அவனின்றி எல்லாம் அசைகின்றன - முன்னுரை
இந்திய தத்துவ தரிசனம் மிக பழைமை வாய்ந்தது என்பதை அறிகிறபோது பெருமையடைவது இயல்பே. ஆனால் சாருவாகம் போன்ற தத்துவஞானம் (உலகாயதம்) கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கு முன்பே கடவுள் மறுப்புக் கொள்கையைக் கொண்டிருந்தவை, உலகத் தோற்றத்துக்கு ஒரு வெளிக்காரணம் தேவையில்லை என்று சொன்னதும், பொருள்கள் தோன்றி மறைகின்றன என்று சாதித்ததும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. உலகத்தின் பல பகுதிகள் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் இப்படி ஒரு முற்போக்குக் குரல். ஆனால் அதன் கதி என்ன ஆயிற்று? அன்றைய ஆதிக்க வர்க்கத்தால் பாவமும், பழியும் சுமத்தப்பட்டு, அடக்குமுறையும் வீசப்பட்டு ஒழிக்கப்பட்டது.
ஆனாலும் அதை ஒட்டி வந்த ஜைனம், பௌத்தம், சாங்கியம், வைசேடிகம் என்ன ஆயின? அவைகளும் அரசின் ஆதரவோடு அடித்து ஒழிக்கப்பட்டன. சில தத்துவ மரபுகள் நியாய வைசேசிகம் போன்ற நாத்திகத் தத்துவ கொள்கையையே ஆதிக்க வர்க்கத்துக்குச் சார்பாக மாற்றிக் கொண்டது. பௌத்தம் போன்றவை அதைப் பின்பற்றியவர்களாலேயே பிற்காலத்தில் திருத்தப்பட்டுவிட்டன.
இந்தப் பொருள்முதல்வாதத் தத்துவம் தாக்குதலுக்கு உள்ளாகாமல் வளர்க்கப்பட்டிருந்தால் இந்தியாவின் நிலை உயர்ந்த கட்டத்தை அடைந்திருக்கலாம். வர்ணாசிரமம் வராமலேயே போயிருக்கலாம், மூடப்பழக்க வழக்கங்கள் முழுமையாக முறியடிக்கப்பட்டிருக்கலாம். வைதிகம் வாய்பிளந்து மரணத்தை அணைத்திருக்கும்.
ஆரம்பக் கட்டத்தில் கடவுள் மறுப்பைக் கொண்டிருந்த நியாய வைசேசிகத்தை உருவாக்கிய கணாதர் அணுவின் தன்மை பற்றி எவ்வளவு தெளிவாகச் சொல்லியுள்ளார் பாருங்கள்.
"பொருட்களுக்கு அடிப்படை, அணுக்களே. இவை நான்காகும். வாயு, ஒளி, நீர், மண் என்பன. இவற்றைத் தவிர விசும்பு என்றதும் உண்டு. ஆனால் இது அணுதன்மைக் கொண்டதல்ல. இது ஒளியும், ஆற்றலும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பரவ உதவும் ஒரு சாதனமாகும் அணுக்கள் இயக்கம், பரவுந்தன்மை, நிறை முதலிய பண்புகள் உடையவை.
நால்வகை அணுக்களின் புணர்ச்சியாலும், பிரிவினாலும் ரசாயன விளைவுகள் நிகழ்கின்றன. ரசாயன மாறுதல்கள் நிகழப் பெரும்பாலும் வெப்பம் தேவையாக உள்ளது. கந்தகத்தையும், இரும்பையும் ஒன்று சேர்த்து சூடேற்றினால் அவற்றிடையே ரசாயன விளைவு நிகழ்கிறது. ஒரு புதுப்பொருள் உருவாகிறது. கூடியிருக்கும் அணுக்கள் வெப்பத்தால் பிரிந்து வேறு வகை அணுக்களாவதும் உண்டு!
முதன் முதலில் நம் நாட்டில் அணுக் கொள்கையை மிகவும் தெளிவாகவும், விரிவாகவும் ஆய்ந்தவர் சாங்கிய வேதாந்தத்தின் மூலவர் கபிலர் என்பவர். இவரை அடுத்து பதஞ்சலி முனிவரும் அணுக்கொள்கையை விரிவாக ஆராய்ந்துள்ளார். இவர்களது கூற்றுப்படி ஆதியில் உலகில் தோன்றிய துகள்கள் பூதாதிகள் எனப்படும். கண்ணுக்கெட்டாதத் துகள்களான இவை உரு, பண்பு முதலிய இயல்புகள் இல்லாதவை. இத்துகள்கள் ஆற்றலை மேற்கொண்டு தன் மாத்திரைகள் எனும் துகள்களாக மாறுகின்றன. பல தன் மாத்திரைகள் ஒன்று கூடி ஒரு பரமாணுவாகத் திரள்கின்றன. நாம் காணும் பொருள்கள் பரமாணுக்களின் தொகுதிகளாகும். தன் மாத்திரைகள் விரைவாய்த் துடிப்பதால் ஒளியும், வெப்பமும் தோன்றுகின்றன. பதஞ்சலியின் கருத்து இக்காலக் கொள்கையை ஒத்திருக்கிறது.
புத்தர் கூட 'பொருள்கள் அணுக்களால் ஆனவை. வாயு அணுக்கள் பல ஒன்று சேர்ந்து வாயுப் பொருள்களையும், ஒளியணுக்கள் ஒளியையும், வெப்பத்தையும், நீர் அணுக்கள் நீர்மப் பொருளையும், மண்ணணுக்கள் மண்ணை ஒத்த பொருளையும் தருகின்றன" - என்கிறார்.
இப்படிப்பட்ட கொள்கையை இவ்வளவு தெளிவாக பழமை வாய்ந்த கிரேக்கமும், சீனமும் கூட சொல்லியிருக்குமா எனக் கேள்வி எழுகிறது.
இந்தியாவின் பெருமையை இந்திய வைதிகம், வேதாந்தம் பின்னுக்குத் தள்ளிவிட்டன. இந்தியா வேதங்களின் நாடு என்று பெயர் உண்டாக்கப்பட்டது.
தமிழகமும் இந்தத் தாக்குதலுக்கு உள்ளாகியது. தமிழின் தொல்லியக்கங்களில் தொல்காப்பியமும் புறநானூறு பாடல்களும் பஞ்ச பூதப் பொருள்கள், உயிர், உணர்வுகள் பற்றி பேசுகின்றன. புத்தம், சமணத்தின் தாக்கமும் தமிழகத்தில் நிலவின. தமிழகத்தின் மதமோதலால் இவை பின்னுக்குத் தள்ளப்பட்டன.
இந்தியாவில் அவ்வப்போது சில சமூக ஆர்வலர்கள், சீர்திருத்தவாதிகள் தோன்றி முற்போக்குக் கருத்துக்களைக் கூறிவந்தாலும், பெரிய மாற்றங்களோ, விழிப்புணர்வோ ஏற்பட்டுவிடவில்லை.
மார்க்சிய சித்தாந்தம் இந்தியாவில் நுழைந்த பிறகுதான் சமூக, அரசியலை இயக்க இயல் பொருள்முதல்வாத அடிப்படையில் இடதுசாரி ஆய்வாளர்கள் கணிக்க ஆரம்பித்தார்கள். தமிழகத்தைப் பொருத்தமட்டில் இடதுசாரி அணுகுமுறையோடு, அய்யா தலைமையில் பகுத்தறிவு சித்தாந்தமும் ஒரு இயக்கமாக எடுத்துச் செல்லப்பட்டது. அதுவும் பல சோதனைகளை, எதிர்ப்புகளைச் சந்தித்தது. அரசியல், சமூக, பொருளாதார களத்தில் அவற்றைச் செழுமைப் படுத்தி மார்க்சியத்தின் அடிநாதமான இயக்க இயல் பொருள் முதல்வாதம்தான் என்றைக்கிருந்தாலும் சரியான திறவுகோலாக இருக்க முடியும்.
ஆனால் இந்தத் தத்துவஞானம் இந்தியாவில் இன்னும் விரிந்து பரந்த மக்களைச் சென்றடையவில்லை. சென்றடைந்த சிறிய இடத்திலும் போதிய தெளிவுடன் பொலியவில்லை. மக்கள் தொகையில் மிக மிகச் சிறிய சதவீதத்தினரே இதுபற்றி தெளிவுடன் உள்ளனர். இதனை ஏராளமான மக்களிடம் இயக்கமாக எடுத்துச் சென்று மக்களின் கொள்கையாக மாற்ற வேண்டும். அவர்கள் புரிந்து கொள்ளும் மொழியில், எழுத வேண்டும், பேச வேண்டும். இப்படி ஓர் எண்ணம், ஆவல் எனக்கும் உண்டு. ஆனால் நான் ஒரு பெரிய சிந்தனையாளன், ஆய்வாளன் அல்லன். ஆனால் இடதுசாரி. எனவே நான் படித்த, புரிந்துகொண்ட மார்க்சிய தத்துவஞானத்தின் இயக்கஇயல் பொருள்முதல்வாதத்தை மிக எளிமையாக, எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் படித்தாலும் புரிந்து கொள்ளும் வகையில் ஏராளமான உதாரணங்களை எடுத்துச் சொல்லி, வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளை எடுத்துச் சொல்லி இந்த சிறு புத்தகத்தை எழுதினேன்.
சில தோழர்கள், குறிப்பாக மருத்துவமணி, காலம் சென்ற சுந்தா போன்றோர் தூண்டிக் கொண்டே இருந்தார்கள். அச்சு ஏறுவதற்கு முன்பாக எழுத்துப் பிரதியை சிரமப்பட்டு திருத்திய தோழர் மயிலை பாலு, செங்கை பாரதியார் மன்றத்தின் செயலாளர் அ.பேபி - ஆகிய இருவருக்கும் என் நன்றி. நான் படித்த புத்தகங்களில் உள்ளவற்றை, நான் புரிந்து கொண்டதை அப்படியே எடுத்து ஆண்டுள்ளேன். அதோடு என் சிந்தனை ஓட்டத்தையும் சேர்த்துள்ளேன்.
இதையெல்லாம் புரிந்து கொள்ள வேண்டும், அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிற ஆர்வலர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு தூண்டுகோலாக இருக்கும் என்ற குறிக்கோளோடு இதை எழுதினேன். ஆகவேதான் கேள்வி, பதில் என்ற முறையில் எழுதினேன். இதில் வரும் பேராசிரியர் அருணா; கற்பனையல்ல, பெயர்தான் வேறு. ஆனால் நான் நெஞ்சில் நிறுத்தியுள்ள ஒரு நிஜப் பேராசிரியர்தான்.
இடதுசாரி அரசியல், வரலாறு, சமூகம் பற்றிய இலக்கியங்களைத் தமிழகத்தில் உருவாக்கித் தந்ததில் அவருக்கு ஒரு பெரும் பங்குண்டு. இந்த நூல் நேர்த்தியாக வெளிவர உழைத்த பாரதி புத்தகாலய நண்பர்களுக்கு மிக்க நன்றி.
இதில் வரும் மூன்று மாணவர்களும் (இளைஞர்கள் என்றும் சொல்லலாம்) என்னோடு பரிச்சயம் ஆனவர்களே. இவர்களின் பெயர்களும் தரப்பட்டுள்ளன. பாலா, மாரி, செல்வா என்பவர்கள்.
சில இடங்களில் மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுகிற போது சில கருத்துக்கள் திரும்பத் திரும்ப சொல்லவேண்டி வந்தது. வாசக இளைஞர்களுக்கு, புதிதாகப் படிப்பவர்களுக்கு அவை அவர்களின் மனதில் படியுமே என்ற எண்ணம்தான்.
தத்துவம் பற்றி ஏராளமான புத்தகங்கள் வந்துள்ளன. இது ஒன்று கூடுதலாக வந்துள்ளது. ஆம், கூடுதல் தான். ஆனால் இயக்கவியல் பொருள் முதல்வாதத்தைப் படித்துப் புரிந்தவர் மக்கள் தொகையில் எத்தனை பேர்? மிக மிக எளிமையாக புரிய வேண்டும் என்று திட்டமிட்டே எழுதினேன். இதில் எனக்கு எவ்வளவு தூரம் வெற்றி கிடைக்கும் என்பதை வாசகர்கள் தான் சொல்ல வேண்டும்.
தே. இலட்சுமணன்
தொடர்புடைய மற்ற பதிவுகள்: