அசுரன் - வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம் - பதிப்புரை
"அசுரப் பேரரசன் ராவணன் ஆறு வருடங்களாக என் கனவுகளில் என்னைத் துரத்திக் கொண்டிருந்தான் ....''
- ஆனந்த் நீலகண்டன்
கேரள மாநிலத்திலுள்ள கொச்சி நகரின் புறநகர்ப் பகுதியில் அமைந்த திரிபூனித்துரா எனும் பழமையான சிறிய கிராமத்தில் நான் பிறந்தேன். எர்ணாகுளத்திற்குக் கிழக்கே வேம்பனாடு ஏரிக்குக் குறுக்காக அமைந்த இக்கிராமம், கொச்சி ராஜ வம்சம் கோலோச்சிய இடம் என்ற தனித்துவமான சிறப்பைப் பெற்றுள்ளது. ஆனாலும், இக்கிராமம் தனது நூற்றுக்கணக்கான கோவில்களாலும், இங்கு பிறந்த பல்வேறு கலைஞர்களாலும், தனது இசைப் பள்ளியாலும் பெருமை பெற்றுள்ளது. அக்கோவில்களிலிருந்து வந்த மிக மெல்லிய செண்டை ஒலியையும், இசைப் பள்ளியின் கரடுமுரடான சுவர்களைக் கடந்து காற்றில் மிதந்து வந்த புல்லாங்குழலின் இனிய இசையையும் கேட்டபடியே பல மாலைப்பொழுதுகளை நான் செலவிட்டது என் நினைவில் உள்ளது. வளைகுடாப் பணமும் மிக வேகமாக விரிவடைந்து கொண்டிருக்கும் கொச்சி நகரமும், அந்தப் பழங்கால வசீகரத்தின் எச்சசொச்சங்களை முற்றிலுமாகத் துடைத்தெறிந்துவிட்டுள்ளன.
இந்தியா நெடுகிலும் இருப்பதைப்போலவே, இக்கிராமமும் வழக்கமான குறிப்பிடத்தக்க அம்சம் ஏதுமற்ற ஒரு புறநகர் நரகக் குழியாக மாறியுள்ளது. தேவைக்கு அதிகமாகவே கோவில்கள் இருந்த ஒரு கிராமத்தில் நான் வளர்ந்து வந்ததால், ராமாயண காவியம் எனக்கு பிரமிப்பூட்டியதில் வியப்பேதும் இல்லை. இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், கதையின் வில்லனான ராவணனும், அவனது குடிமக்களான அசுரர்களும்தான் என்னைப் பெரிதும் கவர்ந்தனர். அவர்களது மாயாஜால உலகைப் பற்றி நான் வியந்தேன். அவர்கள் குறித்து நான் கொண்டிருந்த ஈர்ப்பு, பல வருடங்களாக என்னுள் தொடர்ந்து உறங்கிக் கிடந்து வந்துள்ளது. எங்கள் குடும்ப உறுப்பினர்கள் ஒன்றுகூடும் நேரங்களில் மட்டும், சமயப் பற்றுக் கொண்ட எனது அத்தைமார்கள் மற்றும் சித்திமார்களுக்கு எரிச்சலும் கோபமும் ஏற்படுத்தும் விதத்தில் அது அவ்வப்போது தலைதூக்கும். வாழ்க்கை தன் போக்கில் சென்று கொண்டிருந்தது. நான் ஒரு பொறியியல் வல்லுனராக ஆனேன்; பிறகு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலைக்குச் சேர்ந்தேன்; பெங்களூருக்குக் குடிபெயர்ந்தேன்; அபர்ணா என்ற அன்பான பெண்ணைத் திருமணம் செய்து கொண்டேன்; என் மகள் அனன்யாவுக்கும் என் மகன் அபினவுக்கும் தந்தையானேன்.
ஆனால் ராமாயணத்தின் அந்த அசுரப் பேரரசன் என்னைத் தனியாக விடுவதாக இல்லை. ஆறு வருடங்களாக அவன் எனது கனவுகளில் என்னைத் துரத்தினான், என்னுடன் நடந்து வந்தான், கதையைத் தனது கண்ணோட்டத்திலிருந்து எழுதும்படி என்னை வற்புறுத்தினான். தனது கதையைத் தனது கண்ணோட்டத்திலிருந்து கூற விரும்பியவன் இவன் ஒருவன் மட்டுமல்ல. ராமாயணத்தில் இடம்பெற்ற சம்பந்தமற்ற மற்றும் மிகச் சிறிய கதாபாத்திரங்கள் கூட ஒவ்வொன்றாகத் தங்களது சொந்தக் கண்ணோட்டங்களில் தங்கள் கதைகளைக் கூறத் துவங்கின. ராவணனால் உத்வேகம் பெற்று, அவனால் வழிநடத்தப்பட்டு, இறுதியில் அவனால் வஞ்சிக்கப்பட்டப் பொதுவான அசுரர்கள் பலரில் ஒருவனான பத்ரனிடமும் ஒரு குறிப்பிடத்தக்கக் கதை இருந்தது. இது அவனது அரசனான ராவணனிடமிருந்து வேறுபட்டிருந்தது. ராவணன் மற்றும் பத்ரனின் கண்ணோட்டங்களின்படி அமைந்துள்ள இவ்விரு கதைகளும், கடந்த மூவாயிரம் ஆண்டுகளாக ஆசியா நெடுகிலும் ஆயிரக்கணக்கான விதங்களில் கூறப்பட்டு வந்துள்ள ராமாயணத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளன. அப்படியென்றால் இக்கதை அசுராயணம் என்று அழைக்கப்பட வேண்டும். இது அசுரர்களின் கதை, வீழ்த்தப்பட்டவர்களின் கதை.