Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

அம்பேத்கரும் சாதி ஒழிப்பும் - அறிமுகம்

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
அறிமுகம் இந்தியாவின் முதல் தலித் தலைவர்

'நான் பாபாசாகேபை (அம்பேத்கரை) கடைசிமுறையாக அவருடைய மரண ஊர்வலத்தில் பார்த்தேன். அன்று காலை சாவகாசமாக வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தேன். செய்தித்தாளின் முதல் பக்கத்தில், அவர் இறந்து விட்டார் என்கிற செய்தியைப் படித்தேன். ஏதோ நிலம் கிடுகிடுப்பதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. என்னுடைய குடும்ப உறுப்பினர் இறந்துவிட்டதைப் போல உணர்ச்சிவசப்பட்டேன். வாசல்' கதவின் தூணைப் பற்றிக்கொண்டு அழ ஆரம்பித்தேன். செய்தித் தாளை வாசித்துக் கொண்டிருந்தவன் ஏன் திடீரென்று அழுகிறான் என என்னுடைய அம்மாவுக்கோ மனைவிக்கோ பிடிபட வில்லை. அம்பேத்கர் மரணமடைந்த செய்தியை அவர்களிடம் சொன்னதும், ஒட்டுமொத்தக் குடும்பமே கண்ணீர் வடித்தது.

வீட்டை விட்டு வெளியே வந்ததும் சாரை சாரையாக மக்கள் கூடி, அம்பேத்கர் மரணச்செய்தியைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. பாபாசாகேப் டெல்லியில் காலமானார். அவரின் உடலைத் தாங்கிய விமானம் அன்று மாலையே பம்பாய் வந்து சேர்வதாக இருந்தது. நான் வேலையில் சேர்ந்து வெறும் மூன்று மாதங்களே ஆகியிருந்தன. நான் வேலை பார்த்துக் கொண்டிருந்த கால்நடை மருத்துவக் கல்லூரிக்குச் சென்று விடுப்பு கேட்டேன். நான் என்ன காரணத்துக்காக விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ளேன் என்பதைப் பார்த்துவிட்டு என்னுடைய மேல் அதிகாரிகடுப்பானார். இதை ஏன் காரணமாகக் கூறியுள்ளாய்? அம்பேத்கர் ஓர் அரசியல் தலைவர். நீ ஓர் அரசுப் பணியாளன். வேறு எதாவது தனிப்பட்ட காரணத்துக்காக விடுப்பு எடுப்பதாக எழுதிக்கொடு' என்று என்னிடம் கேட்டார்.

நான் எப்போதும் அனுசரித்துப்போகும் மனப்பான்மை கொண்டவன். ஆனால், என் குணத்துக்கு மாறாக, 'சார், அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவர். அவர் எங்களை எப்படிப்பட்ட படுகுழியில் இருந்து மீட்டிருக்கிறார் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?' எனக் கேட்டேன்.

என் வேலையைப் பற்றிக் கவலைப்படாமல், என் விண்ணப்பம் ஏற்கப்படுமா எனக் காத்திருக்காமல், நான் ஆளுநர் மாளிகையை (ராஜ் பவனை) நோக்கி விரைந்தேன். அம்பேத்கரின் பூத உடல் வைக்கப்பட்டு இருந்த ராஜ்பவனை நோக்கி மானுட வெள்ளம் பெருங்கூட்டமாகப் பாய்ந்து கொண்டிருந்தது (Daya Pawar, Ma vie d'intouchable, Paris, La Découverte, 1990, p. 192)

இந்தியாவின் மேற்குப்பகுதி மாநிலமான மகாராஷ்டிராவைச் சேர்ந்த தலித் எழுத்தாளரான தயா பவாரின் நெகிழ வைக்கும் வாக்குமூலம் இது. அவர் அம்பேத்கரின் சிந்தனைகளோடு நெருங்கிய உறவு கொண்டிருந்தவர் என்ற தொனியை இந்த வாக்குமூலம் வெளிப் படுத்தவில்லை. அம்பேத்கரின் அரசியல் இயக்கத்தில் ஈடுபட்டிருந் தாலும், தயா பவாருக்கு அம்பேத்கரைத் தனிப்பட்ட முறையில் தெரியாது. மேலும், அந்த வாக்குமூலம் பம்பாயில் வாழ்ந்துவந்த தீண்டப்படாத சாதியைச் சேர்ந்த மிகக் குறைவான அறிவுஜீவிகளின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாகவும் இல்லை.!

அம்பேத்கர் தன்னுடைய வாழ்க்கையின் பெரும்பகுதியை அந்த பம்பாயில் தான் செலவிட்டிருந்தார். அம்பேத்கரின் இறுதிச் சடங்குகளில் பெருந்திரளான மக்கள் கூடினார்கள்; தயா பவார் வர்ணிப்பதைப்போல மானுடப் பெருவெள்ளம் கரை புரண்டு பாய்ந்தது. அதோடு மட்டுமல்லாமல், இந்தியா முழுக்க அண்ணலின் மறைவினால் பொதுமக்களிடம் தாங்கமுடியாத துயரமும் அனுதாபமும் பெருமளவில் பெருக்கெடுத்தது. அம்பேத்கரின் தாக்கம் மகாராஷ்டிராவின் எல்லைகளைத் தாண்டியும் பரவியிருந்தது. இதற்குச் சான்று பகர்வது போல, அவர் ஆரம்பித்த கட்சிகள் வட இந்தியாவில் தேர்தல் வெற்றிகளைப் பெற்றன. அவருடைய எழுத்துகள் மராத்தி மொழியில் மட்டுமல்லாமல் பல்வேறு மொழிகளில் எண்ணற்ற பதிப்புகளாக வெளியிடப்பட்டன. எந்தவித ஐயமுமில்லாமல் இந்தியாவில் தீண்டப்படாதவர்களில் இருந்து எழுந்த முதல் தலைவர் அம்பேத்கரே. அவருக்குப் பின்வந்தவர்களில் யாரும் அவர் பெற்ற மரியாதையை நெருங்கக்கூட முடியவில்லை.

இப்படிப்பட்ட சாதகமான சூழ்நிலைகள் நிலவிய போதும் அம்பேத்கரின் வாழ்க்கை, பணிகள், சிந்தனைகள் குறித்து ஏன் வெகு சில ஆய்வுகளே மேற்கொள்ளப்பட்டுள்ளன? உபேந்திர பக்ஷி 2000-ல், அம்பேத்கர் முழுக்கவும் மறக்கப்பட்ட ஆளுமையாகவே இருக்கிறார்' என்று எழுதுகிற அளவுக்கு நிலைமை மோசம்.'' அம்பேத்கர் குறித்து 1990கள்வரை வெகு சொற்பமான புத்தகங்களே வெளிவந்துள்ளன. இதைவிட அம்பேத்கர் புறக்கணிக்கப்பட்டதற்கு அப்பட்டமான சாட்சி வேறெதுவுமில்லை. காங்கிரஸ் மாநிலத் தலைவர்கள் குறித்து ஒன்றுக்கும் மேற்பட்ட வாழ்க்கை வரலாறுகள் வெளிவந்துள்ளன. காந்தி, நேரு குறித்து எண்ணற்ற புத்தகங்கள் வெளிவந்துள்ளன என்பதைத் தனியே சொல்ல வேண்டியதில்லை. ஆனால், மேற்சொன்ன இருவர் குறித்து வந்த வாழ்க்கை வரலாறு களுக்கு இணையான தரத்தில் அம்பேத்கர் குறித்து ஆங்கிலத்தில் மிகக் குறைவான புத்தகங்களே எழுதப்பட்டுள்ளன. காந்தி, நேரு, படேல், பந்த் முதலியோரின் ஒட்டுமொத்தப் படைப்புகள் வெகுகாலத்துக்கு முன்னரே தொகுக்கப்பட்டுவிட்டன. ஆனால், அம்பேத்கரின் ஒட்டு மொத்த படைப்புகளைத் தொகுக்கும் பணிகள் 1970களுக்கு முன்னர்வரை துவங்கக்கூட இல்லை.'

இந்த முரண்பாட்டை எப்படி விளங்கிக்கொள்வது? இந்திய சமூக அறிவியலில் பொதுவாகவே வாழ்க்கை வரலாறுகளுக்குப் பஞ்சம் உள்ளது என்பது ஒரு காரணம். அம்பேத்கரை நிராகரிப்பது ஒருபுறம். இன்னொருபுறம், அவரைப்பற்றிய சிந்தனையே இந்திய அதிகார பீடங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. மேலும், ஆங்கிலேயரோடு இணைந்து இயங்கியவர்களை ஒதுக்கிவைக்கும் மனப்பான்மையும் ஒரு காரணம். இந்திய விடுதலை இயக்கத்தின் தலைவர்களுக்கே பெரும்பாலும் அங்கீகாரங்கள் போய்ச் சேருகின்றன. இந்திய விடுதலைப் போரில் இருந்து அம்பேத்கரின் போராட்டம் வேறு பட்டது என்றாலும் அது மகத்தானது.

அம்பேத்கரின் வாழ்க்கையை, மேலோட்டமாகப் பார்த்தால் அது சுயமாகச் சாதித்த ஒரு மாமனிதரின் தேவதைக் கதை போலிருக்கும். பீம் ராவ் அம்பேத்கர் ஏப்ரல் 14, 1891-ல் இந்தோருக்கு அருகில் உள்ள மஹோவ் எனும் ராணுவக்குடியிருப்புப் பகுதியில் பிறந்தார். அப்போது இந்தோர் சுதேச சமஸ்தானமாக விளங்கியது. விடுதலைக்குப் பின்னால், இப்பகுதி மத்திய பாரத (தற்கால மத்திய பிரதேசம்) மாநிலத்தில் இணைக்கப்பட்டது. பல்வேறு இந்தோர் சுதேச சமஸ்தானத்தின் மக்களைப் போல அம்பேத்கர் குடும்பமும் மகாராஷ்டிராவைப் பூர்வீகமாகக் கொண்டது. இந்தோர் சுதேச சமஸ்தானத்தின் ஆட்சியாளர்கள் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள்.

மராத்தாவின் கடற்கரைப் பகுதியான கொங்கனில் உள்ள அம்பவடே தான் அம்பேத்கரின் சொந்த கிராமம். அம்பேத்கருக்கு அவருடைய பெற்றோர் இட்ட பெயர் அம்பவடேகர். அந்தப் பெயரை 1900-ல் அம்பேத்கர் என்று அவர் மாற்றிக்கொண்டார். அவருடைய பிராமண ஆசிரியர் ஒருவரின் பெயர் அம்பேத்கர். அம்பவடேகரின் அறிவுத் திறம், பண்புகள் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டுத் தன்னுடைய பெயரை அந்த ஆசிரியர் அவருக்குத் தர முன்வந்த போது அம்பேத்கர் என்ற அந்தப் பெயரை அம்பவடேகர் தனக்குச் சூட்டிக்கொண்டார்.

அம்பேத்கரின் தந்தை பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் வீரராகப் பணியாற்றினார். அவர்கள் ராணுவ கண்டோன்மென்ட் பகுதியில் வசித்து வந்தார்கள். இதனால் தீண்டப்படாத மக்களைப் பாகு படுத்தும் கொடுமைகள் அம்பேத்கரை வெகுகாலம் தீண்டியிருக்க வில்லை. ஆனால், காலப்போக்கில் ஒரு தீண்டப்படாதவர் அனுபவிக்கும் கொடுமைகளை அம்பேத்கரும் எதிர்கொள்ள நேர்ந்தது. சிறுவனான தனக்கு ஏன் முடி வெட்டுபவர் முடி வெட்டுவதில்லை என அம்பேத்கர் ஆச்சரியப்பட்டார்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, அவர் வாழ்க்கையையே மாற்றிப் போட்ட அவமானத்தைச் சந்தித்தார். அந்த அவமானத்தை அவர் இறுதிவரை மறக்கவில்லை. அம்பேத்கர் தன்னுடைய தந்தையைக் காண அவர் வேலை பார்த்துக் கொண்டிருந்த இடத்துக்குத் தன் உடன்பிறப்புகளோடு தொடர்வண்டியில் பயணம் செய்தார். அவர்கள் அனைவரும் அப்பா பணிபுரிந்த ஊரை அடைந்தார்கள். அங்கே இறங்கியதும், நிலைய அதிகாரி அவர்களை, யார்..... எங்கிருந்து வந்திருக்கிறீர்கள் என்று கேட்டார். அப்படியே அவர்களுடைய சாதியையும் கேட்டார். அவர்களின் சாதி என்ன என்று தெரிந்ததும், 'ஐந்தடி தள்ளி நின்றார்.

அம்பேத்கரின் தந்தை வாசித்துக் கொண்டிருந்த கிராமத்துக்கு டோங்கா (குதிரை) வண்டிக்காரர்கள் அவர்களை அழைத்துச் செல்ல மறுத்தார்கள். ஒரே ஒரு குதிரை வண்டிக்காரர் மட்டும் அவர்களைக் கிராமத்துக்கு அழைத்துச் செல்ல சம்மதித்தார். ஆனால், வண்டியை அவர்களே ஓட்டிக்கொள்ள வேண்டும் என்று சொல்லிவிட்டார். அந்த டோங்காவாலா (குதிரை வண்டிக்காரர்) ஒரு பயணிகள் விடுதியில் (தாபாவில்) உணவு உண்ண வண்டியை நிறுத்தினார். அம்பேத்கரையும் அவருடைய உடன் பிறந்தவர்களையும் விடுதிக்குள் அனுமதிக்க வில்லை. தண்ணீர் தாகம் எடுத்தது. அருகில் இருந்த சேறும் சகதியுமாக இருந்த கலங்கிய நீரோடையில் அவர்கள் நீர் அருந்தித் தாகத்தைத் தணித்துக் கொள்ள வேண்டியிருந்தது. குழந்தையாக இருந்தபோதிலும் அம்பேத்கர் கூர்மையான மதி உடையவராக இருந்ததால், தங்களுடைய சொந்த நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

அம்பேத்கரின் தந்தை சமீபத்தில்தான் பம்பாய்க்குக் குடி பெயர்ந் திருந்தார். கூர்மையான அறிவுத்திறம் மிக்க அம்பேத்கர் பம்பாயில் உள்ள எல்பின்ஸ்டோன் உயர்நிலைப் பள்ளியில் 1907-ல் மெட்ரிகுலேஷன் படிப்பில் வெற்றிபெற்றார். அவருக்குக் கிடைத்த கல்வி உதவித்தொகையினால் பெருமை மிகுந்த எல்பின்ஸ்டோன் கல்லூரியில் இளங்கலை படிப்பில் சேர்ந்து 1912-ல் பட்டம் பெற்றார். அதற்குப் பிறகு மேற்படிப்பை அமெரிக்காவில் தொடர்வதற்கு இன்னுமொரு கல்வி உதவித்தொகை அம்பேத்கருக்குக் கிடைத்தது. அவருக்கு முன்புவரை தீண்டப்படாத சமூகத்தில் இருந்து யாருக்கும் அந்த வாய்ப்பு கிடைத்திருக்கவில்லை.

நியூயார்க் நகரத்தில் உள்ள கொலம்பியா பல்கலையில் முதுகலை பட்டம் பெற்றபின்பு, 1916-ல் லண்டனில் உள்ள கிரேஸ் இன்னில் சட்டப்படிப்பு படிக்கப் பயணமானார். அதற்குப் பின் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் தன்னுடைய அறிவுத்தேடலைத் தொடர்ந்தார். ஆனால், அவருடைய கல்வி உதவித்தொகை முடிந்து போனதால் ஆகஸ்ட் 1917-ல் இந்தியா திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அம்பேத்கர் அறிவுத்துறைகளில் புரிந்த மகத்தான சாதனைகள் பிரிட்டிஷாரின் கவனத்தை ஈர்த்தன. அவர்கள் அம்பேத்கரின் உருவில் தீண்டப்படாத மக்களின் வருங்காலப் பிரதிநிதியைக் கண்டார்கள். ஆங்கிலேய அரசு, இந்திய மக்களில் வாக்குரிமைக்குத் தகுதியான வர்களுக்கான வரையறையை மறு ஆய்வு செய்ய சவுத்பரோ குழுவை 1919-ல் அமைத்தது. டெல்லி, மாகாணங்கள் ஆகியவற்றில் உருவாக்கப் பட்ட சட்டமன்றங்களுக்கான தேர்தலில் கூடுதல் இந்தியர்களை வாக்களிக்க அனுமதிக்க வைப்பதே அதன் நோக்கமாக இருந்தது. 1919 சீர்திருத்தங்கள் கூடுதல் அதிகாரங்களை பிரிட்டிஷ் இந்தியாவின் அரசுகளுக்கும் மாகாண சட்டமன்றங்களுக்கும் வழங்குவதை நோக்க மாகக் கொண்டிருந்ததால் அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஆகவே, சட்ட மேலவைகளுக்குக் கட்டுப்பட்ட இந்திய அமைச்சர்கள் அரசில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். அம்பேத்கர் தன்னளவில், தீண்டப்படாத மக்களுக்குத் தனித்தொகுதிகள், ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றுக்காகப் போராடினார்.

சிவாஜியின் வழித்தோன்றலான கோலாப்பூர் மகாராஜாவான சாஹு மகாராஜின் நிதியுதவியோடு அம்பேத்கர், 1920-ல் மூக் நாயக் ('ஊமைகளின் தலைவன்' குரலற்றவர்களின் நாயகன்') எனும் புதிய இதழைத் துவங்கினார். எனினும், இங்கிலாந்துக்குத் திரும்பிச் சென்று படிக்க உதவுவதாக இளவரசர் உறுதி தந்ததும் அம்பேத்கர் ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தார். அவர் எம்.எஸ்சி. பட்டத்தை 1921-ல் பெற்றார். அதற்கு அடுத்த வருடம் தன்னுடைய ஆய்வுக்கட்டுரையை, The Problem of the Rupee எனும் தலைப்பில் சமர்ப்பித்தார்.

பம்பாயில் வழக்கறிஞராகத் தன்னுடைய வாழ்க்கையைத் துவங்கிய அம்பேத்கருக்கு, தீண்டப்படாதவர் என்பதால் வழக்குகள் கிடைப்பது கடினமாக இருந்தது. ஆழமாகக் காயப்பட்ட அம்பேத்கர், தன்னுடைய வாழ்நாளை சாதி அமைப்புக்கு எதிரான போருக்கு அர்ப்பணிப்பது என முடிவு செய்தார். ஜூலை 1924-ல் பஹிஸ்கிரித் ஹிதகார்னி சபையை (புறக்கணிக்கப்பட்டவர்களின் நலனுக்கான கூட்டமைப்பு) உருவாக்கினார். இந்த அமைப்பை 1928- வரை தலைமையேற்று நடத்தினார். அதற்கு முந்தைய வருடம், பம்பாய் மாகாண சட்ட மேலவைக்கு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் நியமிக்கப்பட்டார். அங்கே அம்பேத்கர் கிணறுகளைப் பயன்படுத்தும் சட்டரீதியான உரிமையைத் தீண்டப்படாத மக்களுக்குப் பெற்றுத் தரப் போராடினார் (அதுவே அவரின் முதல் பெரும் மக்கள் போராட்டமான மகத் போராட்டம். கொங்கன் கடற்கரையின் மகத்தில் 1927-ல் நடந்தது). தீண்டப்படாத மக்களின் ஆலய நுழைவு உரிமைகளுக்காகவும் போராடினார். ஆலய நுழைவு போராட்டங்களை அம்பேத்கர் 1935வரை அவ்வப்போது நடத்திக்கொண்டே இருந்தார்.

அம்பேத்கர் கட்சி அரசியலுக்குள் முப்பதுகளில் நுழைந்தார். பிரிட்டிஷாரிடம் தீண்டப்படாத மக்களுக்குத் தனித்தொகுதிகளைக் கேட்டார். அவை தரப்பட்டிருந்தால், தீண்டப்படாத மக்கள் உண்மையான அரசியல் சக்தியாக அணிதிரண்டு இருப்பார்கள். அம்பேத்கரின் கருத்துகளோடு ஓரளவுக்கு உடன்பட்ட பிரிட்டிஷ் அரசு, தனித்தொகுதிகளை ஏற்பதாக ஆகஸ்ட் 14, 1932ல் அறிவித்தது. இந்த நடவடிக்கை இந்து ஒற்றுமைக்கு ஆபத்தாக முடியும் என அஞ்சிய காந்தி, பூனாவில் உள்ள எரவாடா சிறையில் உடனே உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தார். இந்த நடவடிக்கை அம்பேத்கரைத் தனித்தொகுதிகள் கோரிக்கையைக் கைவிட வைத்ததோடு, பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் கட்டாயப் படுத்தியது. இந்த மாற்றத்தால் அம்பேத்கர் பெருத்த மனக்கசப்புக்கு ஆளானார். காந்தி பின்னாளில், பெருந்தன்மை மிகுந்த மனநிலையில், தீண்டப்படாத மக்களுக்கு முன்பைவிடக் கூடுதல் எண்ணிக்கையிலான இடங்களை ஒதுக்கினார்.

அம்பேத்கர் 1936-ல் தன்னுடைய முதல் அரசியல் கட்சியான விடுதலை தொழிலாளர் கட்சியை (ஐஎல்பி) அடுத்து வரவிருந்த 1937 தேர்தல் களை எதிர்பார்த்துத் துவங்கினார். அத்தேர்தல் 1919 சீர்திருத்தங்களை விட மாகாண அரசுகள், சட்டமன்றங்கள் ஆகியவற்றுக்குக் கூடுதல் அதிகாரங்களைத் தந்த 1935 சட்ட வரையறையின்படி நடைபெற்றது. ILP கட்சி தன்னுடைய வேட்பாளர்களை பம்பாய் மாகாணம், ஓரளவுக்குச் செல்வாக்குப் பெற்றிருந்த மத்திய மாகாணங்கள் ஆகியவற்றில் மட்டுமே நிறுத்தியது. இந்தத் தேர்தலில் அம்பேத்க ரோடு ஒன்பது கட்சியினர் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.

இரண்டாம் உலகப்போர் இந்திய அரசியல் களத்தில் மாற்றங்களைத் துரிதப்படுத்தியது. பிரிட்டிஷ் அரசு காங்கிரஸ் கட்சியைக் கலந்து ஆலோசிக்காமல் உலகப்போரில் இந்தியாவை ஈடுபடுத்தியது. இதனால், காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகள் தாங்கள் அதிகாரத்தில் இருந்த எட்டு மாகாண அரசுகளில் இருந்து பதவி விலகினார்கள். உலகப்போரில் மற்ற இந்தியர்களின் ஆதரவைச் சிந்தாமல், சிதறாமல் பெற பிரிட்டிஷ் அரசு முனைந்தது. ஆகவே, பிரிட்டிஷ் அரசு காங்கிரஸ் அளவுக்கு முக்கியத்துவம் இல்லாத அரசியல் கட்சிகளான முஸ்லீம் லீக், இந்து மகாசபை (ஒரு சிறிய இந்து தேசியவாதக் குழு), ஐஎல்பி கட்சித்தலைவர்களோடு கைகோர்த்தது. இப்படித்தான் 1941-ல் அம்பேத்கர், பாதுகாப்பு ஆலோசனைக் குழுவில் இணைத்தார். அதற்கு அடுத்த வருடம் தொழிலாளர் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

தன்னுடைய கட்சி சார்ந்த செயல்திட்டத்தை மீட்டெடுத்து, அம்பேத்கர் அமைச்சர் பணிகளை அதனோடு இணைத்துக் கொண்டார். அம்பேத்கர் 1942-ல் பட்டியல் சாதிகள் கூட்டமைப்பை (Scheduled Castes' Federation - எஸ்சிஎஃப்) உருவாக்கினார். பட்டியல் சாதிகள் என்பது அரசால் உருவாக்கப்பட்ட பட்டியலில் இடம் பெற்ற தீண்டப்படாத சாதிகளைக் குறித்தது. இந்தப் பட்டியலில் இடம் பெற்ற சாதிகள் கல்வித்துறை, அரசுப்பணிகளில் இட ஒதுக்கீட்டுப் பயன்களைப் பெறுவதற்குத் தகுதியானவர்கள். தனக்கான அரசியல் ரீதியான ஆதரவு வட்டத்தைத் தொழிலாளர்கள் மத்தியிலும் விரிவுப்படுத்த முயன்ற அம்பேத்கர், மீண்டும் தன்னுடைய முயற்சிகளைத் தீண்டப்படாத மக்களை நோக்கி மட்டுமே குவித்தார். சர்வ வலிமை பொருந்திய காங்கிரஸ் கட்சியை மார்ச் 1946-ல் நடைபெற்ற மாகாணத் தேர்தல்களில் எதிர்கொண்ட எஸ்சி எஃப் கட்சி மிக மோசமான தோல்விகளைச் சந்தித்தது. அம்பேத்கரே தோல்வியைத் தழுவினார்.

இத்தோல்வி தீண்டப்படாதவர்களின் மிக முக்கியமான பிரதிநிதியாக அம்பேத்கர் உயர்வதைத் தடுக்கவில்லை. ஜவஹர்லால் நேரு ஆகஸ்ட் 3, 1947-ல் அம்பேத்கரை சட்ட அமைச்சராக நியமித்தார். அதற்கு மூன்று வாரங்கள் கழித்து, ஆகஸ்ட் 29-ல் அரசியலமைப்பு சட்ட வரைவில் ஈடுபட்ட சட்ட வரைவுக்குழுவின் தலைவராக அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். அரசியலமைப்பு சட்ட உருவாக்கத்தில் (1947-1950) அம்பேத்கர் தனது முழு ஆற்றலையும் செலவிட்டார்.

அரசியலமைப்புச் சட்டம் சமூகச் சீர்திருத்தத்துக்குச் சாதகமான கட்டமைப்பை வரையறுத்து இருந்தது. அதிலும் குறிப்பாகத் தீண்டாமையை ஒழித்தது; சாதி, இனம், பாலினம் சார்ந்த எல்லா வகையான பாகுபடுத்தல்களையும் தடை செய்தது. இன்னமும் தீவிரமாக அம்பேத்கர் இந்திய சமூகத்தின் பிற தீமைகளைத் தாக்கத் தீர்மானித்தார். அதனால் தான், ஜனவரி 1950-ல் திருமண உறவுகள் (திருமண, விவாகரத்துச் சட்டங்கள்), சொத்துரிமை, தத்தெடுத்தல் ஆகியவற்றை நெறிப்படுத்திய இந்து சட்ட மசோதாவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் களமாடினார். அம்பேத்கரின் பார்வையில் இந்து சமூகத்தைப் பெருமளவில் அது சீர்திருத்தும் என நம்பினார். நேருவோ தன்னுடைய கட்சியில் இருந்த பழமை வாதிகளைப் பகைத்துக்கொள்ள அஞ்சி, அம்பேத்கரின் பரிந்துரை களைத் தள்ளிவைத்தார். இதனால், அம்பேத்கர் செப்டம்பர் 1951-ல் அமைச்சர் பதவியை விட்டு விலகினார். மீண்டும் எதிர்க்கட்சியாக ஆனதும், அம்பேத்கர் சோசியலிஸ்ட்களுடன் தன்னுடைய உறவைப் புதுப்பித்துக்கொண்டார். முதல் பொதுத்தேர்தலில் (1951-1952) இந்தக் கூட்டணி பெரும் பின்னடைவைச் சந்தித்தது.

இதற்குப் பின்னால், அம்பேத்கர் புத்த மதத்தை நோக்கித் தன்னுடைய கவனத்தைத் திருப்பி, தன்னுடைய இறுதி நூலான புத்தமும் தம்மமும் நூலை அர்ப்பணிப்போடு செதுக்கினார். அவரின் மறைவுக்குப் பின்னர் அந்நூல் 1957-ல் வெளிவந்தது. அதற்கு முந்தைய வருடம், முக்கியமான இந்து பண்டிகையான தசரா (அக்டோபர் 14) அன்று நாக்பூரில் நடந்த பேரணியில் புத்த மதத்துக்கு மாறினார். அவரை அடியொற்றி பல்லாயிரக்கணக்கான தீண்டப்படாத மக்கள் புத்த மதத்துக்கு மதம் மாறினார்கள். அவர் டெல்லிக்கு நவம்பர் 30 அன்று திரும்பினார். அங்கே டிசம்பர் 6, 1956-ல் மரணமடைந்தார்.

இந்த நூலின் நோக்கம் நாம் ஏற்கனவே பருந்துப்பார்வை பார்த்த அம்பேத்கரின் வாழ்க்கையை விரிவாக நினைவுகூர்வது அல்ல. தீண்டப்படாத மக்களின் விடுதலைக்கும் இந்தியாவின் சமூக, அரசியல் மாற்றத்துக்கும் அவரின் பங்களிப்புகள் குறித்து வெளிச்சம் பாய்ச்சுவதே இந்த நூலின் நோக்கம்.

அம்பேத்கர் எப்படிச் சாதிய அடக்குமுறையைப் பகுப்பாய்வு செய்தார்? அதிலிருந்து எப்படித் தன்னுடைய போராட்ட அணுகு முறைகளை வகுத்துக்கொண்டார். வெறுமனே அம்பேத்கரை மெச்சுவது என்னுடைய நோக்கமில்லை. அதற்கு மாறாக, அவர் எப்படிச் சாதிய அடக்குமுறைக்கு எதிராகப் போராடினார் என்பதை அவரின் செயல் திட்டம் சார்ந்த அணுகுமுறையைக் கொண்டு விளக்கவே விரும்புகிறேன். அவரின் வாழ்க்கையே இப்படிப்பட்ட ஆய்வுக்கு உதவுகிறது. மூக் நாயக் முதல் இதழில் (ஜனவரி 31, 1920) அம்பேத்கர், 'தங்கள் மீதும், பிற ஒடுக்கப்பட்ட மக்கள் மீதும் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அநீதிகள், ஒடுக்கப்பட்ட மக்களின் வருங்கால முன்னேற்றம் குறித்தும், அவற்றுக்கு உகந்த செயல் திட்டங்கள் பற்றியும் கூர்மையாக விவாதிக்க ஒரு மன்றம் வேண்டும்' என்று எழுதினார்.

அம்பேத்கரின் செயல்திட்டங்களின் பக்கம் பார்வையைத் திருப்புவதற்கு முன்பு, அம்பேத்கர் எப்படி அம்பேத்கர் ஆனார் எனப் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறேன். இதை அறிய அவர் கால மகாராஷ்ட்ராவில், அவரின் குடும்ப, சமூகச் சூழலோடு அம்பேத்கரின் வாழ்க்கையைப் பொருத்திப் பார்ப்பேன். இதற்குப் பிறகு அம்பேத்கர் எப்படி ஆரம்பகாலம் தொட்டே சாதி அமைப்பு குறித்துச் சிந்தித்ததன் மூலம், அதை ஒழிக்கக் கனவு கண்டார் என ஆராய்வேன்.

ராஜதந்திரியும் செயல்திறமும் மிகுந்த அம்பேத்கர் ஆழமான சிந்தனையாளரான அம்பேத்கரை மறைத்துவிட்டார் என்பது துரதிர்ஷ்ட வசமானது. அவரின் பல்வேறு படைப்புகள் அவர் ஒரு அசல் அறிவுஜீவி என்பதைப் புலப்படுத்துகிறது. ஆனால், மற்ற அறிஞர்களைப் போல் அல்லாமல் அம்பேத்கரின் வளர்ப்பு, சூழல் ஆகியவை அவரின் சமூகவியல் அறிவை ஒரு மாபெரும் பணிக்குப் பயன்படுத்தத் தூண்டியது. சாதி எப்படி நுண்மையாக இயங்குகிறது என்பதைத் தீவிரமாக ஆராய்ந்து, அதன் மூலம், படித்தரநிலை அடிப்படையிலான சாதி எனும் சமூக அமைப்பை அழித்தொழிக்க முனைந்தார். இதனால் அவரை அசலான சமூக அறிவியலாளராக அங்கீகரிக்க முடியாமல் போய்விட்டது.

ஒரு முன்னோடியாக, அம்பேத்கர் ஓர் இலக்கில் இருந்து இன்னொரு இலக்கு நோக்கிக் கவனமாக நகர்ந்தார். முதலில் அவர் தீண்டப்படாத மக்களின் சீர்திருத்தத்துக்காக மனமார உழைத்தார். இதன்மூலம், இந்து சமூகத்துக்குள் (குறிப்பாகக் கல்வியின் மூலம்) அவர்களை மேம்படுத்த முனைந்தார்.

அதற்குப் பிறகு முப்பதுகளில் அரசியல் பக்கம் திரும்பினார். அவர் உருவாக்கிய கட்சிகள் சில நேரங்களில் தீண்டப்படாதவர்களின் இயக்கங்களாக, சில நேரங்களில் எல்லா ஒடுக்கப்பட்ட மக்களும் ஒன்று சேரும் புள்ளிகளாகத் திகழ்ந்தன. ஆனால், அவர் அரசியல் செயல்பாட்டை வெறுமனே கட்சி அரசியலோடு நிறுத்திக்கொள்ள வில்லை, அவர் அரசுகளோடு இணைந்து பணியாற்றினார். அவை ஆங்கிலேய அரசாக இருந்தாலும் சரி, காங்கிரஸ் அரசாக இருந்தாலும் சரி அவற்றோடு இணைந்து பணியாற்றினார். அதன் மூலம், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அதனுள்ளே இருந்து அழுத்தம் தந்தார்.

இந்த அணுகுமுறை அவரை இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவராகவும் வழி வகுத்தது. அதன்மூலம், தீண்டப்படாத மக்களின் நலன்களுக்காக வாதாடவும், காந்தியின் சில கருத்துக் களைத் தள்ளி வைக்கவும் அவரால் முடிந்தது. ஆனால், அம்பேத்கருக்கு இந்த அரசியல் செயல்பாடு திருப்தி தரவில்லை. அது பயனற்றது என்ற முடிவுக்கு வந்தார். சீரான இடைவெளிகளில், இதைவிடப் புரட்சிகரமான செயல்திட்டத்தால் கவரப்பட்டார். அது இந்து மதத்தில் இருந்து வேறு மதத்துக்கு மாறுவதில் வெளிப் பட்டது. இந்து மதத்தின் பிரிக்க முடியாத அங்கமாகச் சாதி அமைப்பு இருப்பதை அவரின் ஆய்வுகள் உணர்த்தின. ஆகவே, இந்து மதத்தை விட்டு வெளியேறும் கனவை அவர் இருபதுகளில் இருந்தே வெளிப்படுத்திக் கொண்டிருந்தார் என்றாலும், அதை அவர் தன் வாழ்வின் கடைசி வருடத்தில்தான் செயல்படுத்தினார்.

ஆகவே, அம்பேத்கர் இருவேறு அணுகுமுறைகளுக்கு இடையே ஊசலாடினார். சில நேரம் இந்து சமூக அமைப்புக்குள்ளும் இந்தியாவுக்குள்ளும் தீண்டப்படாத மக்களின் நலன்களை வளர்த்தெடுப்பதற்கு முயன்றார். வேறு சமயங்களில், இந்து சமூகத்தை விட்டு விலகும் முயற்சிகளான தனித்தொகுதிகள், தனித் தலித் கட்சி, இந்து மதத்தை விட்டு வேறு மதத்துக்கு மதம் மாறுதல் ஆகிய செயல்திட்டங்களை முயன்று பார்த்தார். அவர் தீர்வுகளைத் தேடினார், செயல்திட்டங்களைச் சோதித்துப் பார்த்தார், இதன் மூலம், தலித்துகளை விடுதலை நோக்கிய கடினமான பாதையில் பயணம் புரிய வைத்தார்.

 

 

அம்பேத்கர் குறித்து பல பதிவுகள் வெளிவந்திருந்தாலும், மூன்று முக்கியமான காரணங்களுக்காக இந்நூல் அவற்றிலிருந்து தனித்து நிற்கிறது.

  • அம்பேத்கரின் வாழ்க்கை, சிந்தனைகள் இரண்டையும் எளிமையாகவும் நேர்த்தியாகவும் இந்நூல் அறிமுகம் செய்கிறது.
  • ஒரு தலித் தலைவராக மட்டுமின்றி அம்பேத்கரின் பன்முக ஆளுமை மிக விரிவாக இதில் வெளிப்பட்டிருக்கிறது.
  • அம்பேத்கரின் சிந்தனைகளும் செயல்பாடுகளும் அறிவுப் பூர்வமாக ஆய்வு நோக்கிலும் விமரிசன நோக்கிலும் இந்நூலில் ஆராயப்பட்டுள்ளது.

சாதியை அம்பேத்கர் எப்படி அணுகினார்? சாதியை அழிக்க முடியும் என்று அவர் நம்பினாரா? ஆம் எனில் எவ்வாறு? இந்து மதத்திலிருந்து அவர் வெளியேறியது ஏன்? பௌத்தத்தைத் தழுவிக் கொண்டது ஏன்? ஜனநாயகம், பாகிஸ்தான், மதச்சார்பின்மை, இந்தியப் பிரிவினை, கம்யூனிசம், வகுப்புவாதம், சமூகநீதி ஆகியவை பற்றிய அம்பேத்கரின் பார்வை என்ன? தலித்துகளின் அரசியல் நுழைவுக்கும் எழுச்சிக்கும் அவர் ஆற்றிய பங்களிப்புகள் என்ன? அவர் மேற்கொண்ட போராட்டங்கள் என்னென்ன? அம்பேத்கர் இன்று நமக்கு ஏன் தேவைப்படுகிறார்?

அரசியல் ஆய்வாளர் கிறிஸ்தோஃப் ஜாஃப்ரிலாவின் Ambedkar and untouchability; Analysing and Fighting Caste என்னும் புகழ்பெற்ற நூலை அழகிய, தெளிவான நடையில் மொழியாக்கம் செய்திருக்கிறார் பூ.கொ. சரவணன். தமிழ் வாசிப்புலகுக்கு இந்நூல் ஓர் அறிவார்ந்த ஆயுதம்.

Previous article திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - ஆசிரியர் குறிப்பு