அண்ணாவின் மொழிக் கொள்கை - பதிப்புரை
அண்ணாவின் மொழிக் கொள்கை - பதிப்புரை
தலைப்பு |
அண்ணாவின் மொழிக் கொள்கை |
---|---|
எழுத்தாளர் | எ.ராமசாமி |
பதிப்பாளர் |
பூம்புகார் பதிப்பகம் |
பக்கங்கள் | 256 |
பதிப்பு | முதற் பதிப்பு - 2010 |
அட்டை | தடிமனான அட்டை |
விலை | Rs.180/- |
புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/annavin-mozhik-kolkai.html
பதிப்புரை
இருபதாம் நூற்றாண்டின் மறுமலர்ச்சி வரலாற்றை உருவாக்கி, வருங்கால வரலாற்றுக்கு அடித்தளம் அமைத்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.
ஆட்சியில் ஆங்கிலம், ஆலயத்தில் சமஸ்கிருதம், இசையரங்கு களில் தெலுங்கு, எல்லையோரத்தில் இந்தி' என்று தமிழ்மொழியைப் புறக்கணித்துத் தமிழரைத் தாழ்த்துகின்ற அவல நிலைமை நிலவியபோது, மாணவராக இருந்த அண்ணா சுயமரியாதை இயக்கக் கருத்துக்களால் கவரப் பெற்று, அரசியலுக்கு அறிமுகமாகி, மொழி பற்றிய தனது கொள்கையை வெளியிட்டார்.
'இந்தியைப் படித்துத் தெரிந்து கொண்டால் சமஸ்கிருதத்தில் சான்றோனாக எளிதில் ஆகிவிடலாம்' எனக் கூறி 1937-இல் சென்னை மாநிலத் தலைமை அமைச்சராகப் பதவியேற்ற ராஜாஜி, உயர்நிலைப் பள்ளிகளில் இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்கினார்.
தமிழின் மறுமலர்ச்சியும், பார்ப்பனரல்லாதாரின் எழுச்சியும் ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் ஏற்பட்டு, தேசிய விழிப்புணர்வைத் தோற்றுவித்தது.
உலக மொழிகளான ஆங்கிலம், பிரெஞ்சு, இலத்தீன், கிரேக்கம், எபிரேயம், சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் - ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்த மொழியியல் அறிஞர் கால்டுவெல், 'திராவிட மொழிகள் அனைத்திலும் உயர்தனிச் செம்மொழியாம் நிலைபெற்று விளங்கும் தமிழ், தன்னிடையே இடம் பெற்றிருக்கும் சமஸ்கிருதச் சொற்களை அறவே ஒழித்துவிட்டு உயிர் வாழ்வதோடு, அவற்றின் துணையை ஒரு சிறிதும் வேண்டாமல் வளம் பெற்று வளர்வது இயலும்' என 1856-இல் சுட்டிக் காட்டினார்.
தமிழர்கள் அரசியல் உரிமையைப் பறிகொடுத்துவிட்ட பின்னர், தங்களுடைய இலக்கிய ஆற்றலையும் பறிகொடுத்து விட்டதைப் போன்ற தோன்றத்தினை, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு காலகட்டங்களில் தங்களது ஆட்சியை ஏற்படுத்திய போசளர், முகம்மதியர், நாயக்கர், மராட்டியர், ஆங்கிலேயர் ஆகியோரால், ஆட்சியாளர்களின் ஆதரவின்மையால் தமிழ் மொழியின் வளர்ச்சி தாழ்நிலை பெற்றது.
சுதந்திரம் பெற்ற இந்தியாவின் அரசியலமைப்பில் இந்திக்கே ஆட்சிமொழி என்னும் முடி சூட்டப்பட்டது. இது எந்தெந்த வகையில் பிறமொழியாளர்களின் உரிமையைப் பறிக்கும் என்பது பல்வேறு அறிஞர்களாலும் எடுத்துரைக்கப்பட்டது. இந்தி மட்டும் மைய ஆட்சிமொழி ஆவதால் இந்தி பேசாத பிறமொழி மக்கள் எல்லாம் நாட்டின் இரண்டாம் தர குடிமக்கள் ஆக்கப்படுவர்' என இந்தியைப் பொது மொழியாக ஏற்றிட முனைந்து செயற்பட்ட இராஜாஜி அவர்களே எதிர்ப்புக்குரல் கொடுக்கும் நிலையும் ஏற்பட்டது.
அண்ணாவால் உருவாக்கப்பட்டதி.மு.க.வின் இந்தி எதிர்ப்புக் குரல் தமிழக சட்டமன்றத்திலும், இந்திய நாடாளுமன்றத்திலும் ஒலித்த போது, 1959-ஆம் ஆண்டில் பிரதமர் நேரு அவர்கள், எவ்வளவு காலம் வரை (இந்தி பேசாத) மக்கள் விரும்புகிறார்களோ அதுவரையில் ஆங்கிலம் இருக்க வேண்டும். இதற்கான முடிவு கூறும் உரிமையை இந்தி பேசும் மக்களிடம் நான் விடமாட்டேன். இந்தி பேசாத மக்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்' என உறுதிமொழி அளித்தார். இந்த உறுதிமொழியை அரசியல் சட்ட விதிகளில் இடம் பெறச் செய்யவில்லை என்பதுடன், வட புலத்து அரசியல் தலைவர்கள் இந்தியைத் திணிக்க - பரப்ப மைய அரசு மூலம் முனைந்த போது, அதனைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்தில் நடைபெற்றவையே அண்ணா மேற்கொண்ட அறப் போராட்டங்கள் ஆகும்.
முனைவர் பட்டத்துக்காக பேராசிரியர் அ. இராமசாமி அவர்கள் படைத்த அண்ணாவின் மொழிக் கொள்கை' என்னும் இவ் ஆய்வு நூலில் அண்ணாவின் எழுத்துக்கள், பேச்சுக்கள் ஆகியவற்றின் மூலமாகவே அவருடைய மொழிக் கொள்கை விளக்கம் மதிப்பீட்டு முறையில் ஆய்வு செய்யப்பட்டு, புறச்சான்றுகளின் துணையால் வரலாற்று உண்மைகள் நிறுவப்பட்டுள்ளன.
அகச்சான்றின் அடிப்படையில் ஆய்வு நடத்தி ஏழு இயல்களாக பகுத்து, அண்ணாவின் தமிழ் ஆர்வம், அண்ணாவின் மொழிப் பயன் பாட்டுக் கூறுகள், அண்ணாவின் ஆட்சி மொழிக்கொள்கை, அண்ணாவும் இந்தி எதிர்ப்பும், அண்ணாவும் மொழிக் கல்வியும், அண்ணாவும் பிரதமர் நேருவின் உறுதிமொழியும் மற்றும் அண்ணாவும் இருமொழிக்கொள்கையும் என அறிஞர் அண்ணா சிந்தித்துச் செப்பிய அரிய கருத்துக்களை மிகவும் நுட்பமாக ஆசிரியர் எடுத்துரைக்கின்றார்.
தமிழகத்தின் மொழிக்கொள்கை பற்றி அறிந்து கொள்ள நினையும் ஆர்வலருக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் உற்ற துணையாக விளங்கும் இந்நூலை வெளியிடுவதில் பூம்புகார் பதிப்பகம் பெருமை கொள்கிறது. நம் தமிழ் சமுதாயத்திற்கு இந்நூல் பெரிதும் பயன்படுவதாகும்.
- பூம்புகார் பதிப்பகத்தார்.
தொடர்புடைய மற்ற பதிவுகள்: