அமைப்பாய்த் திரள்வோம் இது படிப்பதற்கல்ல; கற்பதற்காக.. கவிஞர் தணிகைச்செல்வன்

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

 

 

 

https://periyarbooks.com/amaippaai-thiralvoam.html

 

 

எழுச்சித்தமிழர் தோழர் தொல்.திருமாவளவன் அவர்கள் எழுதியுள்ள 'அமைப்பாய்த் திரள்வோம்' என்ற இந்நூல் தினமும் வெளியாகும் ஆயிரக்கணக்கான நூல்களில் ஒன்றல்ல; இது ஆயிரத்தில் ஒன்று ! இவ்வாறு நான் கூறுவது உயர்வு நவிற்சியால் அல்ல. இதை முற்றாகப் படித்து முழுமையாக உள்வாங்கியவன் என்ற முறையில் நான் கூறும் வாய்மை இது.

கற்பனைகளின் மீதமர்ந்து கனவுகளை எழுத்தாக்கிய காகிதம் அல்ல இந்த நூல். தரம் பட்டறிந்தபாடுகளை மட்டுமே அஸ்வதிவாரமாக்கி, படித்தறிந்த ஏடுகளைத் துணையாகக் கொண்டு நிர்மாணித்திருக்கிற கருத்தியல் கட்டுமானமே திருமாவின் இந்த அசுர முயற்சி.

கண்ணால் படிக்கும் வரிகளுக்கிடையில் கண்ணுக்குத் தெரியாத வரிகள் நூல் முழுவதும் பதிவாகியிருப்பதே இந்த நூலின் தனித்தன்மைக்கும் கனத்தன்மைக்கும் காரணமாகும். மறைந்திருக்கும் வரிகளில் உறைந்திருக்கும் தத்துவத்தின் பெயர் 'இயக்க இயல்' (dialectics).

இயக்கவியல் என்பது ஒரு விஞ்ஞானம். அந்த அறிவியலைத் தம் இயக்கத்தின் அரசியலாக்கிக் கொண்டவர் திருமா. அவரது எழுத்தின் செழுமைக்கும் இயக்கத்தின் வலிமைக்கும் ஆதாரமே இயக்கவியல் தான் என்பதை 'இந்த நூலைப்

படிப்பவர்களால் உணரமுடியாது; நூலைக் கற்பவர்களால்தான் உணர முடியும்'. வாசகர்கள் இந்த நூலைக் கற்க வேண்டும் என்பதே என் விழைவு.

2010 சூன் மாத, 'நமது தமிழ்மண்' இதழில் துவங்கிய திருமாவின் 'அமைப்பாய்த் திரள்வோம்' நெடுந்தொடர் ஐந்தரை ஆண்டுகள் பயணித்து 2016 சனவரி மாத இதழில் முடிவுற்றது. 58 கட்டுரைகளடங்கிய இந்நூலின் கட்டுரைத் தலைப்புகளைப் பார்த்தாலே தெரியும். முதல் தலைப்பு முதல் கடைசித் தலைப்பு வரை அவை ஒன்றுடன் ஒன்று கைகோர்த்து மனிதச்சங்கிலி போல் பிணையுண்டிருப்பதே நூலாசிரியர் மேற்கொண்டுள்ள இயக்கவியலின் வரிவடிவமாகும்.

இயக்கவியல் என்பது மிக எளிய தத்துவம். ஒரு சிறு விளக்கம் :

தாவரங்கள் முதல் மனிதர்கள் வரை எல்லா உயிர்களும் எதிர்மைகளால் ஆனவை. ஒரு ஆணும் பெண்ணும் தோற்றத்தில் ஒரே உருவில் இருந்தாலும் ஆணுக்கு விதைப்பையும், பெண்ணுக்குக் கருப்பையும் இருப்பதால் அவர்கள் ஒருமையல்ல; இயற்கையின் படைப்பில் அவர்கள் எதிர்மைகள் (Opposites). பெண்ணின் கருமுட்டையும் ஆணின் விந்தணுவும் இணைந்து ஒன்றாகும்போது அது இரண்டு எதிர்மைகளின் ஒருமை (Unity of Opposites) எனப்படுகிறது.

இந்த எதிர்மைகளின் ஒருமை கருப்பையில் நிரந்தரமாகத் தங்கிவிடுவதில்லை. கரு வளர்ச்சியுற்றதும் கருப்பையே அதற்கு எதிர்மையாகிறது. முதிர்ச்சியுற்ற கரு, கருப்பை என்ற எதிர்மையோடு முரண்பட்டுப் பனிக்குடத்தை உடைத்துக் கொண்டு கருவறைச் சிறையிலிருந்து விடுபட்டு வெளியேறுகிறது. குழந்தையின் உடலுக்குள் ஒவ்வொரு அணுவிலும் எதிர்மைகள் இயங்கிக்கொண்டே இருப்பதால்தான் குழந்தை வளர்கிறது. குழந்தை 'குமரி' ஆவதும் 'குமரன்' ஆவதும் எதிர்மைகளின் இயக்கத்தால்தான். இந்த இயக்கவியல் விதிப்படித்தான் ஒரு விதை செடியாகிறது; ஒரு பூ கனியாகிறது.

சமூகத்தளத்தில் இயக்கவியல் செயல்படுவதால்தான் 'நிலவுடைமை அரசுகள்' என்ற 'முடியரசுகள்' அழிந்து, தொழிலுடைமை அரசுகளான 'குடியரசுகள்' தோன்றின. தொழிலுடைமையில் தனி உடைமை வீழ்ந்து பொதுவுடமை தோன்றியது. இயக்கவியலின் மிகப்பெரிய கொடை 'சமூக மாற்றமே' ஆகும். அதற்கு வேறொரு பெயர் 'புரட்சி'.

‘இயக்கவியல்தான் புரட்சியின் அல்ஜீப்ரா' என்று ஒற்றை வரியில் அதை விளக்கியிருக்கிறார் அலெக்சாண்டர் ஹெர்சன் என்ற அறிஞர். இந்தச் சில வரிகளில் இயக்கவியலை முற்றாக விளக்கிவிட்டதாக நான் நிறைவடைய முடியாது. அதை விளக்கப் புகுந்தால் ஏராளமான பக்கங்கள் தேவைப்படும். அதற்கு இங்கு இடமில்லை. இயக்கவியல் பற்றி முதன்முதலில் சிந்தித்தவர் ஜெர்மானியச் சிந்தனையாளர் ஹெகல். ஹெகலின் சித்தானையை முழுமைப்படுத்தி இயக்கவியல் பொருள் முதல் வாதம் என்ற சித்தாந்தத்தை உலகுக்கு அளித்தவர் கார்ல் மார்க்ஸ்.

இன்றைய சிந்தனையாளர்களில் என்னை மெத்தவும் வியப்பில் ஆழ்த்தியவர் திருமாவளவனே ஆவார். ஏனெனில் சிக்கலான ஒரு தத்துவத்தைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டு அதில் முழுத்தகவு பெற்று தாம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் இயக்கவியலை இம்மியளவும் மீறாமல் அந்த விதிப்படி வினையாற்றும் வித்தகத்தைப் பார்த்து மலைத்துப் போகிறேன். அவர் வித்தகத்துக்கான சான்று இந்தப் புத்தகமே ஆகும்.

திருமாவின் கூற்று இது:

"மானுடச்சமூகத்தில் மனிதன், பிறப்பு முதல் இறப்பு வரையில் ஏதாவது ஓர் அமைப்பினைச் சார்ந்து வாழவேண்டியவனாக இருக்கிறான். குடும்பம், சாதி, இனம், மதம், வர்க்கம், நாடு, அரசு என அடுத்தடுத்த படிநிலையிலான அமைப்புகளின் உறுப்பினராக இருந்து ஒவ்வொருவனும் வாழ்ந்திட வேண்டிய நிலையிலிருக்கிறான்.

"..... அமைப்பாயில்லாமல் மனிதனால் இயங்கவே முடியாது" இதுதான் இந்த நூலில் திருமா எடுத்துவைக்கும் முதல்அடி.

அமைப்பாய்த் திரள்வதன் நோக்கம் என்ன? ரஜினி கட்அவுட்டுக்குப் பாலபிஷேகம் செய்வதா? தோழமை சக்திகளையும் சனநாயக சக்திகளையும் அடையாளம் காணவும் அவற்றோடு உறவு பூணவுமே அமைப்பின் திசைவழியை வகுத்தாக வேண்டும்.

அமைப்பின் இலக்குகள் என்பவற்றில் தொலைவான இலக்கு சாதி ஒழிப்பு ; முடிவான இலக்கு சமூக மாற்றம். ஆனால், உடனடி இலக்கு அதிகாரத்தில் பங்களிப்பு (Empowerment).

'அமைப்பின் வலிமையே அதிகார வலிமை' என்பது அவரது நாலடியாரில் ஒருவரி. அமைப்பின் விளைவு போராட்டங்கள்;

போராட்டங்களின் விளைவு தலைமை. ஆனால் தத்துவ மில்லாமல் தலைமையில்லை; தலைமையில்லாமல் போராட்டமில்லை; போராட்டமில்லாமல் அமைப்பு இல்லை; அமைப்பு இல்லாமல் அதிகாரமில்லை; அதிகாரமில்லாமல் ஆளுமையில்லை.

'முரண்பாடுகள்' பற்றி ஒரு நூலே எழுதியவர் மா சேதுங். அவரை அடியொற்றித் தம் அணிகளுக்கு அதை விளக்குகிற அமைப்புகள் இப்போது சுருங்கிவிட்டன.

திருமா வெடித்தெழுந்து வருகிறார்; முரண்பாடுகள் பற்றிக் கற்பிக்க!

முரண்பாட்டில் முதன்மை முரண்பாடு, அடிப்படை முரண்பாடு - போன்றவற்றின் இயக்கம் பற்றி விரிவாகவும் தெளிவாகவும் ஆய்ந்துள்ளார். அமைப்பாதலில் அவற்றைப் பொருத்திக் காட்டியிருப்பது சிந்திக்கத்தக்கது. முரண்பாடுகள் தொடர்பாக எழுகிற அடுத்த சிந்தனை 'தலைமை' பற்றியது. தனிநபர்த்தலைமை, கூட்டுத்தலைமை பற்றிய கருத்தாக்கங்கள், அமைப்புகள் அனைத்தும் பகிர்ந்து கொள்ள வேண்டிய செய்திக்களஞ்சியமாகவே உள்ளன.

'தத்துவ வலிமைதான் தலைமையின் வலிமைக்கு அடித்தளம்' என்ற திருமாவின் மதிப்பீட்டை நெடிய பாரம்பரியம் உள்ள அமைப்புகள் மீளாய்வு செய்தல் நலம். திராவிட அமைப்புகள், தமிழ்த் தேசிய அமைப்புகள், பொதுவுடைமை அமைப்புகள் ஆகியவை செறிவான தத்துவ அடித்தளத்திலிருந்து பிறந்தவையே. இன்று அவற்றின் அடித்தளம் ஆட்டம் கண்டுள்ளமை கண்டு கவல்வதைத் தவிர நவில்வதற்கு வேறு என்ன இருக்கிறது? -

தன் வர்க்கத்தன்மையை இழந்து பாட்டாளி வர்க்கமாகத் தன்னை மாற்றிக்கொள்வதே கம்யூனிஸ்ட்டுகளுக்கான பண்பு மாற்றம் என்றார் லெனின். இதை வர்க்கம் இழத்தல் (Declass) என்றார் அவர். சாதி இழத்தல் (Decaste) என்ற பண்புமாற்றத்துக்கும் இது பொருந்தும். இத்தகைய மாற்றங்கள் குறித்து நுணுகி ஆய்ந்திருக்கிறார் திருமா. இதோ அவரது வரிகள் :

"தன்னை மாற்றுவதென்பது, தன் அடையாளத்தை இழப்பதாகவோ, தன்னைத் தாழ்த்திக்கொள்வதாகவோ, தான் தோற்றுப்போனதாகவோ பொருளாகாது".

"... (மாற்றம் என்பது அமைப்பு மற்றும் மக்கள் நலன்களைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்படும் போற்றுதலுக்குரிய முயற்சியாகும்"

தனிநபர்த் தொடர்புகளில் மிக நுட்பமான சிக்கல் வரை ஆராய்ந்திருக்கிறார். அமைப்பாக்களில் அத்தகைய உறவுகள் ஆற்றும் பங்கை அனுபவபூர்வமாக அவர் அறிந்திருக்கிறார். எனவேதான், சொல்லாடலில் கூட நயத்திற்கு நாகரிகம் தேவை என்பதை விளக்கப்படுத்தியிருக்கிறார்.

நூலின் முதல்வரி முதல் கடைசிவரி வரை 'அறிவூட்டல்' என்பதே இதன் கடைக்கால் கொள்கை. என்னைப் பொறுத்தவரை மகிழ்வூட்டலும் வியப்பூட்டலும் வரிகளிலும் வரிகளுக்கிடையிலும் நான் பெற்ற அனுபவமாகும். நான் பெற்ற பயனை இந்த நாடும் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.

இது விடுதலைச் சிறுத்தைகளுக்கான நூல் மட்டும் அல்ல; விடுதலை விரும்பிகள் அனைவருக்குமான நூல்.

11.01.2018
சென்னை

Back to blog