அறியப்படாத தமிழ்மொழி - அணிந்துரை#2

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/ariyappadaatha-thamizhmozhi 
அணிந்துரை #2

அ. கலியமூர்த்தி, IPS

(Former Superintendent of Police, Tiruchirapalli)

 

 அமெரிக்க வாழ் தமிழறிஞர் முனைவர்.கரச என அழைக்கப்பெறும் திருவாளர் கண்ணபிரான் இரவிசங்கர் ‘அறியப்படாத தமிழ்மொழி’ என்னும் பெயரில் ஓர் அரிய ஆய்வு நூலைத் தமிழ் கூறு நல்லுலகிற்கு வழங்கியுள்ளார். நுண்மாண் நுழைபுலம் மிக்க இந்நூலாசிரியரின் ஆய்வுத்திறனும், அறிவியல் பார்வையும், தருக்க ரீதியான வாதங்களும், பழைய மரபிலே ஊறிக் கிடக்கின்ற இலக்கிய வாசகர்களை (அவர் கூற்றுப்படிப் பண்டிதாளை) வியப்பில் ஆழ்த்தக்கூடும். இந்நூலின் ஆசிரியர் பல வினாக்களை எழுப்பியுள்ளார். அவ்வினாக்களுக்குப் பொருத்தமான விடைகளையும் தர முயன்றுள்ளார். அரிய செய்திகளை எளிமையாக விளக்குவதில் நூலாசிரியர் வெற்றி கண்டுள்ளமையை நன்கு உணர முடிகிறது.

இந்நூல் வழக்கமான இலக்கிய, இலக்கண, கவிதை, புதினப் புத்தகம் அல்லவென்பதையும், வாசகர்களோடு நேரடியாகப் பேசும் புத்தகம் என்பதையும் எடுத்த எடுப்பிலேயே குறிப்பிடுவதைப் புதியதோர் அணுகுமுறை என்றே கருதலாம். புலவர்கள் மற்றும் அறிஞர்கள் அளவிலேயே தங்கிவிட்ட தமிழ் உண்மைகளை, வாசகர்களாகிய நாம் வாழும் வீதிகளுக்கும் வீடுகளுக்கும் எடுத்து வருவதே இந்நூலின் நோக்கம் என ஆசிரியர் குறிப்பிடுகிறார். மேலும் காலங்காலமாய் ஊறி ஊறித் தூர் வாராமலேயே குட்டையாகி விட்ட தமிழ்க்குளத்தை வாசகர்களோடு சேர்ந்து தூர்வாரும் புத்தகமே இது என்கிறார். இதன்மூலம் அறியப்படாத உண்மைகள் பலவற்றை அறியவிருக்கிறோம் என்பதை உணர்கிறோம். இந்நூலை வாசிக்கும்போது வாசகர்கள் நடுவுநின்ற நன்னெஞ்சினராய் மதப் பிடித்தம், அரசியல் பிடித்தம் மறந்து, தமிழைத் தமிழாக மட்டும் அணுகிப் பார்க்க வேண்டுமென்பதே அவரின் வேண்டுகோள். இவ்வேண்டுகோள் நம்மை வியப்பில் ஆழ்த்துவதோடு, நூலாசிரியரின் உண்மை காணும் வேட்கையினைப் புலப்படுத்துவதாக உள்ளது.

 தமிழ்ப் பொய்யா?

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்தகுடி – வெற்றுப் பெருமை பேசும் வாசகமா (Punch Dialogue)? புறப்பொருள் வெண்பா மாலையில் இடம்பெறும் முழுப்பாடலையும் தந்து அப்பாடலுக்கான அரிய விளக்கத்தையும் கூறுகிறார்.

பொய் அகல, நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்?

வையகம் போர்த்த வயங்கு ஒலி நீர் - கை அகலக்

கல்தோன்றி, மண்தோன்றாக் காலத்தே, வாளோடு

முன்தோன்றி மூத்த குடி!

 இப்பாடலில் இடம் பெறும் கல்-மலை (குறிஞ்சி), மண்-வயல்(மருதம்).  ஆதித் தமிழ் வீரர்கள் தோல்வி என்னும் பொய் அகல புகழை நிலைநாட்டும் வீரம், என்னே வியப்பு? உலகத்தை மூடியிருந்த கடல் நீர்ப்பரப்பு விலகியதால், குறிஞ்சி(மலை) முல்லை(காடு) தோன்றி, மருத நாகரிகம் தோன்றாத காலத்தே, கையில் வாளோடு வெளிப்பட்டு ஆநிரைகளைக் கரந்தை வீரர்கள் காக்க நின்றார்கள் என்பதே பாடலின் பொருள். இம்முழுப் பாடலின் பொருளை உணர்ந்தால், தமிழர்கள் தங்கள் பெருமையைப் பீற்றிக் கொள்வதற்காக இயற்றப்பட்டதல்ல இப்பாடல் என்பதையும், உலகத் தோற்ற வரலாற்றை விளக்கும் பாடல் இது என்பதையும் நூலாசிரியர் நுட்பமாக ஆய்ந்து உணர்த்துவதை அறிய முடிகிறது. 

திருக்குறளில் முரண்பாடா?

ஊழையும் உப்பக்கம் காண்பர் - உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்

ஊழிற் பெருவலி யாவுள - மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.

 முதல் பாடல் ‘ஆள்வினையுடைமை’ என்னும் அதிகாரத்திலும், இரண்டாம் குறள் ‘ஊழ்’ என்னும் அதிகாரத்திலும் இடம் பெறுபவை. பெருமுயற்சி செய்தால் ஊழையும்(விதி) வெல்லலாம் என்பது முதற்பாடலின் பொருள். ஊழை விட வலிமையானவை எவையுமில்லை; வேறுவழியின் முயன்றாலும் ஊழே முன் வந்து நிற்கும் என்பது இரண்டாம் பாடலின் பொருள். பெருமுயற்சி செய்தால் ஊழ் கூட உன்னிடம் தோற்றுப்போகும், அதனால் முயற்சியைக் கைவிடாதே. பெருமுயற்சி மேற்கொண்டும் வெற்றிகிட்டவில்லை.. எனில் மனச்சோர்வடைகிற ஒருவனைச் சமாதானப்படுத்த ‘இதுவே ஊழின் ஆற்றல் போலும்; சோர்வடையாதே; அடுத்த இலக்கு நோக்கிச் செல்க’ என்கிறார். எனவே முயற்சி மேற்கொள்பவனை மேலும் உற்சாகப்படுத்துவது முதற்குறள். சோர்வடைந்துள்ளவனுக்கு ஆறுதல் கூறுவது இரண்டாவது இடம் பெறுவது. அதனால் இங்கு முரணேதுமில்லை என்பதைத் தெளிவுபடுத்துவது அழகோ அழகு.

முருகன் தமிழ்க் கடவுளாசமஸ்கிருதக் கடவுளா?

குறிஞ்சிநிலக் குழுத் தலைவனாக விளங்கிய முருகன், வடமொழியின் வருகைக்குப் பின் ஸ்கந்தன் என்றும் சுப்பிரமணியன் என்றும் பெயர் மாற்றம் பெற்றான் என்பதையும், முல்லைநிலத் தலைவனாகிய மாயோன் விஷ்ணு ஆனான் என்பதையும், மருதநிலத் தலைவனாகிய வேந்தன் இந்திரன் என அழைக்கப்பட்டான் என்பதையும் வருண்+நன் என்னும் கடற்காற்றே வருண தேவனானான் என்பதையும், பாலை முதுமகளாகிய கொற்றவையே துர்கை எனப் பெயரிடப் பட்டாள் என்பதையும், ஆரியக் கலப்பே இம் மாற்றங்களுக்கான காரணம் என்பதையும் தெளிவுபடுத்துகிறார்.


ஆற்றுப்படை வீடுகளாஆறுபடை வீடுகளா?

ஆற்றுப்படை வீடுகளே, ஆறுபடை வீடுகளாயின. படைவீடுகள் நான்கே, அவை திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருஆவினன்குடி, திருஏரகம் என்பன. குன்றுதோறாடலும், பழமுதிர் சோலையும் முருகன் மகிழும் இயற்கையழகு மிக்க பொதுவான இடங்களே என்பதைப் பல சான்றுகளைக் காட்டி விளக்குவது அருமையிலும் அருமை.

தமிழ்மறைப்பு அதிகாரம் என்பதே நூலின் மையப்புள்ளி என்பார் இந்நூலாசிரியர். இதில் அமிழ்தம் வேறு அம்ருதம் வேறு என்பதை நலம்பட விளக்குகிறார். அம்ருதம்-வடமொழிச்சொல். அ+மிருத்யு என்றால் சாகாமல் இருக்கச் செய்வது. அமிழ்தம் என்பது நமக்குள் அமிழ்ந்து உள்ளிறங்கிச் சுவையூட்டுவது. இவ்விரு சொற்களும் ஒலிப்பதற்கு ஒன்றுபோல் தோன்றினும் வெவ்வேறு சொற்கள்; வெவ்வேறு பொருள். அடிப்படையே வெவ்வேறு வேர்ச்சொல். தமிழ் வடமொழியிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றது என்பதை விளக்கும் இந்த ஆய்வு பயன்மிக்கது.

சங்கம் தமிழ்ச்சொல்லே

முச்சங்கத்தில் இடம் பெறும் சங்கம் என்னும் சொல் தமிழ்ச்சொல்லே.  சகரக் கிளவியும் அவற்றோர் அற்றே அவை  என்னும் ஒன்று அலங்கடையே என்றே தொல்காப்பிய நூற்பா அமைய வேண்டும். புத்த ‘ஸங்கம்’ வேறு, தமிழ்ச் சங்கம் வேறு; விளக்கு விளக்கம் ஆனது போல், சங்கு சங்கம் ஆயிற்று. சங்கு ஒலித்து ஒழுங்கு பெறும் அவைக்குச் சங்கம் என்று பெயர் வழங்கலாயிற்று. சங்கம் என்பது தமிழ்ச் சொல்லே என்பதை அறுதியிட்டு உறுதிபட மொழிதல், ‘கண்டறியாததைக் கண்டேன்’ என்னும் எண்ணத்தைத் தோற்றுவிக்கின்றது.

 ‘ஜாதி’ வேறு – ‘சாதி’ வேறு

தமிழில் சாதி அஃறிணைச் சிறப்பைக் குறித்து வரும் சொல். ‘சாதிமல்லி’, ‘சாதிமுத்து’ என்பவற்றைக் காட்டுகிறார். ‘சதுர் வர்ணம் மயா சிருஷ்டம்’ என்பது கீதை சுலோகம். இதன் பொருள் நான்கு வருணங்கள் இறைவனால் படைக்கப்பட்டவை என்பதாகும். ஜாதி குணத்தால் வருவதல்ல என்பதை ‘ஸ்ரேயான் ஸ்வ-தர்மோ விகுண, பர தர்மாத் ஸ்வ-அனுஷ்திதா’ எனக் கீதை கூறுகிறது. ‘உனக்குத் திறமை இருப்பினும் மேல் வருண வேலையைச் செய்யாதே! உனக்கு விதிக்கப்பட்ட வேலையை மட்டும் செய்; வேலையில் பிழை வரினும் பரவாயில்லை’! இதனால் கீதை முதலான வடமொழி நூல்கள் பிறப்பால் பேதம் கற்பிக்கின்றன. ஆனால், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதே தமிழர் கடைப்பிடித்து வந்த நெறி என்பதை ஆசிரியர் அழகுபட விளக்குகிறார்.

இந்நூல் தெளிவும், செறிவும், திட்பமும், நலனும் நிறைந்து விளங்கும் ஓர் அரிய நூல். தமிழிலக்கியப் பகுதிகளில் அறியப்படாத இருண்ட பகுதிகளுக்கு ஒளியூட்டும் ஒப்பற்ற பனுவல் இது எனலாம். நாம் இந்நூலில் பாவாணரையும், பெருஞ்சித்திரனாரையும், இளங்குமரனாரையும் கருத்து வடிவில் கண்டு மகிழ்கிறோம்.

Back to blog