அம்பேத்கர் இன்றும் என்றும்
அண்ணல் அம்பேத்கர், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியத் துணைக்கண்டத்து உழைக்கும் மக்களின் மூளையில் ஊடுருவி, முதுகில் அமர்ந்து சுரண்டலை நடத்தும் இந்து மதத்தின் கொடுஞ்சாதிப் பிடியிலிருந்து அம்மக்களை மீட்கப் பணியாற்றியவர். அவர் ஒரு சமூகவியல் அறிஞர். சிறந்த வரலாற்று ஆசிரியர். மானிட விடுதலையின் அடிப்படைக் கூறாகிய சிந்தனையை இந்துமதப் புராணப் புரட்டுகளிடமிருந்து மீட்டவர். பார்ப்பனிய சாத்திரங்களிடமிருந்து இந்தியச் சிந்தனை மரபை மீட்க தனது கல்விப் பின்புலத்தையும், மொழிப் பயிற்சியையும் பயன்படுத்தியவர். 'மனு” தர்மத்தை, மடைமைகளைக் கொண்டாடிய பார்ப்பனர்களைத் தமது ஆய்வுகள் மூலம் நிலைகுலையச் செய்தவர்.
அவரது ஆய்வுகள் பார்ப்பனியத்தின் பிம்பங்கள் அனைத்தையும் சிதைத்தன. அவரது அரசியல் பங்கெடுப்புகள் தீண்டப்படாத மக்களிடம் நம்பிக்கையை ஊட்டின. அவருக்குக் கிடைத்த அதிகாரவாய்ப்புகள் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகப் படிநிலைகளில் மாற்றங்களைக் கொண்டு வந்தன. தனக்குக் கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும், ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தவே அம்பேத்கர் முயன்றார். சாதியக் கொடுமைகளிலிலிருந்து விடுதலை, அறிவும் கல்வியும் அடைதல், அதிகாரத்தில் பங்கேற்றல் ஆகிய தளங்களில், தனது காலத்தின் பல்வேறு வகையான அவமானங்களுக்கும், ஒதுக்கல்களுக்கும், அழுத்தங்களுக்கும் இடையில் அம்பேத்கர் சென்றடைந்த தூரம் வரலாற்றில் அரிய நிகழ்வே. தன் காலத்தில் விதிவிலக்காகவே அவர் செயலாற்றினார்.
மக்களை மழுங்கடித்த மதத்தைப் பிய்த்தெறிந்து, மதத்துக்கும் அரசுக்கும் இடையேயான உறவை தனது ஆய்வுகளில் நிறுவிய ஒரு சமூகவியல் அறிஞரை வெற்று சட்டமேதையாகப் பார்க்க மட்டுமே பெருந்திரள் மக்கள் பழக்கப்படுத்தப்பட்டது வரலாற்றுத் துயரம். அம்பேத்கர் தனது அணுகுமுறையில் கூடுதலாக அரசியல் பொருளாதார அணுகுமுறையை கைக் கொண்டிருந்தால் இத்துயரம் ஒரு வேளை நிகழ்ந்திருக்காது. அவரது வரலாற்றுச் சூழலும், ஒதுக்கல்களும் அவ்வாய்ப்பை அவருக்கு வழங்கவில்லை. எந்த ஒன்றைப் பற்றியும் அய்யம் கொண்டு, கேள்வி எழுப்பி, அறிவுடன் ஆராய்ந்து உண்மையைக் கண்டுணர்வதை தனது எழுத்தில் வெளிப்படுத்தியவர் அம்பேத்கர்.
இந்தியத் துணைக்கண்டத்து மக்களின் தாழ் நிலைச் சிந்தனைக்கு காரணமான பார்ப்பனிய இந்து மதத்தின் இன்றைய இந்துத்துவ ஆட்சியோ எதையும் கேள்வி கேட்காதே என்கிறது. பிள்ளையார் அரசியலுக்கும், இசுலாமிய வெறுப்பு அரசியலுக்கும், ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களைப் பார்ப்பன பனியா இந்துத்துவ சக்திகள் பயன்படுத்தும் காலத்தில் அம்பேத்கர் இன்றும் என்றும் '' தொகுப்பு எதிர்ப்பு ஆயுதமாக வெளியிடப்படுகிறது.
வெட்டியும், ஒட்டியும் அம்பேத்கரைப் பயன்படுத்தும் எதிரிகள் அவரின் அறிவியல் அணுகுமுறையை மறைத்து விடமுடியாது. தனது காலத்தின் தரவுகளின்படி அவர் கண்டடைந்த ஆய்வு முடிவுகளை, அனைத்து அறிவியல் அறிஞர்களைப் போல யாரும் மறு ஆய்வுக்கு உட்படுத்தி நேர்மையுடன் மாற்றிக் கொள்ளவே அம்பேத்கர் விரும்பினார். அண்மைக்கால மரபணுக் கூறு ஆய்வுகளும் தொல்லியல் மற்றும் மொழியியல் ஆய்வு முடிவுகளும் இந்தியத் துணைக்கண்டத்தின் மானிடவியல் பற்றிய வரையறைகளை இன்று மறுவாசிப்புச் செய்யப் பயன்படும்.
'பாரதிய ஜனதா ஆட்சி' 'பாரத மாதா ஆட்சியாக மாறி விட்ட பிறகு, நடப்பது 'மனு'வின் ஆட்சி என்றாகிவிட்ட பிறகு அம்பேத்கரின் ஆய்வு முறையும் இந்தி இந்தியாவை குப்பைக் கூடைக்கே அனுப்பும். தான் பங்களிப்பு செய்து கொண்டு வந்த சட்டங்கள் 'மனு தர்ம வாரிசுகளின் கைகளில் படும்பாட்டைக் காண நல்லவேளை அம்பேத்கர் இன்று நம்மிடையேயில்லை. அரசும், சட்டத்துறையும் நவீன 'மனு'வின் வடிவங்களாகி விட்டபடியால் அவற்றை அம்பேத்கர் நிராகரிக்கவே செய்வார்.
சாதிய இழிவு, பண்பாட்டு ஒதுக்கல், பொருளியல் சுரண்டல், அரைகுறைச் சட்டப் பாதுகாப்பையே கேள்விக்குள்ளாக்குதல் போன்ற நிகழ்வுகள் அன்றாட செய்திகளாகிவிட்டன. விடுதலை பெற்று 70 ஆண்டுகளாகியும் அம்பேத்கர் எதிர்பார்த்த பயன் அனைவரையும் சென்றடையவில்லை. ஒரு நாகரிக சமூகம் வெட்கப்பட வேண்டிய சாதிய இழிவுகள் இன்றும் தொடர்வது, இத்தகையதொரு சமூக அமைப்பில் இனி வருங்காலங்களிலும் ஒடுக்கப்படும் மக்களுக்கான விடுதலை என்பது கானல் நீர் என்பதையே வெளிப்படுத்துகின்றன.
இன்றளவும் வர்க்கமும் சாதியும் பெரும்பாலும் ஒன்றாகவே நிலவும் நம் சூழலில், ஒடுக்கப்பட்ட மக்களின் உடனடித் தேவை, இந்தச் சமூக அமைப்பு முறையைப் பற்றிய புரிதலே. சட்டப் பாதுகாப்பும், அதிகாரத்தில் பங்கேற்பும் நாம் சார்ந்த சமூகத்தில் மிகக் குறைவான அளவே பலனளித்துள்ளது. பண்பாட்டுத்தளத்தில் எந்த ஒதுக்கல்களும் குறையவில்லை. ஒடுக்கப்பட்ட மற்றும் இடைநிலைச் சாதிகளையும் கூட ஆட்டிப் படைக்கும் பார்ப்பனியமயமாதலும், காவிமயமாதலும் நமக்குப் பெருந்தடைகள்.
அரசு இயந்திரத்தில் பணக்கார, முதலாளிய வர்க்கங்களின் பிரதிநிதித்துவம் மிக வேகமாக அதிகரிப்பதும் தனியார்மயமாக்கல் அனைத்துறைகளிலும் பரவுவதும் நமக்கு ஒரு எச்சரிக்கை மணி. இந்த அரசும், ஆட்சியும் இனியும் நமக்கு என்ன செய்யமுடியும் என்பதைப் புரிந்து கொள்வோம். அய்யப் படுவோம், ஆராய்வோம்; அறிவைப் பெறுவோம்.
நமக்கு இன்றைய உடனடித் தேவை சாதியைப் பற்றித் தெளிவான சமூக ஆய்வுகள். சாதியின் கூறுகள் வர்க்கத்துடன் பல படிநிலைகளில் பின்னிப் பிணைந்திருக்கின்றன. சாதி நம்பிக்கை, பிடிப்பு, வெறி போன்றவை வர்க்கநிலையுடன் இரண்டறக் கலந்துள்ளன. குறிப்பாக உலகமயமாக்கச் சூழலில் தமிழகத்தில் சாதிகளைப் பற்றிய பரந்த ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.
தமிழகம் எல்லா வடிவங்களிலும் இந்தியாவுடன் வேறுபட்டே நிற்கிறது, நிற்கும். அதற்கான வேர்கள் வெளிவரும் காலம் இது. அம்பேத்கர் இந்துத்துவத்திற்கு பயன்படுத்தப்படுவது ஜனநாயகத்திற்குக் கேடு. தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் எதிரிகளான இராமனை, கிருஷ்ணனை, பிள்ளையாரை, இந்து மதத்தை அம்மக்களிடமிருந்து சமூகவிலக்கம் செய்யவே அம்பேத்கரைத் தமிழர்களின் கைகளில் தவழவிட விடியல் விரும்பியது. அதன் வெளிப்பாடே இந்தத் தொகுப்பு. அம்பேத்கரின் எழுத்துக்களில் மிகக் குறைவான அளவில் இது அமைந்தாலும் இந்துத்துவ எதிர்ப்பை மய்யமாகக் கொண்டுள்ளது.
மார்க்சின் அரசியல் மற்றும் பொருளாதார முன்னறிவிப்புகளை நோக்கி உலகம் திரும்பிவிட்ட காலம் இது. இனம், நிறம், மதம் மற்றும் சாதிய வேறுபாடுகளால் பிரிக்கப்பட்டு, ஒடுக்கப்படும் மக்கள் தங்களது உண்மையான எதிரிகளை அடையாளம் கண்டு போராட வேண்டிய தருணம் இது. நம் சமூகத்தில் அம்பேத்கரும் பெரியாரும் தங்கள் வாழ்வின் இறுதிவரை இப்பணியைச் செய்து விதைகளைத் தூவிச் சென்றுள்ளனர். விடியலின் 'பெரியார் இன்றும் என்றும் '' நூல் ஓராண்டில் 6000 படிகள் விற்றுத் தீர்ந்தது. அம்பேத்கரும் அவ்வெற்றியைப் பெறுவார். இத்தகைய வெளியீட்டு முயற்சிக்கு பங்களிப்புச் செய்து மக்கள் பதிப்பாக அம்பேத்கர் வெளிவர உதவியவர்களுக்கு விடியலின் நன்றி.
மராட்டிய அரசு வெளியிட்ட ஆங்கில நூற்களின் மொழி பெயர்ப்பான தமிழ் நூல்களிலிருந்து (அம்பேத்கர் பவுண்டேசனால் வெளியிடப்பட்டவை) தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். அதில் பங்களிப்பு செய்த அனைவரும் தமிழ்ச் சமூகத்தின் நன்றிக்குரியவர்களே.
பிழையின்றி விரைந்து தட்டச்சு செய்து தந்த திரு. மேலூர் சுப்பிரமணியம் அவர்களுக்கும், தொகுப்பை தேர்ந்தெடுக்கவும் மெய்ப்பு பார்க்கவும் உதவிய தோழர்கள் ஆரோக்கியசாமி மற்றும் இ.சி. ராமச்சந்திரன் அவர்களுக்கும் எமது நன்றி.
தொடர்புடைய மற்ற பதிவுகள்: