இது நாடறிந்த கதை, நம் நாட்டிலுள்ள ஒவ்வொரு வீடும் அறிந்த கதை. கடவுளின் அவதாரமான' ராமன், 'அரக்கனான' ராவணனை வதம் செய்த இக்கதையை ஒவ்வோர் இந்தியனும் அறிவான். ஆனால் வரலாற்றில் எப்போதும் நிகழ்வது போல, வெற்றியாளர்களின் கண்ணோட்டத்தில் அவர்களுக்குச் சாதகமாகத் திரித்து எழுதப்பட்ட ஒரு கதை அது. அக்கதை வெற்றியாளர்களால் எழுதப்பட்டதால் அந்த வடிவமே நிலைத்து நின்றுவிட்டதில் எந்தவொரு வியப்பும் இல்லை. தோற்கடிக்கப்பட்டவர்களின் வீரக்கதை அமுக்கப்பட்டு விட்டது. நம்மிடம் கூறுவதற்கு ராவணனிடமும் அவனது மக்களிடம் வேறு ஒரு கதை இருந்தால்?
"ஆயிரக்கணக்கணக்கான வருடங்களாக நான் வில்லனாகச் சித்தரிக்கப்பட்டு வந்துள்ளேன். எனது இறப்பு இந்நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏன்? என் மகளுக்காக நான் தேவர்களின் கடவுளை எதிர்த்தேன் என்பதனாலா? அல்லது தேவர்களின் ஆட்சியின் கீழ் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த சாதீயச் சமுதாயத்தின் நுகத்தடியில் இருந்து ஓர் இனத்தை விடுவித்தேன் என்பதனாலா? நீங்கள் இதுவரை வெற்றியாளனின் கதையான ராமாயணத்தைக் கேட்டு வந்திருக்கிறீர்கள். இப்போது ராவணாயணத்தைக் கேளுங்கள். இது அசுர இனத்தைச் சேர்ந்த ராவணனாகிய எனது கதை. இது வீழ்த்தப்பட்டவர்களின் வீரக்கதை.
“ராவணன் மற்றும் அவனது அசுர இன மக்களின் மகத்தான இந்த வீரகாவியம் இதுவரை சொல்லப்பட்டிருக்கவில்லை. ஆனால் 3000 வருடங்களுக்கும் மேலாக, சாதீயம் தலைவிரித்தாடிக் கொண்டிருந்த, இன்னும் பேயாட்டம் போட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு சமுதாயத்தால் தீண்டத்தகாதவர்களாக அடக்கி ஒடுக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த, இன்றும் ஒடுக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கின்ற ஓரினத்தால், தலைமுறை தலைமுறையாக, இக்கதை போற்றிப் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. இதுவரை இக்கதையை எந்த அசுரனும் சொல்லத் துணிந்திருக்கவில்லை. மடிந்து போனவர்களும் வீழ்த்தப்பட்டவர்களும் தங்களது வீரக்கதையை எடுத்துக்கூறுவதற்கான சமயம் இப்போது கைகூடி வந்துள்ளது.