பிஜேபி ஒரு பேரபாயம்

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/bjp-oru-perabaayam
மூன்றாம் பதிப்புக்கான முன்னுரை

மதவாத முயற்சிகளை முறியடிப்போம் மனித சமத்துவம், வளர்ச்சி உருவாக்குவோம்!

இந்நூலின் முதல் பதிப்பு வந்தபோது தமிழகத்தில் பி.ஜே.பி. கால் ஊன்ற கடுமையாய் முயன்று கொண்டிருந்தது. அப்போது பி.ஜே.பி. பற்றியே அதன் கிளை அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் பற்றியோ அவற்றின் ஆபத்து பற்றியோ மக்கள், ஏன் தமிழகத் தலைவர்களோ அதிகம் அறிந்திராத நிலை.

எனவே, அந்நிலையில் பி.ஜே.பி. முயற்சியை முறியடித்து, மக்களுக்கு விழிப்பூட்டி தெளிவூட்ட, சூடேற்றி சொரணை உண்டாக்க இந்நூலை வெளியிட்டோம். எனவேதான் அந்த நூலின் முன்னுரையில், ''சூடேற்றுகிறோம் சொரணை வருமா?'' என்று தலைப்பிட்டு எழுதியிருந்தோம். இந்நூல் மக்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் பெரிதும் விழிப்பூட்டி வீழாமல் தடுத்தது.

எதிர்பார்த்தபடி இது பெரியார் மண் இங்கு மதவாத சக்திகள் கடைவிரிக்க முடியாது என்பது மக்களால் உறுதி செய்யப்பட்டது. பி.ஜே.பி. ஒரு தீண்டத்தகாத கட்சியாய் கருதப்பட்டது.

அதிர்ச்சியுற்ற பி.ஜே.பி.யினரும், சங் பரிவாரங்களும் எத்தனையோ ''தகிடுதத்தங்கள்'' செய்தும் பயன் கிட்டவில்லை . எனவே, அவர்களின் சித்தாந்தப்படி மதவெறி ஊட்டி அணிசேர்த்து வலுப்படுத்தலாம் என்று முயன்றனர். இந்துக்களும் இஸ்லாமியரும், இந்துக்களும் கிறித்தவர்களும் மோதி இரத்தம் சிந்தச் செய்தால், இந்துக்கள் ஒட்டுமொத்தமாக பி.ஜே.பி. பக்கம் வந்துவிடுவார்கள் என்று தப்புக் கணக்குப் போட்டு சில வன்முறைகளைத் தூண்டி மோதல்களையும் உருவாக்கினர். ஆனால், அதுவும் பலிக்கவில்லை.

அகில இந்திய அளவிலும் இரத யாத்திரை, இராமர் கோயில் என்று உணர்வேற்றிப் பார்த்து பலனில்லை.

அயர்ந்து அலுத்த ஆர்.எஸ்.எஸ், பரிவாரம் மோடியை முதன்மைப்படுத்தி, வளர்ச்சியென்ற கவர்ச்சி காட்டி, மக்களிடம் வாக்குகளைப் பெற வியூகம் அமைத்தனர். ஆதிக்க வெறிகொண்ட பி.ஜே.பி.யை தூக்கி நிறுத்த கார்ப்பரேட் நிறுவனங்களும், முதலாளிகளும் முனைந்து நின்றனர். தொலைக்காட்சி, பத்திரிகை என்ற இரு மக்கள் ஊடகங்களை தங்களுக்கு சாதகமாய், முழுமையாய்ப் பயன்படுத்தினர். ஆழச் சிந்திக்காது, கிடைக்கும் செய்தியை அப்படியே பற்றிச் செயல்படும் விடலைகள் மற்றும் இளைஞர்கள், ஏதோ மோடி வந்தால் இந்தியாவே எழுந்து நிமிர்ந்து நிற்கும்; நமக்கெல்லாம் வேலை கிடைத்து வருவாயும் கைநிறைய வந்துவிடும். இந்தியா வளர்ச்சி பெற்று உலகில் உயர்ந்துவிடும் என்ற கற்பனை நம்பிக்கையில், கணக்கில், கண்ணை மூடிக்கொண்டு, "வளர்ச்சி", "வளர்ச்சி” என்ற ஒற்றை நோக்கில், வாக்குகளை பி.ஜே.பி.க்கு வரிசையில் நின்று வழங்கினர். மதச்சார்பற்ற சக்திகளின் எச்சரிக்கைகள் இளைஞர்களால் ஏற்கப்படவில்லை . பி.ஜே.பி. பெரும்பான்மை பெற்று வென்றது.

மதவாத சக்திகளும், ஆதிக்க முதலாளித்துவக் குழுக்களும் மகிழ்ச்சியில் திளைத்தனர். தங்கள் சூழ்ச்சியால் மக்களை வீழ்த்திவிட்டோம் என்று ஆரவாரித்தனர்.

ஆனால், பதவியேற்ற முதல் நாளே அவர்கள் உண்மை உருவம் வெளிப்பட்டது. ''வளர்ச்சி'' என்று வாக்குக் கொடுத்து வந்தவர்கள், இந்துத்துவா செயல் திட்டங்களும், சமஸ்கிருதத் திணிப்பும், மற்ற மதத்தவர் மீது வெறித் தாக்குதலும் அவர்களால் அவசர அவசரமாக அன்றாடம் நிகழ்த்தப்பட்டன.

மாதம் செல்லச் செல்ல, காங்கிரஸ் ஆட்சியே பரவாயில்லை; மோடி வளர்ச்சி என்றதெல்லாம் மோசடியே என்று மக்கள் வெறுக்கத் தொடங்கினர். இளைஞர்கள் மத்தியில் ஏமாற்றம். ஏழைகளுக்கு எதிரான செயல்பாடுகளும், முதலாளிகளுக்கு ஆதரவான செயல்திட்டங்களும் ஆரியப் பார்ப்பனர்களுக்குச் சாதகமான ஆணைகளும் ஒவ்வொன்றாய் வர, அரசுக்கு எதிரான போராட்டம் கிளர்ச்சி அன்றாடம் நடத்தப்பட, மக்களைத் திசைதிருப்ப ஒன்றுக்கும் உதவா வெற்றுத் திட்டங்களும் வெளியிடப்பட, மக்கள் மேலும் வெறுப்பேறி நிற்கின்றனர்.

அந்த வெறுப்பு அடுத்தடுத்த தேர்தல்களில் வெளிப்பட்டு வருகிறது. என்றாலும், இன்னும் நான்கு ஆண்டுகள் ஆட்சி அவர்கள் கையில் அதுவும் பெரும்பான்மை பலத்துடன். எனவே, மக்களும் அரசியல் தலைவர்களும், இளைஞர்களும், மதச்சார்பற்ற சக்திகளும், பெண்களும், தாழ்த்தப்பட்டவர்களும் விழிப்பாக இருந்து பி.ஜே.பி. அமைப்புகளின் செயல்திட்டங்களை முறியடித்து நாட்டையும் மக்களையும் காப்பாற்றியாக வேண்டும்.

அதற்கு, அவர்களின் சூழ்ச்சி, உள்நோக்கம், மறைமுகத் திட்டங்கள், வஞ்சகம், சதி, வன்முறை, ஆதிக்க, சர்வாதிகார செயல்பாடுகள் போன்றவற்றையும், அவற்றை எதிர்கொள்ளும் வழிகளையும் அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காக, கூடுதலான பிற்சேர்க்கைப் பகுதிகளுடன் இந்நூல் விரிவாக்கம் செய்து வெளியிடப்பட்டுள்ளது.

ஊன்றிப் படித்து, உண்மையுணர்ந்து, விழிப்பும் தெளிவும் பெற்று, மதவாத சக்திகளை முறியடித்து, சரியான பாதையில் எச்சரிக்கையுடன் அணிவகுத்து, மதச்சார்பின்மையையும், மனித நேயத்தையும், சமத்துவத்தையும், வளர்ச்சியையும், வளத்தையும் உருவாக்க வேண்டுகிறோம்.

மஞ்சை வசந்தன்
சென்னை
05.06.2015

முதல் பதிப்புக்கான அணிந்துரை

அபாய அறிவிப்பு சரியான நேரத்தில்தான்!

பி.ஜே.பி. ஒரு பேரபாயம் என்ற அருமையான - ஆதாரங்கள் பலவற்றை உள்ளடக்கிய அரசியல் அறிவை, அறியாமையில் உழலும் பல படித்த பாமரர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது போல் அமைந்துள்ள இந்நூல் சரியான நேரத்தில், சரியான தகவல்களோடு, சமுதாயச் சந்தைக்கு வந்துள்ளது.

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் செயலாளர் தோழர் மஞ்சை . வசந்தன் அவர்கள் மிகச் சிறப்பான தகவல்களைத் திரட்டி, இன்றைய தலைமுறைக்கும் இனிவரும் தலைமுறைக்கும் தந்துள்ளார். தமிழ் கூறும் நல் உலகம் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

வேரிலிருந்து கிளை, இலை என்று அந்த நச்சு மரத்தினைப் பற்றி நல்ல தகவல்களைத் திரட்டி தருகிறார்.

"பி.ஜே.பி. ஒரு பேரபாயம்' என்று நூல் எழுத வந்தவர் ஆர்.எஸ்.எஸ். பற்றிச் சொல்லிக்கொண்டு செல்கிறாரே, ஆர்.எஸ். எஸ்.ஸுக்கும், பி.ஜே.பி.க்கும் என்ன தொடர்பு என்று சிலர் எண்ணக் கூடும், கேட்கவுங்கூடும். இது நியாயமான, முக்கியமான கேள்வி. சுருங்கச் சொன்னால் மரத்தின் வேருக்கும் கிளைக்கும் உள்ள தொடர்பு."

ஆம். 'வேருக்கும் கிளைக்கும்' என்று சொல்லலாம்; அதைவிட கிருமிக்கும் நோய்க்கும் உள்ள தொடர்பு - கிருமி உருவாக்கம் - நோய் வெளிப்பாடு - மதவெறி, ஜாதி வெறி, பார்ப்பன வெறி - நோய்தானே அது. அந்நோய் திராவிட தீரர்களையும்கூட பற்றிக் கொள்ளுகிறதே!

ஒருவரை விட்டால் மற்றொருவர் அதை விரட்டுவதற்குப் பதில், விரட்டிப் பிடித்து தலையில் அல்லவா சுமந்து. நோயைப் பதவிச் சுகத்தின் பக்கவிளைவுதான் என்று சமாதானம் கண்டு, சரித்திரப் பழி ஏற்கத் தவறாதவர்கள் ஆகிறார்கள் திராவிட இயக்கத்தவர்களே! எனவே தான் நோய் நாடி நோய் முதல் நாடி ஆக வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ். துவக்கம் எப்படி என்பதிலிருந்து அமெரிக்க அந்தரங்கம் வரையில் அலசுகிறார் மஞ்சை வசந்தன். பி.ஜே.பி.யின் 'பொய்த் தவவேடம் பூணல்' எப்படிப்பட்டது என்பதை மிக அருமையாக விளக்கியுள்ளார் நூலாசிரியர் ஒரு தனி அத்தியாயத்தில்

பெயரில் மஞ்சை என்றாலும், கருத்தில் - லட்சியத்தில் கறுப்பும் சிவப்பும் மாறாதவர். அவரது முயற்சிக்கு நமது வாழ்த்துகள்.

தமிழர் தலைவர் கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

பிஜேபி ஒரு பேரபாயம் - எரியும் எண்ணங்கள்

Back to blog