Skip to content

அம்பேத்கரும் சாதி ஒழிப்பும் - நன்றி

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://periyarbooks.com/products/ambethkarum-jathi-ozhippu 

நன்றி

சமூக அறிவியலில் வாழ்க்கை வரலாறு ஒரு தனித்த துறையாகவே உருவெடுத்து உள்ளது. சில அறிஞர்கள், அதிலும் குறிப்பாகப் பல வரலாற்று ஆசிரியர்கள் தங்களுடைய ஒட்டுமொத்த ஆய்வுப் பணிகளையும் வாழ்க்கை வரலாறு சார்ந்தே செலவழிக்கிறார்கள். என் முந்தைய ஆய்வுகளில் இந்து தேசியவாதச் சிந்தனையாளர்கள், தாழ்த்தப்பட்ட சாதித் தலைவர்கள் ஆகியோரின் வாழ்க்கை குறித்து மிகுந்த கவனம் செலுத்தியுள்ளேன். எனினும், என்னுடைய இயல் பான செயல்பாடுகளில் வாழ்க்கை வரலாற்றுக்கு இடமிருந்தது இல்லை. நான் மிக முக்கியமான காரணங்களுக்காக இந்த நூலை எழுதினேன். இந்த நூலின் பார்வையானது தொடர்ந்து வாழ்க்கை வரலாறுகளை எழுதிக் குவிக்கும் ஆய்வாளர்களின் போக்கில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.

நான் டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை, சிந்தனைகள் குறித்து 1990-களில் படிக்க ஆரம்பித்தேன். நன்டேர்ரே பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பேராசிரியராக இருந்த ஆலிவர் ஹெர்ரென்ஸ்கிம்டிட் அம்பேத்கரின் எழுத்துகளை எனக்கு அறிமுகப்படுத்தினார். அம்பேத்கரின் எழுத்துகளை வாசிக்க ஆரம்பித்த பின்னர், அவர் இந்திய சமூகவியலில் தவிர்க்கமுடியாத முன்னோடியாகச் செயலாற்றியிருப்பதைப் படிப்படியாக உணர்ந்து கொண்டேன். நவீன இந்தியாவில் கண்டு கொள்ளவேபடாத தலைவர்களில் ஒருவராக அம்பேத்கர் இருந்தார். அதனால் அக்காலத்தில் இது பலருக்கும் தெரியாத தகவலாக இருந்தது. ஆகவே, அம்பேத்கர் குறித்த இந்தப் புத்தகத்தை எழுதுவது என முடிவு செய்தேன். அதன் மூலம் இந்திய வரலாற்றின் முக்கியமான, ஆனால், புறக்கணிக்கப்பட்ட ஆளுமைக்கு நியாயம் செய்ய வேண்டும் என உறுதி பூண்டேன்.

என்னுடைய ஆர்வம் முதலில் அம்பேத்கரின் சமூகவியல் சிந்தனைகள் சார்ந்து இருந்தது. பின்னர், சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போர்களில் அம்பேத்கர் காலத்துக்கு ஏற்ப பயன்படுத்திய விடுதலைக்கான உத்திகள் குறித்து ஆர்வம் கொண்டேன். இவை சார்ந்தே இந்தப் புத்தகம் பேசுகிறது. ஆகவே, இந்தப் புத்தகம் டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கையை விரித்துப் பேசவில்லை. இந்நூல் காலவரிசைப்படி அமையாமல், அவரின் போராட்ட உத்திகளின் வரிசைப்படி அமைந்திருக்கிறது.

ஆலிவர் ஹெர்ரென்ஸ்கிம்டிட்டுக்கு மட்டும் அல்லாமல், அம்பேத்கரிய அறிஞர்களில் மிகவும் மதிக்கப்படும் எலினார் ஜில்லியட்டுக்கு நன்றி சொல்ல ஆசைப்படுகிறேன். அவர் இந்தப் புத்தகத்தின் முந்தைய வரைவை வாசித்துவிட்டுத் தன்னுடைய மேலான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அம்பேத்கர் குறித்த அவரின் ஆழமான அறிவால் பெரும்பயன் பெற்றேன். அவரின் உதவியால் அமெரிக்கா, ஐரோப்பியாவில் நடைபெற்ற பல்வேறு தலித் பயிற்சி பட்டறைகளில்' பங்கு பெற்றேன்.

வட இந்தியாவில் உள்ள தலித்துகள் குறித்தும் அம்பேத்கரியம் குறித்தும் விலைமதிப்பற்ற பார்வைகளைத் தந்த ஓவன் லின்ச்சுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன். தற்கால இந்தியாவில் அம்பேத்கரின் தேவையை உணர்ந்து கொள்ள ஹேமந் தியோஸ்தாலி, கை பொய்த் தேவின், எம்மா ராய்கர் பெருமளவில் உதவிகரமாக இருந்தார்கள். இறுதியாக, நன்டேர்ரே பல்கலையில் முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளை எழுப்பிய என்னுடைய மாணவர்களுக்கு நன்றி. இந்த நூலில் நான் எழுத நினைத்த சில கருத்துகளை மேலும் தெளிவாக வெளிப்படுத்த அவர்களின் கேள்விகள் உதவின.

தாராவின் அன்பும் பொறுமையும் இல்லாமல் இந்நூலை எழுதி முடித்திருக்க முடியாது. எங்களுடைய பச்சிளம் குழந்தையான மிலானுக்கு அம்பேத்கரின் வாழ்க்கை எனும் நம்பிக்கை ஊற்றெடுக்கும் செய்தியை சமர்ப்பிக்கிறேன். அம்பேத்கரின் வாழ்க்கையை எந்த விருப்பு வெறுப்புமின்றி ஆய்வுக்கு உட்படுத்தினாலும் அது நம்மை உணர்ச்சிவசப்பட வைக்கிறது. இந்த உணர்வுகளை ஒரு நாள் என் மகனும் பகிர்ந்துகொள்வான் என நம்புகிறேன்.

Back to blog