாஞ்சை என்னை உருக்கிவிடும். சோமாறி, பேமானி என ரிக்ஷாக்காரர்கள் சாலையில் மோதிக் கொள்வதை நான் மிகவும் சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்திருக்கிறேன். அடுத்து அவர் வாயில் இருந்து வெளிவரப் போகும் புதிய வார்த்தைக்காக ஆவலுடன் காத்திருப்பதே ஒரு அலாதி இன்பமாக இருந்தது. இப்படித்தான் இந்த நகரம் தனது தனித்துவங்களோடு எனக்கு அறிமுகமானது.

நான் வசித்த பெரம்பூர் பகுதியில் ஆங்கிலோ இந்தியர்கள் அதிகம். கவுன் போட்ட அந்த அழகிய ஆங்கிலோ இந்திய பாட்டிகளோடு பழகிய போதுதான், முதன் முதலில் மெட்ராசிற்கும் ஆங்கிலேயர்களுக்குமான தொடர்பு எனக்குப் புரிய ஆரம்பித்தது. அந்த புரிதல் தான் பின்னர் இதுபற்றி புத்தகம் எழுத முயன்ற போது பெரிதும் உதவியது.

பல ஆங்கில அறிஞர்களும், முத்தையா, நரசய்யா போன்றவர்களும் எழுதிய குறிப்புகளில் இருக்கும் இடங்களுக்கெல்லாம் இயன்றவரைக்கும் நேரில் சென்று, கூடுதல் தகவல்களைத் திரட்டி, இந்தப் புத்தகத்தை சிறப்பானதாக்க முயற்சித்திருக்கிறேன்.

மெட்ராஸ் மாநகரின் கிட்டத்தட்ட 375 ஆண்டு கதையை ஒரு புத்தகத்தில் முழுமையாக கொடுத்துவிட நினைப்பது, மயிலாப்பூர் டிகிரி காப்பியை மாம்பலம் கொசு ஒரே மடக்கில் குடிக்க முயற்சிப்பது போலத்தான் இருக்கும். எனவே இந்த நகரின் தலைவிதியைத் தீர்மானித்த மற்றும் சுவாரஸ்யமான தகவல்களை மட்டும் முடிந்த வரை தவறவிடாமல் சேர்த்திருக்கிறேன்.

இந்த முயற்சியில் தொடர்ந்து ஊக்கமளித்து இந்த புத்தகத்தை கொண்டு வருவதில் பேரார்வம் காட்டிய நண்பர் முத்துக்குமாருக்கும், இந்த வாய்ப்பை வழங்கிய பதிப்பகத்தாருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

- பார்த்திபன்

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

Back to blog