அறியப்படாத தமிழ்மொழி - அணிந்துரை#3

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/ariyappadaatha-thamizhmozhi
 
அணிந்துரை #3

கா.ஆசிப் நியாஸ், கனடா

கீச்சுலகில், முனைவர். கண்ணபிரான் இரவிசங்கரும் (கரச), நானும் நல்ல நண்பர்கள். தமிழ் மொழி, பெரியாரியல் கருத்து சார்ந்து ஒரே அணியில் இணைந்து பல களமாடுவோம்.

‘இரும்பு அடிக்கும் இடத்தில் ஈ-க்கு என்ன வேலை?’ என்றொரு சொலவம் உண்டு.  கிட்டத்தட்ட அதே தொடர்பு தான் எனக்கும், இலக்கிய இலக்கணத்திற்கும்.

ஒரு சராசரியான தமிழார்வலன், வெகுசனப் பார்வையில், நம் தமிழ் மரபைப் பொய்யின்றி மெய்யாக அறிந்து கொள்வது எப்படி? அறிஞராய் இல்லாது சாதாரண பொதுமக்களாய் அறிய வேண்டியது என்ன? இது பற்றி ஒரு வாசகனாக, என்னையும் அணிந்துரை நல்கச் செய்த தோழர் கரச எனும் கே.ஆர்.எஸ்! அதற்கு முதற்கண் நன்றி.

மொழிஞாயிறு பாவாணர், செந்தமிழ்ச் செல்வி ஏப்ரல் 1948 இதழில், “தமிழின் தூய்மையை வடவர் நெடுங்காலமாய் மறைத்துள்ளமை காரணமாக, ஒவ்வொரு தமிழ்ச் சொல்லையும் தமிழ்ச் சொல்லென்று காட்டுதற்கு அரும்பாடு படவேண்டியுள்ளது. அங்ஙனம் அரும்பாடு பட்டாய்ந்து தக்க சான்றும் ஏதுவுங் கொண்டு நாட்டியும், அதை நம்பாத பெருமை தமிழ்நாட்டிற்கே உள்ளது” என்று மிகவும் வருந்தி இருப்பார்.

இன்று தமிழ்நாட்டில் தமிழை ஒரு மொழியாகப் படிக்காமலேயே, பொறியியல், மருத்துவம் எனச் சகல படிப்பையும் படிக்க முடியும் என்ற நிலை உள்ளது. பெரும்பாலான நகர்ப்புற மாணவர்கள், தமிழை ஒரு மொழிப் பாடமாகப் படிப்பதேயில்லை.

தமிழே அறியாமல் இருப்பவர்களுக்கு, மறைக்கப்பட்ட தமிழ் எங்கிருந்து தெரியும்? அது போன்றவர்களுக்கும் சரி, மொழி ஆர்வலர்களுக்கும் சரி, இந்த நூல் ஒரு கையேடு! பல அரிய உண்மைகளை எளிமையாக அறிமுகப்படுத்தும்!

பல்வேறு தலைப்புக்களை 18 படலங்களாகப் பிரித்து, இந்நூலில் கொடுத்துள்ளார் கே.ஆர்.எஸ். நூலின் முன்னுரையில் தனிப்பட்ட மதப் பிடித்தம், அரசியல் பிடித்தம் தவிர்த்து, தமிழைத் தமிழாக அணுகக் கோரியுள்ளார். சிவனின் உடுக்கையிலிருந்து பிறந்த மொழி, 50,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மொழி, உலகின் முதல்மொழி எனச் சில நேரம் அதீத உணர்ச்சிப் பிடிப்புடன் அறிவியல் பார்வையைத் தவிர்த்து விடுகிறோம். இது போன்ற புராணக் கதைகளைத் தவிர்த்துவிட்டு அறிவியல் பார்வையுடன், மொழியை மொழியாக அணுகுதலே இன்றைய தேவை.

மேடைப் பேச்சுகளில் பலமுறை கேட்ட ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே’ மற்றும் ‘அணுவைத் துளைத்தேழ்’ போன்றச் சொற்தொடர்களின் பின்னே இருக்கும் மெய்ப்பொருளை விளக்கி அமர்க்களமாக ஆரம்பம்.

தந்தை பெரியார், தமிழ் மொழி ஏன் தேவை எனச் சொல்ல வரும் போது “சிவபெருமானால் பேசப்பட்டது என்பதற்காக அல்ல. அகத்திய முனிவரால் திருத்தப்பட்டது என்பதற்காக அல்ல. மந்திர சக்தியால் எலும்புக் கூட்டைப் பெண்ணாக்கிக் கொடுக்கும் என்பதற்காக அல்ல. பின் எதற்காக?  இந்திய நாட்டின் பிற எம் மொழியையும் விடத் தமிழ், நாகரிகம் பெற்று விளங்குகிறது. நல்ல தமிழ் பேசுதல் மற்றும் வேற்றுமொழிச் சொற்களை நீக்கிப் பேசுவதால் நம்மிடையே உள்ள இழிவுகள் நீங்குவதோடு மேலும் மேலும் நன்மையடைவோம்” என்றார்.

கடவுளே இல்லை என்றவரிடம் தமிழ்க் கடவுள் யார் என்று கேட்டால் என்ன சொல்லியிருப்பாரோ? மனிதனுக்கே கடவுள் தேவையில்லை என்று சொன்னவர், மொழிக்கு மட்டும் தேவை என்றா சொல்லியிருப்பார்? தமிழ்ச் சங்கத்தில் சிவனே அமர்ந்தார் என்பதும், தமிழ் மொழிக்கு முருகன் மட்டுமே கடவுள் என்பதும் மதத்தோடு வந்த பொய்ப்புராணக் கதைகளே. முருகன் தமிழ்க் கடவுளா? என்ற பகுதியில் இதற்கான விளக்கம் நன்கு கொடுத்துள்ளார் கே.ஆர்.எஸ்.

தொல்காப்பிய அகத்திணையியல் சூத்திரத்தைக் கொண்டு, தமிழ் ஆதிகுடிகளின் நடுகல் வழிபாட்டு முறையும், அதன் உருவம் மாறி இன்று பெருந்தெய்வ வழிபாடாய் மாறி இருப்பதையும், தொல்காப்பியம் கொண்டே காட்டுவது அழகு!

தமிழ் மறைப்பு தான் நூலின் மையப்புள்ளி; அதை விரிவாக விளக்குகிறது ‘தமிழ் மறைப்பு அதிகாரம்’. உலகம் முழுதும் செய்த அரசியலால் இன்று உலக மொழியாக வளர்ந்து நிற்கிறது ஆங்கிலம். உலக மொழிகளிடமிருந்து, தான் கடன் வாங்கியதே தவிர இன்னொரு மொழியின் அடிப்படையைச் சிதைத்ததில்லை ஆங்கிலம். இங்கோ ஒட்டுண்ணியாய் வந்த சமஸ்கிருதம் (சங்கதம்) தமிழ் மொழியின் இலக்கணத்திலும் புகுந்து மொழியின் அடிப்படைக் கட்டமைப்பையே சிதைக்கப் பார்க்கிறது. 

பன்னிரு பாட்டியல் என்னும் பிற்கால இலக்கண நூல். ‘அகரம் முதல் னகர இறுவாய், முப்பஃது‘ எனத் தொல்காப்பியம் கூறும் தமிழ் எழுத்துக்களை பிராமண எழுத்து, சத்திரிய எழுத்து, வைசிய எழுத்து என்று பிரித்து, தமிழின் சிறப்பான ழ-வை சூத்திர எழுத்து என்று வகைப்படுத்துகிறது. இன்று தொல்காப்பியம் கிடைக்காமலே போயிருந்தால்? இதுவே நம் இலக்கண நூலாய் மாறி, சூத்திர எழுத்தென்றே படித்திருப்போம். தமிழ் மறைப்பு அதிகாரம் இந்த ஆதிக்க மறைப்பைத் தான் விரிவாக விளக்குகிறது.

ஒரு தமிழ்ச் சொல்லை, சங்கதச் சொல் என்று வலிந்து காட்டும் விவாதம், பல நூற்றாண்டுகளாக மேட்டுக்குடிகள் நிகழ்த்தி வருகிறார்கள் என்றே நினைக்கிறேன். இன்றைய சில வலைத்தளங்கள் அதை இன்னும் முழு வீச்சில் முன்னெடுக்கின்றன. தமிழ் இலக்கண, இலக்கியங்கள் அனைத்துமே சமஸ்கிருதம் கொடுத்த பிச்சை என ஜோடிக்க முயன்று கொண்டிருக்கின்றன. அதையே தரவு போல் காட்டி வேறு சிலரும் அதை ஜோடிக்கப் பார்க்கிறார்கள். அதில் ஒன்று தான் "இலக்கணம், இலக்கியம், காப்பியம் போன்ற சொற்கள் தமிழா? சமஸ்கிருதமா?" என்ற விவாதம்.

இது இன்று ஆரம்பித்ததல்ல! பாவாணார் தென்சொற் கட்டுரைகள் நூலிலேயே, செந்தமிழ்ச் செல்வியில் அவரெழுதிய “இலக்கணம், இலக்கியம் எம்மொழிச் சொற்கள்?” என்ற கட்டுரையைக் கொடுத்திருக்கிறார். ப.அருளி அய்யாவும் “வேரும் விரிவும்” தொகுதி 1-இல், இலக்கணம், இலக்கியம் தமிழ்ச் சொற்களே என விளக்கியுள்ளார். பாவணார், அருளி வழிநின்று கே.ஆர்.எஸ் அவர்களும் தமிழ்ச் சொற்களே என்பதைச் சங்கத நூலும் காட்டி நிறுவியுள்ளார்.

பெரியார், ஜாதி என்பதற்குத் தமிழில் வேர்ச் சொல்லே இல்லை என்பார். கிரந்தம் தவிர்த்து சாதி என்று எழுதினாலும் அது தமிழ்ச் சொல் அல்ல! ஆனால் நான்கு வர்ணக் கோட்பாடுகள் தொல்காப்பியத்திலும் உண்டு எனத் திரிக்கும் கூட்டம் இங்கு உண்டு. தொல்காப்பியத்தில் நால்வர்/ நான்கு என வந்தாலே, அது நான்கு வர்ணத்தைக் குறிப்பதாகவும், நூல் என வந்தாலே அது பூணூலைக் குறிப்பதாகவும் உரை எழுதி வைத்துள்ளனர். தொல்காப்பியத்தில் இடைச் செருகல் தான், நான்கு வர்ண மேற்கோள்கள். இதைப் பலமான தரவுகளுடன் நிறுவியிருக்கும் படலம் தான் “தொல்காப்பியத்திலேயே சாதி உண்டா?” என்ற கட்டுரை. இந்த நூலில் எனக்கு மிக விருப்பமான படலமும் இது தான்.

இந்நூலில் துக்கடா எனத் தலைப்பிட்டு ஒரு தனி நூலாக எழுத வேண்டிய செய்திகளை எல்லாம் அதில் எழுதியிருக்கிறார் கே.ஆர்.எஸ்.

ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் தமிழ்ப் புத்தாண்டு எது? என்ற சர்ச்சைக்கு ஒரு முடிவு கொடுத்துள்ளார்.  தமிழ்ப் புத்தாண்டாக தை ஒன்றைத் தேர்ந்தெடுத்தது ஓர் அரசாங்கம் அல்ல; மறைமலையடிகள், நாவலர் சோமசுந்தரபாரதி போன்ற தமிழறிஞர்கள் என்பதற்கு ஏகப்பட்ட தரவுகளைக் கொட்டியிருக்கிறார். புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால் சரி.

இன்றைய புதிய அரசியல் சூழலில், திராவிடம் என்ற சொல்லின் பொருள் என்னவென்று பலரும் பலவிதமான கருத்துக்களைச் சொல்கிறார்கள். பெரியார் தான் இந்தச் சொல்லைத் தமிழர்களின் தலையில் கட்டிவிட்டதாகவும், கால்டுவெல் என்பவர் தெலுங்குமொழியைக் குறிக்கவே திராவிடம் என்ற சொல்லைப் பயன்படுத்தினார் என்றும், அவருக்கு முன் யாருமே திராவிடம் என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை என்றும் சிலர் பொய்யுரைக்கிறார்கள்.

இவையெல்லாம் அரசியல் ஆதாயங்களுக்காகச் செய்யப்படுபவை. சங்க இலக்கியத்தில் திராவிடம் என்ற சொல்லே இல்லையே? என ஒரு கேள்வியை முன் வைப்பார்கள். திருக்குறளில் கூடத் தமிழ் என்ற சொல்லே இல்லை. அதனால் அது தமிழ்நூல் இல்லை எனச் சொல்ல முடியுமா? பெரியார் ஆரியத்திற்கு எதிராக ஒரு குறிச்சொல்லாய்த் திராவிடம் என்றார். பாவாணர் திராவிட மொழிக்குடும்பம் என்றார். தமிழ் என்ற சொல்லே திராவிடம் எனத் திரிந்தது என்றார். கே.ஆர்.எஸ் இந்தச் சொல்லின் மூலத்துக்கே சென்று காட்டியுள்ளார். யவனம், சீனம் என்பது போல, திராவிடமும் ஒரு திசைச் சொல்லே என்பதற்கான ஏராளமான உலகத் தரவுகளைக் காட்டியுள்ளார். 

பல தமிழறிஞர்களின் நூல்களைத் தேடித் தேடி படித்தால் கிடைக்கக் கூடிய செய்திகளை, ஒரு பிழிவு போல இந்த நூலில் தொகுத்துக் கொடுத்துள்ளார் கே.ஆர்.எஸ்.

யாவரும் அறிந்து கொள்ளும் வகையில்,  எளிமைத் தமிழ் கொண்டிருக்கும் இந்நூல் தமிழ் ஆர்வலர்களுக்கும், மாணவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்கட்கும் பேருதவியாக அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை! வாழ்த்துக்கள்!

 

கா.ஆசிப் நியாஸ்

நவம்பர் 15, 2017

ரொறன்றோ, கனடா

Twitter Handle: @Aasifniyaz

Back to blog