அரசியல் செயற்பாட்டிற்கு இணையாக வாசிப்பிலும் எனக்குத் தீவிரம் கூடியிருந்த கால கட்டத்தில் தான் 'அயோத்திதாசரின் சிந்தனைகள்' தொகுதிகளாக வெளியாயின. உடனே அவரைப் படித்துவிட்டேன் என்று சொல்ல முடியாவிட்டாலும் அது முதலே அவர் எனக்குப் பரிச்சயமாகிவிட்டார் என்றே சொல்ல வேண்டும். அயோத்திதாசரை அரசியல் தரப்பும் அறிவுலகமும் பொருள் படுத்து வதில் நடந்த மாற்றங்களை நேரில் பார்த்து வந்தேன். அவரை ஏற்றி வைத்தமையும் இறக்கி வைத்தமையும் ஒரே வீச்சில் நிகழ்ந்தன. இப்போது ஒரு சிந்தனையாளராக அவரை எதிர்கொள்ள முடியாத அரசியல் உலகமும் அறிவுலகமும் அவரை ஒரு பிம்பமாக மாற்றிக்கொண்டு அமைதி கண்டிருக்கின்றன. ஆனால் அயோத்திதாசர் வாசிப்பில் மற்றவர்களுக்கு இல்லாத ஒரு வாய்ப்பு எனக்கிருந்தது. அரசியல் ஆர்வலன், இலக்கிய மாணவன் என்கிற இரண்டு வாய்ப்பும் அவரை வாசிப்பதில் எளிமையையும் என்னிடம் தேவையையும் உருவாக்கியிருந்தன.
என் கல்லூரி சார்பாக மதுரைக் கல்லூரி ஒன்றில் ஆண்டுதோறும் நடைபெறும் தமிழ்த் துறை மாணவர் கருத்தரங்கில் கட்டுரை வாசிக்க அனுப்பப்பட்ட போது நான் தேர்ந்தெடுத்த தலைப்பு 'அயோத்திதாசரும் தமிழிலக்கியமும்.' பார்ப்பார் - பறையர் என்கிற அயோத்திதாசரின் சொல்லாடல்களைக் குறிப்பிட்டு நான் கட்டுரையை அந்தப் பாரம்பரியக் கல்லூரியில் வாசித்துக் கொண்டிருந்தபோதே என் வாசிப்பை நிறுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டேன்.
2003 முதல் மெல்லமெல்ல அயோத்திதாசர் பற்றி ஆங்காங்கு மேடைகளில் பேசத் தொடங்கினேன். தீவிர சிந்தனையுலகம் மற்றும் கல்விப்புல அரங்குகளில் அவர்பற்றிப் பேசியிருக்கிறேன் எனினும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளூர் அமைப்புகள் ஒழுங்குசெய்த பல்வேறு கூட்டங்களில் தொடர்ந்து பேசியும் பல இடங்களில் அவர் பற்றிய கூட்டங்கள் நடைபெறவும் தூண்டுதலாய் இருந்து வந்திருக்கிறேன். கடந்த பத்தாண்டுகளில் எல்லா அரங்குகளையும் சேர்த்துப் பார்த்தால் அவரைப் பற்றி மட்டுமே ஐம்பதுக்கும் மேற்பட்ட கூட்டங்களில் பேசியிருக்கிறேன். இந்நிலையில் தான் 2014இல் அயோத்திதாசர் நினைவு நூற்றாண்டு வந்தது. அவரின் நூற்றாண்டை நினைவு கூர்வதற்காக இந்த ஓராண்டில் மட்டும் அநேக இதழ்களில் அவரைப் பற்றி கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். தி இந்து நாளேட்டில் மூன்று கட்டுரைகள், காலச்சுவடு இதழில் மூன்று கட்டுரைகள், அகம்புறம் இதழில் இரண்டு கட்டுரைகள், புதிய பனுவல், மலைகள்.காம், திணை ஆகிய இதழ்களில் முறையே ஒரு கட்டுரை, மூன்று கருத்தரங்கக் கட்டுரைகள் என்று அவை அமைந்தன. இவை தவிர, கட்டுரையாக மாற்றப்படாத கருத்தரங்க உரைகளும் மிச்சம் உள்ளன.
குறிப்பாக, திருச்சியில் சமூக உயிர்ப்பியக்கமும், காரைக்குடி பள்ளத்தூரில் போதி இலக்கியச் சந்திப்பும் நடத்திய அயோத்திதாசருக்கான அரங்குகள் நிறைவானவை. இவ்வாறு ஓராண்டில் எழுதியவற்றுள் அயோத்திதாசரைப் பற்றிய அறிமுக அளவிலான இதழியல் தன்மைகொண்ட கட்டுரைகளைத் தவிர்த்து ஆய்வு நோக்கில் விரிவாக எழுதிய கட்டுரைகளை மட்டும் இந்நூலில் தொகுத்துள்ளேன். 'வாழும் தமிழ்ப் பௌத்தம்' என்கிற இந்த நூலின் முதல் கட்டுரை தவிர்த்து மற்ற அனைத்தும் ஓராண்டில் எழுதப்பட்ட கட்டுரைகள். அந்த வகையில் இத்தொகுப்பை அயோத்திதாசர் நினைவு நூற்றாண்டுக் கட்டுரைகளின் தொகுப்பு என்று கூறலாம்.
அயோத்திதாசர் சிந்தனைகள் தொகுப்புகளாக வெளிவராத காலத்தில் மட்டுமல்ல வந்த பின்னாலும்கூட அவரை வாசிக்கக் கூடாதவராக மாற்றிய வெறுப்பு அரசியலை அறிவேன். என்றாலும், அவர் போதுமான அளவு விவாதிக்கப்படவும் சூழலில் பொருத்தப்படவும் இல்லை என்கிற வருத்தம் இருக்கிறது. இந்நிலையில் தான் நினைவு நூற்றாண்டிலாவது அவரைப்பற்றி எழுத வேண்டுமென்று இக்கட்டுரைகளை எழுதினேன். ஆனால் 'சூழலுக்குப் பயந்து' அயோத்திதாசரை எழுத மட்டுமல்ல வாசிக்கக்கூட முன்வராத பலர் 'அயோத்திதாசரின் பேரன்', 'அயோத்திதாசரின் அத்தாரிட்டி', 'அயோத்திதாசரைத் தவிர வேறெதுவும் எழுதாதவர்' என்றெல்லாம் நேரடியாகவோ நானில்லாத மேடைகளிலோ என்னை விமர்சித்திருக்கின்றனர்.
குறிப்பிட்ட துறை மற்றும் சிந்தனையாளர் சார்ந்து தொடர்ந்து ஆராயும்போது மேலும் புதிய தகவல்களும் புரிதல்களும் ஏற்படக்கூடும். இதனாலேயே கல்விப்புலத்தில் இப்போக்கு அங்கீகரிக்கப்படுகிறது. மற்றவர் விசயங்களில் அங்கீகரிக்கப்படும் இந்த விதி எனக்கு மட்டும் புறம்பாக்கப்படுகிறது. பாரதி, உ.வே.சா., பெரியார் ஆகியோரை மட்டுமே ஆராயும் ஆய்வாளர்கள் இங்கு உண்டுதானே! அயோத்திதாசரின் நேரடி எழுத்துகளைத் தாண்டி அவரை வரலாற்றின் களத்தில் வைத்துப் புரிந்துகொள்வதில் என் எழுத்து சில அடிகளை முன்னோக்கி வைத்திருக்கிறது என்பதை இக்கட்டுரைகளை வாசிக்கும்போது உணரலாம்.
அயோத்திதாசர் பற்றிய என் புரிதலில் முன்னோடியாக இருந்த அறிவுஜீவிகள் கூட இக்காலத்தில் என் மீதான வெறுப்பை அயோத்திதாசர் மீதான புறக்கணிப்பாக மாற்றிக்கொண்டனர். தலித் இயக்கமொன்றின் நிர்வாகி, அயோத்திதாசர் நினைவு நூற்றாண்டை முன்னெடுக்கத் தமிழகத்திலிருந்த அமைப்புகள் சிலவற்றை அழைத்து, தமிழகக் கூட்டம் ஒன்றை நடத்தினார். ஆனால் கூட்டம் நிறைவு பெறும் வேளையில் கூட்டத்தில் நுழைந்த அவ்வியக்க நிர்வாகிகள் இந்த விழாவைக் கட்சியே நடத்தும் என்றுகூறி அம்முன்னெடுப்பையே முடக்கினர். இவ்வாறாக நினைவு நூற்றாண்டு சிற்சில அடையாள நடைமுறைகளில் அல்லாது எந்தவிதமான தாக்கமும் இல்லாமல் முடிந்தது. பிறருக்கு அயோத்திதாசர் பற்றிய வாசிப்பே கூடாதெனில், சில தலித் இயக்கங்களுக்கும் தன் முனைப்புக் கொண்ட அறிவுஜீவிகளுக்கும் அவரின் பிம்பம் மட்டுமே போதுமானதாக இருக்கிறது.
இந்நிலையில் இத்தொகுப்பின் கட்டுரைகள் பற்றிச் சிலவற்றைச் சொல்ல வேண்டும்: இரண்டு கட்டுரைகள் தவிர மற்ற கட்டுரைகள் அயோத்திதாசரின் சிந்தனைகளை மையப்படுத்தியதாக இல்லை. அயோத்திதாசரைப் புரிந்து கொள்வதற்கான முந்தியும் பிந்தியுமான சமூகம், வரலாறு, பண்பாட்டுக் காரணிகளை தொகுப்பதிலேயே பிற கட்டுரைகள் அதிகமும் கவனம் கொண்டிருக்கின்றன. இக்கட்டுரைகளில் எடுத்தாளப்பட்டுள்ள தகவல்கள் பலவும் அயோத்திதாசரின் தமிழன் ஏட்டிலிருந்து முதன்முறையாக எடுத்தாளப்பட்டுள்ளன. அவர் சிந்தனைகளை மையப்படுத்தி எழுதும் திட்டமுமிருக்கிறது. இந்நிலையில்தான் அவர்பற்றிய என் முனைவர் பட்ட ஆய்வும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த முனைவர் பட்ட ஆய்வு எல்லைக்குள் இடம்பெறாத, முற்றிலும் அதற்கு வெளியே உள்ள அம்சங்களை மட்டுமே இங்கு கட்டுரைகளாகத் தந்திருக்கிறேன். ஆனால் அவர் சார்ந்த சமூக வரலாற்று அம்சங்களையேகூட ஆராயும் வகையில் இன்னும் இரண்டொரு நூல்களை எழுதுவதற்கான தரவுகளும் இருக்கின்றன.
ஒரு நூற்றாண்டை எட்டும் தருணத்தில் மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்ட அயோத்திதாசரின் சிந்தனைகள்மீது ஆய்வு வெளிச்சம் பாய்ச்சும் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. நவீனகாலத் தமிழ்ச் சிந்தனைமீதும் செயல்பாடுகள் மீதும் மரபின் வேரிலிருந்து எழுந்துவந்து வினையாற்றிய அரிய மூலிகைச்செடியையொத்த அயோத்திதாசர் எனும் சிந்தனையாளரின் தனித்துவமான அவதானங்களை உரையாடல்களின் வழியே கண்டடைகிறது இத்தொகுப்பு. நவீன மனப்பாங்கால் கண்டறிய முடியாத கோணங்களை அவற்றின் மறைவிலிருந்து விலக்கி விரிந்த பின்புலத்தில் வைத்து பேசிய அயோத்திதாசரை அவர் காலத்திலிருந்தும் சமகாலத்திலிருந்தும் மதிப்பிடுகிறது இத்தொகுப்பின் கட்டுரைகள். அயோத்திதாசரின் சிந்தனைகளைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதோடு அவை உருவானவிதம், அவர் ஒன்றைப் புரிந்துகொண்ட - விளக்கியமுறை, அவற்றின் சமகாலப் பொருத்தம் ஆகியவற்றையும் இக்கட்டுரைகளில் முன்வைக்கிறார் ஸ்டாலின். இதுவரை அயோத்திதாசர் சார்ந்து கவனம்பெறாத பதிவுகளிலிருந்தும் முதன்முறையாக தரவுகளைத் திரட்டி எழுதப்பட்டிருப்பதும் இத்தொகுப்பின் தனித்துவம்.
அயோத்திதாசர் ஆய்வில் அலாய்சியஸும் டி. தருமராஜனும் போற்றுதலுக்குரியவர்கள். அயோத்திதாசரை மறுகண்டுபிடிப்பு செய்தவர் ஞான. அலாய்சியஸ் என்றால், மறுவிளக்கம் செய்தவர் டி. தருமராஜன். அயோத்திதாசர் பற்றிய என் புரிதலிலும் எழுத்துகளிலும் தாக்கம் செலுத்திய இவர்களுக்கு இந்நூலை சமர்ப்பிப்பதில் மகிழ்வெய்துகிறேன். நன்றி.
மதுரை ஸ்டாலின் ராஜாங்கம்
ஏப்ரல் 2016
தொடர்புடைய மற்ற பதிவுகள்: