அம்பேத்கர் வாழ்வும் பணியும் - ஆசிரியர் குறிப்பு

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/ambedkar-vaazhvum-paniyum-first-edition 
ஆசிரியர் குறிப்பு

இந்திய நாட்டின் இணையற்ற சமூக சிந்தனையாளர்களில் ஒருவரான டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 125ஆவது பிறந்தநாளையொட்டி இந்நூல் வெளிவருவது மிகவும் சிறப்புக்குரியதாகும். இந்நூலின் முதல் பதிப்பு அவருடைய நூற்றாண்டு நாளில் வெளியாகி பல பதிப்புகளைக் கண்டது.

அவருடைய 125ஆவது பிறந்த ஆண்டில் வெளிவரும் இந்நூலானது இந்திய நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார வாழ்வை இருள் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலைமையில் வெளியாகிறது. மத்தியில் ஆட்சி பீடமேறியுள்ள பா.ஜ.க கூட்டம் டாக்டர் அம்பேத்கர் உயர்த்திப் பிடித்த மாபெரும் சமூக மாண்புகளைச் சிதைத்து சின்னாபின்னமாக்கும் நோக்கில் செல்கின்றன. அவர் அரும்பாடுபட்டு தலைமை தாங்கி உருவாக்கிய இந்திய அரசியல் சட்டத்தின் ஜனநாயக நெறிமுறைகள், வழிகாட்டல்கள் அனைத்தையும் சீரழிக்கும் நோக்கில் செல்கின்றன. எனவே இந்திய நாட்டின் அனைத்து முற்போக்காளர்களும், ஜனநாயக சக்திகளும் ஓரணியாகத் திரண்டு டாக்டர் அம்பேத்கர் உயர்த்திப்பிடித்த ஜனநாயக மாண்புகளைப் பாதுகாத்து சமூகநீதி என்ற லட்சியத்தை மேலும் உயர்த்திப்பிடித்து அவற்றை முன்னெடுத்துச் செல்வது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்வுப் பணியை அதற்குரிய வரலாற்றுப் பின்னணியோடு காணும் பொழுதுதான் அதன் சீர்மிகு தன்மைகளும் சிறப்புமிகு அம்சங்களும் புலப்படும். அந்த நோக்கில் தான் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நூல் எந்தளவுக்கு அதில் வெற்றி பெற்றுள்ளளது என்பதை வாசகர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

பிராமணியத் தத்துவ ஆதிக்கத்தின் காரணமாக இந்தியாவின் பாரம்பரியச் சமூகக் கட்டமைப்பின் அடித்தளத்தில் மிதியுண்டு கிடந்த தாழ்த்தப்பட்ட மக்களும் பிற்படுத்தப்பட்ட மக்களும் விலங்கிலும் கேவலமாக நடத்தப்பட்டனர். கண்ணியமாக வாழவேண்டுமென்ற அவர்களது ஆசைகள் நிராசைகளாயின. 19ஆம் நூற்றாண்டிலிருந்துதான் இவ்விரு பகுதி மக்களின் உரிமைகளைப் பெறுவதற்கான சமூகச் சீர்திருத்த இயக்கங்கள் இந்தியாவில் உருவெடுக்கத் தொடங்கின.

நால்வருண முறை என்பதன் மேலாதிக்கத்திலிருந்த பிராமணர்கள், இதர மூன்று பகுதி மக்களையும் ஒடுக்கி வந்தது முதல் கட்டமாகும். பிராமணர்களும் பிராமணர் அல்லாத சாதிய மேல்தட்டு பகுதிகளும் சேர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களையும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களையும் ஒடுக்கி வந்தது. இரண்டாவது கட்டமாகும். சமூக நீதி என்ற லட்சியத்தை அடைவதற்காகத் தாழ்த்தப்பட்ட மக்களும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒன்றுசேர்ந்து போராட வேண்டிய இந்த மூன்றாவது காலகட்டத்தில் அந்தப் பிற்படுத்தப்பட்ட மக்களை, தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிராகத் திருப்பிவிடச் சாதிய, பிற்போக்கு, சுயநல சக்திகள் துடித்துக் கொண்டிருக்கின்றன.

தொடர்ந்து ஒடுக்குமுறைக்கு ஆளாகிவரும் தாழ்த்தப்பட்ட மக்களுடைய உரிமைகளைப் பெறுவதற்காக, அவர்களை சம அந்தஸ்து படைத்த மனிதர்களாக்குவதற்காக டாக்டர் அம்பேத்கர் நடத்திய போராட்டம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டிய போராட்டமாகும். சமூகநீதி என்ற அவருடைய லட்சியமானது அணையாமல் காக்கப்பட வேண்டிய லட்சியமாகும்.

இவ்வாண்டின் துவக்கத்தில் விசாகப்பட்டிணத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியின் அகில இந்திய மாநாடு (கட்சிக் காங்கிரஸ்) டாக்டர் அம்பேத்கரின் 125வது ஆண்டு விழாவை ஓராண்டுக் காலத்திற்கு சிறப்பாக கொண்டாட வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதன்படி நாடெங்கிலும் கருத்தரங்குகள், சிறப்பு சொற்பொழிவுகள் நடத்தப்பட்டு வருகின்றன என்பதும் பெருமைக்குரிய செய்தியாகும்.

இந்நூலுக்கு முன்னுரை வழங்கிச் சிறப்பித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் உயர் தலைவர்களில் ஒருவருமான தோழர் கி.வரதராஜன் அவர்களுக்கும், வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்த தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர், மறைந்த தோழர் எம் ஆர் அப்பன் அவர்களுக்கும் என் மனங்கனிந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோன்று இந்நூலின் கையெழுத்துப்பிரதியைப் படித்து சீர்படுத்திக் கொடுத்த 'தீக்கதிர்' நாளேட்டின் மதுரை பதிப்பு செய்தி ஆசிரியர் தோழர் ப. முருகன் அவர்களுக்கும், தமிழ் ஆய்வாளர் திரு. அரணமுறுவல் அவர்களுக்கும் இதன் முதல் பதிப்பை வெளியிட்ட சவுத் நிறுவனத்தாருக்கும், இப்பொழுது இந்நூலை மனமுவந்து வெளியிட்டுள்ள பாரதி புத்தகாலயம் நிறுவனத்தாருக்கும் என் இதயங்கனிந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

என். ராமகிருஷ்ணன்

மதுரை

9.11.2015

Back to blog