அண்ணாவின் மொழிக் கொள்கை - அணிந்துரை

அண்ணாவின் மொழிக் கொள்கை - அணிந்துரை

தலைப்பு

அண்ணாவின் மொழிக் கொள்கை

எழுத்தாளர் எ.ராமசாமி
பதிப்பாளர்

பூம்புகார் பதிப்பகம்

பக்கங்கள் 256
பதிப்பு முதற் பதிப்பு - 2010
அட்டை தடிமனான அட்டை
விலை Rs.180/-

 

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://periyarbooks.com/annavin-mozhik-kolkai.html

 

அணிந்துரை

பேராசிரியர் அ. இராமசாமி அவர்கள் முனைவர் பட்டத்துக்காக இயற்றியுள்ள அண்ணாவின் மொழிக் கொள்கை' என்னும் ஆய்வு ஏட்டினை முழுவதும் படித்துச் சிந்தித்து உவகை கொண்டேன்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழ்நாட்டின் வரலாற்றில் தனி இடம் பெற்றவர் மட்டுமல்லர்; இந்த நூற்றாண்டில் மறுமலர்ச்சி வரலாற்றை உருவாக்கி, வருங்கால வரலாற்றுக்கு அடித்தளம் அமைத்தவர். தமிழ் மக்களின் தாழ்வு மனப்பான்மையை அகற்றி, அவர்களை வாழ்வில் தலைநிமிரச் செய்ய வேண்டும் என்னும் குறிக்கோளுடன் தன்மான இயக்கத்தைத் தொடங்கிப் பாடுபட்ட தந்தை பெரியாரின் தொண்டுக்குத் துணையாக நின்று, அந்தக் குறிக்கோள் பல துறையிலும் படர்ந்து வெற்றி பெறுவதற்கு வேண்டிய பக்குவமான வழிமுறையை மேற்கொண்டு செயற்படுத்தி, தமிழர்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய பல துறை விற்பன்னர் அறிஞர் அண்ணா.

அண்ணாவின் வாழ்வும் தொண்டும், தமிழ் மக்களும், தமிழ் மொழியும் முன்னேற்றங் கண்டிடத் தமிழர்களின் சமூகச் சீர்திருத்தம், பகுத்தறிவு நோக்கம், தாய்மொழி உரிமை, அரசியல் கொள்கை, பொருளாதாரக் கோட்பாடு ஆகியவற்றிற்குத் தடம் அமைத்த பெருமை கொண்டது. அவரது எழுத்தும் பேச்சும், நாடகமும் கலைத் தொண்டும் தமிழ் மக்களின் உள்ளத்தினை ஆட்கொண்டு அவர்தம் சிந்தனையை வளப்படுத்தியனவாகும். அப்படிப்பட்ட மேதையின் மொழிக் கொள்கையை ஆய்வு நெறியில் வகைப்படுத்தி விளக்கிடும் ஆசிரியரின் ஆய்வுத்திறன் மிகவும் சிறப்புடையதாகும். அண்ணாவின் தொண்டுக்கான பின்னணிச் சூழல், அவரது தமிழ் ஆர்வம், மானிட இயற்கையாகும் தாய் மொழிப் பற்றின் மேன்மை, தாய் மொழியின் தனிச்சிறப்பு, தனித்தமிழ்க் கோட்பாட்டின் பயன் ஆகியவை குறித்து அண்ணா தந்த விளக்கம் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

தமிழ் நிலத்தில் தனி ஆட்சி நடத்தி, வெளிநாடுகளிலும் கால்கொண்டு, இன்றளவும் தமிழர்களின் வாழ்க்கை வழியாகவும் இயல், இசை, கூத்து என்னும் முத்தமிழாகவும், மானுடத்தின் பொதுச் சிந்தனையையும் உணர்வையும் வகை வகையாக விளக்கும் திறன் வாய்ந்த செந்தமிழாகவும், தொன்மைமிகு இலக்கியச் செல்வத்தாலும் இலக்கண நுட்பத்தாலும் வேறு எம்மொழிக்கும் தாழ்வாக எண்ணப்பட இடமளிக்காத பண்பாட்டு மொழியாகவும் விளங்கும் தமிழ், வரலாற்றுச் சூழலாலும், வந்தேறிகளின் சூழ்ச்சியாலும் எப்படியெல்லாம் ஆட்சிநிலை இழந்து வழிபாட்டுத்துறையில் ஒதுக்கப்பட்டு, இசைத்துறையில் மறைக்கப்பட்டு, கல்வித்துறையில் புறக்கணிக்கப்பட்டு, வழக்குமன்றத்தில் நீக்கிவைக்கப்பட்டு நீசமொழியென்றே இழிவுபடுத்தப்பட்டது என்பதை எல்லாம் எடுத்துக் காட்டி, அந்நிலையை மாற்றிடவும் தமிழ்மொழி உரிமையைக் காத்திடவும் அறிஞர் அண்ணா சிந்தித்துச் செப்பிய அரிய கருத்துகளை எல்லாம் மிகவும் நுட்பமாக ஆசிரியர் விவரித்துள்ளார்.

உயர்கல்வி வரையில் அனைத்துப் பாடங்களுக்கும் பயிற்று மொழியாகத் தமிழை இடம்பெறச் செய்வதில் அண்ணா கொண்டிருந்த உறுதியையும், அதை நிறைவேற்றுவதற்குத் தடையாக அமையும் வருந்தத்தக்க சூழலையும் ஆசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார். தமிழ் மண்ணில் நிகழும் இசை அரங்குகளில் பிறமொழிப்பாடல்களே மிகுதியாக இடம் பெற்றதால், தமிழர்கட்கு ஏற்பட்ட இழப்பையும் இழுக்கையும் அண்ணாவின் மொழியிலேயே புலப்படுத்தியுள்ளார். திருக்கோவில் வழிபாட்டில் தமிழ் ஒதுக்கப்பட்டதால், அங்கு வழிபடப்படும் தெய்வங்களே ஆரிய ஆதிக்கச் சின்னங்களாக நிலவுவதுடன் தமிழர்கட்கு அந்நியமாகிவிட்ட அவலத்தையும் அண்ணாவின் உரை மூலம் விவரித்துள்ளார். கற்புக்கரசி எனப் போற்றும் கண்ணகி என்னும் மெல்லியலாள் தனக்கிழைக்கப்பட்ட அநீதி குறித்து அரசவையில் வழக்காடிய வரலாற்றுப் பெருமை கொண்ட தமிழ்நாட்டில், வழக்கு மன்றத்தில் வாதாடும் உரிமைகூடத் தமிழுக்கு மறுக்கப்பட்டிருக்கும் ஏளனச் சூழலையும் அண்ணா விவரித்த பாங்கினைத் தெளிவுபடுத்தியுள்ளார். குறிப்பாகத் தமிழ்மொழி அனைத்துத் துறைகளிலும், அனைத்து நிலைகளிலும், அனைத்து வகைகளிலும் ஆட்சி நடத்தும் உரிமை நிலையை உருவாக்க வேண்டும் என்னும் அடங்காத வேட்கையுடன் அண்ணா அவர்கள் எடுத்துவைத்த வாதங்கள், விளக்கங்கள், யாவும் படிப்பவர் சிந்தனையைக் கிளறும் வகையில், பொருட்செறிவும் தெளிவும் மிக்க நடையில், சிறப்பாக எடுத்தாளப்பட்டுள்ளன.

பலமொழி பேசும் பலவகைச் சமயங்களும் மத நாகரிகப் பின்னணியும் பல்வேறு சாதிச் சழக்குகளும் குல வழக்குகளும் கொண்டதாக, உலக மக்கள் தொகையில் ஏழில் ஒரு பங்கு மக்களைப் பெற்றுள்ள தொரு துணைக்கண்டமாக நிலவும் இந்தியாவில், வெவ்வேறு ஆட்சிமொழிகளைப் பயன்படுத்தும் உரிமையுடைய பல்வேறு மாநிலங்களின் கூட்டாட்சியின் நடுநாயகமாக விளங்கும் மைய அரசின் ஆட்சிமொழியாக எது இருக்க வேண்டும் என்பதுதான், சுதந்திரம் கிடைப்பதற்கு முற்பட்ட முப்பது ஆண்டுக் காலம் முதலாகவே மாறுபட்ட கருத்துகளுக்கு இடம் ஆயிற்று. இந்தி - உருது மாறுபாடு நீங்க, காந்தி அடிகள் குறிப்பிட்ட இந்துஸ்தானியும் ஒதுக்கப்படும் சூழல் ஏற்பட்டு பாகிஸ்தான் உருவாவதற்குத் துணை யாயிற்று. அதே போன்று பாகிஸ்தான் உருவான பின்னர் உருது - வங்க மொழி உரிமை மாறுபாடே பங்களாதேசம் உருவாகத்துணையாயிற்று. எனினும், சுதந்திரம் பெற்ற இந்தியாவின் அரசமைப்பில் இந்திக்கே ஆட்சிமொழி என்னும் முடி சூட்டப்பட்டது. இது எந்தெந்த வகையில் பிறமொழியாளர்களின் உரிமையைப் பறிக்கும் என்பது பல்வேறு அறிஞர்களாலும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தி ஆதிக்கம் வளர்க்கும் அந்த நிலையை மாற்றி அமைத்திட, அனைவருக்கும் பொதுவாக நிலவும் ஆங்கிலத்தையும் மைய ஆட்சிமொழியாகத் தொடர்ந்திடச் செய்யவும் மாநில மொழி களுக்கும் மைய ஆட்சி மொழியாகும் உரிமையைப் பெற்றிடவும் போராடும் பெரிய பொறுப்பு அறிஞர் அண்ணாவையும் அவரது திராவிட முன்னேற்றக் கழகத்தினையுமே சார்ந்ததாக ஆயிற்று. தந்தை பெரியார் அவர்களது கொள்கையும் அதுவே என்றாலும், அரசியலில் ஈடுபடும் கட்சியாகி, சட்ட மன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் இடம்பெற்ற தகுதியால் அந்தப் போராட்டத்தின் ஈட்டிமுனையாக அண்ணாவின் தி.மு.க.வே அமைவதாயிற்று. இந்தியைப் பொது மொழியாக ஏற்றிடச் செய்யப் பல ஆண்டுகள் முனைந்து செயற்பட்ட மூதறிஞர் இராஜாஜி அவர்களே, இந்தி மட்டும் மைய ஆட்சிமொழி ஆவதால், இந்தி பேசாத பிறமொழி பேசும் மக்கள் எல்லாம் நாட்டின் இரண்டாந்தரகுடிமக்கள் ஆக்கப்படுவர் என்னும் கடுமையான எதிர்ப்புக்குரல் கொடுக்கும் நிலையும் ஏற்பட்டது. அந்த அடிப்படையிலேயே அவர் அண்ணாவின் தி.மு.க.வையும் 1967 தேர்தலில் ஆதரித்திட முன்வந்தார்.

1957 முதல் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் ஒலித்த தி.மு.க.வின் இந்தி எதிர்ப்புக்குரல், 1962 முதல் அண்ணா அவர்களாலேயே மாநிலங்கள் அவையில் முழங்கப்பட்டது. அதன் விளைவே குறிப்பாக தமிழ்நாட்டு மாணவர்களும், தென்னகம் - வங்கம் உள்ளிட்ட பிற மாநில மாணவர்களும் இந்தி ஆதிக்கம் பெறுவதன் கேட்டினை உணர்ந்து, 1964 ஆம் ஆண்டில் தி.மு.க. தொடங்கிய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் உச்சகட்டமான சூழலில் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்படிப்பட்ட மாணவர் போராட்டத்தின் விளைவாக உயிரிழக்க நேரிட்டவர் ஏறத்தாழ ஐநூறு பேர் எனில், மக்களின் கொந்தளிப்பு உணர்ச்சிப் பெருக்கை எவரும் கருதலாகும். 1959ஆம் ஆண்டிலேயே தி.மு.க அறிவித்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் கைவிடச் செய்வதற்குப் பிரதமர் நேரு கொடுத்த உறுதிமொழி இது:

'எவ்வளவு காலம் வரை (இந்தி பேசாத) மக்கள் விரும்பு கிறார்களோ அதுவரையில் ஆங்கிலம் இருக்க வேண்டும். இதற்கான முடிவு கூறும் உரிமையை இந்தி பேசும் மக்களிடம் நான் விடமாட்டேன். இந்தி பேசாத மக்கள்தான் முடிவு எடுக்கவேண்டும்.''

இந்த உறுதிமொழியை அரசமைப்புச்சட்டவிதிகளில் இடம்பெறச் செய்யவில்லை என்பது மட்டுமன்றி, இந்தி வெறிக்குத் தீனிபோடும் நோக்கம் கொண்ட வடபுலத்து அரசியல் தலைவர்கள், அந்த உறுதிமொழி நீடிப்பதாகக் கூறிக்கொண்டே இந்தியைத் திணிக்கவும், பரப்பவும், பிறமொழியினர் வேறுவழியின்றி ஏற்றிட வைக்கவும் திட்டமிட்டுத் தொடர்ந்து முயற்சி செய்வாராயினர். அந்த நோக்கத் துடனேயே தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளது மைய அரசு.

அதைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்தில் நடைபெற்றவையே அண்ணா தொடர்ந்த அறப் போராட்டங்கள். அதன் வரலாறுதான் தமிழர்களின் உரிமை உணர்வு வழிப்பட்ட எழுச்சி வரலாறும் ஆகும். வடவரின் இந்தி ஆதிக்க வளர்ச்சியைத் தமிழ் மாநில அளவிலேனும் தடுத்து நிறுத்தும் ஒரு வழியாகத்தான், 1967 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற அண்ணா, தமிழ்நாட்டுக் கல்வி நிலையங்கள் மும்மொழித் திட்டத்தைக் கைவிட்டு இருமொழித் திட்டத்தையே இனிச் செயல்படுத்தும் என்று அறிவித்ததாகும். தமிழ்நாட்டு மாணவர்கள் பெரும்பாலோரும் தாய்மொழியாம் தமிழும், அறிவியலுக்குப் பயன்படும் ஆங்கிலமும் பயின்றால் போதும் என்னும் நிலை அதனால் ஏற்பட்டது. இதனால் சிறுபான்மையினர் பள்ளிப் படிப்பில் தமது தாய்மொழியில் கல்வி பெறுவது தடைப்படவில்லை. இந்நிலையே இன்றளவும் தொடர்வதாகும். மூன்றாவது மொழியாக இந்தி பயிற்றுவிக்கப்படுவதே கைவிடப்பட்டது.

தமிழ் ஆக்கத்திற்காகவும், தாய்மொழி வாயிலாகத் தமிழர்கள் அனைத்து உயர் கல்வியும் பெறுவதற்காகவும் தொடர வேண்டிய கடமைகள் பல உள்ளன. அறிஞர் அண்ணா காட்டிய குறிக்கோளை உள்ளங் கொண்டு, தமிழ்நாட்டோர் நலனையும் உரிமை வாழ்வையும் மறவாமல் தொடர்ந்து செயற்படுவதே அண்ணா வழியில் அயராது நடைபோடும் இன்றைய கலைஞர் அரசு; என்றாலும், சுதந்திரப் போராட்டத்தைப் போன்றும், சில கட்டத்தில் அதைவிடக் கடுமையாகவும் நடைபெற்ற தனிச்சிறப்புடைய 'இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம்' எப்படிப்பட்ட கொள்கை விளக்கத்தோடும், தெளிவோடும், உறுதியோடும் நடைபெற்று வந்துள்ளது என்பதைத் தமிழ்நாட்டு மாணவர்கள், ஆசிரியர்கள் முதலான அனைவரும் அறிந்தவர்களாக வேண்டும். அப்படிப்பட்ட வரலாற்றினை உருவாக்கிய அண்ணா பல கட்டுரைகளிலும் பல மேடைகளிலும் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் அளித்த விளக்கங்களை எல்லாம் முறையாகத் தொகுத்தும், வகைவகையாகப் பிரித்தும், வரலாற்று விளக்கம் தந்து மிகவும் தெளிவான நடையில் திறம்பட வழங்கியுள்ளார் பேராசிரியர் முனைவர் இராமசாமி.

தமிழ்நாட்டார் ஒவ்வொருவர் கையிலும் கருத்திலும் இடம் பெற வேண்டியதொரு கருவூலம் இந்நூல். இந்தித் திணிப்பையும் ஆதிக்கத்தையும் தடுத்து நிறுத்த வேண்டிய தேவையை இளைஞர் களும் மாணவர்களும் தெளிந்திடத் துணையாவதுடன், அந்த அறப் போராட்டம் தொடர அவர்களுக்கு வாய்த்திட்ட அறிவுக் கேடயமாகவும் விளங்குவது இந்நூல். இதன் ஆசிரியர் இந்தி ஆதிக்க எதிர்ப்பு உணர்வு கொண்ட மாணவராக இருந்து பேராசிரியர் ஆனவர். இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடர்புடைய வேறு சில நூல்களையும் தமிழக வரலாற்று ஏடுகளையும் இயற்றிய பெருமை அவருக்குண்டு. எனினும் இந்த நூல் 'முனைவர்' பட்டத்துக்குரிய முழுத்தகுதியும் வாய்ந்தவர் அவர் என்பதற்குச் சான்றாக அமையும் பட்டயமாகும். இதனால் முனைவர் பட்டத்தின் சிறப்பும் மேம்பட்ட தாகிறது. முனைவர் இராமசாமியின் தொண்டு தொடரவும், வளரவும் எனது வாழ்த்துகள்.

 

க. அன்பழகன்

Back to blog