அசுரன் - வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம் - முன்னுரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/asuran-veezththappattavargalin-veera-kaaviyam
 
முன்னுரை

அறிய வேண்டிய அசுரன்!

- அறிஞர் ஒளவை நடராசன்

முன்னாள் துணைவேந்தர்

தென் திசையைப் பார்க்கின்றேன் என் சொல்வேன்! என்றன் சிந்தையெல்லாம் தோள்களெல்லாம் பூரிக்கு தட்டா!

அன்றந்த இலங்கையினை ஆண்ட மறத்தமிழன்

ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன்

குன்றெடுக்கும் பெருந்தோளான், கொடை கொடுக்கும் கையான்

குள்ள நரிச் செயல் செய்யும் கூட்டத்தின் கூற்றம்

என் தமிழர் மூதாதை! என் தமிழர் பெருமான்!

இராவணன் காண்! அவன் நாமம் இவ்வுலகம் அறியும்.

புரட்சிக் கவிஞரின் இந்த எழுச்சிப் பாடலை என் இளம்பருவத்தில் எங்கள் தமிழாசிரியர் சொல்லிச் சொல்லி வலியுறுத்தியது நினைவில் நிழலாடுகிறது. திராவிடர் கழகம் திராவிட உணர்வுகளைப் பரப்பத் தொடங்கியபோது, இராவணன், இரணியன், நரகாசுரன், கம்சன் ஆகியோரைப் பற்றிய கதைகளையெல்லாம் எடுத்துச் சொல்லி, இம்மாந்தர்கள் அந்நாளைய திராவிட உணர்வோடு திகழ்ந்த திருவினர் என்றும், இவர்களை இழிவாக எடுத்துக் காட்டுவது தமிழினத்தைத் தகர்ப்பதற்கான சமுதாயச் சாடல் என்றும் பெரியார் மேடைதோறும் இடிமுழக்கம் செய்து வந்தார். இராவண காவியம் என்றே புலவர் குழந்தை இராவணனைத் தலைமகனாகக் கொண்டு ஒரு காவியப் பனுவல் பாடினார். அந்த நூல் தடை செய்யப்பட்டு, பின்னர் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தபோது அத்தடை நீக்கப்பட்டது. மேலும் தமிழர்கள் அசுர இனத்தவர்கள் இல்லை என்ற தலைப்பிலேயே தமிழறிஞர்களும் இராவணன் வித்தியாதரனா, இராவணன் ஆரியனா என்றெல்லாம் அந்நாளில் மறுப்புகள் எழுதி வந்தனர். இதற்கு மாறாக, இராமன் திராவிடனே என்றும் எழுதி வந்தனர். இராவணன் கதையையும் அவனது புகழையும் சைவ உலகத்தினர் தம் திருமுறைகளில் புகழ்ந்து பாடுவதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இப்படி இடியப்பச் சிக்கல்களுக்குள் அகப்பட்டு, இராம காதை தடுமாறியது.

இராவணனை இலங்கேஸ்வரன் என்று புனைந்து காட்டும் ஆர்.எஸ்.மனோகரின் நாடகம் தமிழகத்தில் நூறு நாட்களுக்கு மேல் நடந்தது! 'கீமாயணம்' என்ற நாடகத்தை நடிகவேள் எம்.ஆர்.இராதா, தமிழகத்தின் சிற்றூர்களிலெல்லாம் நடத்திச் சீர்திருத்தப் புயலை எழுப்பினார்! பேரறிஞர் அண்ணாவும் தன்மான இயக்கத்தின் தலைவராக இருந்த நிலையில், இராம காதையை இழை இழையாகப் பிரித்துத் தம் எழுத்தழகோடு இணைத்து, இலக்கியத் திறனாய்வு நாடகமாக, இராவணன் பெருமை காட்டும் 'நீதிதேவன் மயக்கம்' என்ற ஒரு நாடகத்தைத் தாமே நடித்தும் காட்டினார்! இவ்வாறு திராவிட உணர்வுகள் புரோகித வெறுப்பையும் புராண மறுப்பையும் மூடநம்பிக்கை எதிர்ப்பையும் ஆணித்தரமாக வெளிப்படுத்துவதையே ஒரு கடமையாக முந்தைய பல ஆண்டுகளில் மேற்கொண்டு வந்தன.

எனினும், இந்த உணர்வு தமிழகத்தில் எழுந்தது போல பிற மாநிலங்களில் இப்போக்கில் வளர்ந்தனவா என்று முழுவதுமாக நினைக்க முடியவில்லை. இந்திய நாட்டு இலக்கிய விருதாகிய 'ஞானபீட விருது' வழங்கப்பட்ட நெடுங்கதைகளில் பல, இதிகாச நிழல் படிந்தவைதான்! தமிழ் மக்களுக்கு நடுவில் எழுந்த சீர்திருத்தச் சிந்தனை ஆழமாக வேர் பிடித்துவிட்டதால், வேடிக்கைக்குக்கூட இராமாயண பாரதக் கதை மாந்தர்கள் ஓரளவுக்கேனும் ஒரு வகையிலேனும் பாராட்டப் பெறும் எழுத்து வடிவம் கடந்த இருபதாண்டுகளாகத் தமிழ்நாட்டில் எழவே இல்லை! அப்படி யாரேனும் எழுதினால், அவர்களது முகமும் முகவரியும் எளிதில் புலனாகிவிடும்.

புகழ்வாய்ந்த ஆங்கில எழுத்தாளராகப் பூத்து வரும் ஆனந்த் நீலகண்டன், தமது கல்வித் தகுதியால் பொறியாளராக இருந்தாலும் தம் கற்பனை வளமும் கலைத் திறமும் மழலைப் பருவத்திலிருந்து தான் கேட்டு மகிழ்ந்த இராமாயணக் கதையும் பொங்கித் ததும்ப, ஆங்கிலத்தில் தமது முதற்படைப்பாக, வீழ்த்தப்பட்டவர்களின் வெற்றிக் காவியமாக, அசுரனை' வழங்கியுள்ளார். கேரள மாநிலத்தில் பிறந்து வளர்ந்து, கர்நாடக மாநிலத்தில் வாழ்ந்து வரும் அவர், இந்திய முழுமையோடும் ஆங்கிலப் புலமையோடும் இந்நெடுங்கதையை வளமான ஆங்கிலத்தில் வனப்போடு வரைந்துள்ளார். வட மாநிலங்களைச் சார்ந்தவர்களுக்கு இப்பெருங்கதை ஒரு புதிர்க்கதையாக, எதிர்க்கதையாகவே அமையும். ஆங்கிலம் படித்தப் பிற நாட்டினரும் இப்படிப்பட்டச் சிந்தனைகள் இந்தியாவில் மலர்வதைக் கண்டு வரவேற்பார்கள்!

"ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வேலேந்தித் திரிந்த வெறியனாக, பிறன்மனை நயந்த பேதையாக, இரக்கமில்லாத அரக்கனாக, பத்துத் தலைகளைக் கொண்ட பதராக நான் காட்டப்பட்டு வந்துள்ளேன். இதனால், எங்களுக்குள் வேறுபட்டிருந்த இனப் பகைவர்கள் என்னை வீழ்த்தியதை வாழ்த்திப் பேசும் மரபை வளர்த்தனர். தேவ குலத்தவர்களின் ஆட்சியில் கொடிகட்டிப் பறந்த சாதிச் சழக்கு, வம்பு வழக்கு, ஒரு குலத்தை உயர்த்தும் ஓரவஞ்சகம் - இவற்றையெல்லாம் நான் எதிர்த்தேன் என்பதற்காகவே என்னை அயலினத்தார் மிதித்து அழித்தார்கள். அசுர இன மக்களின் இந்த வரலாறு இதுவரை புதைக்கப்பட்டிருந்தது.

அறியப்படாதுள்ள அசுரர்கள் கதை இது. மூவாயிரம் ஆண்டுகளாகச் சாதியம் தலைவிரித்தாடி, அடங்காப்பிடாரியாக, அரசியலையும்கூட இன்றுவரை தன் கையில் அடக்கி வைத்திருக்கின்றது. ஆனால் இந்த உன்னதக் கதை, ஒடுக்கப்பட்டவர்களின் உள்ளத்தின் ஓலங்களாக இன்றும் எங்கோ மதிக்கப்பட்டுதான் வருகின்றது. அசுரர்கள் தலை நிமிர்ந்து, பிடர் சிலிர்த்துக் கொண்டு, விடுதலை வேங்கைகளாக வடிவெடுப்பதற்குரிய வாய்ப்பு இப்போதுதான் எழத் தொடங்கியிருக்கிறது." இத்தகைய புதையல் வரிகளை ஆனந்த் நீலகண்டன் தம் கதையில் ஆங்காங்கே சுடர்விடச் செய்திருக்கிறார். ஆங்கிலத்தில் உள்ள இந்தக் கதையை என் அருமைத் திருமகள் என்று நான் உரிமையோடு அழைத்து மகிழும் திருமதி நாகலட்சுமி சண்முகம், அலை புரளக் கரை புரள, அருவி கொட்டும் நடையில் பளிங்குத் தமிழில், எவரும் படித்தால் இது மொழிபெயர்ப்பா என்று வியப்படையும் வகையில் தமிழ்க் கதையாகப் படைத்திருக்கிறார்கள். மெருகில்லாத ஒரு மண்பானை, அங்குமிங்கும் துண்டாகிக் களிமண் பூசிய காட்சியுடையதாக இருப்பதைத்தான் பொதுவாக மொழிபெயர்ப்பு என்பார்கள். 'மின்னும் தங்கத்தைக்கூடக் கரிய களிம்பு கலந்த செம்பாக மொழிபெயர்ப்பாளர்கள் மாற்றிவிடுவார்கள்' என்றுகூடக் குறை சொல்வது உண்டு. திருமதி நாகலட்சுமி, மொழியாக்கப் பாதையிலேயே நடந்து நடந்து, அவரது எழுத்தும் மனமும் மொழிபெயர்ப்பிலேயே திளைத்துத் திளைத்துக் கலை பயின்ற தெளிவோடு, கனிந்த தமிழில் மொழியாக்கக் கலையின் சிகரத்தை அடைந்திருக்கிறார்கள். இது மொழிபெயர்ப்புக்குப் பெருமிதம் தருகிறது.

வீடணனைத் தமிழ்நாட்டில் ஆழ்வார் என்று நாம் போற்றுகிறோம். ஆனால் அண்ணனைக் காட்டிக் கொடுத்தவன் என்று வட மாநிலத்தவர் அவனை வஞ்சகனாகக் கருதுகின்றார்கள். மத்தியப் பிரதேசத்தில், வனத்தில் வாழ்பவர்கள், இன்றும் வில்லை வளைக்கும் போது வலது கட்டைவிரலைப் பயன்படுத்துவது இல்லையாம். ஏகலைவன் கதையினால் இந்தப் பழக்கம் அவர்களிடம் வந்ததாம். காலம் காலமாக, கற்றறிந்த பழமைவாதிகள், நாட்டுப்புறக் கதைகளைத் தமக்கு ஏற்ற வகையில் நயவஞ்சகமாக மாற்றிக் கொண்டனர் என்று கிரேக்க அறிஞர்களும் கருதுகின்றார்கள். விழிப்புணர்ச்சி வந்ததால், அகலிகை, தாரை போன்றோரின் கதைகளை, மரபுக்கு ஏற்ப, வான்மீகிக்கு வேறாகத் தமிழில் கம்பர் மாற்றிவிட்டார் என்பார்கள். இத்தகைய மாற்றங்கள் நெடிய ஆராய்ச்சிக்கு இடம் தருவனவாகும்.

இலங்கை அரசன் இராவணனின் கதையைத்தான் 'அசுரன்' என்று தலைப்பிட்டிருக்கிறார்கள். புகழாழர் ஆனந்த் நீலகண்டன், நேர்த்தியான கட்டமைப்பில் சீர்த்தியான ஆங்கிலத்தில் இதனை எழுதியிருக்கிறார். இக்கதை சொல்லப்பட்டிருக்கும் விதம், ஒரு தனிமனிதனின் கதை என்பதைத் தாண்டி, அசுரகுலச் சமுதாயம், பண்பாடு, அரச வாழ்க்கை போன்றவற்றையும் நமக்கு எடுத்துரைக்கிறது.

இராமனின் புனிதம் பேசும் பழைய கதையோ, சீதையின் பொறுமையையும் சீலத்தையும் புகழும் கதையோ அல்ல இது. இராமாயணம் என்று அறியப்பட்டக் கதைகளின் தொகுப்பில் இருந்து, அறியப்படாத ஒரு பழங்கதையை இது சொல்கிறது. இராவணனின் தன் வரலாறு என்று இதைக் கூறலாம். அசுரன் என்று அறியப்பட்ட அவன், மனம் திறந்து தன் சொந்தக் கதையை உணர்வோடும் உருக்கத்தோடும் சொல்கிறான்! அவன் சொல்லாமல் விட்டப் பகுதிகளை இக்கதையில் வரும் ஓர் எளிய குடிமகனான பத்ரன் சொல்கிறான்.

அசுரகுலத்தின் மகத்தான வாழ்க்கை வளர்ந்து மேலோங்கியதையும், காலப்போக்கில் கவிழ்ந்து மாண்டு மறைந்ததையும், அதில் தங்கள் பங்கு பற்றியும், மற்றவர்கள் செய்தவை பற்றியும் இராவணனும் பத்ரனும் மாறி மாறிச் சொல்கிறார்கள். அவர்கள் சொல்லும் முறையில், அசுர குலத்தின் நற்பண்புகளும், வீரமும், திறனும், நம்பிக்கைகளும், அவநம்பிக்கைகளும், ஆவல்களும், பேராசைகளும், மகளிருக்கு ஆடவர்மீதும் ஆடவருக்குப் பெண்கள் மீதும் உள்ள காதல் வெள்ளமும் அசுர குலத்தை எவ்வாறு அழித்தொழித்தன என்பதை நிலைக்களனாகக் கொண்டு, அசுரச் சமுதாயத்தின் மன ஓட்டங்களையும் கட்டற்ற வாழ்க்கையின் இயல்பு நெறிகளையும் நூலாசிரியர் விரிவாகக் காட்டியிருப்பது குறிக்கத்தக்கது.

அசுரன்' கதை சொல்வதுபோல இதுவரையில் இராவணன் கதை உள்ளபடி சொல்லப்படவில்லை. இதுவரை பொதுவாக அவன் தீயவனாக, அசுரனாகப் புனையப்பட்டிருக்கிறான், அது ஏற்கப்பட்டிருக்கிறது. அதனை உடைத்து அசலான இராவணன் தன் கதையைச் சொல்கிறான். அது பண்டைய காலத்து அரசுமுறை சார்ந்த சமூக, கலை, பண்பாட்டுக் காட்சிகளைக் கொண்ட வாழ்க்கையைச் சார்ந்திருக்கிறது.

சமூகமும் அரசும் எல்லா இடங்களிலும் ஒன்றில்லை. அது ஒன்றுபோல இருக்கும், ஆனால் ஒன்றில்லை என்பதுதான் உண்மை. ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு பகுதியிலும் அரசுமுறை, பண்பாட்டு நெறிப்பாடு, நீதிமுறை, ஒழுக்க விதிகள் ஆகியவை மாறுபட்டு இருக்கின்றன. ஆனால் ஒன்றின்மீது மற்றொன்று, தனி மேலாதிக்கத்தை அந்நாளில் நிலைநாட்ட முற்படவில்லை. ஒவ்வொரு சமூகமும் ஆட்சியும் தன்னளவில் தனியாட்சியாக அமைந்திருந்தன. அதனால் தான் தேவர்களின் ஆட்சிமுறை, அசுரர்களின் ஆட்சிமுறை, வானரர்களின் ஆட்சிமுறை என்பதெல்லாம் ஒன்றுக்குள் ஒன்று முரண் இல்லாமல் ஒரு காலத்தே இருந்து வந்தன. ஒன்று மேலானது என்றோ, இன்னொன்று தாழ்வானது என்றோ மதிப்பீடும் போற்றுதலும் செய்யும் உரிமை யாருக்கும் இல்லை. இந்தச் சூழலை எந்த இனப்பூசலுக்கும் கசப்புகளுக்கும் இடம் தராமல் நெடி குறையாமல் நூலாசிரியர் எழுதியுள்ளது அவருடைய நுண்ணறிவைப் பறைசாற்றுகிறது.

தயரதன் மகன் இராமன், அரசு துறந்து, தன் மனைவி சீதையும் தனது உடன் பிறப்பு இலட்சுமணனும் உடன்வரக் கானகம் சென்றான். தனது சமூக, கலை, பண்பாட்டுக் கூறுகள் கொண்ட, தான் சார்ந்த முறையிலான ஆட்சிமுறையை எல்லா இடங்களிலும் அவன் நிலைநாட்டத் தொடங்கினான். அதிகாரம் செலுத்தத் தனக்கு அதிகாரம் இருக்கிறது என்று அவன் செயற்பட்டான். அக்கதை ஒரு வரலாறுபோல இலக்கியமாகச் சொல்லப்படுகிறது.

ஆனால் 'அசுரன்' நாவல் நாமறிந்த இராமாயணத்தை இராவணனின் பார்வையில் சொல்கிறது. இராமனின் மனைவியான சீதை, இராவணன் - மண்டோதரி இணையரின் மகள். இராவணனின் வீழ்ச்சியும் சாவும் அவனது மகளால் நேரும் என்ற நிமித்தகரின் கணிப்பால் அவள் கைவிடப்படுகிறாள். அவளை மிதிலை மன்னன் சனகன் எடுத்து வளர்க்கிறான். ஆனால் இராவணன் தன் மகள் மீது கொண்ட பாசத்தாலும் பரிவாலும் செய்யும் செயன்மைகள் தான் அவனது வீழ்ச்சிக்குக் காரணமாகின்றன. அவன் அன்பானவன். தன் மகளின் நல்வாழ்க்கையை எப்போதும் கருத்தில் கொண்டிருக்கிறான். இது உணர்வுப் பிழம்பாக வடிக்கப்பட்டிருப்பதால் இயல்பாகவே அழுத்தம் அமைந்த செறிவுடையதாக விளங்குகிறது.

பண்டைய கதைகளை மீள்நோக்குப் பார்வையில் புதிய சிந்தனைக்கு ஏற்ற வகையில் நாவலாகச் சொல்வது என்ற போக்கு உலகம் முழுவதிலும் பெருகி வருகிறது! வாழ்க்கை என்பது எவ்வளவு மாறியிருந்தாலும், வசதிகள் பெருகியிருந்தாலும், மனித மனம் எப்பொழுதும் ஒன்றாகவே இருக்கிறது. அதற்குப் புதுமை, பழமை என்பதெல்லாம் இல்லை. அது என்றும் நிலையாக இருக்கிறது. அதனை ஒவ்வொருவரும் கலை இலக்கியங்கள் வழியாக அடையாளம் காண முற்படுகிறார்கள் என்பதுதான் இன்றைய போக்கு என்று அறிஞர் சா.கந்தசாமி எழுதிய கருத்து எண்ணத்தக்கது.

மாந்தர்களின் உள்ளுணர்வு குடும்பம், குழந்தைகள் என்பவற்றோடு இணைக்கப்பட்டிருக்கிறது. அது அறியப்பட்டாலும் சரி, அறியப்படாவிட்டாலும் சரி, வாழ்க்கை என்பதற்கு அதுவே அடித்தளமாக இருக்கிறது. இராமாயணம் என்னும் காப்பியமும் அதுதான். இருபதுக்கு மேற்பட்ட இராமாயணங்கள் இருந்தாலும், பெற்றப் பிள்ளைமீது கொண்ட பரிவும் தந்தையின் உருக்கமும் பொதுவாக முதன்மை பெறுகின்றன.

'அசுரன் கதை' தன் மகள் சீதைமீது இராவணன் கொண்ட எல்லையற்ற அன்புணர்ச்சியின் வெளிப்பாடுதான்! சீதை அசுரகுலத்து அரசியாக வளரவில்லை என்றாலும், அவள் அவனுடைய மகள். அவளுடைய நல்வாழ்க்கை என்பது அவனையே சார்ந்திருக்கிறது. அதை நிலைநாட்ட இராவணன் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் தவறாகப் போக, அவனது உடன்பிறப்புகள், மகன் என்று பலரும் மாண்டு போகிறார்கள். இறுதியில் அவனே கொல்லப்படுகிறான்! அசுரகுலம் அழிந்து போகிறது! இராவணன் புரிந்து கொள்ளப்படாதவனாகிறான்!

இந்த வகையில் இக்கதையை அமைத்துள்ள ஆனந்த் நீலகண்டன், சமுதாய உணர்வு ஊறிய கற்பனைக் கலைவண்ணத்தோடும் அறிவாற்றலோடும் இப்புதினத்தைப் புனைந்திருக்கிறார்.

அழகுக்கு அழகு சேர்ப்பதாக மொழியாக்கம் மிளிர்கிறது. தமிழாக்கத்தை மட்டும் படித்த நிலையிலேயே இந்த அணிந்துரை அமைகிறது. ஆங்கிலவாணர்களின் கருத்துரையும் ஏறத்தாழ என் போக்கை ஏற்கும் என்றே துணிகிறேன். முதற்படைப்பையே முதன்மையான படைப்பாக வரைந்த அறிஞர் ஆனந்த் நீலகண்டனுக்கு என் வாழ்த்து. முகம் பாராமல் அகம் பார்த்து எழுதும் முகவுரையில் உண்மைகளே பளிச்சிடும்.

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

Back to blog