அரசியல் சட்டம் எரிப்பு-1957 - தொகுப்புரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/arasiyal-sattam-erippu-1957
 
தொகுப்புரை

தந்தை பெரியார் தமிழர்களின் தன்மானங்காக்க தன் வாழ் நாளில் எத்தனையோ போராட்டங்கள் நடத்தியிருந்தாலும் அதில் முத்தாய்ப்பான போராட்டமாகத் திகழ்வது 1957 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி சாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்டத்தை தீயிட்டுக் கொளுத்திய போராட்டமாகும்.

பல்லாயிரக்கணக்கான பெரியார் தொண்டர்கள் சாதியை ஒழிப்பதற்காக தியாகவேள்வியில் மூழ்கி இழப்புகளையே பரிசாகப் பெற்று வெற்றிகரமாக நடத்திய போராட்டம்.

பெரியார் தொண்டர்களால், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட சூத்திர மக்களால் சாதியைப் பாதுகாக்கும், உச்சபட்ச அதிகாரம் படைத்த அரசியல் அமைப்புச் சட்டத்தையே கேள்வி கேட்டு இடி முழக்கமாய் வெடித்தது இந்தப் போராட்டம்.

பெரியாரின் கட்டளைக்கிணங்க ஒடுக்கப்பட்ட மக்களால் ஓங்கி ஒலித்த சமத்துவ உரிமைக்காக, அரசியல் சட்டம் என்ற புனிதம் பொசுக்கப்பட்ட போராட்டம்.

சனாதன இந்து மதமானாலும் சரி, ஜனநாயக வடிவில் அரசியல் சட்டமானாலும் சரி, சாதி எந்த வடிவத்தில் வலுப்படுத்தப் பட்டாலும் பெரியாரின் பெரும்படை அதை ஒழித்தே தீரும் என்பதை உறுதிப்படுத்திய போராட்டம்.

இப்போராட்ட வரலாற்றை 2003 ஆம் ஆண்டு கவிஞர் இளவேனில் அவர்களின் குடியரசு இதழில் வெளிவந்த திருச்சி என். செல்வேந்திரன் கட்டுரையை 2004-ல் சிறுநூலாக வெளியிட்டோம். நாங்கள் சாதி ஒழிப்புப் போராட்ட வரலாற்றைப் பதிவை முழுமை யாக கொண்டுவந்து விடவேண்டும் என்ற முடிவோடுதான் 2004-ல் வெளியிட்ட சிறுவெளியீட்டில் அப்புத்தகத்தின் முன்னுரையில் சாதி ஒழிப்புப் போராட்டத்தின் முழுப் பதிவுகளையும் எதிர்காலத்தில் வெளியிடுவோம் என்று குறிப்பிட்டிருந்தோம்.

அதன் தொடர்ச்சியாக கிடைத்த வரலாற்றுப் பதிவுகளை வைத்து சட்டம் எரித்த 50-வது ஆண்டின் நினைவாக 2007 ஆம் ஆண்டு ஒரு தொகுப்பை வெளியிட்டோம்.

எங்களுக்கு காலமும் பொருளாதாரமும் வாய்க்கப்பெற்ற பொழுதெல்லாம் தொடர்ச்சியாக இப்போராட்டத்தின் வரலாற்று நாயகர்களைத் தேடிச் செல்வதும் அவர்களோடு அப்போராட்டம் பற்றிய உரையாடல் நடத்துவதும் அதைப் பதிவுகளாகப் பதிவு செய்து கொள்வதுமாக இப்பத்தாண்டுகள் கடந்து போய்விட்டது.

இப்போது இந்த வெளியீட்டில் அரசியல் சட்டம் அளிக்கப்பட வேண்டிய அவசியத்தில் தொடங்கி, தஞ்சை மாநாடு, அதில் போராட்ட அறிவிப்பு, போராட்டத்திற்கான முன்தயாரிப்பு, அரசு கொண்டுவந்த பயமுறுத்தல் சட்டம், அதைப் பொருட்படுத்தாமல் பெரியார் தொண்டர்கள் அரசியல் சட்டத்தை எரித்த நிகழ்வுகள், தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் நேரு பெரியாரையும் அவரது தொண்டர்களையும் கடுமையாகத் தண்டிக்கத் தூண்டியது, ஒரே செய்கைக்காக தோழர்கள் பல்வேறு வகையான தண்டனைகளை ஏற்பது, பார்ப்பனர்களும் பத்திரிகைகளும் இப்போராட்டம் பற்றி பரப்பிய வதந்திகள், சிறைப்பட்ட தோழர்களின் குடும்பங்களுக்கு கழகத் தோழர்களின் உதவி, சிறைக்கொடுமையால் சிறைக்கு உள்ளேயும் வெளியேயும் பலியான கழகத் தோழர்கள், சிறைப்பட்ட தோழர்களின் குடும்பங்களில் நடந்த துக்க நிகழ்வுகள், அவற்றை இயல்பாக எதிர்கொண்ட தோழர்களின் நெஞ்சுறுதி, பொய்வழக்கில் பெரியார் கைது, பின்னர் பெரியார் விடுதலை, போராளிகள் விடுதலை என தனித்தனியான தலைப்புகளுக்குள் இப்போராட் டத்தின் முழு வரலாற்றையும் பதிவு செய்துள்ளோம்.

அன்றைய விடுதலை நாளிதழில் வெளிவந்துள்ள செய்தி களை மாற்றமில்லாமல் அப்படியே வெளியிட்டுள்ளோம். சில வார்த்தைகளும் வாக்கியங்களும் வேறுபாடாகத் தெரிந்தால் அது அன்றைய விடுதலையின் மொழிநடையையே சாரும் என்பதை வாசகர்களுக்குத் தெரியப்படுத்துகிறோம்.

தந்தை பெரியாரின் முன்னணித் தொண்டராக இருந்து மறைந்த திருச்சி நகர தி.க. செயலாளர் திருச்சி வீ.அ. பழனி அவர்க ளின் போராட்ட வாழ்க்கையைப் பதிவு செய்யும் போதும் மாணவர் திராவிடர் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலாளராக இருந்த இடையாற்றுமங்கலம் முத்து. செழியன் அவர்களின் நினைவுகளைப் பதிவு செய்தபோதும் நேரடியான சட்ட எரிப்புப் போராட்டக் களத்தின் உண்மையை அறிந்து கொண்டோம். அவற்றிலிருந்தும் இந்நூலில் அன்றைய களச்செய்திகளைப் பதிவு செய்திருக்கிறோம்.

பெரியாரின் மூத்ததொண்டரும் மிகச்சிறந்த பேச்சாளருமான திருவாரூர் கே.தங்கராசு அவர்களின் நினைவலைகளைப் பதிந்த போதும் சட்ட எரிப்புப் போராட்டம் பற்றிய செய்திகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டோம்.

முதற்பதிப்பின்போது திராவிடர் விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவரான நாகை எஸ்.எஸ். பாட்சா, திருமங்கலங்குடி கோவிந்தராசன் போன்றோரிடம் இருந்து தெரிந்து கொண்ட செய்திகளுடன் பயணித்த எங்களுக்கு மேற்கண்ட தலைவர்களின் கள அனுபவங்கள் பலப்பல செய்திகளைக் கூறிக்கொண்டே இருந்தது.

அந்த அனுபவத்தோடு திருச்சி மாவட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சாதி ஒழிப்புப் போராளிகளைக் கண்டு உரையாடி னோம். அவர்களைச் சந்திக்க கழகப் பிரச்சாரச் செயலாளர் சீனி. விடுதலை அரசு அவர்கள் பேருதவியாக இருந்தார். அந்த சந்திப்பில் 1957 ஆம் ஆண்டிற்கே எங்களை அழைத்துச்சென்று தங்கள் அனுபவத்தை உணர்ச்சியோடு பகிர்ந்து கொண்ட அந்தப் போராளி களின் அனுபவங்களையும் இங்கே விவரித்திருக்கிறோம்.

பெரியாரின் சாதி ஒழிப்பு நடவடிக்கையால் உண்டான மாற்றங்களையும் பெரியார் மீதான இன்றைய அவதூறுகளுக்கு அப்போராளிகளின் வாக்குமூலங்களே பதிலாக அமைந்திருப்பதையும் காணலாம்.

மேலும், பெரியாரின் செயல்திட்டங்களில்தான் சாதி ஒழிப் பிற்கான சாத்தியக்கூறுகள் அடங்கியிருக்கின்றன என்ற உறுதியான செய்தியையும் அப்பதிவுகள் வெளிப்படுத்துகின்றன.

சாதிய கண்ணோட்டமின்றி இன்றுவரை தொடரும் தங்கள் நட்பிற்கு பெரியாரியலே உறுதுணையாக இருப்பதையும் பெருமை யோடு குறிப்பிட்டுள்ளார்கள். மகத்தான இம்மாற்றத்தை சாத்தியப் படுத்தியது பெரியார் இயக்கமே என்பதையும் இப்போராளிகள் உரக்கச் சொல்லுகிறார்கள்.

போராட்டத்தின் நேரடிச் சாட்சிகளின் அனுபவத்தோடு வரலாற்று ஆவணங்களையும் இணைக்கச் செய்ய அந்தக் கால கட்டத்தின் மூலப்பிரதியான விடுதலை நாளிதழ்களின் குறிப்புகள் முக்கியமாகத் தேவைப்பட்டன. ஏற்கனவே முதற்பதிப்பில் எங்களுக்குக் கிடைத்த விடுதலையின் தரவுகள் போதுமானதாக இல்லை.

அரசியல் சட்டம் எரிக்கப்பட்ட 1957 ஆம் ஆண்டு விடுதலை, அதற்குபின் தோழர்கள் தண்டிக்கப்பட்டது, சிறைக் கொடுமையினால் தோழர்கள் பலியாக்கப்பட்டது என இன்னபிற செய்திகளுக்கு 1958, 1959 ஆம் ஆண்டு விடுதலை தேவைப்பட்டது.

'விடுதலைக்கான எங்களது தேடலுக்கு புதுக்கோட்டை ஞானாலயா நூலகம்தான் விடை கொடுத்தது. ஞானாலயா திரு. பா. கிருஷ்ணமூர்த்தி அவர்களும் அவரது துணைவியார் திருமதி. டோரதி கிருஷ்ணமூர்த்தி அவர்களும் எங்களுக்கு நூலகத்தை முழுமையாகப் பயன்படுத்த அனுமதி கொடுத்தனர்.

விடுதலை நாளிதழ் முழுவதையும் குறிப்பெடுக்க எங்களுக்கு அவர்கள் அளித்த முழு சுதந்திரம்தான் எங்களுடைய இந்த விரிவான பதிப்பைச் சாத்தியமாக்கிற்று.

வரலாற்றைக் காப்பாற்றி வைத்திருந்து எங்களுக்கு வழங்கிய ஞானாலயா திரு. பா. கிருஷ்ணமூர்த்தி அவர்களும் அவரது துணைவியார் திருமதி. டோரதி கிருஷ்ணமூர்த்தி அவர்களும் செய்த உதவிகள் அளப்பரியது. காலத்தால் நினைவுகூரத்தக்கது.

வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யும் எங்களது முயற்சி களுக்கு எப்பொழும் வழிகாட்டியாய் திகழ்ந்திடும் கழகப் பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன் அவர்களுக்கும் கழகத் தலைவர் ஆனூர் ஜெகதீசன் அவர்களுக்கும் கழகத் துணைத் தலைவர் மூத்த வழக்கறிஞர் செ.துரைசாமி அவர்களுக்கும் நன்றியை உரித்தாக்குகிறோம்.

திருச்சி மாவட்டத்தில் சட்ட எரிப்புப் போராளிகளைச் சந்திக்க உதவியாக இருந்த கழகப் பிரச்சாரச் செயலாளர் சீனி. விடுதலை அரசு அவர்களுக்கும் தஞ்சை மாநாட்டு முகப்பு நிழற்படத்தை தந்துதவிய தஞ்சை பசு. கவுதமன் அவர்களுக்கும் சேலம் மாவட்டத்து களப் போராளிகளின் நிழற்படங்கள் பலவற்றை எங்களுக்கு அளித்த ஆசிரியர் சேலம் பா.கந்தசாமி அவர்களுக்கும்

வழக்கம்போல் புத்தகத்திற்கான வடிவமைப்பை நேர்த்தி யுடன் அமைத்துக் 6. த்த உடுமலை ரவி அச்சக உரிமையாளர் உடுமலை ரவி அவர்களுக்கும்

நூல் உருவாக்கத்திலிருந்து அச்சாகி கைக்கு கிடைக்கும் வரை தோன்றாத் துணையாக இருந்து வந்த சென்னை மாவட்டக் கழகத் தலைவர் திருவொற்றியூர் து. இரவிச்சந்திரன் அவர்களுக்கும்

பொள்ளாச்சி பொன். முருகேசு அவர்களுக்கும்

முதல் தொகுதிக்கான அட்டைப் படத்தை வரைந்து கொடுத்த ஓவியர் நெடுமாறன் அவர்களுக்கும்

மூன்று தொகுதிகளுக்கும் சிறந்த முறையில் அட்டை வடிவமைத்துக் கொடுத்த ஆர்.சி.மதிராஜ் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Back to blog