அசல் மனுதரும சாஸ்திரம் - பதிப்புரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/asal-manudharma-sastram 
நமது பதிப்புரை

மனுநீதி பற்றி ஆய்வாளர்கள்!

1919-இல் முதன் முதலில் பதிப்பிக்கப்பட்ட மனுதர்மம் மீண்டும், 'அசல் மனுதர்மம்' என்ற தலைப்பில், எவ்விதமாற்றமுமின்றி நாம் வெளியிடுவதற்குக் காரணம், ஜாதி, குலதர்மத்தின் மூல நூலான மனுதர்மத்தை இன்றைய தலைமுறையினரும், ஆய்வாளர்களும் அதில் உள்ளவாறே அறிதல் வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே!

இந்து லா' என்ற சட்டத்தின் மூலங்களில் மனு ஸ்மிருதியும் ஒன்று.

அது எப்படி, எப்போது, யாரால் உருவாக்கப்பட்டிருக்கக்கூடும் என்பது பற்றி, உயர் நீதிமன்றத் தீர்ப்புக்களை அப்படியே வெளியிடும் Madras Law Journalஇல் வந்த ஆராய்ச்சிக் கட்டுரையில் (இணைப்பு) உள்ள கருத்துப்படி,

மனுதர்ம சாஸ்திரம்' என்ற இந்தக் குலதர்ம நூல் ஒரே ஒரு நபரால் எழுதப்பட்டதல்ல என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவு.

1947-ஆம் ஆண்டு Madras Law Joumal என்ற (உயர் நீதிமன்ற வழக்குகளின் தீர்ப்புகளை மாதந்தோறும் வெளியிடும் ஓர் (19471 MLJ Journal Section - page 27 to 38) ஏட்டில் 'An enquiry into the source and authorship of the Manu Smritis' என்ற தலைப்பில் ஓர் ஆய்வுக் கட்டுரை வெளியாகியுள்ளதில் உள்ள சில முக்கிய செய்திகளின்படி,

இப்போது அச்சில் புத்தக வடிவில் உள்ள மனுநீதி என்பது ஒரு தொகுப்புதான், மூன்று மனுக்கள் பற்றிப் பேசப்படுகிறது. வேதகாலத்திலிருந்து,

1. மனு வைவாஸ்வதா (Manu Vaivasvata)

2. மனு அப்சாவா (Manu Apsava)

3. மனு சம்வரணா (Manu Samvarana)

ரிக் வேதம் மனுவை மற்ற ரிஷிகளில் ஒருவராகத்தான் குறிப்பிடுகிறது. தந்தை மனு' என்றே குறிப்பிடுகிறது.

யஜுர் வேதத்தில் மனு பிரஜாபதி என்று குறிப்பிடப்படுகிறார்!

அதர்வண வேதத்தில் வேறு யாருக்கும் யாருக்கும் பிறந்த பிள்ளை என்பது கூட (சரணயூவுக்கும் வாஸ்துக்கும்) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதல்லாமல், இன்னொரு ஆறு மனுக்களும் பேசப்படுகிறார்கள்!

இவர்கள் சுயம்புவான மனுவின் புத்திரர்களாம்!

குல்லூகபட்டர் மனுவை ஆத்மாவின் "உயர் கட்ட உருவம்" (Supreme Soul) என்று கூறுகிறார்.

கோவிந்தராஜர் அவரை "மகரிஷி" என்கிறார். மேதாதிதி வேதங்களை நன்கு ஆராய்ந்த ஒரு சிறந்த வல்லுநர் - மனிதர் என்றார். (இவை எல்லாம் பெரிதும் கற்பனைக் கதைகளாகத்தான் இருக்கமுடியும்)

அதுபற்றி ஆய்வு செய்த ஆராச்சியாளர்கள்:

1. மாக்ஸ் முல்லர் (Max Muller)

2. பூலர் (Buhler)

3. டாக்டர் ஜோலி (Dr. Jolly)

4. ஜெயஸ்வால் (Jayaswal)

5. பி.வி கானே (P.V. Kane)

ஆகியோர் முக்கியமானவர்கள்.

பிரபல ஆய்வாளரான ஜெய்ஸ்வால் என்பவர், மனு ஸ்மிருதி என்பது கி.மு 150-க்கும், கி.பி. 100-க்கும் இடையில்தான் உருவாக்கப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும். அதுவும் எந்தக் காலக் கட்டத்தில் என்றால், புஷ்யமித்ர சுங்கனால் நிறுவப்பட்ட சுங்க ஏகாதிபத்தியத்தின் காலத்தில், புத்தமதக் கொள்கைகளை அழித்து அசோகரின் மவுரிய சாம்ராஜ்யத்தினையும் அவரின் புத்திரர்களையும் அழித்து, அரசியல் செல்வாக்குப் பெற்று, பார்ப்பனீயமும், வைதீகமும் அடைந்த வெற்றியைக் குறிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டதுதான் மனுதர்மம் என்பதுடன், அதற்கு மனுவின் பெயர் வைக்கப்பட்டதே தவிர, அவர் அதன் உண்மையான ஆசிரியர் என்பதால் அல்ல.

ஏற்கெனவே அனைவருக்கும் பொதுவான நீதி குறித்த கிரிமினல், சிவில் சட்டங்களை அழித்து, இந்த மனுதர்மச் சட்டம் அமலாக்கப்பட்டது

அர்த்த சாஸ்திரத்தில் உள்ள நீதிகள் தான் இதில் (காப்பியடிக் கப்பட்டு) நகல் எடுத்து எழுதப்பட்டவை. (ஆதாரம்: மனுவும் யக்ஞ் வல்கியரும் என்ற நூல்.)

அர்த்தசாஸ்திர சட்டங்களின் இடத்தை மனுதருமம் பிடித்துக் கொண்டு கோலோச்சுகிறது.

ஆய்வாளர் ஜெய்ஸ்வால் கூறுகிறார்:

"மதச் சார்பற்ற சட்டங்களை விரட்டி அந்த இடத்தினை மனு தர்ம சட்டம் பிடித்துக் கொண்டது.''

"ஜெயஸ்வாலின் கருத்து என்னவென்றால், மதச்சார்பற்ற சட்டம் ஆட்சி செய்த மண்ணில் முதல்முதலாக ஊடுருவியது மனுஸ்மிருதிதான். அத்தகைய ஊடுருவலின் நோக்கமே பார்ப்பனர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் அதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த அர்த்த சாஸ்திரத்தின் மதச் சார்பற்ற சில சட்டங்களை நவீனமாக்கு வதாகும். அவ்வாறு இந்தச் சட்டங்கள் சுங்கர் காலத்தில் மாற்றி நவீனமாக்கப்பட்டதும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டிருக்கவில்லை.

பார்ப்பனர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் சட்டங்களை மாற்றி அமைப்பதற்காகத்தான் மனு ஸ்மிருதி தொகுக்கப்பட்டது என்று எடுத்துக் கொண்டாலும், இத்தகைய மாற்றி அமைக்கப்படுதல் சற்று முந்தைய காலத்திலேயே நடந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஏனெனில் அப்போது பார்ப்பனர்களின் செல்வாக்கு ஏறுமுகத்தில் இருந்தது. க்ஷத்திரியர்களைப் பரசுராமர் அழித்துப் புகழ் பெற்றது அல்லது விஸ்வாமித்திரரைவிட வசிஷ்டர் அதிக செல்வாக்குப் பெற்றிருந்த காலம் அது.

சுங்கர் காலத்தில் மட்டுமே பார்ப்பனர்கள் அதிகாரம் பெற்றிருக்க வில்லை என்பது கவனிக்கத் தக்கது. புத்த மதம் தோன்றுவதற்கு முன்பிருந்தே அது ஆற்றல் மிகுந்த சக்தியாக இருந்து வந்துள்ளது.

மனுஸ்மிருதியில் சேனபாட்யா பற்றிய குறிப்பில் இருந்து புஷ்ய மித்ராவுக்கு நாம் சென்றுவிடத் தேவையில்லை. ஒரு பார்ப்பனர் ஆயுதம் ஏந்துவதோ, ஒரு தளபதியாகப் படையைப் போர்க்களத்தில் வழிநடத்திச் செல்வதோ பண்டைய ஆரிய சமூகத்தில் நடைபெற்றது தான். பரசுராமரும் துரோணரும் இதற்குச் சரியான எடுத்துக் காட்டுகளாவர்."

இத்தகைய மனுநீதியை 'சுயராஜ்யம்' வந்தால் அரசமைப்புச் சட்டமாகவே ஆக்க வேண்டும்; ஆக்குவோம் என்று கூறியவர்தான், இந்துத்துவாவின் முன்னோடிகளில் ஒருவரான பாலகங்காதர திலக் என்ற மராத்திய (சித்பவன் பிரிவு) பார்ப்பனர்.

இவரைப்பற்றி மேற்கோளாக அடிக்கடி கூறப்படுவது சுயராஜ்யம் நமது பிறப்புரிமை என்பார் திலகர் என்ற வாசகங்கள்.

இவரது 'சுயராஜ்யம்' மனு ஆட்சிதான் என்பதற்கு மகாராஷ்டிர அரசின் கல்வித் துறை 1994-இல் வெளியிட்ட 'சத்திரபதி சாகு - சமூக ஜனநாயகத்தின் தூண்' (Chatrapathi Sahu - The Pillar of Social Democracy) என்ற நூலில், 363-364 பக்கங்களில் ("Our Law is Manu Smriti" and pointed out that the law (Manu Smriti) orders king to administer with the help of learned persons and Brahmins - (Samagra Lokmanya Tilak- Vol.VI - pages 449-50)

"நமது சட்டம் மனுஸ்மிருதிதான்'' என்று கூறிய திலகர், கற்றறிந்தவர்கள் மற்றும் பார்ப்பனர்களின் உதவியுடன் அரசன் ஆட்சி நடத்த வேண்டும் என்று இந்த மனுஸ்மிருதி சட்டம் இருப்பதைச் சுட்டிக் காட்டினார்.

Manu Smriti was to be the law of Swarajya, according to Tilak. (Tilak's speech at Yeotmal on 9th Jan 1917)

சுயராஜ்யத்தின் சட்டமாக மனுஸ்மிருதிதான் இருக்க வேண்டும் என்று திலகர் விரும்பினார். (யோத்மாலில் 1917 ஜனவரி 9 அன்று திலகர் பேசிய பேச்சு)

"In his speech at Athani on 11th November 1917, Tilak used strong language and strong logic in denying position to different professional castes in the Legislative Council of Bombay Presidency."

பம்பாய் மாகாண சட்ட மன்ற மேலவையில் பல்வேறுபட்ட தொழில் செய்பவர்களுக்கு இடம் அளிப்பதை எதிர்த்துத் திலகர், ஆதானியில் 1917 நவம்பர் 11 அன்று பேசிய தமது பேச்சில் கடுமையான மொழியில், ஒரு தீவிரமான வாதத்தை முன்வைத்தார்.

"Tilak advised the untouchables not to take secondary education after primary education; he wanted them to learn crafts of their caste. He thus, believed in the continuation of caste professions for untouchables, and not in giving higher education to them."

"தொடக்கக் கல்விக்குப் பின் இடைநிலைக் கல்வியைத் தொடரவேண்டாம்" என்று தீண்டத்தகாத மக்களுக்குத் திலகர் ஆலோசனை கூறினார். இதன் மூலம் தீண்டத் தகாத மக்களின் ஜாதித் தொழில்களை அவர்கள் தொடர்ந்து கடைப்பிடிப்பதை நம்பிய திலகர் அவர்களுக்கு உயர் கல்வி அளிக்கப்படுவதை எதிர்த்தார்.

1952-இல் சென்னை மாகாண முதலமைச்சரான திரு. ராஜகோபாலாச்சாரியார் கொண்டு வந்து, பின்னர் தந்தை பெரியார் - இயக்கத்தாரின் பேரெதிர்ப்பால் கைவிடப்பட்ட குலக்கல்வித் திட்டம் இதேதான். இதில் திலகர், ராஜாஜி எல்லாம் ஒத்த கருத்தாளர்களே என்பது கவனிக்கத் தக்கது.

டாக்டர் கரண்சிங் என்பவர் காஷ்மீர் அரச பரம்பரையைச் சேர்ந்தவர். ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநராகவும், பின்னர் மத்திய அமைச்சராகவும் இருந்தவர். சமஸ்கிருதத்தை வளர்க்க விரும்பி விசுவ இந்து பரிசத் அமைப்பின் தலைவராக ஆனார். ஆனால் 1980 முதல் வி.இ.ப. அமைப்புகளுடனான தமது தொடர்பை அவர் பெரிதும் குறைத்துக் கொண்டர். ஏன் தெரியுமா?

இந்து மதத்தைப் புதுப்பித்தல்' என்பதை விட 'இந்து மறுமலர்ச்சி' என்பதற்கு இவர் அதிக முக்கியத்துவம் அளித்தார். அவர் விரும்பிய இந்து மறுமலர்ச்சி' என்பது சமூக சீர்திருத்தம் அல்லது மாற்றமே அன்றி, இந்து முஸ்லிம் போராட்டத்துடனோ, அல்லது இந்து மதத்தைப் புதுப்பித்தல் என்பதுடனோ எந்த விதத்திலும் தொடர்பு உடையது அல்ல. அவரைப் பொருத்தவரை, இந்து மதத்தைப் புதுப்பித்தல் என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தை மறுப்பதும், மனு ஸ்மிருதியைத் தேவையற்றபடி அறிமுகப்படுத்தி நாட்டை 2,500 ஆண்டு காலத்துக்குப் பின்னோக்கிக் கொண்டு செல்வதுமே ஆகும்.

(ஆதாரம்: Vishva Hindu Parishad and Indian Politics - By Manjari Katju - Page No: 31)

''வள்ளுவர் செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனுவாதி ஒரு குலத்துக்கொரு நீதி”

(- பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை)

இதை ஊன்றிப் படித்து, உண்மையை உணருங்கள்.

 

தேதி: 25.9.2004

(கி. வீரமணி)

Back to blog