Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

பகவத் கீதை ஓர் ஆய்வு - முன்னுரை

பகவத் கீதை ஓர் ஆய்வு - முன்னுரை

தலைப்பு

பகவத் கீதை ஓர் ஆய்வு

எழுத்தாளர் ஜோசப் இடமருகு
பதிப்பாளர்

அலைகள் வெளியீட்டகம்

பக்கங்கள் 152
பதிப்பு மூன்றாம் பதிப்பு - 2015
அட்டை காகித அட்டை
விலை Rs.100/-

 

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://periyarbooks.com/bagavat-geethai-oru-aayvu.html

 

முன்னுரை

கீதை விளக்கங்களும் கீதை யாகங்களும் இப்பொழுது இந்தியாவில் நடந்து வருகின்றன. பகவத் கீதையின் மகத்துவத் தைப் புகழ்கின்ற நூல்களும் ஏராளமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. உலகிலேயே மிகவும் முக்கியமான தத்துவ நூல் அதுவென்றும் எத்தகைய இக்கட்டான கட்டங்களிலும் மனிதன் நம்புவதற்கேற்ற மகத்தான நூல் அது என்றும் கீதையைப் புகழ்கின்றவர்கள் சொல்வதுண்டு. ஏராளமான பண்டிதர்கள் அதற்கு விளக்கவுரை எழுதவும் செய்துள்ளனர். இப்படி யெல்லாம் இருந்தாலும் இந்தியாவிலுள்ள சாமானிய மக்கள் அந்த நூலை சாதாரணமாகப் படிப்பதில்லை. அதற்கு முக்கிய காரணம் அது சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருப்பது தான். அதன் மேன்மையைப் பற்றிய தவறான பிரச்சாரங்களும் மக்களை கீதையை விட்டு அகற்றி நிறுத்துகின்றது சில இந்து மத இயக்கத்தினர் அடிக்கடி நடத்துகின்ற தொடர் சொற் பொழிவு களிலிருந்தே அவர்கள் கீதையைப் பற்றி புரிந்து கொள்கின்றனர். அதுவே சாதாரண மக்களை தவறான பாதைக்கு இட்டுச் செல்வதாக உள்ளது. இந்தச் சூழ்நிலையில் தான் பகவத்கீதையின் கொள்கைகளையும் அதன் சமூக சூழ்நிலையையும் விவரிக்கின்ற ஒரு நூலை எழுத வேண்டுமென்று எனக்குத் தோன்றியது.

நான் பகவத் கீதையுடன் தொடர்பு கொள்ளத் தொடங்கிய சூழ்நிலையைப் பற்றியும் இங்கே கொஞ்சம் சொல்வது நல்ல தெனத் தோன்றுகின்றது. 1953-ல் கிறிஸ்து ஒரு மனிதன்' என்ற என்னுடைய முதல் நூல் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து கிறிஸ்துவ மதத்திலிருந்து வெளியேற்றினர். இந்த விவரங்களை பத்திரிகையில் பார்த்த காலடி ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தைச் சேர்ந்த சுவாமி ஆகமானந்தர் என்னை அவரைச் சந்திக்கும்படி கேட்டு கடிதம் ஒன்றை அனுப்பினார். நான் ராமகிருஷ்ணா மடம் சென்று அவரைச் சந்தித்தேன். அவருடைய விருந்தினனாக நான் அங்கே சில நாள்கள் தங்கவும் செய்தேன். பல விஷயங்களைப் பற்றி விரிவாக நாங்கள் பேசினோம். அவருடைய நூலகத்தைப் பயன்படுத்தும் வசதியும் எனக்குக் கிடைத்தது. அதன் மூலம் சுவாமி விவேகானந்தர் மற்றும் பல இந்துமதப் பண்டிதர் களுடைய நூல்களைப் படிக்கும் வாய்ப்பைப் பெற்றேன். பகவத் கீதையை ஆழ்ந்து படிக்கும்படி சுவாமி ஆகமானந்தர் எனக்கு உபதேசம் செய்தார்.

குழந்தைப் பருவம் முதலே பைபிளையும் இதர கிறிஸ்தவ மத நூல்களையும் படித்து வந்த என்னைப் பொறுத்த வரை இந்து மத நூல்கள் முதலில் மிகவும் கவரத்தக்கவையாய் அமைந்தன. குறிப்பாக பகவத்கீதையும் உபநிஷத்துகளும் மனித வாழ்க்கையை மிக ஆழமாகப் பார்க்க பைபிளைவிட இந்த நூல்களுக்கு இயன்றது என்பது உண்மையே. அதனால் அப்பொழுது முதலே பகவத் கீதை, உபநிஷத்துக்களுடைய பல விளக்கவுரைகளையும் சேகரித்து நான் படிக்கத் தொடங்கினேன். இரு முறை சிறையில் அடைக்கப்பட்டபொழுது அதிக நேரமெடுத்து இந்தப் புத்தகங் களை நான் படித்தேன். பழைய பாரதத்தை நான் தெரிந்து கொள்வதற்கு ஏற்ற நூல் என்பதல்லாமல், இக்கால மனிதனுக்கு இவற்றிலிருந்து ஏற்றுக்கொள்ளக் கூடிய பயன் தரத்தக்க விஷயங்கள் எதுவுமில்லை என்பதை நான் தெரிந்து கொண் டேன். கீதைக்கும் உபநிஷத்துகளுக்கும் விரிவான விளக்கவுரை தயாராக்க வேண்டுமென்று அன்றே நான் எண்ணினேன். ஒரு பத்திரிகையாளனின் நெருக்கடி நிறைந்த வேலையினால் அதற்கு முடியாமல் போனது.

1977-ல் டில்லிக்குக் குடிபெயர்ந்த பொழுது புராணப் பிரசித்திப் பெற்ற பல இடங்களைப் பார்ப்பதற்கும் அவற்றின் வரலாற்றைப் படிப்பதற்கும் எனக்கு வாய்ப்புகள் கிடைத்தன. இந்து மத நூல்களைப் புதிய முறையில் நோக்குவதற்கு அது எனக்கு உதவியாக அமைந்தது. டில்லியிலுள்ள முக்கியப் பல்கலைக் கழகங்களிலும், நூலகங்களிலும் இந்த விஷயங் களைப் பற்றிய ஏராளமான நூல்களும் இருந்தன. இந்த வசதிகளைப் பயன்படுத்தி பகவத்கீதைக்கு முழுமையான விரிவுரை எழுத நான் ஆரம்பித்தேன். அது ஏறத்தாழ 2000 பக்கங் களுள்ள ஒரு நூலாக இருக்கும். இப்பொழுது வெளியிடு கின்ற இந்த நூல் அதனுடைய ஒரு முன்னுரைப் போன்றதே. பகவத் கீதை இந்திய வரலாற்றை எவ்வாறு பாதித்தது என்றும் அதன் கொள்கைகள் எவ்வளவு முரண்பாடானவை என்றும் தெளிவாக்க இந்நூல் மூலம் எனக்கு இயன்றது என்பது என்னுடைய நம்பிக்கை.

இதில் கொடுக்கப்பட்டுள்ள சமஸ்கிருத சுலோகங்கள் சாதாரண வாசகர்களுக்கு சரளமாகப் படிக்க தடையாகத் தோன்றலாம். அவர்களுக்காக சுலோகங்களின் மொழி பெயர்ப் பும் கொடுக்கப்பட்டுள்ளது.

பகவத் கீதைக்கு சமஸ்கிருதத்திலும் ஆங்கிலத்திலும் பிரஞ்சிலும் ஜெர்மனிலும் இன்னும் பல மொழிகளிலும் ஏராளமான விரிவுரைகள் வெளிவந்துள்ளன. அவற்றில் சிலவற்றில் 700ம் வேறு சிலவற்றில் 697-ம் 650-ம் சுலோகங்கள் காணப்படுகின்றன. தேவையற்றவையென்று சில சுலோகங்களை சில விரிவுரையாளர்கள் விட்டுவிட்டதே இதற்குக் காரணம். இப்பொழுது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நூல்களில் 700 சுலோகங்கள் உள்ளன. இந்த நூலின் 19, 20ஆம் பக்கங்களில் கீதையிலுள்ள அத்தியாயங்களையும் அவற்றின் சுலோகங்களையும் பற்றி கொடுத்திருக்கும் பட்டியல் வண்டனில் வெளியிட்ட ஒரு பதிப்பில் உள்ளது. அதில் 697 சுலோகங்களே உள்ளன. இந்தியப் பதிப்புகளிலும் அந்த நூலிலும் சில சுலோகங்களுடைய எண்ணிக்கையில் காணப்படுகின்ற வித்தியாசம் பின்வருமாறு:

அத்தியாயம்

இந்தியப் பதிப்பிலுள்ள சுலோகங்கள்

லண்டன் பதிப்பிலுள்ள சுலோகங்கள்

கர்ம சன்னியாச யோகம்

29

28

தியான யோகம்

47

46

ராஜ சூஹ்ய யோகம்

34

33

விபூதி யோகம்

42

41

 

பல காலக்கட்டங்களில் பலர் எழுதிய கொள்கைகளை சேர்த்து ஒரே நூலாக்கியதே பகவத் கீதையென்று இன்று சொல்லப்படுகின்ற புத்தகம். ஒன்றுக்கொன்று முரண்பாடான கொள்கைகளின் தொகுப்பே அந்த நூல்.

 

பிரிட்டிஷ்காரர்களும் பகவத் கீதையும்

பகவத் கீதைக்கு இப்பொழுது கிடைத்திருக்கும் புகழுக்கான முக்கிய காரணங்களில் ஒன்று பிரிட்டிஷ்காரர்களே என்பதை கீதை பக்தர்களில் பலரும் அறியமாட்டார்கள். 18ஆம் நூற்றாண்டில் உண்டான தொழிற் புரட்சியைத் தொடர்ந்து அய்ரோப்பியாவில் பல புதிய கொள்கைகள் தலை தூக்கத் தொடங்கின. அரசர்களுக்கும் மதத்திற்கும் எதிராகப் பேசுவதில் மக்கள் திறமையைக் காட்டினர். 1789-ல் பிரான்சில் புரட்சி ஆரம்பித்ததைத் தொடர்ந்து பிரஞ்சுப் பேரரசர் கொல்லப் படவும் செய்தார். இதன் அலைகள் பிரிட்டனையும் அடைந்தன. பிரிட்டீஷ் காலனிகளில் இத்தகைய புதிய கொள்கைகள் தலை தூக்குமோ என்று அவர்களுக்கு முதலிலேயே சந்தேகம் இருந்தது.

இந்தியாவில் கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹேஸ் டிங்ஸ் அதற்காக கண்டுபிடித்த மார்க்கம் இந்தியர்களை அவர்களுடைய பழைய மதங்களின் பால் திருப்புவதாக இருந்தது. வங்காளத்தை தலைமையிடமாகக் கொண்டு 'ஏஷியாட்டிக் சொசைட்டி' தொடங்கியதன் பின்னணி இது தான். கல்கத்தா வில் ஆரம்பிக்கப்பட்ட ஃபோர்ட் வில்லியம் கல்லூரியிலும் இதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. வேதங்கள், உபநிஷத்துகள், புராணங்கள் முதலிய இந்துமத நூல்களுடைய 'மகத்துவத்தை வெளியே கொண்டுவர பிரிட்டீஷார் முயற்சித்த பொழுது அதன் ஒரு பக்கத்தை மட்டுமே நாம் கண்டோம். இந்தியாவுக்கு ஏற்றது இந்த மத நூல்களின் அடிப்படையில் அமைந்த பழைய நாகரிகம் தான் என்றும், வெளிநாட்டில் உண்டாகின்ற புதிய சிந்தனைகளை விட அது மகத்தானது என்றும் அவர்கள் பிரச்சாரம் நடத்தியதன் காரணம், பிரான்சிலும் பிற இடங்களிலும் வளர்ந்து வந்த புரட்சிக் கருத்துகளும் பகுத்தறிவு சிந்தனையும் இந்தியாவில் பரவி விடக் கூடாது என்ற எண்ணம் தான். இது ஓரளவு வரை நிறைவேறவும் செய்தது. வெளிநாட்டிலுள்ள புதிய கருத்துகளுக்கு நேராக கண்களை மூட இந்தியர்களான அறிவாளிகளை அது தூண்டியது. இந்திய நாகரிகத்தில் மிதமிஞ்சிய மதிப்பு உண்டாக அது காரணமானது. பிற்காலத்தில் வளர்ந்து வந்த இந்து தீவிரவாதம் அதன் பலனாக உண்டானதுதான். அதனை எதிர்கொள்ள பிரிட்டீஷார் முஸ்லீம் தீவிரவாதத்தைத் தூண்டி விட்டனர். அவ்வாறு இந்திய மக்களை மதத்தின் பெயரில் இரு கூறாகப் பிரித்த பின்னரே அவர்கள் 1947-ல் இந்தியாவை விட்டு வெளியேறினர்.

பிரிட்டீஷ்காரர்களுடைய ஊக்கத்தால் வளர்ந்து வந்த இந்து தீவிரவாதம் பகவத் கீதையில் அமைதியடைந்தது. அரசியல் லட்சியத்தை அடைய கொலை பாதகமும் வஞ்சனை யும் பகைவரை வீழ்த்தலும் நல்லதேயென படிப்பிக் கின்ற பகவத்கீதை, சாதி வேறுபாட்டில் ஊறிய ஒரு மதச் சார்பு நாட்டினுடைய கொள்கைகளை தன்னுள் கொண்டுள்ளது. இந்த நூல் கொண்டுள்ள தத்துவ சிந்தனை இங்கே வளர்ந்தால் அது இந்து 'கோமேனி 'களை உருவாக்கலாம். இந்த ஆபத்தை சிலருக்கேனும் உணர்த்த இந்த நூலால் இயன்றால் நான் திருப்தியடைவேன்.

 

புதுடில்லி 1-1-1982                                                                                                                                           - இடமருகு

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

Previous article திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - ஆசிரியர் குறிப்பு