புத்தரின் வரலாறு

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/buddharin-varalaaru-ethir-veliyeedu


முகவுரை

உலகத்திலே அதிகமாகப் பரவிச் சிறப்புற்றிருக்கிற பெரிய மதங்களிலே பௌத்த மதமும் ஒன்று. புகழ்பெற்ற பௌத்த மதத்தை உண்டாக்கிய பெரியார் பகவன் கௌதம புத்தர் ஆவார். நமது பாரத நாட்டிலே பிறந்து வளர்ந்து வாழ்ந்தபடியினாலே பாரத நாடு பௌத்தர்களின் புண்ணிய பூமியாகும். பகவன் புத்தர் பிறந்து இப்போது 2500 ஆண்டுகள் ஆகின்றன. இந்த விழாவைப் பௌத்த உலகம் கொண்டாடுகிறது.

உலகப் பெரியாரான கௌதம புத்தர் நமது நாட்டில் பிறந்த சிறந்த பெரியார் என்கிற காரணத்தினாலேயும், பௌத்த சமயப் புண்ணித் தலங்கள் இங்கு உள்ளன என்னும் காரணத்தினாலேயும், பாரத நாட்டினராகிய நாம் பெருமிதம் கொள்கிறோம். இக் காரணங்கள் பற்றியே, பகவன் புத்தர் பிறந்த 2500-ஆவது ஆண்டுவிழாவை, 1956-ஆம் ஆண்டு மே 24-ஆம் தேதி வைசாகப் பெளர்ணமியாகிய புண்ணிய நாளிலே, அரசாங்கத்தாரும் பொது மக்களும் சேர்ந்து சிறப்பாகக் கொண்டாடுகிறோம்.

இந்தப் புண்ணிய நாளிலே பகவன் புத்தருடைய சரித்திர வரலாற்றை எழுதி வெளிப்படுத்துவது மிகவும் பொருத்தமானதே. இப்போது நமது நாட்டில் உள்ள புத்தர் சரித்திரங்கள், பள்ளி மாணவர் சரித்திரப் பாடத்தில் கற்கும் வெறும் கதையாக எழுதப்பட்டுள்ளன. சமய சம்பிரதாயத்தை ஒட்டிய புத்தர் வரலாறு தமிழில் இல்லை என்னும் குறைபாடு உண்டு.

நமது நாட்டிலே இராமாயணம், பாரதம், புராணங்கள் முதலிய சமய சம்பந்தமான கதைகள், மத சம்பிரதாய முறையில் எழுதப்பட்டு, அநேக அற்புதங்களும் புதுமைகளும் தெய்வீகச் செயல்களும் நிரம்பியவனவாகவுள்ளன. இவைகளைப் பக்தியோடு மக்கள் படித்து வருகிறார்கள். உலகத்திலேயுள்ள சமயப் பெரியார்களின் சரித்திரங்கள்

எல்லாம் (நபி நாயகம், ஏசு கிறிஸ்து முதலிய சமயத் தலைவர்கள் உட்பட) தெய்வீகச் செயல்களும் அற்புத நிகழ்ச்சிகளும் உடையன வாக உள்ளன. பகவன் புத்தருடைய சரித்திரமும், சமய சம்பிரதாய முறையில் பார்க்கும்போது, தெய்வீகச் செயல்களையும் அற்புத நிகழ்ச்சிகளையும் கொண்டுள்ளது. இப்போது தமிழ்நாட்டில் வழங்கும் புத்த சரித்திரங்கள், அந்த அற்புதச் செயல்கள் நீக்கப்பட்டு வெறும் கதைகளாக எழுதப்பட்டுள்ளன. அதனால், பெளத்தமத சம்பிரதாயப்படியுள்ள புத்த சரித்திரம் கிடைக்கப்பெறுவது இல்லை.

இந்தக் குறைபாட்டினை நீக்கக் கருதி இந்தப் புத்த சரித்திரம் எழுதப்பட்டது. ஆயினும் இது விரிவான நூல் என்று கூறுவதற்கில்லை. சில செய்திகள் விரிவஞ்சி விடப்பட்டன. ஆயினும் முக்கியமான வரலாறுகள் விடாமல் கூறப்படுகின்றன.

பெளத்த சமயத்தின் தத்துவமாகிய நான்கு வாய்மைகளும் அஷ்டாங்க மார்க்கங்களும் பன்னிரு நிதானங்களும் இந்நூலுள் காட்டப்பட்டுள்ளது. பெத்த மதத் தத்துவத்தை ஆழ்ந்து கற்பவருக்கு இவை சிறிதளவு பயன்படக்கூடும். இந்நூலின் இறுதியில் பின் இணைப்பாகத் திரிசரணம், தசசீலம், திரிபிடக அமைப்பு ஆகிய இவைகள் விளக்கப்படுகின்றன. பழந்தமிழ் நூல்களிலே சிதறிக் கிடக்கிற புத்தர் புகழ்ப்பாக்கள், முக்கியமாக வீரசோழிய உரை மேற்கோளில் காட்டப்பட்ட புத்தர் புகழ்ப்பாக்கள், தொகுக்கப்பட்டு இந்நூலின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. பழைய இனிய இப்புகழ்ப்பாக்கள் வாசகர்களுக்கு இன்பம் பயக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை .

இங்ஙனம்
மயிலை சீனி. வேங்கடசாமி

Back to blog