அம்பேத்கர் வாழ்வும் பணியும் - முன்னுரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/ambedkar-vaazhvum-paniyum-first-edition
 
முன்னுரை

“உலகிலுள்ள அடிமைச் சமுதாயங்கள் அனைத்துக்கும் நானே தலைவன் என்று கூறவில்லை. தீர்க்கப்பட வேண்டிய வேறு பல பிரச்சனைகள் கொடுமைகள் நம் நாட்டில் இல்லையென்றும் நான் கூறவில்லை. ஆனால் மனிதன் தன் வாழ்நாளில் எந்த அளவுக்குப் பணியாற்ற முடியும் என்பதை உணர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சனைகளை மட்டும் நான் எடுத்துக் கொள்கிறேன்."

தனது பொதுப்பணியின் நோக்கம் பற்றியும் அதனது எல்லை பற்றியும் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நிர்ணயிப்புதான் மேலே உள்ள வாசகங்கள். இந்தியாவின் புகழ்மிக்க தலைவர்களில் ஒருவராகப் பெருவாழ்வு வாழ்ந்த டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இத்தகைய ஒரு எல்லைக் கோடு நிர்ணயித்துக் கொண்டிருந்தாலும் அந்த எல்லையையும் மீறித் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூகத்திற்கும் சிறந்த சேவை ஆற்றியுள்ளார்கள் என்பதே உண்மை.

நாடு சுதந்திரமடைந்து 44 ஆண்டுகள் முடிந்த பின்னரும் இன்றும்கூடத் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடைபெறும் கொடுமைகளையும் அவர்களை மனிதனாக வாழ விடாமல் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் அக்கிரமங்களையும் காணும் நமக்கு கடந்த நூற்றாண்டின் இறுதியில் இந்தப்பகுதி மக்கள் எவ்வளவு மோசமான நிலையில் நடத்தப்பட்டிருப்பார்கள் என்பதை எளிதில் உணர முடியும். நடக்கத் தடை பேசத் தடை, சாமி கும்பிடத் தடை, எண்ணற்ற தடைகளுக்கு நடுவே சிறைப்பட்டிருந்த தாழ்த்தப்பட்ட மக்களின் இயற்கையான கோபாவேசத்திற்கு வடிவம் கொடுத்து மிகப்பெரும் இயக்கமாக உருவாக்கியவர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள்.

அவருடைய வாழ்க்கை வரலாற்று நூல்கள் எண்ணிறைந்தவை வந்துள்ளன. அவரைப் போற்றி விழா எடுக்கும் ஏராளமான இயக்கங்களும் இன்று உள்ளன. எனினும் இவற்றில் பெரும்பாலானவை வெறுமனே சடங்குகளாக நடத்தப்படும் விழாக்களாகவும் அவருடைய பெயரை புகழைத் தங்கள் சுயலாபத்திற்குப் பயன்படுத்திடத் துடிக்கும் நோக்கமுடைய நூல்களாகவும் அமைந்துள்ளன. இத்தகு சூழலில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்வை பல்வேறு அடித்தளமான பிரச்சனைகள் மீதான அவர்களது கருத்துக்களை ஒரு விஞ்ஞானக் கண்ணோட்டத்துடன் பார்த்துப் படம்பிடித்துள்ளது” இந்த நூல் என்பது இந்த நூலின் தனிச்சிறப்பு.

டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும் வேளையில் இரண்டு முக்கியக் கேள்விகள் என்னுள் எழுந்தன. எந்தவொரு முற்போக்குச் சிந்தனையாளனுக்கும் இக்கேள்விகள் எழத்தான் செய்யும் என்றே கருதுகிறேன்.

"டாக்டர் அம்பேத்கர் தன்னலம் மறுத்துத் தனது வாழ்நாளெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உழைத்திருந்தும்கூட, இந்தியாவின் அரசியல் சட்டத்தை உருவாக்கும் இடத்தைப் பெற்றிருந்தும் கூட இன்றளவும் இந்த மக்கள் வாழ்வில் பெரும் மாற்றங்கள் ஏற்படாததற்கு என்ன காரணம் என்பது முதல் கேள்வி.

இன்னொன்று, ஹரிஜனங்களின் மிக நெருங்கிய தோழராக தலைவராக விளங்கிய அம்பேத்கர் அவர்களுக்கும் ஹரிஜனங்கள் ஆண்டவனின் புத்திரர்கள் என்றழைத்துப் பெயரிட்ட காந்தியார் தலைமையில் இருந்த காங்கிரசுக்கும் பெரும்பான்மையான காலங்களில் உறவின்றி இருந்ததற்கு அல்லது கடும் மோதல் நிகழ்ந்தமைக்கு என்ன காரணம் என்பது. இது இரண்டாவது கேள்வி.

இந்த இரண்டு முக்கியக் கேள்விகளுக்கு சரியான விடைகாணுவது அன்றைய வரலாற்றை அலசுவதற்கு மட்டுமின்றி இன்றைய நிலையில் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கும் மிகவும் அவசியமான முக்கியமான ஒன்றாகும்.

இரண்டு கேள்விகளுக்குமான பதில் இன்று வரையில் பெருமளவு மாற்றமின்றித் தொடர்கின்ற இந்திய நிலப்பரப்புத்துவச் சமுதாயத்தை முறையாகப் புரிந்து கொள்வதிலேயே அடங்கியுள்ளது. கல்வியில், வேலையில் இம்மக்களுக்கு முன்னுரிமை அளித்துள்ள ஒரு அரசியல் சட்டம் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் அமலில் இருந்தும்கூட அவர்கள் வாழ்வில் பெரும் மாற்றம் நிகழாமைக்கு என்ன காரணம்?

இன்றைக்கும் இந்தியாவில் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் மக்களில் மிகப் பெரும்பான்மையராகத் தாழ்த்தப்பட்ட மக்களே இருப்பதற்குக் காரணம் என்ன?

கல்விச் சலுகைகள், வேலைச் சலுகைகள் என்பவை முக்கியமானவை. ஆனால் அவை முழுமையாகப் பயன்படுத்தப்பட முறையாக அமலாக்க உத்திரவாதம் செய்யப்பட தாழ்த்தப்பட்ட மக்கள் கையில் வாழ்வுக்கான அடிப்படை ஆதாரங்கள் கிடைப்பது மிக அவசியம். இத்தகைய அடிப்படை ஆதாரமாக விளங்கும் நிலம் இந்த மக்கள் கையில் கிடைக்காத வரை இதில் சீர்திருத்தங்கள் முழுமையடையாது என்பதே வாழ்க்கை அனுபவம். இன்றும் கிராமப்புற மேல்தட்டுகளில் வாழும் 10 சதமான குடும்பங்கள் கையில் 50 சதமானத்திற்கு மேற்பட்ட நிலங்கள் இருப்பதும் 70 சதமான மக்கள் நிலமின்றி அல்லது அற்பசொற்ப நிலத்துடன் வாழ்வுக்குப் போராடிக்கொண்டிருப்பதும் ஒரு யதார்த்த உண்மை. "தோட்டம் நிலைத்தால்தான் தென்னம்பிள்ளை வளர முடியும்” என்பது கிராமத்துப் பழமொழி. அப்படித் தோட்டம் நிலைக்க வேண்டும் எனில் ஏழைமக்கள் கையில் நிலம் வேண்டும். அப்பொழுதுதான் தென்னம்பிள்ளை நிலைத்து இளநீரும் தேங்காயும் போன்ற பலன்களான கல்விச்சலுகை, வேலைச்சலுகை போன்றவைகூட இம்மக்களுக்கு முழுமையான பலன் தருபவையாக அமைய முடியும்.

வெள்ளையன் காலத்திலும் பின்பு காங்கிரசார் ஆண்ட காலத்திலும் இந்த மக்கள் கையில் நிலம் கிடைப்பது பற்றி ஏராளமாகப் பேசப்பட்டிருந்தாலும் நடைமுறையில் அமலாகவில்லை. இன்னும் பல்லாண்டுகள் போனாலும் இவை தானாக அமலாகாது. தாழ்த்தப்பட்ட மக்கள் இதர பகுதி உழைக்கும் மக்களுடன் இணைந்து நடத்தும் பிரம்மாண்டமான போராட்டங்கள் தான் இந்த மாற்றத்தை உருவாக்க முடியும்.

இந்த அடிப்படைப் பிரச்சனை தீர்க்கப்படாத காரணத்தாலேயே நாடு சுதந்திரமடைந்து 44 ஆண்டுக் காலத்திற்குப் பின்னரும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான கொடுமைகள் தொடர்கின்றன.

காந்தியார், அம்பேத்கர் இருவருமே ஹரிஜனங்கள் விஷயத்தில் ஆழ்ந்த அக்கறை கொண்டிருந்தும்கூட இருவரையும் எதிரும் புதிருமாகவே சரித்திரம் காண்பிப்பதற்கு என்ன காரணம் என்பதற்கான பதிலும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியச் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தலைமைப்பாத்திரம் வகித்த காங்கிரசார்கள் அணுகுமுறையே இதற்குப் பிரதான காரணமாகும்.

வெள்ளையனுக்கு எதிரான போரில் இந்திய நாட்டு மக்களை வீறுகொண்டு எழச் செய்த காந்தியாரும் காங்கிரசும் அப்படி மக்களை வீறுகொண்டு எழச் செய்ய பயன்படுத்திய போராட்ட ஆயுதங்கள்" இரண்டு. அவை (1) இந்து மதப் பெருமை பேசுவது (2) இந்தியாவின் பழைய சரித்திர மேன்மையை மீண்டும் கொண்டு வருவது என்பது. "இந்து மதப்பெருமை பேசுவது” என்பது ஆண்டாண்டு காலமாக இந்து மதத்தர்மங்களால் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் இயற்கையான அவநம்பிக்கையை எழுப்பத்தானே செய்யும்.

தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாட்டையே தனது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டிருந்த டாக்டர் அம்பேத்கருக்குக் காந்தியத்தின் மீது கடும் கோபம் ஏற்பட்டதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது. ஆகவேதான் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் காந்தியத்தைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு கூறினார்கள்.

வைதீக இந்துச் சமயத்தில் இல்லாதது எது காந்தியத்தில் இருக்கிறது. இந்து மதத்தில் சாதி உண்டு. காந்தியத்தில் சாதி உண்டு; இந்து மதம் சாஸ்திரங்களின் ஆணையை ஏற்றுக்கொள்கிறது, காந்தியமும் அப்படியே; இந்து மதம் அவதாரங்களையும், மறுபிறவிகளையும் நம்புகிறது. காந்தியத்தின் கொள்கையும் அதுவே; மேற்கொண்டு காந்தியம் செய்தது என்னவென்றால் "இந்து மதத்திற்கும் அதன் கோட்பாடுகளுக்கும் நியாயம் கற்பிக்கத் தத்துவார்த்தம் கண்டுபிடிப்பதுதான்” (டாக்டர் அம்பேத்கர் சிந்தனைகள்)

காந்தியத்தைப் பற்றிய டாக்டர் அம்பேத்கரின் மேலே கூறிய நிர்ணயிப்புக்குக் காரணம் காந்தியத்தின் அணுகுமுறையே ஆகும். இந்த அணுகுமுறை காரணமாகத்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் மட்டுமின்றிச் சிறுபான்மை மக்கள் மத்தியிலும் காங்கிரஸ் பற்றிய பெரும் அவநம்பிக்கை எழுந்தது. இந்தச் சூழலில் இந்து மதப் பழமைவாதத்தை எதிர்த்த சீர்திருத்த இயக்கங்கள் பலவும் ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்த காங்கிரஸ் எதிர்ப்பு என்ற நிலைக்குச் சென்ற நிலைமையைக் காண முடியும். மராட்டியத்தின் ஜோதிபாபுலேயின் இயக்கம், தமிழக ஜஸ்டிஸ் கட்சி ஆகியவை காங்கிரசின் இந்துப் பழமைவாதத்தை எதிர்த்த போராட்டத்தில் திசைதடுமாறிச் சுதந்திரப் போராட்டத்திற்கே எதிர்ப்பாகத் திரும்பியதை வரலாறு காட்டுகிறது. ஆனால் அம்பேத்கரைப் பொறுத்தவரை பெரும்பகுதியான காலம் முழுவதும் இத்தகைய திசை திரும்பலுக்கு ஆட்படாமலேயே இருந்தது குறிப்பிடத்தக்கது. அம்பேத்கரியக்கத்தின் இத்தகு பாத்திரம் பற்றித் தோழர் என்.ராமகிருஷ்ணன் தெளிவாக ஆதாரங்களுடன் விளக்கியிருப்பது போற்றத்தக்கது. பொதுவான சுதந்திரப் போராட்டத்தின் நோக்கிலிருந்து தனிமைப்படாமல் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைப் போராட்டத்தை நடத்திய கட்டத்தில் எல்லாம் டாக்டர் அம்பேத்கர் வெற்றி பெற்றார். அதில் சில கட்டங்களில் எல்லைதாண்டிய நிலை ஏற்படும்போது பாதிக்கப்பட்டார் என்பதையும் இந்த நூல் சரியாகவே விளக்குகிறது.

ஆக, அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றை அனுபவப்பாடமாக ஏற்கும் எவரும் இன்றைய நிலையில் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைப் போராட்டமும் இதர உழைக்கும் மக்களின் உரிமைப் போராட்டங்களும் ஒன்றோடு ஒன்று கைகோர்த்து இணைந்து செல்வதே காலத்தின் கட்டளை என்பதை உணர முடியும்.

இந்த வகையில் தோழர் என் ராமகிருஷ்ணனின் இந்த நூல் புதிய கோணத்துடன் பிரச்சனையை ஆராய்ந்து சரியான வழிகாட்டுவதைப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன். எளிய நடையில் சிறப்பாக எழுதப்பட்டுள்ள இந்த நூலை வெளியிடுதன் மூலம் சவுத் ஏசியன் புக்ஸ் நிறுவனம் தனது சிறப்புமிக்க பணிக்கு மேலும் ஒரு சிறப்பைச் சேர்த்துக் கொண்டுள்ளது.

முடிப்பதற்கு முன் ஒரு விஷயத்தை கவனப்படுத்த விரும்புகிறேன். மாற்றங்கள் தலைவர்களால் உருவாவதில்லை. மக்கள் இயக்கங்களாலேயே உருவாகிறது என்பதை நாம் அறிவோம். இதுகுறித்து டாக்டர் அம்பேத்கரின் கருத்து போற்றத்தக்கதாகும். அவர் மிகப் புகழ்மிக்க தலைவராக விளங்கினாலும்கூட தலைவர்களே அனைத்தையும் சாதிக்கும் அவதாரங்கள் என்ற மாயையை உடைத்தெறிவதில் குறியாக இருந்தது மறுக்க முடியாதது. "ஒரு தலைவனின் கருத்துக்களையும் கொள்கைகளையும் எவ்வளவு வேண்டுமானாலும் புகழலாம். ஆனால் அத்தகைய தலைவர்களையே கடவுள் அவதாரமாகக் கருதி அவன் கொள்கைகளைக் கடவுள் வாக்காகக் கருதுவது தவறு. முன்னது எவ்வித ஆபத்தையும் உருவாக்காது. ஆனால் பின்னது ஒரு பொல்லாப் பெருங்கேட்டை... உருவாக்க வல்லது."

இது டாக்டர் அம்பேத்கரின் சீரிய சிந்தனைக்கு ஒரு சிறப்புமிக்க எடுத்துக்காட்டு. அவரின் கருத்துப்படி கொள்கைகளைப் போற்றுவோம் இன்றைய தேவைக்கு புனரமைத்துக் கொள்வோம் என உறுதிகொள்வோம்.

அந்தப் போராட்டத்திற்கு அணிதிரட்ட, சிறந்த ஆயுதமாக இந்நூல் விளங்கட்டும்.

வாழ்த்துக்களுடன்

கி.வரதராசன்

பொதுச் செயலாளர்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

07.0392

சென்னை

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

Back to blog