அம்பேத்கர் வாழ்வும் பணியும் - வாழ்த்துரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/ambedkar-vaazhvum-paniyum-first-edition 
வாழ்த்துரை

பாபா சாஹேப் என்று அவரது சீடர்களால் மிகுந்த அன்போடும் மரியாதையோடும் அழைக்கப்படும் டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்கள் இதுவரை தாழ்த்தப்பட்டவர்களிடையே முகிழ்த்த தலைவர்களிலேயே மகத்தானவர் என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவர் ஆவார். பல நூற்றாண்டுக் காலமாக கட்டுப்படுத்தி வந்த அடிமைத்தனத்திலிருந்து தாழ்த்தப்பட்டவர்களை விடுவிக்கத் தனது வாழ்நாள் முழுவதும் நீடித்த போராட்டத்தை நடத்தியவர் அவர். அநீதி நிறைந்த இச்சமூகத்தை எதிர்த்து அனைத்து வகையிலும் அவர் இடைவிடாது போராடி வந்தார்.

தாழ்த்தப்பட்ட மக்களிடையே அவரது கருத்தும் செல்வாக்கும்தான் மிகச் சக்தி வாய்ந்த அம்சமாக விளங்கி வருகிறது. அவர்களது நம்பிக்கைகள், எதிர்பார்ப்புக்களின் சின்னமாகவே அவர் மாறிவிட்டார்.

எந்தவொரு தலைவரின் மகத்தான தன்மையும் அவர் உருவாக்கிய அமைப்புகள், அவரது சித்தாந்தம், கருத்துக்கள் ஆகியவை அவரது வாழ்நாளுக்குப் பிறகும் நிலைத்திருப்பதிலேயே அடங்கியுள்ளது. அம்பேத்கர் பொதுவாழ்க்கையில் வெளிப்படத் துவங்கிய 1920களில் சுதந்திரப் போராட்டமானது தீவிரமாகச் செயல்பட்டு வந்த நேரமாகும். அந்த நேரத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் அடிமைத்தனத்தைப் பற்றியும் தாங்கொணா கொடுமை குறித்தும் எவரும் கவலைப்படவேயில்லை. தீண்டத்தகாதவர் என்ற வகையில் தான் பெற்ற அனுபவங்களைக் கொண்டுதான் நாட்டின் அரசியல் விடுதலையோடு கூடவே சமூக விடுதலையையும் அடைய வேண்டும் என்று அவர் எண்ணத் துவங்கினார். கிடைக்கப்போகும் விடுதலை என்பது அர்த்தமுள்ளதாக விளங்கவேண்டுமெனில் நாட்டிலுள்ள மக்கள் அனைவரின் விடுதலையும் உறுதி செய்யப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அம்பேத்கர் சமூக சீர்திருத்தங்களை ஏதோ மனிதாபிமானத்தோடு செய்யும் செயலாக இல்லாமல் உரிமையாகவே அவை வழங்கப்பட வேண்டும் என்று விரும்பினார். அவர் மேற்கொண்ட சமூக சீர்திருத்தம் என்பது சமூக அடிமைத்தனத்திற்கு எதிரான கிளர்ச்சியே ஆகும். தாழ்த்தப்பட்டவர்களை விடுவிக்கவும் அவர்களை உதாசீனத்திலிருந்தும் சமூக ரீதியான அவதூறிலிருந்தும் விடுவித்து முன்னேற்றத்தை நோக்கிச் செலுத்தி சமூக ரீதியான மரியாதை பெற பல்வேறு வழிமுறைகளை அவர் மேற்கொண்டார்.

சமூக அவதூறு, அடிமைத்தனம், கட்டுப்பாடு முதலியவற்றில் ஆண்டாண்டுக் காலமாய் நசுங்கிக் கிடந்த தாழ்த்தப்பட்ட மக்களை ஓரளவுக்காவது விடுவித்த அவரது முயற்சிகள் மனித குல வரலாற்றில் சிறப்பான சாதனை என்றே கூறலாம்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவர் விட்டுச் சென்ற சொத்து என்பது தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பினருக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அவர் உருவாக்கிய பாதுகாப்பு ஏற்பாடுகளே ஆகும். தாழ்த்தப்பட்ட பழங்குடி வகுப்பினரின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள விதிமுறைகளாவன:

எந்த வகையிலும் தீண்டாமையைப் பின்பற்றுவதை தடை செய்தும் தீண்டாமையை ஒழிக்கும் வகையிலும் உள்ள 17ஆவது பிரிவு:

கட்டாயமாகவும் கொத்தடிமையாகவும் நடத்தப்படுவதைத் தடுக்கும் 23 ஆவது பிரிவு; மத்திய அரசு, மாநில அரசுகளில் பல்வேறு பதவிகளுக்கும் பணிகளுக்கும் தேர்வு செய்வதில் ஒதுக்கீடு வழங்கும் 235வது பிரிவு;

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப மக்கள் சபையில் பிரதிநிதித்துவத்திற்கான இடஒதுக்கீடு செய்யும் 330ஆவது பிரிவு;

அதேபோன்று மாநில சட்டமன்றங்களுக்கும் இட ஒதுக்கீடு செய்யும் 332ஆவது பிரிவு:

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடிப் பிரிவினரின் கல்வி மற்றும் பொருளாதார நலன்களை அரசானது மிகுந்த அக்கறையுடன் மேம்படுத்த வேண்டும் என்றும், சமூக அநீதி மற்றும் அனைத்து வகையான சுரண்டலிலிருந்தும் அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தும் 46ஆவது பிரிவு ஆகியவையே ஆகும்.

அவரது அரிய கோட்பாடுகளின் கதி என்னவாயிற்று என்பதையும் நாடு தனது உறுதிமொழியை நிறைவேற்றியதா அல்லது அதற்குத் துரோகம் செய்ததா என்பதையும் அறிய, மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகளின் செயல்பாடுகளை முழுமையாகப் பரிசீலனை செய்வது அவசியமாகும். இப்போது நமக்குக் கிடைத்துள்ள புள்ளி விபரங்கள் இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளை அமல்படுத்துவதில் உள்ள மோசமான நிலையையே சுட்டிக்காட்டுகின்றன.

இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏன் அமல் செய்யப்படவில்லை. சமூக உணர்வு என்பது முற்றிலும் இல்லாததே இதற்கு முழுக் காரணமாகும். இந்தப் பின்னணியில் அம்பேத்கரின் வார்த்தைகளை நினைவுகூர்வது அவசியமாகும்.

“உரிமைகள் என்பவை சட்டத்தினால் காப்பாற்றப்படுவதில்லை; மாறாக சமூகத்தின் சக உணர்வு மற்றும் நெறியுணர்வு ஆகியவற்றாலேயே பாதுகாக்கப்படுபவை ஆகும்.”

"இந்த உரிமைகளைப் பல்வேறு வகுப்பினரும் எதிர்க்கும்போது எந்தச் சட்டமும், எந்தப் பாராளுமன்றமும், எந்த நீதிமன்றமும் அந்த உரிமைகள் என்பதைன் உண்மையான பொருளில் பாதுகாக்க முடியாது.”

அம்பேத்கரைப் பின்பற்றுவோர் எந்தத் திசையில் முன்னேறிச் சென்று டாக்டர் அம்பேத்கரின் பாரம்பரியத்தைச் செழுமைப்படுத்த வேண்டும் என்பதைத்தான் வரலாற்றின் பாடங்களும் அனுபவமும் சுட்டிக்காட்டுகின்றன.

டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறானது, இந்திய வரலாற்றைப் பயிலும் அனைவருக்கும் படிப்பினை அளிக்கும் ஒன்றாகும். மனிதகுல முன்னேற்றத்தைக் காணத் துடிக்கும் சமூகத்திற்கு அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் இன்றியமையாத ஒன்றாகும்.

மனிதகுலத்தின் சமத்துவத்திற்கான போராட்டத்தில் பாபா சாஹேப் அம்பேத்கரின் பங்கினை அறிய விழையும் அனைவருக்கும் இந்நூல் மிகவும் பயனுள்ள ஒன்றாகும். டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கையின் பல்வேறு கோணங்களையும் பிரதிபலிக்கும் வகையில் இந்நூலை உருவாக்கியுள்ள திரு. ராமகிருஷ்ணன் பாராட்டிற்குரியவர்.

 

எம்.ஆர். அப்பன்

Back to blog